Skip to main content

பாகவத திருப்பாவை - 20 (கப்பம் தவிர்க்கும் )

 பாகவத திருப்பாவை - 20 (கப்பம் தவிர்க்கும் ) 


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று*
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்*
செப்பம் உடையாய்! திறல் உடையாய்!* செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்**
செப்பு அன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்*
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்*
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை*
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் 493/20

முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும் முன்பாகவே 
சென்று 
அவர்களின் நடுக்கத்தைப் போக்கும் வீரனே எழுந்திரு!
கருணையுள்ளவனே! வல்லமையானவனே! பகைவருக்குப் 
பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!
தங்கக் கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை 
உடைய நப்பின்னையே! திருமகளே எழுந்திரு.
விசிறியும், கண்ணாடியும், உன் கணவனையும் கொடுத்து 
எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக.

முப்பத்து முக்கோடி தேவர்களுக்குக் கஷ்டம் வரும்போது முந்திரிக்கொட்டை மாதிரி முன் சென்று உதவும் விமலா என்று ஆண்டாள் பாடுகிறாள் என்பது பொதுவாக இந்தப் பாசுரத்துக்குச் சொல்லும் பொருள்.  பெருமாளின் எல்லா அவதாரங்களையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம் என்றாலும், மிகக் கச்சிதமாகப் பொருந்துவது கஜேந்திர மோட்சம். 

இதைப் புரிந்துகொள்ள முன் பாசுரத்தின் சூழலை  ( context) பார்க்கலாம். 

நப்பின்னையும், கண்ணனும் சேர்த்தியில் இருக்கும்போது ஆண்டாள் கதவைத் திறந்து வர வேண்டும் என்று எழுப்புகிறாள். கதவைத் திறக்காமல் இருக்க,  வராமல் இருப்பது  ‘தத்துவம் அன்று’ என்கிறாள். 

இந்தப் பாசுரத்தில் பக்தர்களின் கலக்கத்தைப் போக்க நீ எப்படி வர வேண்டும் என்று ஆண்டாள் கூறுவதாக அமைத்துள்ளது. 

முதலையால் பிடிபட்ட கஜேந்திரன் என்ற யானை கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கஜேந்திரன் முதலை வாயில் அகப்பட்டு ‘ஆதிமுலமே!’ என்று அலறி அழைத்தது என்று படித்திருக்கிறோம். எப்படி அழைத்தது என்று விரிவாக 30 ஸ்லோகத்தில் பாகவதம் கூறுகிறது. அதிலிருந்து சில பகுதிகள் கீழே 

”எவனால் இவ்வுலகம் உயிருள்ளதாகிறதோ, எவன் இந்த அனைத்துக்கும் மூலமான விதையாக இருக்கிறானோ, எவன் ஜகத்துக்கும் தலைவனோ அந்தப் பகவானை வணங்குகிறேன்! பிரணவ ரூபியான அந்தப் பெருமாளைத் தியானிக்கிறேன் ( 8.3.2)

எந்தப் பகவானிடம் இந்தப் பிரபஞ்சமே நிலையாகத் தங்கியிருக்கிறதோ, எவரை உபாதானக் காரணமாகக் கொண்டு இந்தப் பிரபஞ்சம் தோன்றியதோ, எவர் செயலாற்றுபவராக இந்த உலகத்தைப் படைத்தாரோ, எவர் பிரபஞ்ச ரூபமாக விளங்குகிறாரோ எவர் காரியக் காரணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவரோ அந்த ஸ்வயம் பிரகாசனான பகவானைச் சரணடைகிறேன் ( 8.3.3 ) 

எவனிடம் பிரளயகாலத்தில் எல்லாம் லயித்து, அதற்குச் சாட்சியாக எவன் இருந்துகொண்டு பார்க்கிறாரோ,  அணுவிற்கு அணுவாகவும், பரத்திற்குப் பரனாகவும் விளங்கும் அந்தப் பகவான் என்னைக் காக்கட்டும்(8.3.4)

அஞ்ஞான இருளுக்கு அப்பாலும் பிரகாசிக்கும் அவன் என்னைக் காக்கட்டும் ( 8.3.5 ) 

எந்தப் பகவானுடைய திவ்ய மங்கள ஸ்வரூபத்தை நேரில் காண விரும்பும் சான்றோர்கள் அடியார்கள் உலகியல் விஷயத்தில் பற்றற்று இருக்கிறார்களோ, முனிவர்கள் எந்தப் பகவானைத் தங்கள் முதலாகக் கொண்டுள்ளார்களோ, அந்தப் பகவானே எனக்குத் துணையாகட்டும் ( 8.3.7)

எவனுக்குப் பிறப்போ, செயலோ இல்லாமல், தன் மாயையால் திருவவதாரம் செய்து, தனக்குத்தானே காரணமான பிரதானப் புருஷனான பகவானைச் சரணடைகிறேன்(8.3.8-30)

அனைத்திற்கும் தலைவன் அவனே. அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆன்மாவாக விளங்குபவன். எல்லாவற்றிற்கும் காரணமானவர். அந்தப் பரிபூரணப் பகவானுக்கு நமஸ்காரம். 

ஆரணிக்கட்டையில் தீ மறைந்திருப்பது போல், ஞான வடிவான அறிவுத்தீயை மாயையால் மறைத்து வைத்து, ஞானமே வடிவான தங்களை வணங்குகிறேன். 

இப்படி பலவாறு கஜேந்திரன் ஸ்ரீமந் நாராயணனைத் துதித்தது. 

நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய்!

என்கிறார் திருமங்கை ஆழ்வார் 

இப்படித் துதித்தபோது பலப்பலப் பெயர்களையும் உருவங்களையும் தங்களது தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பிரம்மா, முதலிய தேவதைகள் இத்தனைப்பிரபாவங்கள் உள்ளவன் நானல்ல நானல்ல என்று பயந்து நடுங்கி யானையைக் காப்பாற்றுவதற்கு முன்வரவில்லை. 

இந்தத் தேவதைகளுக்கு எல்லாம் முன்னதாக அகிலங்களுக்கும் ஆன்மாவாகவும், அனைத்துத் தேவர்களின் ஸ்வரூபமாகவும் விளங்கும் பகவான் ஸ்ரீமந்நாராயணனே அங்கு வந்து தோன்றினார். பூர்வர்கள் பகவானுக்குக் கூட நமஸ்காரம் இல்லை, அவன் வந்த வேகத்துக்கு நமஸ்காரம் என்பார்கள்.

கஜேந்திரன் துதித்ததைக் கேட்டு, அது படும் துன்பத்தை உணர்ந்து, சக்கரத்தைக் கையில் ஏந்தி, தேவர்கள் துதித்துக்கொண்டு பின்னால் வர, வேதமே வடிவமான கருடன் மேல் ஆரோகணித்துக் கொண்டு வெகு வேகமாகக் கஜேந்திரன் இருக்குமிடம் வந்தார். தேவர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போது பகவான் ஸ்ரீஹரி தன் சக்கரம் கொண்டு முதலையின் வாயைப் பிளந்து கஜேந்திரனை விடுவித்தார். 

இப்படி உன் பக்தனான அந்த யானைபோல நாங்கள் நிலை குலைந்து உன்னைத் தேடி வந்துள்ளோம். முப்பது முக்கோடி தேவர்களும் செய்வது அறியாமல் திகைத்து நிற்க, யானையின் கப்பத்தை ( நடுக்கத்தை, கலக்கத்தை)  தவிர்த்த நீ எப்படி விரைந்து வந்தாயோ அதுபோல இப்போது நீ எங்கள் கஷ்டத்தைத் தீர்க்க வர வேண்டும் என்கிறாள் ஆண்டாள். 

கஜேந்திரன் தாமரைப் பூவைக் கொடுத்தது, ஆண்டாள் தான் சூடிக் களைந்த மாலையைக் கொடுத்தாள்.

- சுஜாதா தேசிகன்
உந்து - 20
11.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments