தொண்டரடிப் பொடி ஆசாரியர்கள்
இது என்ன மாதிரி தலைப்பு என்று உங்களுக்கு யோசிக்கத் தோன்றும். காரணம் இருக்கிறது.
1. அனந்தாழ்வான் :
திருமலை அனந்தான்வான் பிறந்த ஊர் கர்நாடகாவில் மைசூர் போகும் வழியில் ஸ்ரீரங்கபட்டனம் பக்கம் இருக்கும் கிரங்கனுர் என்றால் பலருக்கு தெரியாது.
(படம் : கிரங்குரு - அனந்தாழ்வான் அவதார ஸ்தலம்)
அடியேனுக்கு சில வருடங்கள் முன் தான் இந்த விஷயம் தெரிந்தது. உடனே சேவித்துவிட்டு வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு போன வருடம் நவம்பர் மாதம் தான் போக முடிந்தது.
மாண்டயா வந்த போது கோயில் அர்ச்சகரைச் செல் பேசியில் அழைத்தேன்.
“வாங்கோ… வாங்கோ…இப்ப எங்கே இருக்கேள்… நேரா பெட்ரோல் பங்க் வரும்… எதிரே ரைட் எடுக்க வேண்டும்.. நான் ஸ்கூட்டரில் வந்து கதவை திறக்கிறேன்”
“உங்களுக்கு எதற்குச் சிரமம்… இடம் சொல்லுங்கோ காரில் வரும் போது உங்களை அழைத்துச்செல்கிறேன் “
“வேண்டாம் வேண்டாம்..நானே வந்துவிடுவேன்..வாங்கோ” என்றார்.
வழியைத் தேடி கோயிலுக்குச் சென்ற போது மிக அமைதியான இடமாக அது இருந்தது. கோயிலுக்குப் பக்கம் வாய்க்கா..ஜிலு ஜிலு என்று காவிரி, கரும்பு பூக்கள், துளசி, வெற்றிலை, மல்லிகை… பசுமை, ஒரு தோட்டக்காரர் செடிகளைச் செப்பனிட்டுக்கொண்டு இருந்தார். இவர் அனந்தாழ்வானோ ? என்று நினைக்கத் தோன்றியது.
சின்ன புஷ்கரணி - ஸ்ரீபராசர ஸ்ரீபாத தீர்த்தம் என்று எழுதியிருந்தது.
(படம்: ஸ்ரீபராசர ஸ்ரீபாத தீர்த்தம்)
ஸ்ரீபராசர பட்டர், அனந்தாழ்வான் நினைவு வந்தது. அனந்தாழ்வான் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை மங்களாசாசனம் செய்த போது, நஞ்சீயரும், பட்டரும் திருக்கோட்டியூரில் இருப்பதை கேள்விப்பட்டுத் திருக்கோட்டியூர் வந்து அங்கே பட்டரைக் கண்டு மிகிழ்ச்சியுடன் வாரி அணைத்துக்கொண்டு தம் மடி மீது வைத்துக்கொண்டார். பட்டரை அனந்தாழ்வான் ஸ்ரீரங்க நாச்சியாருக்கு மகன் என்றே கூறுவாராம். அதனால் தான் வணங்கும் தாயாருடைய மகன் என்றே கருதி அனந்தாழ்வான் பட்டரைத் தம் மடி மீது வைத்துக் கொள்வார்.
மீண்டும் அர்ச்சகருக்குப் போன் செய்தேன்.
“கிளம்பிட்டேன்… அங்கேயே வெயிட் செய்யுங்கள்.. வந்துரரேன்..” என்றார்.
அர்ச்சகர் வரும் வரை அனந்தாழ்வான் பற்றி உங்களுக்குத் தெரிந்த கதையை மீண்டும் ஒரு முறை பார்த்துவிடலாம்.
(படம்: பசுமை.. எங்கும்..)
எம்பெருமானார் காலட்சேப கோஷ்டியில் நூற்றுக்கணக்காக எழுந்தருளியிக்க உடையவர்
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.
என்கிற பாசுரத்தை சாதிக்கும் போது கண்ணீர் விடுகிறார்.
”எங்கள் குலத்துக்கே(தந்தை தந்தைக்கே) திருவேங்கடமலையில் வாசம் செய்யும் பெருமாளுக்கு, ஓய்வில்லாது காலம் முழுவதும் கூடவேயிருந்து, என்ன துன்பம் வந்தாலும் அவரை விட்டுப் பிரியாது நின்று கைங்கரியங்களை செய்ய வேண்டும். ” என்று ஆசைப்படுகிறார். ‘அடிமை செய்ய’ என்ற வார்த்தைக்குப் பொருள் கைங்கரியம்.
சிஷ்யர்களை நோக்கி “ஆழ்வார் விருப்பப்படி குறைதீரத் திருமலையில் நித்தியகைங்கரியம் செய்ய விருப்பமுடையார் ஆரேனுமுண்டோ ?” என்று கேட்க குளிரருவி வேங்கடத்தின் குளிருக்கு அஞ்சி யாரும் விடை சொல்லாமல் இருக்க அனந்தாழ்வான் எழுந்து “அடியேனுக்கு நியமித்தருளவேண்டும்” என்றார். அதைக் கேட்ட எம்பெருமானார் “நீர் ஒருவரே ஆண்பிள்ளை” என்று கொண்டாடித் தழுவியருளி விடைகொடுத்தருளினார். அது முதலாக ‘அனந்தாண்பிள்ளை’ என்று புகழ் பெற்றார்.
அர்ச்சகர் ஸ்கூட்டியில் அவர் வந்தார். கொஞ்சம் இளமையான அர்ச்சகரை எதிர்பார்த்தேன். ஆனால் வந்தவர் முதியவர் ! ஆனால் சுறு சிறுப்பாக இருந்தார்.
(படம்: ஸ்கூட்டியில் வந்து கதவை திறந்த போது...)
“கொஞ்சம் நேரம் இருக்கலாம் இல்லையா ? “
“தாராளமாக” என்றேன்.
கோயில் அனுஷ்டானங்களை ஒன்றும் விட்டுக்கொடுக்காமல், நிதானமாகச் செய்துவிட்டு ”வாங்கோ” என்று கதவைத் திறந்தார்.
இன்னும் எனக்கு ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வயதில் இப்படி இரு கைங்கரியமா ? எப்படி இவரால் இப்படி முடிகிறது ? அதுவும் மலர்ந்த முகத்துடன் ?
பொறுமையாகச் சன்னதியில் அர்ச்சகர் அங்கே ”உபய நாச்சிமார்கள் ஸ்ரீநிவாச பெருமாள்.. ஆண்டாள்.. ” என்றவுடன் ஆண்டாளுக்கும் அனந்தாழ்வானுக்கும் உள்ள சம்பந்தம் நினைவுக்கு வந்தது.
திருமலை திருவேங்கடப் பெருமாளுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்து வந்த போது ஒரு நாள் அவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளைச் சேவிக்க வேண்டும் என்று தோன்றியது. திருவேங்கமுடையானிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவரும் “சரி” என்று உத்தரவு கொடுத்தார்.
அனந்தாழ்வான் உடனே அடியார்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தடைந்தார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் குளத்தில் நீராடிவிட்டு மற்ற அடியார்கள் ஆண்டாள் நாச்சியாரைச் சேவிக்க உள்ளே சென்றபோது, கோயிலில் அனந்தாழ்வானைக் காணவில்லை. அவர்கள் அவரைத் தேடிக்கொண்டு திரும்ப வந்தபோது அனந்தாழ்வான் குளத்திலேயே கையைவிட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
“ஏதாவது தொலைத்துவிட்டீரா?” என்றார்கள் உடன் வந்தவர்கள்.
“இல்லை.. இங்கேதான் ஆண்டாள் தினமும் குளித்திருப்பாள். அவள் தேய்த்துக்கொண்ட மஞ்சள் ஏதாவது கிடைத்தால் திருவேங்கடமுடையானுக்குப் பரிசாகக் கொடுக்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார். காலம் கடந்த பக்தி!
அர்ச்சகர் ”இங்கே கீழே மதுரகவி…” என்றவுடன் மதுரகவியாழ்வார், அனந்தாழ்வானுக்கு உள்ள ஒற்றுமை நினைவுக்கு வந்தது.
இருவரும் சித்திரையில் சித்திரை.
ஆசார்யன் இடம்தான் உச்சம் - ஆண்டவன் இரண்டாம் பட்சம்! என்று நினைத்தவர்கள். இன்றும் அனந்தாழ்வான் வம்சம், தங்களை மதுரகவி தாஸன் என்று தான் சொல்லுவார்கள்.
அடுத்து “மணவாள மாமுனிகளுடன், உடையவர், அனந்தாழ்வான்” என்று சொன்ன போது மூவரும் ஆதிஷேசன் அம்சம் என்று நினைவுக்கு வந்தது. அனந்தாழ்வான் கையில் பூக்குடை பார்த்த போது தொண்டரப்பொடி ஆழ்வாரும், ’அருள்மாரி’ என்று திருமங்கை ஆழ்வாரும் நினைவுக்கு வந்தார்கள்.
(படம்: அனந்தாசாரியார்)
என் பசங்களை பார்த்து “உங்க பேர் என்ன ?” என்றார் சொன்னார்கள்
“என்ன கிளாஸ்? நல்லா படிக்கிறீர்களா ?... கொஞ்சம் நேரம் இருக்கலாம் இல்லையா ?” என்றார்
”இருக்கலாம்”
“நான் சொல்றேன்.. கூடவே சொல்லுங்கள்” என்று ஸ்வாமி தேசிகனின்
”ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!” என்ற ஸ்லோகத்தைக் கூற அவர்களும் கூட சொன்னார்கள். முழு ஸ்லோகத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
”நீங்களும் சொல்லலாம்… தப்பில்லை”
”உங்கள் திருநாமம் ?” என்றேன்
“அனந்தாசாரியார்”
“தேவரீருக்கு என்ன வயது இருக்கும் ?”
“சிரித்துக்கொண்டே… 1933 “
“மூளை கணக்கு போட்டு 85 என்று சொல்ல சில நொடிகள் ஆனது”
2. பெரிய நம்பி
’நம்பி’ என்றால் எல்லா விதத்திலும் மிகவும் நம்பிக்கையானவர் பரிபூரணர் என்று பொருள். முதல் முதலில் மதுரகவியாழ்வார் ’கண்ணி நுண்சிறுத்தாம்பில்’ நம்மாழ்வாரை நம்பி என்று அழைத்துள்ளார். இவரே நமக்கு முதல் நம்பி.
ஸ்ரீரங்கம் கோயிலை பெரிய கோயில் என்றும், பெருமாளைப் பெரிய பெருமாள் என்றும், தாயாரைப் பெரிய பிராட்டியார் என்றும் அழைப்பது வழக்கம். அதே போல் பல நம்பிகள் இருந்தாலும் ஆளவந்தாருடைய சிஷ்யர்களுக்குள் பெருமை பெற்றவராய் ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள். மகாபூரணர் என்றும் பெரிய என்று ஏற்றத்துடன் அழைப்பது இவரையே. ஸ்ரீரங்கத்தில் அவதரித்தவர்.
(படம்: பெரிய நம்பிகள் திருமாளிகை - ஸ்ரீரங்கம்)
ஒரு சோழ மன்னனால் கூரத்தாழ்வான், பெரியநம்பிகள் இருவரின் கண்கள் பிடுங்கப்பட்டன அந்தத் துயரமான நிகழ்வைச் சொல்லுவதற்கு முன் இரண்டு வருடம் முன் (2016) ஜனவரி 7 எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்று மார்கழி கேட்டை ஸ்ரீபெரிய நம்பிகள் திருநட்சத்திரமும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திரமும் சேர்ந்த துவாதசி.
ஆளவந்தார் அவதரித்து 21 வருடங்களுக்குப் பிறகு நம் பெரிய நம்பிகள் மார்கழி கேட்டையில் அவதரித்தர் ( கிபி 997-998 ). இவருக்கு இயற்பெயர் ஸ்ரீபராங்குசதாஸர். ஸ்ரீமகாபூரணர் என்று அழைக்கப்பட்டார்.
(படம்: ஸ்ரீராமானுஜர் தட்டிய கதவு)
பழைய எண் 164 புது எண் 108 என்ற கீழ்சித்திர வீதியில் இருக்கும் பெரிய நம்பிகள் திருமாளிகைக்கு இரண்டு வருடம் முன் அடியேனுடைய முதல் விஜயம். சுமார் 1020 ஆண்டுகளாக ஸ்ரீரங்கத்தில் பெரிய நம்பிகள் வம்சத்தவர்கள் அங்கே வசித்துவருகிறார்கள்.
அன்று பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் என்பதால் அவர்கள் வீட்டுக்கு நிறைய அடியார்கள் வந்து தண்டம் சமர்ப்பித்துக்கொண்டு இருந்தார்கள். தயங்கித் தயங்கி அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது முன்பே அறிமுகம் ஆனது போல் “வாங்கோ” என்று உள்ளே அழைத்தார்கள்.
கதவை கடந்த போது ஸ்ரீராமானுஜர் நினைவுக்கு வந்தார்.
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய் ( ஓவியம் நன்றி கேஷவ் )
ஸ்ரீராமானுஜர் துறவி அதனால் தினமும் பிட்சை எடுத்து உண்பார்.
ராமானுஜருக்கு திருப்பாவையில் ஈடுபாடு மிக அதிகம். அதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்ற பெயர் பெற்றார். இந்த பெயரையே அவர் விரும்பினார். "உந்துமத களிற்றன்" என்ற திருப்பாவை செவித்துக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்" என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரோ சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்).
அத்துழாய் பதரிக்கொண்டு உள்ளே சென்று தந்தையிடன் “கதவைத் திறந்தவுடன் என் காலில் விழுந்து மூர்ச்சித்து விழுந்தார்” என்று சொல்ல பெரிய நம்பிகள் கலங்காமல் “உந்து மதகளிறு ஓதப் பெற்றிருக்க வேணும்” என்றாராம்.
அடியேனை அழைத்து உட்கார வைத்து “என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று உபசரித்தார்கள்.
“எதுவும் வேண்டாம்.. இப்ப தான் பிரசாதம் ஆச்சு” என்று சொன்னதைக் கேட்காமல் உள்ளே சென்ற தன் கையால் காபி கலந்துகொண்டு வந்து என் கையில் கொடுத்தார் அந்தப் பெரியவர்.
(படம்: காபி கொடுத்து உபசரித்த ..)
அந்த பெரியவர் தான் தற்போதைய பெரிய நம்பி வம்சத்து ஆசாரியர் ஸ்ரீசுந்தராசாரி ஸ்வாமி. காஞ்சி பேரருளாளரின் ஒரு வார்த்தை பெரிய நம்பி அவரின் வம்சத்தில் வந்தவர் அடியேனுக்குக் காபி கொடுக்கிறார்கள் என்று நினைத்த போது கண்களில் கண்ணீர் வந்தது.
குலோத்துங்கன் என்ற சைவ ராஜா ஒருவன் ராமானுஜரை அவனுடைய தர்பாருக்கு அழைத்த பொழுது கூரத்தாழ்வான் ராமானுஜரைப்போல் மாறுவேடத்தில் சென்றார். தள்ளாத வயதிலும் பெரிய நம்பி ஆழ்வானுடன் சென்றார். ஆழ்வான் “ஸ்ரீமந் நாராயணனே பரதத்வம்” என்று அறுதியிட்டுக் கூற அரசன் கடும் சினம் கொண்டு ஆழ்வானுடைய திருக்கண்களைப் பிடுங்குமாறு ஆணையிட்டான். ஆழ்வானோ “நானே பிடுங்கிக்கொள்கிறேன்” என்று தன் இரு திருக்கண்களையும் தன் கையாலேயே குத்திக்கொண்டார்.
பிறகு அரசன் பெரிய நம்பியினுடைய கண்களைப் பறிக்கவேண்டும் என்று உத்திரவிட்டபோது மிகவும் வயதான பெரிய நம்பிகளின் கண்களை ராஜசேவகர்கள் கூறிய மழுவால் குத்தினர். உடனே பெரிய நம்பிகள் தம் இரு திருக்கரங்களையும் உயரத் தூக்கிய பெருத்த குரலில்
“பகவத் விரோதிகளாயிருக்கிற இந்த நீசர்கள் நிறைந்த சபையிலே நியாயம் அறிந்தவர் ஒருவரும் இல்லையா?” எம்பெருமானை பரம் பொருள் என்று உணர்ந்தவர் ஒருவரும் இல்லையா ?” என்று சுற்றிலும் நோக்கினார். அப்போது அரசனுக்கு உடைவாள் எடுக்கும் ஒரு பெண்பிள்ளை உணர்ச்சி பரவசமாகி ஏந்திய உடைவாளை அரசன் முன்பு தூக்கியெறிந்து
“ அடியேன் இங்கு ஒருத்தி நியாயத்துக்குக் குரல் கொடுக்கிறேன்” என்று கூவினாள். அப்பணிப் பெண்ணே ஆழ்வானுக்கும், பெரிய நம்பிகளுக்கும் கை கொடுத்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றாள்
(படம்: பெரிய நம்பிகள் வசம்... ஸ்ரீரங்கம்)
மிகவும் வயதான பெரிய நம்பி வலியைத் தாங்க முடியாமல் பரமபதித்தார். அவர் பரமபதிக்கும் பொழுது ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை நமக்குக் காட்டிக்கொடுத்தார். ஆழ்வானும் அத்துழாயும் (பெரிய நம்பியின் திருக்குமாரத்தி) ஸ்ரீரங்கம் இன்னும் சிறிது தூரம் தான் உள்ளது, அது வரை அவருடைய மூச்சை நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டனர். பெரிய நம்பி உடனேயே அந்த இடத்திலேயே பரமபதித்தார்.
பரமபதிக்கும் முன் அவர் “ஒரு ஸ்ரீவைணவன் மடியைக் காட்டிலும் கோயில் சிறந்தது அன்று” என்று சொல்லி அடியேனுக்கு ஆழ்வான் மடி ஸித்தித்தது என்று ஆளவந்தார் திருவடிகளை தியானித்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
ஆழ்வார் “வைகுந்தம் ஆகும் தம்மூரெல்லாம்” – ஸ்ரீவைஷ்ணவர்கள் இருக்கும் இடமே ஸ்ரீவைகுந்தம் என்று கூறினார், அது பொய்க்க கூடாது என்றும், ஸ்ரீரங்கம் அல்லது அல்லது ஏதேனும் ஒரு திவ்ய தேசத்தில் வந்து தான் பரமபதிக்க வேண்டும் என்று நினைத்து விடுவார்கள். அது நமது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் ஆசாரியர்களின் பெருமையைக் குறைத்துவிடும் என்று இவ்வாறு செய்தார்.
அந்தப் பணிப்பெண் பெயர் நாவல்கொடி அம்மாள். பதவியைத் தூக்கியெறிந்து நாவல்கொடி அம்மாள் பெரியநம்பியை திருப்பள்ளிப்படுத்த உதவியாயிருந்தாள். அவளே கூரத்தாழ்வானை ஒரு தொட்டியில் ஏற்றித் திருவரங்கத்துக்கு கொண்டு போய்ச் சேர்த்தாள். பிறகு நாவல் கொடி அம்மாள் திருவரங்கத்திலே நித்ய வாசமாகத் தங்கிவிட்டாள். ஸ்ரீராமானுஜர் திருநாராயண புரத்திலிருந்து ஸ்ரீரங்கம் திரும்பிய போது நாவல் கொடி அம்மாள் உடையவருடைய திருவடிகளை ஆசிரயித்தாள். ஆழ்வான், பெரிய நம்பிகளுக்கு உதவி செய்த நாவல் கொடி அம்மாளுக்கு நம்பெருமாள் தீர்த்த பிரசாதங்களும், சகல விதமான சீர்வரிசைகளும், மரியாதைகளும் கொடுத்து கௌரவித்தருளினார்.
(படம்: ஸ்ரீவைஷ்ணவம் - பசுமையாக...)
பெரிய நம்பிகள், அனந்தாழ்வான் வம்சத்து ’ஜீன்’ அப்படியே அவர்களிடம் இருப்பதை இன்றும் பார்க்கலாம். ’செயற்கரிய செய்வர் பெரியர்’ என்ற வள்ளுவர் வாக்குக்கு இவர்களே எடுத்துக்காட்டு. - “down to earth" என்று ஆங்கிலத்தில் சொல்லுவது இவர்களுக்கு அப்படியே பொருந்தும். இவர்களைப் போல நம்பிகளும், ஆழ்வான்களும் ’தொண்டரடிப் பொடி’ ஆசாரியர்களாக இருப்பதால் தான் ஸ்ரீவைஷ்ணவம் நிலைத்து இருக்கிறது.
தொண்டரடிப் பொடி ஆழ்வார், பெரிய நம்பிகள் திருநட்சத்திரம்
மார்கழி கேட்டை
Comments
Post a Comment