Skip to main content

பாகவத திருப்பாவை - 22 ( கண் )

பாகவத திருப்பாவை - 22 ( கண் )



அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே 
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் 
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே 
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? 
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் 
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் 
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்

அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து 
உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல 
நாங்களும் நெருங்கி வந்துள்ளோம்.
சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ போல் 
உன் கண்கள் சிறிது சிறிதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ?
சந்திரனும் சூரியனும் உதித்தது போல 
அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால் 
எங்கள் சாபங்கள் தொலைந்து விடும்.


’அபிமானம்’ எங்கே இருக்க வேண்டும் எங்கே இருக்கக் கூடாது என்று புரிந்துகொண்டாலே நமக்குத்  தெளிவு கிடைத்துவிடும். 

ஆண்டாள் அபிமானங்கள் ’பங்கமாக’ வேண்டும் என்கிறாள். 
பெரியாழ்வார் ’அபிமானதுங்கன் செல்வனைப்போல’ உனக்கு அபிமானத்துடன் இருக்க வேண்டும் என்கிறார். 

நம்மிடம் நமக்கே அபிமானம் கூடக் கூடச் செருக்கு, பொறாமை அதிகமாகி நானே பெருமாள் என்ற நிலைக்குக் கொண்டு தள்ளிவிடும். இது ஒரு விதமான ஸ்லோ பாய்சன்.  

பாகவதத்தில் பௌண்டிரகன் கதை இதற்கு உதாரணம்( 10.66.1-23). 

கரூஷ தேசத்து அரசன் பௌண்டரகன். கண்ணனின் வீர தீரச் செயல்களைக் கேட்டு கண்ணனிடம் பொறாமை ஏற்பட்டது. ‘நானே வாசுதேவன்’ என்று தன்னை அறிவித்துக்கொண்டான். பித்தம் தலைக்கு ஏறி நாடகத்தில் நடிக்கும் சிறுவன் போல கையில் சங்கு சக்கரம் என்று அவனே கட்டையில் செய்து கையில் மாட்டிக்கொண்டான். 

தானே வாசுதேவனாக எண்ணிய அந்த அறிவிலி துவாரகையில் இருக்கும் கண்ணனுக்குச் செய்தி அனுப்பினான். 

“நான் ஒருவனே வாசுதேவன். அதனால் நீ உன் வாசுதேவன் என்ற பெயரை விட்டுவிடு. எனது அடையாளங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றை நீ முட்டாள் தனமாக தரித்திருக்கிறாய். அவற்றை நீ விடுத்து, என்னைச் சரணடைய வேண்டும். இல்லையேல் என்னிடம் போர் புரியவேண்டியிருக்கும்”

இந்தப் பௌண்டரகனுக்கு காசி மன்னன் வேறு உதவிக்கு வந்தான். 

கண்ணனும், பலராமனும் ஒரு முறை நந்த கோகுலம் சென்றிருந்த போது அங்கே சங்கு சக்கரம், ஸ்ரீவத்ஸம் முதலிய அடையாளங்களுடன் பொய்யான இந்த பௌண்டிரகனைப் பார்த்து கண்ணன் பலமாக சிரித்தார். 

அதைக் கண்டு கோபம் கொண்ட அவன் கண்ணனைப் படைகள் கொண்டு தாக்கினான். கண்ணன் வழக்கம் போல அவனைத் துவம்சம் செய்தார். அவனுக்கு உதவிக்கு வந்த காசி அரசனுக்கும் அதே கதி. 

பாகவதத்தில் இன்னொரு கதையும் இத்துடன் நாம் சேர்ந்துப் பார்க்க வேண்டும்(3.1.2) கண்ணன் அஸ்தினாபுரத்துக்குத் தூது சென்றார். கண்ணன் வருவதை அறிந்த எல்லோரும் பல ஏற்பாடுகள் செய்தார்கள். 

திருதராஷ்டரன்  பொன்னால் ஆன தேர், ரத்தினம் பரிசாகக் கொடுக்க ஏற்பாடு செய்தான்.  துரியோதனன் வித விதமான உணவு வகைகளுடன் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான்.

அஸ்தினாபுரம் வந்த கிருஷ்ணர் எந்த இல்லத்துக்குள் நுழையலாம் என்று யோசித்த சமயம் துரியோதனன், பீஷ்மர், துரோணர் எல்லோரும் “என் இல்லத்துக்கு வாருங்கள்” என்று போட்டிப் போட்டுக்கொண்டு கிருஷ்ணரை அழைக்க கிருஷ்ணர் விதுரர் இல்லத்துக்குச் சென்றார். 
கண்ணன் ஏன் விதுரர் வீட்டுக்குச் சென்றார் ? எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைக்க, விதுரர் மட்டும் “கண்ணா இது உன் இல்லம்” என்றார். சொந்த வீட்டுக்குச் செல்ல யார் அனுமதியும் தேவை இல்லையே ! அதனால் கண்ணன் உள்ளே நுழைந்தார். 

துரியோதனனுக்கு கடும் கோபம். கண்ணனைப் பார்த்து கோபமாக ஏதோ கேட்க நினைத்த சமயம், கண்ணன் தன் கண்களை மெதுவாக திறந்து துரியோதனனைப் பார்த்தார். 

அந்தக் கண் அழகில் மயங்கிய துரியோதனன் தன்னையும் அறியாமல் “புண்டரீகாக்ஷா! எங்களை எல்லாம் விட்டுவிட்டு கீழ் குலத்தவனான விதுரரின் வீட்டுக்கு ஏன் சென்றாய்” என்று கேட்டான். ( பொதுவாக துரியோதனன் கண்ணனைக் கிருஷ்ணர் என்று தான் அழைப்பான். ஆனால் கண்ணனின் ‘புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்பெரிய ஆய கண்கள் பார்த்த பேதைமையில் ’புண்டரீகாக்ஷா’ என்று அழைத்தான்). 

கண்ணன் பதில் கூறவில்லை. அவன் பார்வையிலேயே பதில் இருந்தது.  
பதில் இது தான் - இப்படிப் பட்ட ’செங்கண் சிறுச் சிறிதே’ பார்க்கப்பட்டவனை எப்படித் தாழ்ந்த குலம் என்று நீ சொல்லலாம் ? 
அதனால் தான் விதுரரை விதுராழ்வார் என்கிறோம்!. 

ஆண்டாள் இந்தப் பாடலில் பெருமாளின் கண்ணை ஓர் இடத்தில் மறைத்து வைத்துள்ளாள். எங்கே என்று கண்டுபிடிக்கலாம். 

‘எங்கள் மேல் நோக்குதியேல்’  என்பதில் . 
எங்கள் + மேல் என்ற வார்த்தைகளுக்குச் சந்தி சேர்த்தால்  ’எங்கண்மேல் நோக்குதியேல்’ என்று கிடைக்கும். 

‘எங்கள் மேல்’ என்பது சாதாரண அர்த்தம் ஆனால் அதுவே சந்தியுடன் சேர்ந்து  ’எங்கண்மேல் நோக்குதியேல்’  என்று வரும் போழுது ‘கண்ணோடு கண் நோக்குவது’ என்ற பொருளில் மிக அழகான ஓர் அர்த்தத்தை ஆண்டாள் நமக்குக் காட்டுகிறாள். இதை ஒரு குறளில் வள்ளுவர் சொல்லுகிறார். 

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

கண்களோடு கண்கள் நோக்கி அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்கிறார். 

பௌண்டிரகன் போல் இருக்கும் நம் அபிமானங்கள்  பங்கப்பட்டு, அபிமான துங்கனான விதுராழ்வார் போல பெருமாளிடம் சென்றால், அவன் தாமரை கண்கள் நம் மீது பட்டு நம் சாபம் எல்லாம் தொலையும் என்கிறாள் ஆண்டாள்.
- சுஜாதா தேசிகன்
அங்கண்- 22
21.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments