Skip to main content

கூரத்தாழ்வான் என்ற பெரியார்

கூரத்தாழ்வான் என்ற பெரியார்


பல வருடங்கள் முன் கூரத்தாழ்வானின் திருநட்சத்திரத்துக்கு கூரம் சென்று ஆழ்வானைச் சேவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்  சில காரணங்களால் அது  முடியாமல் போனது. அந்த சமயம் வார்த்த மாலை திருப்பிய பொழுது ஆழ்வான் குறித்த ஒரு விஷயம் கண்ணில் பட்டு மன அமைதியைக் கொடுத்தது.  

அது என்ன என்பதைப் பற்றிக் கட்டுரையின் கடைசியில் சொல்லுகிறேன். 

அதற்கு முன் கூரத்தாழ்வான் எப்பேர்பட்ட பெரியார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா ? 

ஸ்ரீ வைஷ்ணவத்தில் யாரை ’ரோல் மாடலாக’ கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு கூரத்தாழ்வான் என்று பதில் சொல்லலாம். 

பெரியாழ்வார் திருமொழியில் வரும் 'பலசுருதி' (பலன்) சொல்லும் பாசுரம் இது 

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணிவண்ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே. 

இந்தப் பாசுரங்களைச் சொன்னால் மாயனான மணிவண்ணன் திருவடிகளை வணங்க வல்லப் பிள்ளையை மகனாக பெறுவார்கள் என்கிறார்.  இந்த மாதிரி ஒரு மகனைத் தான் பெற்றார் ஆழ்வானுடைய தந்தையார். ஏன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லுகிறேன். 

ஆழ்வானின் சிறுவயதில்  நங்கையார் என்ற அவருடைய தாயார் பரமபதம் அடைந்தாள். ஆழ்வானைப் பார்த்துக்கொள்ள அவருடைய தந்தை மறுமணம் செய்து கொள்ள எண்ணினார். ஏறக்குறைய அது நடக்கும் சமயம், ஆழ்வானைப் பார்த்தார் அவருடைய தந்தை. எல்லா ஸ்ரீ வைஷ்ணவ இலட்சணங்களும் பொருந்தியவராக இருக்கும் ஆழ்வானுக்குத் தன் மறுமணத்தால், மாற்றாந்தாய்க்கு அடிமைப் பட்டிருக்க வேண்டி வரும், அவள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஆழ்வானைக் கொடுமைப் படுத்தினால், அதனால் தமக்குப் பாகவத அபசாரம் ஏற்படும் என்று கருதி மறுமணம் செய்துகொள்வதைத் தவிர்த்துவிட்டார். 

இப்பேர்பட்டவருடைய மகனான ஆழ்வான் எப்படிப் பட்டவராக இருப்பார் ? 

சோழ அரசன் சபையில், ஆழ்வானுடைய சிஷ்யன் நாலூரான் ஏதோ சொல்லப் போக  ஸ்ரீராமானுஜரையும் சம்பிரதாயத்தின் கவுரவத்தையும் காக்கத் தன் கண்களைத் தியாகம் செய்தார் ஆழ்வான் என்பது உங்களுக்குத் தெரிந்த கதை. 

சில காலம் கழித்து ஆழ்வானை சந்தித்த ஸ்ரீராமானுஜர் மிகவும் வேதனையுடன், ஆழ்வானை வாரியணைத்துக் கொண்டு “விசிஷ்டாத்வைத தர்சனத்துக்காக ,உமது கண்ணை இழந்தீரே.உமக்கா இந்த நிலை?” என்று அழுதார்.

அதற்கு ஆழ்வான், ”ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் திருமண் கோணியது என்று பாகவத அபசாரப்பட்டிருப்பேனோ” என்றாராம். 

பாகவத அபச்சாரம் என்பது எந்த ரூபத்திலும் இருக்க கூடாது என்று நினைத்த ஆழ்வான் இதை விட அதற்குப் பிறகு அவர் செய்த காரியம் தான் அவர் கருணையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

ஆழ்வானும் எம்பெருமானாரும் காஞ்சிபுரத்துக்கு வந்த சமயம் உடையவர் ஆழ்வானை வரதாராஜஸ்தவத்தை பேரருளாளன் முன்பு விண்ணப்பம் செய்து, பதிலுக்குக் கண்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நியமித்தார்.

ஆசாரியர் சொன்னால் மறுத்துப் பேசக் கூடாது, அதனால் கூரத்தாழ்வானும் ஆசாரியர் கட்டளையை மறுக்கவிரும்பாமல் அப்படியே செய்தார். ஆழ்வான் வரதாராஜஸ்தவத்தை முடிக்கும் சமயம் பேரருளாளர் “என்ன வேண்டும் என்று கேட்க ?” அதற்குக் கூரத்தாழ்வான் “நான் பெரும்பேறு நாலூரானும் பெற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அதாவது ஸ்ரீராமானுஜ சம்பந்தத்தால் தான் மோட்சம் அடைவது மாதிரி நாலூரானும் பெற வேண்டும் என்று கொள்ள வேண்டும். 

 ’நம்’ தமிழில் ஒரு சிறப்பு வார்த்தை. நம்ம ஆளு, நம் வீடு, நம் குழந்தை, நம் ஊர், நம் நாடு என்று எங்கு எல்லாம் ‘நம்’ சேருகிறதோ அங்கே எல்லாம் அபிமானம் இருக்கும். ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆழ்வார், ஆசாரியர் ஏன் பெருமாளுக்கும் ’நம்’ அடைமொழி உண்டு. இதனை உபதேச ரத்தினமாலையில் 

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர்
அவரவர் தம் ஏற்றத்தால்
அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே!
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று

என்கிறார் மணவாள மாமுனிகள். அதாவது அன்புடையார் இவர்களுக்கு அன்பாகச் சாற்றிய திருநாமங்கள் என்கிறார். 

கூரத்தாழ்வானுக்கு இந்த ’நம்’ உண்டு. 

”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் - வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்”

பொருள்: முக்குறும்பு என்பது கல்வி செருக்கு ( அதிகம் படித்தவன் என்ற எண்ணம் ); செல்வச் செருக்கு ( அதிகப் பணம் இருக்கிறது என்ற எண்ணம் ); குலச் செருக்கு ( உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம் ). 

இந்த மூன்று கர்வங்களும் ஒரு பெரும் குழியைப் போன்றவை. அதற்குள் விழுந்துவிட்டால் வெளியேறுவது மிகக் கடினம். நம் கூடத்தாழ்வான் இந்த மூன்று கர்வங்களையும் ஜெயித்தவர். 

இராமானுச நுற்றந்தாதில் இந்த வரிக்கு இரண்டு விதமாகப் பாட பேதங்கள் உண்டு 
‘குழியைக் கடக்கும்’ என்றும் ’குழியைக் கடத்தும்’ என்றும் பாடம். 

எது சரி? 

முதல் பாடத்துக்கு அர்த்தம் - குழியைக் கடக்கும் - மூன்று கர்வங்களாகிய படு குழியைக் கடந்தவர் என்று பொருள். 

அடுத்த பாடம் குழியைக் கடத்தும் - இந்த மூன்று கர்வங்கள் ஆகிய படுகுழியைத் தான் கடந்தது மட்டும் அல்லாமல், தன் சீடர்களையும் கடக்க வைத்தார் என்று பொருள்.  ஆக இரண்டும் சரியானவை தான் ! 

பெருமாளின் குணங்களைப் பேசும்போது தப்பே வராது ; ஆசாரியர்களைப் பற்றிப் பேசும் போதும் அதே. 

மேலே குறிப்பிட்டுள்ள இராமநுச  நூற்றந்தாதியில் “நம் கூரத்தாழ்வான்” என்கிறார் அமுதனார்.  காரணம் என்னவாக இருக்கும் ? 

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று தெரிகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லோரும் பெரிய நம்பிகளிடம் கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் பிராத்திக்கிறார்கள். பெரிய நம்பிகள் ”சரி செய்கிறேன் ஆனால் என்னுடைய நிழல்  போல  பெருமாளே உபாயம் (பாரதந்திரியத்தை) முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னைப் பின் தொடர வேண்டும்”  என்று விண்ணப்பிக்க 

”அப்படிப்பட்டவர் யார்? என்று ஸ்ரீராமானுஜர் கேட்க “நம் கூரத்தாழ்வான்” என்றார் பெரிய நம்பி.  இங்கே “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார் என்று நாம் கொள்ளலாம்.  

கட்டுரையின் ஆரம்பத்தில் கூரம் செல்ல முடியவில்லை என்று சொல்லியிருந்தேன் அல்லவா ?

அப்பன் என்ற தனவந்தர் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குப் பக்கம் வசித்து வந்தார். ஆழ்வானைப் பற்றி அறிந்து அவரின் சீடராக வேண்டும் என்று விரும்பி ஆழ்வான் இல்லத்துக்கு வந்தார். 

துரதிருஷ்டவசமாக அப்போது ஆழ்வான் உயிர் பிரியும் சமயமாக இருந்தது. அதனால் அப்பன் ஆழ்வானைப் பார்க்க முடியவில்லை. மிகவும் மனம் வருந்தினார். 

அருகிலிருந்த பட்டரிடம் என்ன செய்யலாம் என்று கேட்க அதற்குப் பட்டர் “எப்பொழுது அப்பன் ஆழ்வானை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாரோ அப்போதே ஆழ்வானின் சீடராகிறார்” என்றார்.

கூடத்தழ்வானின் சீடராக ஆக வேண்டும் என்ற எண்ணமே ஒருவனுக்கு நல்லது செய்யும். 

இன்று தை, ஹஸ்தம் ’நம்’ கூரத்தாழ்வானுடைய திருநட்சத்திரம்

- சுஜாதா தேசிகன்
23.01.2022

Comments

Post a Comment