Skip to main content

பாகவத திருப்பாவை - 15 ( நானேதான் ஆயிடுக )

 பாகவத திருப்பாவை - 15 ( நானேதான் ஆயிடுக ) 



எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!*
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்*
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்*
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!**
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?*
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்*
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க*
வல்லானை மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய் 488/15


எழுப்ப வந்தவர்கள்: இளங்கிளி போன்றவளே! என்ன, இன்னுமா தூங்குகிறாய்?
உறங்குபவள்:  பெண்களே! இதோ வருகிறேன். 'சில்' என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள்.

எழுப்ப வந்தவர்கள்: நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே!
உறங்குபவள்: நீங்கள் தான் வாயாடிகள்; பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருந்துவிட்டுப் போகிறேன்.

எழுப்ப வந்தவர்கள்: நீ உடனே புறப்பட்டு வா; வேறு என்ன வேலை இருக்கிறது?
உறங்குபவள்: எல்லாப் பெண்களும் வந்து விட்டார்களா?

எழுப்ப வந்தவர்கள்:  எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிப்பார். குவலயாபீட யானையையும் கம்சன் 
முதலிய பகைவர்களையும் அழித்த கண்ணன் புகழ் பாட எழுந்து வா.
திருப்பாவையில் திருப்பாவை என்று இந்தப் பாசுரத்தை நம் பூர்வர்கள் கொண்டாடுவார்கள். இப்பாசுரம் சேவித்தாலே ‘திருப்பாவை ஆயிற்று’ என்பாராம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். 

பகவான் விஷயத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ‘சிற்றம் சிறுகாலே’ என்ற பாசுரத்தில் ஆண்டாள் கூறுகிறாள்.  பாகவதன் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தப் பாசுரத்தில் கூறுகிறாள். 

ஓர் உதாரணம் பார்க்கலாம். நாம் திருவாராதனம் செய்துகொண்டு இருக்கிறோம், அப்போது வீட்டுக்கு ஒரு ஸ்ரீ வைஷ்ணவ அடியார் வருகிறார். அப்போது நாம் திருவாராதனத்தை விட்டுவிட்டு அவருக்கு உபசரிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் பெருமாள் கோபித்துக்கொள்ள மாட்டார், மாறாக அவர் சந்தோஷப்படுவார். 

அதனால் தான் கோயிலுக்குச் செல்லும்போது அங்கே கோஷ்டி நடைபெற்றுக்கொண்டு இருந்தால் முதலில் கோஷ்டியைச் சேவித்துவிட்டு பிறகு பெருமாளைச் சேவிப்போம். 

கஜேந்திரமோட்சம் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் கஜேந்திரன் என்ற யானை முற்பிறவியில் பாண்டிய மன்னனாக இருந்த  ’ஃப்ளாஷ் பேக்’ பலருக்குத் தெரிந்திருக்காது. ( 8.4.6-10). அதைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். 

தமிழகத்தில் இந்திரத்யும்னன் என்பவன் பாண்டிய மன்னனாக பெரும் புகழ்பெற்று விளங்கினான். ஸ்ரீமந் நாராயணனை வணங்கிப் பல விரதங்களைத் தவறாது கடைப்பிடித்து வந்தான். 

ஒரு சமயம் மலை அடிவாரத்தில் ஓர் ஆசிரமம் அமைத்து, சடை தரித்து தவம் இருந்தான். ஒரு நாள் நீராடி, மௌனம் மேற்கொண்டு,,மனத்தை ஒருமுகப்படுத்தி ஸ்ரீமந் நாராயணனைப் பூஜிக்க தொடங்கினான். அந்தச் சமயம் அகத்தியர் முனிவர் தன் சிஷ்யர்களுடன் அங்கு வந்தார். மன்னன் பூஜையில் மும்முரமாக இருந்ததால் முனிவரைக் கவனிக்க வில்லை. 

பெரியோரைக் காக்க வைத்து அறநெறிகளைத் தவறினான் என்று கோபம் கொண்ட அகத்திய முனிவர் “இவன் யானையைப் போல மதமும் அறியாமையும் கொண்டவன். ஆகவே அறியாமையே கொண்ட யானையாகப் பிறக்கட்டும்” என்று சபித்தார். பகவானைப் பூஜித்த புண்ணியப் பயனால் யானை பிறவியிலும் முற்பிறவியில் பகவானிடம் கொண்ட பக்தி அப்படியே இருந்தது!. 

ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியைத் தரிசித்து வணங்குவதே கண் படைத்த பயன் ! அந்தக் கோஷ்டியை வந்து சேவிக்க அழைக்கிறாள் ஆண்டாள். உள்ளே இருக்கும் பெண் எதிர் வாதம் செய்து, பிறகு ஒரு கட்டத்தில் ‘நானே தான் ஆயிடுக’ என்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறாள். 

குற்றம் செய்தவனை “நீ குற்றம் செய்தாய்” என்று பழி சுமத்துவதை விட அவனிடம் கருணைக் காட்டி மன்னிப்பது மிக உயர்ந்த செயல். இதற்குப் பாகவதத்தில் ஓர் உதாரணம் பார்க்கலாம். 

திரௌபதி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது. சூதாட்டம், புடவை, சபதம், மஹாபாரதப் போர், சபதத்தை நிறைவேற்றுதல் என்பது. 

மஹாபாரத திரௌபதிக்கும் பாகவத திரௌபதிக்கும் வித்தியாசம் இருக்கிறது. மஹாபாரத திரௌபதியுடன் கோபத்தால் குருதி வழியும். ஆனால் பாகவத திரௌபதியிடம் கருணை வழியும். (3.7.43-45)

மஹாபாரதப் போர் முடிந்த பின் துரோணரின் மகனான அசுவத்தாமன் ஓர் இரவு தூங்கிக்கொண்டு இருக்கும்  பாண்டவர்களின் குழந்தைகளின் தலைகளைச் சீவி கொன்றுவிடுகிறான். அர்ஜுனன் கோபத்துடன் திரெளபதியிடம் “உன் பிள்ளைகளைக் கொன்றவனுடைய தலையைக் கொண்டு வருகிறேன்” என்று சபதம் செய்து அசுவத்தாமனைக் கட்டி இழுத்து வந்து திரௌபதியிடம் ஒப்படைக்கிறான். 

அவமானத்தால் தலைகுனிந்து அசுவத்தாமன் நிற்கிறான். திரௌபதி அவனைப் பார்த்து “இவரை விட்டுவிடுங்கள், இவர் அந்தணர், மேலும் நமது குருவின் புத்திரன் குரு உருவில் நிற்கிறார்” என்று கருணையும் நற்குணமும் நிரம்பியவளாக திரௌபதி  அசுவத்தாமனை வணங்கினாள். பிறகு ”இவருடைய தாய் என்னைப் போலப் பிள்ளையைப் பறிகொடுத்து, துன்புற்று, என்னைப் போலக் கதறுவதை நான் விரும்பவில்லை. இவரைக் கொன்றால் அது அதர்மம்!” என்றாள். 

சுகபிரம்மம் என்ற இளம் கிளி பாகவத அனுபவத்தில் ஊன்றிக் கிடக்க, அந்தக் கிளியை ஆண்டாள் கண்ணணைக் காணப் போய்க்கொண்டிருக்கிறோம் சீக்கிரம் எழுந்து வா! என்று அழைத்து, குற்றம் செய்தவனை மன்னிப்பதை விட,  அந்தக் குற்றத்தைத் தன்மீது சுமத்திக்கொள்பவனே மிக உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவன் என்று ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் நமக்குக் கூறும் பாடம். 

”குற்றம் செய்தவர்கட்கெல்லாம் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன்” என்று  தயாசதகத்தில் கூறிய  ஸ்வாமி தேசிகன், ”குற்றம் செய்தவனாயினும் அடியேனுக்குக் கருணை காட்டி அருள வேண்டும்” என்கிறார் கோதாஸ்துதியில். 

போதருகின்றேன் - என்ற சொல்லும் கண்ணன் சம்பந்தமான சொல்!

கூப்பிட்டால் உடனே வராமல்,  ‘இதோ வருகிறேன்’ என்று குரல் மட்டும் கொடுத்துவிட்டு, வராமல் இருக்க, “குரல் மட்டும் கேட்கிறது வருவதற்கு எத்தனை நேரமாகுமா ?” என்று யசோதை அழைப்பாளாம். கண்ணன் வருகிறேன் என்று கூறி வராமல் போக்கு காட்டுவதை 

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்
போதரேன் என்னாதே போதர் கண்டாய்

பெரியாழ்வார் “கண்ணா! டபாய்க்காதே நைனா’ என்று அழைக்கிறார் .

- சுஜாதா தேசிகன்
எல்லே - 15
2.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments