Skip to main content

பாகவத திருப்பாவை - 17 ( அறஞ்செய்யும் கொழுந்தே! )

பாகவத திருப்பாவை - 17 ( அறஞ்செய்யும் கொழுந்தே! )

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்*
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;*
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!*
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்**
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த*
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்*
செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!*
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய் 490/17

உடையே, தண்ணீரே, சோறேயெனத் தானம் செய்யும் 
எஜமானனான நந்தகோபாலரே எழுந்திருக்க வேண்டும்.
வஞ்சிக் கொடிக்குக் கொழுந்து போல் முதன்மையானவளே!
எங்கள் குலவிளக்கே! எஜமானியான யசோதையே விழித்துக்கொள்!
வானளாவிய ஓங்கி வளர்ந்த அனைத்துலகங்களையும் 
அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே எழுந்திரு.
பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த 
பலராமா நீயும் உன் தம்பியான கண்ணனும் எழுந்திருக்க வேண்டும்

அம்பாரமே!

கண்ணன் அவதாரம் முடிந்து வைகுண்டத்துக்குப் புறப்பட்டுச் சென்று பின் பாண்டவர்களுக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. அப்போது அர்ஜுனன் தன் உற்ற தோழன் பிரிவால் மனம் கலங்கினான். பாண்டவர்கள்மீது கண்ணன் கொண்டிருந்த அன்பை நினைத்து நினைத்து அர்ஜுனனின் கண்கள் கலங்கியது ( 1.15.3 ) 

துஷ்டனான துச்சாதனன் நடு சபையில் திரௌபதியின் அழகான கூந்தலைப் பிடித்து இழுத்துக் களங்கப்படுத்தினான். திரௌபதி கண்ணனது திருவடிகளைக் கண்ணீரால் நனைத்து வணங்கி நிற்கக் கண்ணன் துவாரகையிலிருந்து ’அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி’ அந்த ஆபத்திலே இருந்த திரௌபதிக்கு ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’  போலத் திரௌபதிக்கு புடவையை ’அம்பாரமே’ என்று ஆச்சரியமான தானம் வழங்கினான்( 1.15.10 ) 

தண்ணீரே! 

கண்ணன் தன் தோழர்களுடன் மாடு மேய்த்துக்கொண்டு இருக்கும்போது, கண்ணன் திருவாயிலிருந்து வெளியான வேணுகான அமுதத்தை மேல் நோக்கி நிமிர்த்திய காதுகளால் தானே சுரக்கின்ற தாய்ப்பாலைப் பருகி விழுங்காமல் வழியவிட்டு கண்ணீர் மல்க நிற்கின்றன கன்றுகள் (10.22.13)

இந்த இடத்தில் திருமங்கை ஆழ்வாரை நாம் அழைக்கலாம். 

கறவா மட நாகு தன் கன்று உள்ளினாற்போல் 
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்

இங்கே நாகு என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். கறவை மாடு முதல் முதலில் கன்றை ஈன்ற அதன் பருவத்தை ‘நாகு’ என்பார்கள். திருமணம் ஆகி முதல் குழந்தை பெரும் பெண் மங்கையா, மாமியா என்று தெரியாத பருவம் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். 

இங்கே கண்ணனின் ஸ்பரிசம் பட்டுக் கறவை மாடுகள் இளமையாக இருக்கிறது. 

திரு நெடும் தாண்டகத்தில் 

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்,
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே!

என்று ‘கன்று மேய்ப்பது’ தான் “இனிது உகந்து” என்கிறார் திருமங்கை ஆழ்வார். 

எப்படி ’உகந்தது’ என்பதை ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் விவரிக்கிறாள்

பட்டி மேய்ந்து ஓர் காரேறு
பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை
இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டுக்கொண்டு விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே

(நா.தி.14-1)

இதில் இருக்கும் வரிகளை உன்னிப்பாகக் கவனியுங்கள். இங்கேயும் ‘இனிது’ என்ற வார்த்தை வருகிறது கூடவே ’நீர் ஊட்டி’ என்றும் வருகிறது.  கண்ணன் எப்படி நீர் ஊட்டினான் ?

பசுக்களின் தாகத்தைத் தணிக்க நீர் நிலைகளுக்கு அழைத்துச் செல்கிறான் கண்ணன். அப்படிச் செல்லும்போது அவை  இளம் குட்டி பசுக்கள். நீரை எப்படிக் குடிக்க வேண்டும் என்று கூட அவைகளுக்குத் தெரியவில்லை  ( வேணுகானம் கேட்டுத் தாய்ப்பாலையே குடிக்க மறந்த கன்றுகள் தண்ணீர் குடிக்க மறந்தது வியப்பில்லை! ). 

கண்ணன் கன்றுகளைத் தடவிக்கொடுத்து, தன்  கையை முதுகுக்குப் பின் கட்டிக்கொண்டு குளத்தில் இறங்கி, மாடுகளைப் போலக் குனிந்து தன் வாயால் நீரைப் பருகுகிறான். ‘அட இது தான் டெக்னிக்கா’ என்று கன்றுகளும் ஆனந்தமாக நீரைப் பருகுகிறது. குட்டிகளுக்குக் கிடைத்தது கண்ணனின் வாய் அமுத தண்ணீர் பிரசாதம்! தண்ணீரே என்ற தானம். 

இது மட்டுமில்லாமல் பாரதப் போரில் கண்ணன் தேர்க்குத்திரைகளுக்கு நீரூட்டினான். 

பெரியாழ்வார் அவருடைய திருமொழியில் 

மன்னர்மறுக மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்
முன்னங்குநின்று  மோழைஎழுவித்தவன் மலை
கொன்னவில்கூர்வேற்கோன்  நெடுமாறன்தென்கூடற்கோன்
தென்னன்கொண்டாடும்  தென்திருமாலிருஞ்சோலையே

தேர்களில் செல்லும்போது குதிரைகள் தாகத்தில் தவித்தபோது, வாருணாஸ்திரத்தை பிரயோகித்து, வறண்ட பகுதியில் நீரைக் கிளப்பி தேர்க்குத்திறைகளுக்குத் தாகத்தைத் தீர்த்தான். 

சோறே

இன்னொரு நாள் கண்ணனும் பலராமனும் கோபர்களுடன் தம் பசுக்களை யமுனையில் குனிந்து இனிய நீரைத் தேவையான வளவு பருக விட்டுத் தாங்களும் அதைப் பருகினர் ( 10.22.37) பிறகு பசுக்கள் காட்டில் மேயச்சென்றன. கோபர்கள் பசியால் வாடி “கண்ணா ! பசி வாட்டுகிறது!” என்றார்கள். 

சற்று தூரத்தில் (10.23.3-23) சில அந்தணர்கள் சுவர்க்கம் செல்லும் விருப்பத்தில் தேவர்களுக்கு யாகம் புரியும் இடத்திற்குச் செல்லுங்கள் என்று கூற இடைச்சிறுவர்கள் அங்கே ஓடினார்கள். அந்தணர்களிடம் “பசிக்கு அண்ணம் கொடுங்கள்” என்று கேட்க, அந்தணர்கள் அவர்களுக்கு உணவு கொடுக்க மறுத்துவிட்டார்கள். 

ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுவர்கள் இதைக் கண்ணனிடம் கூற, கண்ணன் சிரித்துக்கொண்டு “என் பெயரைச் சொல்லி, அந்தணர்களின் மனைவியிடம் கேளுங்கள்!” என்று கூற கோபர்கள் அந்தணர் மனைவிகளிடம் கேட்க, கண்ணன் அருகில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டு கண்ணனிடம் மனதைப் பறிகொடுத்த அவர்கள் உணவைப் பாத்திரங்களில் அள்ளிக்கொண்டு ஆறுகள் கடலை நோக்கி ஓடுவது போலக் கண்ணன் இருக்கும் இடத்துக்கு உணவுடன் ஓடினார்கள். 

அனைத்து அறிந்த, உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என்று அனைத்துமான பகவான் கண்ணன் அவர்கள் அளித்த உணவைக் கோபர்களுக்குத் தந்து சாப்பிடச் செய்து, தானும் சாப்பிட்டார்(10.23.35). கோபர்களுக்கு அன்று பத்தவிலோசனம்(நா.தி. 12-6) என்ற இடத்தில் கடித்தும், நக்கியும், சப்பியும், உறிஞ்சியும் சாப்பிடக்கூடிய நால்வகை உணவை ‘சோறே’ என்ற பசியைத் தீர்த்த அன்னதானம்!

ஒரு செடியின் வேரில் வெந்நீர் ஊற்றினால் செடியின் நுணியில் இருக்கும் கொழுந்து வாடுவது போலப் பக்தர்கள் மானம், தாகம், பசி என்றால், கொழுந்து போல வாடி உடனே வஸ்திர,  தீத்த, அன்ன தானம் (எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்வது தானே தானம்) அறஞ்செய்யும் கொழுந்தே! என்று கண்ணனை எழுப்புகிறாள் ஆண்டாள். 

- சுஜாதா தேசிகன்
நாயகன் - 17
6.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments