Skip to main content

28. பாவை குறள் - சிறுபேர்

28. பாவை குறள் - சிறுபேர் 

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்,
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து  உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா  உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்  உன் தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்.

பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்போம்.
அறிவொன்றும் இல்லாத மாடுமேய்க்கும் குலத்தில் பிறந்த நாங்கள்
உன்னை எங்களுடைய குலத்தவனாகப் பாவிக்கும் புண்ணியத்தைச் செய்துள்ளோம்
எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா!
நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது
அறிவற்ற சிறு பிள்ளைகள் நாங்கள்,
அன்பால் அழைத்ததை பொறுத்துக் கோபம் கொள்ளாமல்
எங்களுக்கு வேண்டியதை நீதான் கொடுக்க வேண்டும்.

இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் ‘சிறுபேர்’ என்று கூறுவதைப் புரிந்துகொள்ள நாம் கோகுலத்துக்குச் செல்லலாம். 

கோகுலத்தில் கண்ணன் குறும்பு செய்ய, அங்கே இருக்கும் சிறுமிகளுக்கு கண்ணனுடன் அடிக்கடி சண்டை வரும். சிறுமிகள் கண்ணனைத் திட்ட அவன் அதற்குச் சிரிக்க, இவர்களுக்குக் கோபம் இன்னும் அதிகமாகும்! கண்ணனை அழவிடச் சிறுமிகள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு திட்டம் வகுத்தார்கள். 

கண்ணன் தெருவில் போகும் போது “அதோ பாருடீ  நாராயணன் போகிறான்!” என்று கூற அதைக் கேட்ட கண்ணன் ’வீல்’ என்று தேள் கொட்டியது போல அலறிக்கொண்டு யசோதையின் காலைக் கட்டிக்கொண்டு அழுவான். வெகுளியான யசோதை பதற்றத்துடன் கம்சன் வேறு ஏதாவது ராக்ஷசியை அனுப்பிவிட்டானே என்று பயந்து கண்ணனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு ”என்னடா ஆச்சு?” என்று கேட்க அதற்கு கண்ணன் “அம்மா அம்மா என்னை அவர்கள் நாராயணன் என்று திட்டறா!” என்பான். யசோதை கோபமாகப் புடவையை முடிந்துகொண்டு தெருவில் வந்து “குட்டிகளா ஏன் என் செல்லத்தை கோவிந்தா கூப்பிடாம வேற பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுகிறீர்கள் ?” என்று கேட்பாளாம். 

’கோவிந்தா’ என்றால் பசுக்களை மேய்ப்பவன் என்று ஒரு பொருள். இந்தப் பெயரில் கண்ணன் ஆயர் குலத்தில் தானும் ஒருவன் என்ற சம்பந்தமும் அன்னியோன்னியமும் இருக்கிறது. இந்த அவதாரமே கொஞ்சம் ஸ்பெஷல் தான். 

நரசிம்மராக சில மணி தான் காட்சி கொடுத்தார். வாமனாய் குறுகிய வடிவில் வந்து, திரிவிக்கிரமனாய் மாறினார். எளிமையான சக்கரவர்த்தி திருமகனாக இருந்தாலும் அரச குலத்தில் பிறந்தார். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் ஆயர் குலத்தில் இடையர்களுக்குத் தோழனாய் அவர்களுடன் அல்லும் பகலும் மாடுமேய்ப்பவனாக இருந்தார். அதனால் ஆண்டாள் ‘நீ எங்களுக்குக் கிடைத்த புண்ணியம்’ அந்தப் புண்ணியத்தைப் பெற்ற நாங்கள் புண்ணியம் ‘உடையவர்கள்’ என்கிறார். 

பல தேசங்கள் இருக்க பெருமாள் நம் பாரதத் தேசத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே பல அவதாரங்களை நிகழ்த்தியுள்ளான். இங்கே தான் பல ஆழ்வார்களும், பக்தர்களும், ஆசாரியர்களும் அவதரித்துள்ளார்கள். திருவரங்கன் கூட இலங்கை செல்லப் புறப்பட்டு நடுவில் திருவரங்கத்தில் காவிரிக்கு நடுவில் இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அதனால் தான் பாரதத் தேசத்தையே ’புண்ணிய பூமி’ என்கிறோம்.


கறவைகள் பின் சென்ற ஆய்ச்சியர்கள் போல நாம் எல்லோரும் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் பின் தொடர்ந்து இன்று வரை செல்கிறோம்!

இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பெருமாளை நாம் எப்படிச் சேவிக்க வேண்டும் என்று கூறுகிறாள். அவள் கூறும் வழி மிகச் சுலபம். 

பெருமாளின் குற்றமில்லாத குணங்களைப் போற்ற வேண்டும். 

நம்முடைய குற்றமுள்ள குணங்களைக் கூறி எனக்கு அறிவு, தகுதி எதுவும் இல்லை என்பதையே தகுதியாக ஏற்றுக்கொண்டு எங்களை நீ பொறுத்தருள வேண்டும் என்று கூறவேண்டும் 

உடையவர் கத்யத்ரயத்தில் என்ன கூறுகிறார் என்று சுருக்கமாகப் பார்க்கலாம். 

- கீழ்ப்பட்டவர்களுடனும்  பழகும் நீர்மை குணம், அன்று ஈன்ற கன்றிடம் பசு கொள்ளும் பேரன்பு போன்ற கல்யாணக் குணங்களைக் கொண்டவனே.( மாலே! புண்ணியன்). உன் திருமேனிக்கு ஏற்ற சங்கு சக்கரங்கள் கதை சார்ங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களை நித்யமானவனாய் குற்றமில்லாதவனாய் வியப்பிற்கு அப்பாற்பட்டவனாய் விளங்குபவனே. வைகுந்த நாதனே ! ( குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!)

- உன் திருவடிகளைப் பற்றிய எனக்கு நீயே மாதா, பிதா, சுற்றம், ஆசாரியன், வித்தைகள், பொருள்கள் எல்லாமும் நீயே! (உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது) . பலவகையில் அபராதம் செய்த நான் உன்னிடம் ரக்ஷணம் வேண்டுவது குற்றமாகும். இதைப் பொறுத்தருள வேண்டும். மகன் செய்த குற்றத்தைத் தகப்பன் பொறுப்பது போல், தோழன் செய்த குற்றத்தைத் தோழன் பொறுப்பது போல மனைவி செய்த குற்றத்தைக் கணவன் பொறுப்பது போல் என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் (அறியாத பிள்ளைகள், சீறி அருளாதே)  நீயே எனக்கு எல்லாவித உறவும், பொருளும் அதனால் நீ எனது குற்றங்களைக் காண மாட்டாய். நீ எனக்கு ஈஸ்வரன். துதிக்கத் தக்கவன். என் குற்றங்களைப் பொருத்தருள வேண்டும்! உன் உடலை உன் திருவடியின் கீழ் தாழ்த்தி வணங்கி உனது அருளை வேண்டுகிறேன் (இறைவா! நீ தாராய்!) 

இங்கே ஆண்டாள் அறிவு இல்லை என்று கூறாமல் ’எந்த அறிவும் இல்லை’ என்பதை ‘அறிவு ஒன்றும் இல்லாத’ என்று கூறுகிறாள். அதே போல எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா என்று கூறும் போது ‘குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா’ என்கிறாள். 

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

`எனக்கு அறிவு இருக்கிறது` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும் என்று கூறிய வள்ளுவர் செருக்கு இல்லாமல் இல்லாமல் இருந்தாலே பெரிய செல்வம் என்கிறார் 

இன்னொரு குறளில் 

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்து என்ன பயன் ? 

இந்த உலகில் நிலையானது எதுவும் இல்லை என்பதை வள்ளுவர் 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

நிலையில்லாதவற்றை நிலையானது என்று நினைப்பது தான் அற்பத்திலும் அற்பம் என்கிறார். நம் உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு முட்டை உடைந்து பறவை பறந்து போவது போல என்பதைக் 

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு

என்று கூறும் வள்ளுவர் இந்த உடலுக்கு ஏற்ற இடம் பற்றி இப்படிக் கூறுகிறார். 

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? 

நிலையான வீடு பெருமாள் திருவடி தான் என்பதை வள்ளுவர் 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

கடவுளின் திருவடியை இடைவிடாது நினைப்பவர் மோட்சம் பெறுவார். இன்னொரு குறளில் 

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

இறைவனுடைய திருவடிகளை நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது. அதனால் தான் ஆண்டாள் ‘இறைவா! நீ தாராய்’ என்று கேட்கிறாள்! 

21-01-2021
- சுஜாதா தேசிகன்
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art



Comments

Post a Comment