20. பாவை குறள் - உக்கமும் தட்டொளியும்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு — ஏலோர் எம்பாவாய்.
முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும்முன்பே சென்று அவர்களின் நடுக்கத்தைப் போக்கும் வீரனே எழுந்திரு! கருணையுள்ளவனே, வல்லமையானவனே, பகைவருக்குப் பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு தங்கக் கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை உடைய நப்பின்னையே!, திருமகளே! எழுந்திரு விசிறியும், கண்ணாடியும் உன் கணவனையும் எங்களுக்குக் கொடுத்து இப்போதே எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.
சாகாத தேவர்களை எதிரிகள் கொல்ல முயன்றாலும் அவர்களுக்குத் துன்பம் வரும் முன்பே சென்று பகைவரின் ஆணவத்தை அடக்கி நடுக்கத்தை போக்குவதை தன் கடைமையாகக் கொண்ட பெருமாள் என்று அவனுடைய குணத்தைக் கூறுகிறாள் ஆண்டாள். ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் ஒரு குறளில்
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்.
எதிரிகளே! என் தலைவன் முன் நில்லாதீர்! அவன்முன் நின்று கல்லானவர் பலர் என்கிறார் வள்ளுவர். பெருமாள் இராவணனை அடித்த போது இராவணன் அடிப்பட்ட அன்று இரவு ராமரின் வீரத்தையும் கண்டு நடுங்கிவிட்டான். அதே சமயம் அவனை வீழ்த்த வாய்ப்பு இருந்த போதும் அவனைக் கொல்லாமல், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார். இதுவும் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு. இதை வள்ளுவர் ஒரு குறளில் கூறுகிறார்.
பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஆனால் பகைவர்க்குக் குறைபாடு நேருமானால் இரங்கி அவர்க்கு உதவி செய்வது ஆண்மையின் மிகுதியாகும் என்கிறார்.
நம்பிள்ளையின் சிஷ்யர் பின்பழகிய பெருமாள் ஜீயர் என்ற ஆசாரியன். இவர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டுப் படித்த படுக்கையாகிவிட்டார். கூட இருந்தவர்களை அழைத்து ‘நம்பெருமாளிடம் ஆழ்வார் பாசுரங்கள் சேவித்து என் நோய் தீர்க்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்’ என்று விண்ணப்பம் செய்தார். அவர்களும் அவ்வாறே செய்ய, நோயும் குணமாகியது.
சிலர் ஸ்ரீவைஷ்ணவத்தில் இப்படி வேண்டிக்கொள்வது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்ணத்துக்கு விரோதம் என்று நம்பிள்ளையிடம் ”இவர் பெருமாளிடம் உடல் நலத்தை வேண்டிப் பெற்றது முறையா ?” என்று கேட்க நம்பிள்ளை அவரிடமே காரணத்தைக் கேட்க அதற்கு பின்பழகிய பெருமாள் ஜீயர் ”தேவரீர் தினமும் ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன் தேவரீரின் திருமேனியைக் கண்குளிரப் பார்த்துவிட்டு தேவரீருக்கு ஆலவட்டம் வீசுதல் என்ற அந்தரங்கக் கைங்கரியத்தை விட்டு அடியேன் பரமபதம் போக விருப்பம் இல்லை” என்றார்.
இந்த மாதிரியான பிரேமையை எப்படி அளக்கலாம் ?
வள்ளுவர்
கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்
கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், அதைப் பொறுத்துக் கொள்ளும் பெண்மையினும் மேம்பட்டது வேறொன்றும் இல்லை என்கிறார். ”கடலன்ன காமம்” என்று காமநோய் கடல் போன்றது என்கிறார். இதே காதலை ஆழ்வார்கள் பெருமாளிடத்தில் வைத்தார்கள்.
நம்மாழ்வார்
காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன்
என்று கண்ணன் மீதான காதல் கடல் போல பொங்கியது என்கிறார்.
திருமங்கை ஆழ்வார் பாசுரம் தான் இதில் மிகச் சுவையானது.
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு
காதல் என்பது பெருமாள் பிராட்டியிடம் செலுத்துவது. ஆதரம் என்பது பிராட்டி பெருமாளிடம் காட்டுவது.
காதல்-அன்பு, ஆதரம்- ஆசை கலந்த அன்பு - பேரன்பு என்று சொல்லலாம். காதலும் ஆதரமும் கடலைவிட பெரியது என்கிறார் மங்கை மன்னனும்.
ஆதரம் இருந்தால் மட்டுமே அந்தரங்கக் கைங்கரியங்கள் செய்ய முடியும்.
ஸ்ரீராமானுஜர் உருவாக்கிய 74 சிம்மாசனாதிபதிகளில் ஓர் ஆச்சாரியரின் பெயர் ‘உக்கல்’ அம்மாள். எம்பெருமானாருக்கு இவர் திருவாலவட்டம் வீசும் கைங்கரியம் செய்தார்.
முன் பாசுரத்தில் ( குத்து விளக்கெரிய ) ‘பெரியபிராட்டியாரை முன்னிட்டுப் பெருமானுடைய இரண்டு திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்’ (ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே) என்று துவயத்தின் முதல் வரி பொருளைக் கூறிய ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் அடுத்த வரிக்கான பொருளான ‘பெரிய பிராட்டியும் பெருமானுமாகிற சேர்க்கையில் என்றும் கைங்கர்யத்தைப் புரிவேனாக’ (ஸ்ரீமதே நாராயணாய நம:) என்பதைத் தான்
இந்தப் பாசுரத்தில் நப்பின்னையிடம் ”உக்கமும் தட்டொளியும்” எங்களுக்குத் தந்து ”உன் மணாளனுக்கு” நாங்களும் ‘ஆதரமான’ அந்தரங்கக் கைங்கரியத்தில் எங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று பிராத்திக்கிறாள் ஆண்டாள் !
- சுஜாதா தேசிகன்
4-1-2021
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art
Comments
Post a Comment