17. பாவை குறள் - அறஞ்செய்யும்
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா ! எழுந்திராய்;
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்;
செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!
உம்பியும் நீயும் உகந்து — ஏலோர் எம்பாவாய்.
துணி, தண்ணீர், சோறு இவற்றை தானம் செய்யும் எங்கள் எசமானான நந்தகோபாலரே எழுந்திருக்கவேண்டும்! வஞ்சிக் கொடிக்குக் கொழுந்து போல் முதன்மையானவளே! எங்கள் குலவிளக்கே ; எசமானியான யசோதையே! விழித்துக்கொள் வானளாவிய ஓங்கி வளர்ந்த அனைத்துலகங்களையும் அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே எழுந்திரு பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த பலராமா நீயும் உன் தம்பியான கண்ணனும் எழுந்திருக்கவேண்டும் என்கிறாள் ஆண்டாள்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் சம்பாவனை ( கிஃப்ட் ) செய்வது வழக்கம். என் பையன் கல்யாணத்திற்கு இவர் இவ்வளவு செய்தார் அவருடைய பெண்ணின் கல்யாணத்துக்கு அதற்கு ஏற்றார் போலத் தகுந்த சம்பாவனை செய்து ஈடு செய்ய வேண்டும் என்பது நம் வழக்கம். இது ஒருவிதக் கடமை. இது கொடை ஆகாது. இதை
வள்ளுவர்
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து
ஏழைகளுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், நோக்கம் அதுவே என்கிறார்.
ஏழைகளுக்கு ஈகை கொடுப்பவர் தான் நந்தகோபன்.
- அம்பரமே, தண்ணீரே, சோறே என்று ஆண்டாள் நந்தகோபன் கொடுக்கும் தானத்தை ’ஏகாரமிட்டு’ சொல்லுகிறாள். இதை எப்படிப் புரிந்துகொள்ளலாம் ?
-அம்பரமென்ன, தண்ணீரென்ன, சோறென்ன என்று எல்லாவற்றையும் நந்தகோபர் தருகிறார்.
-அம்பரம் மட்டுமா, தண்ணீர் மட்டுமா, சோறு மட்டுமா, ஏன் வேண்டுவார்க்கு வேண்டியதை எல்லாம் வேண்டுமளவுக்குத் தருகிறார்.
- அம்பரமே அறம்செய்யும். தண்ணீறே அறம்செய்யும், சோறே அறம்செய்யும். ( அதாவது அம்பரம் கொடுத்தால் நந்தகோபன் கொடுக்கும் அம்பரம் மாதிரி இருக்க வேண்டும் என்று கூறுவதை அம்பரமே ஏன்று கூறுவதாகவும் கூறலாம் )
ஆண்டாள் திருப்பாவையில் பல இடங்களில் ஏகாரம் உபயோகிப்பதைப் பார்க்காலம். அதனால் அவளுக்கு ’ஏகாரச் சீமாட்டி’ என்று ஒரு செல்லப் பெயரும் உண்டு.
நந்தகோபன் எப்படி தானம் கொடுக்கிறார். யாருக்கு என்ன வேண்டுமோ அதைத் தக்க தருணத்தில் இவரால் நமக்குப் பிறகாலத்தில் என்ன பயன் விளையும் என்றெல்லாம் நினைக்காமல் கைம்மாறு கருதாமல் அள்ளித் தருகிறார். புகழ் வேண்டி அவர் தனம் செய்வதில்லை. கொடுப்பதை தன் கடமையாகவும், தன்பேறாகவும் கருதிக் கொடுக்கிறார். அதுவே அறம்.
அதனால் ’அறஞ்செய்யும்’ என்கிறாள் ஆண்டாள்.
நந்தகோபனுக்குப் புகழ் அவர் செய்யும் தானத்தால் வருகிறது. வள்ளுவர்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
கொடுப்பது அதனால் புகழுடன் வாழ்வது. இதை விட ஓர் உயிருக்குப் பயன் உள்ளது வேறு எதுவும் இல்லை என்கிறார்.
ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் நந்தகோபனை எழுப்ப என்ன நடந்தது என்று நாம் யூகிக்க வேண்டும். இங்கே நந்தகோபனை ‘எம்பெருமான்’ என்று ஏன் ஆண்டாள் கூறுகிறாள் ?
நந்தகோபனை எழுப்பிய ஆண்டாள், ஆண்டாள் கோஷ்டிக்கு வழக்கம் போல் தானம் கொடுக்க ஏற்பாடு செய்ய ஆண்டாள் நீ கொடுக்கும் தானம் எல்லாம் வேண்டாம் என்கிறாள்.
நந்தகோபன் ”அப்படி என்றால் என்ன வேண்டும்? என்று கேட்க, ஆண்டாள் ”நீலமேனியில் பீதா’அம்பரம்’ ஒளிவீச, கார்க் கடல் நீர்(தண்ணீர்) வண்ணன், சோற்றினை வாங்கி நெய்யிடை நல்லதோர் சோறாக உண்டு மூன்று அடி நிலத்தை தானம் கேட்ட கரு மலை குட்டனை(அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உளகு அளந்த) எங்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்!” என்றாள்.
நந்தகோபன் கண்ணனைக் கொடுக்க ஆண்டாள் ”பெண்களே தானப் பொருளாக ( கன்னிகா தானம் ) இருக்க நீர் எங்களை மதித்து தானம் கொடுத்தீர் அதனால் நீர் ‘எம்பெருமான்’ நந்தகோபாலன் என்று புகழ்கிறாள்.
தானம் தான் கலியுகத்தில் நம்மைக் காக்கும் அறம். எவ்வளவு முடியுமோ ஆத்மாவை வஞ்சனை செய்யாமல் அதைச் செய்ய வேண்டும். வாங்குபவர் என்ன செய்வார் என்று யோசிக்காமல் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி கொடுக்க வேண்டும்.
நந்தகோபன் செய்த தானத்தை கண்ணன் கற்றுக்கொண்டாரா ?
திரௌபதியின் மானம் காக்கப் துணி தானம் செய்தார். மஹாபாரத யுத்தத்தில் சோர்ந்து போன குதிரைகளுக்குத் தண்ணீர் தானம். ஆயர் சிறுவர்கள் பக்திவிலோசனை என்ற இடத்தில் பசியினால் வருந்தி வயிறு தளர்ந்து இருக்க அவர்களுக்கு முனிவர்கள் யாகசாலை சோற்றை தானம் அளித்தான்!
ஸ்ரீமுக்கூர் அழகிய சிங்கர் இந்தப் பாசுரத்துக்கு ஸ்ரீ இஞ்சிமேடு அழகியசிங்கர் குறித்து ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுவார். அது சுருக்கமாக இங்கே.
அன்று திருப்பாவை இரண்டாம் நாள். ஸ்ரீமத் இஞ்சிமேடு அழகியசிங்கர் அவர்கள் ‘வையத்து வாழ்வீர்காள்!’ பாசுரத்துக்கு விசேஷ அர்த்தங்களை அருளிவிட்டு புறப்பட்டார். அப்போது அவரை கந்தல் வேட்டியுடன் மனநலம் குன்றிய ஒருவர் அழகியசிங்கரை வணங்கி தன் தந்தலான அழுக்கு வேட்டியை காண்பித்து ”எனக்கு ஒரு புது வேட்டி வேண்டும்” என்று கேட்க, அழகிய சிங்கர் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீ காரியக் கர்த்தாவை அழைத்து ‘ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி’ என்று இன்றைய பாசுரத்தில் ஆண்டாள் தனத்தைப் பற்றி கூறியிருக்கிறாள். இவர் வேட்டி கேட்கிறார், ஒரு புது வேட்டி வாங்கி கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு கிளம்பினார்.
அடுத்து அடுத்த நாளில் திருப்பாவை உபன்யாசம் செய்தார் அழகியசிங்கர். அன்று பதினேழாம் பாசுரமான ‘அம்பரமே! தண்ணீரே சோறே” என்ற பாசுர அர்த்தங்களைக் கூற ஆரம்பித்த போது இரண்டாம் பாசுரத்தில் ஒரு மனநலம் குன்றியவர் வேட்டி கேட்டாரே என்று நினைவுக்கு வந்தது. ஸ்ரீகாரியத்தை கூப்பிட்டு இரண்டாம் நாள் ஒருவர் வேட்டி கேட்டாரே அவருக்கு வேட்டி கொடுத்தாகிவிட்டதா ? அதற்குப் பிறகு அவர் கண்ணிலேயே படவில்லையே” என்று கேட்டார்.
ஸ்ரீகாரியதரிசி “அடியேன்… “ என்று இழுத்து ”அவரோ பைத்தியம். புது வேட்டி கொடுத்தால் அதை உபயோகிக்க மாட்டார் கிழித்துவிடுவார். அதனால் அவரை விரட்டிவிட்டோம்” என்றார்.
அழகியசிங்கர் “நான் சந்நியாசி, இது என் பணம் இல்லை. உம்முடைய பணமும் இல்லை. இது நரசிம்மருடைய பணம். அன்று அவருடைய சந்நிதியில் வேட்டி கேட்டார். நரசிம்மர் சொன்னதை நான் சொன்னேன். பிறகு அவன் என்ன செய்வான் என்று எல்லாம் யோசிக்க நாம் யார் ? அவனைத் தேடி வேட்டி கொடுத்த பிறகு திருப்பாவை உபன்யாசம் தொடரும்!” என்று கூறிவிட்டு எழுந்துவிட்டார்.
பிறகு மடத்துக்காரர்கள் அலைந்து தேடி அவரைக் கண்டு பிடித்து வேட்டி கொடுத்த பின் மறுநாள் திருப்பாவை உபன்யாசத்தைத் தொடர்ந்தார் அழகியசிங்கர்.
’தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே’ என்கிறார் நம்மாழ்வார். பெருமாள் என்ற பெரிய தடாகம். அந்தத் தடாகத்தில் நீராடுவதற்குத் தகுந்த துறைகளைத் தேர்ந்தெடுத்து நீராட வேண்டும். துறை அறிந்து முறை தவறாமல் போக வேண்டும். அப்படிப் பட்ட படித்துறைகள் தான் மேலே குறிப்பிட்ட இஞ்சிமேடு ஸ்ரீமத் அழகியசிங்கர் போன்ற ஆசாரியர்கள்.
பெருமாளுடன் குள்ளக் குளிரக் குடைந்து நீராட நாம் முதலில் செய்ய வேண்டியது தகுந்த ஆசாரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்!
- சுஜாதா தேசிகன்
1-1-2021
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art
Comments
Post a Comment