Skip to main content

18. பாவை குறள் - நப்பின்னாய் !

18. பாவை குறள் - நப்பின்னாய் !




உந்து மதகளிற்றன் ஓடாத தோள்-வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்,  மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.

மத யானையை மோதி தள்ளுகின்ற வலிமையும், போரில் பின் வாங்காத தோள்ளை படைத்தவனுமான நந்தகோபாலன் மருமகளே ! நப்பின்னையே! மணம் வீசும் கூந்தலை உடையவளே கதவைத்திற! கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக்கேள்! குருக்கத்தி(மல்லிகைப்பூ) கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே ! உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம். உன் தாமரைக் கையால் வளையல்கள் ஒலிக்க மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறக்கவேண்டும் என்று ஆண்டாள் நப்பின்னையை வேண்டுகிறாள். 

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி என்று அருளியவர் நீளாஸ்துதி என்று அருளாமல் கோதாஸ்துதியை அருளினார். நீளாஸ்துதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். கோதை அருளிய இப்பாசுரமே நீளாஸ்துதி. 

இந்தப் பாசுரத்தின் சாரத்தை தான் ஸ்ரீ பராசரபட்டர் திருப்பாவை தனியனாகச் சாதித்தார். 

நீளாதுங்கஸ்தன கிரிதடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்தயம் ஸ்வம் ச்ருதிசக சிரஸ் ஸித்தம் அத்யாப யந்தீ
ஸ்வேர்ச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாவாத் க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நமஇதமிதம் பூய ஏவாஸ்து பூய:

நப்பின்னையினுடைய உயர்ந்த மலைபோன்ற முலைகளின் தடத்திலே தலைசாய்த்து உறங்கினவனான கண்ணனை எழுப்பி அடிமை செய்யும் விஷயத்தில் தனக்குள்ள ஆவலை அறிவித்துத் தன்னால் சூடிக் களையபெற்ற பூமாலையிலே விலங்கிடப்பட்ட அவனை அனுபவித்த ஆண்டாளைத் திருவடி தொழுகின்றேன். 

திருவள்ளுவர் மாலையில் ஒரு பாடலில் நப்பின்னை பற்றிய குறிப்பு இருக்கிறது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன் பொருள் உபகேசியை மணந்த கண்ணன் வட மதுரைக்கு ஆதாரம். அது போல திருவள்ளுவர் தென்மதுரைக்கு ஆதாரம் என்கிறது. 

‘உபகேசி தோள்மணந்தான்’  என்ற வாக்கியத்தில் ’உபகேசம்’ என்பது உபகேசத்தை( மயிராற்பின்னிய கூந்தல்)உடையவளான நப்பின்னையைக் குறிக்கும். குண்டலகேசி, நீலகேசி போல் உபகேசி என்பது புன்னையைக் குறிக்கும். நப்பின்னை என்பதில் உள்ள ‘ந’ சிறப்புப் பொருள் உணர்த்துவதோர் இடைச்சொல் ( உதாரணம் நக்கீரன்) என்பர். 

திருமழிசை ஆழ்வார் ‘பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து” என்ற வாக்கியம் 'உபகேசி தோள்மணந்தான்' என்பது ஒத்து இருப்பதைக் கவனிக்கலாம். ‘கந்தம் கமழும் குழலி’ என்றும் ‘கொத்தலர் பூங்குழல் நப்பினை’ என்று  நப்பின்னையின் கூந்தலை இரண்டு இடங்களில் ஆண்டாள் புகழ்கிறாள் !

நப்பின்னையை மணக்க ஏழு எருதுகளைக் கண்ணன் அடக்கி மணந்துகொண்டான் என்று பல இடங்களில் ஆழ்வார்கள் பாசுரங்களில் குறிப்பு இருக்கிறது. கூரத்தாழ்வான் ஸுந்திரபாஹுஸ்தவத்தில் பிறந்த குலத்துக்காக ருக்மிணியையும், வளர்த்த குளத்திற்காக நீளாவையும் கண்ணன் மணந்தான் என்கிறார். 


பெரியாழ்வார் ‘நப்பின்னை காணிற் சிரிக்கும் மாணிக்கமே என் மணியே!' என்றும்  ‘பேடை மயிற் சாயற் பின்னை மணாளா!” என்கிறார். பொய்கை ஆழ்வார் ’திருமகளும், மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்’ என்று நப்பின்னையை ஆயர்குல மடந்தையாகக் கூறுகிறார். நம்மாழ்வார் ‘உடனமர் காதல் மகளிர் திருமகள், மண் மகள். ஆயர் மடமகள் எனறிவர் மூவர்’ என்றும் ‘பின்னைகொல்? நிலமா மகள்கொல்? திருமகள் கொல்? பிறந் திட்டாள் என்னமா யங்கொலோ?’ என்றும் ‘குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்’ என்று நப்பின்னை திருமகள், நிலமகளுக்கு நிழலாக இருப்பவள் என்கிறார். 

ஸ்ரீதேவியான மஹாலக்ஷ்மி என்ற பெரியபிராட்டி, ஸ்ரீ பூமாதேவி என்ற பூமிப்பிராட்டி, ஸ்ரீநீளாதேவி என்ற நப்பின்னை. இந்த மூவருள் நாம் யாரைப் பற்ற வேண்டும் என்ற சந்தேகம் வரலாம். 

’குற்றம் செய்யாதவர் ஒருவருமில்லை’ என்பாள் பெரியபிராட்டி ; குற்றத்தையே காணாமல் இருப்பாள் பூமிப்பிராட்டி ; குற்றமா ? அப்படி ஒன்று உண்டா என்பாள் நப்பின்னை என்ற நீளாதேவி. இந்த மூவரையும் நாம் பற்றலாம் ( புருஷகாரப் பிரபாவம் ) என்பது நம் பெரியோர் நிர்வாகம். 

ஆண்டாள் ”நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!” என்று ஆண்டாள் நப்பின்னையுடன்  பெரிய பிராட்டியும் சேர்த்துப் பாடுகிறாள். பூமிப் பிராட்டி எங்கே என்று யோசிக்காதீர்கள் பாடியவளே பூமிப்பிராட்டியான ஆண்டாள் தானே!   

இப்பாசுரத்துடன் ஸ்ரீராமனுஜரை குறித்து ஒரு நிகழ்வை கூறுவது மரபு. 



ராமானுஜருக்குத் திருப்பாவையில் ஈடுபாடு மிக அதிகம். அதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்ற பெயர் பெற்றார். இந்தப் பெயரையே அவர் விரும்பினார். “உந்துமத களிற்றன்” என்ற திருப்பாவை சேவித்துக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு வாசலில்  “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்” என்று பாடி முடிக்க, பெரிய நம்பியின் மகள் அத்துழாய் கை வளை குலுங்கக் கதவைத் திறப்பதும் ஒரே சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து சாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்). 

இந்தப் பாசுரத்தில் பெருமாளும் பிராட்டியும் ஒன்றாக இருக்கும் சமயம் நப்பின்னையிடம் ஆண்டாள் “செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து மகிழ்ச்சியுடன் திறந்து எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு உடையவர் பங்குனி உத்திரத் திருநாள் அன்று பெருமாளும் பிராட்டியும் ஒன்றாக இருக்கும் சமயம் பெருவீட்டின் கதவை மகிழ்ச்சியுடன் என் சம்பந்தம் உள்ள அனைவருக்கும் திறக்க வேண்டும் என்று கத்யத்ரயத்தில் “ஏவம் பூமி நீளா நாயக” என்று சரணாகதி கத்தியத்தில் எம்பெருமானார் மூன்று பிராட்டியையும் முன்னிட்டு செய்கிறார்.  

பிரணவத்தில் ”அ, உ, ம” என்று எழுத்துகள் அடங்கியிருக்கிறது. இதில் ‘’ என்பது திருமகளான பிராட்டியைக் குறிக்கும். திருப்பாவையில் திருவிற்குப் பஞ்சம் இல்லை. திருக்கோயில் திருவே, திருத்தகச் செல்வமும், திங்கள் திருமுகத்து, செங்கண் திருமுகத்து, செல்வத் திருமாலால் என்று எங்கும் திருவருள் பெற்று இன்பம் பெறலாம். 

இந்தப் பாசுரம் திருவிற்கு ஆண்டாள் சிறப்பாகச் செய்த மங்ளாசனம் இந்தப் பாசுர ஆரம்பமும் ‘’ ! இந்தத் திருவின் பாசுரத்தைப் சேவித்தால் ’எங்கும் திருவருள் பெற்று இன்புறுலாம்!

-சுஜாதா தேசிகன்
2-1-2021
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
ராமானுஜர் படம் நன்றி : திரு கேஷவ்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art




Comments