25. பாவை குறள் - மகனாய் !
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.
தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில்
யசோதைக்கு மகனாய் ஒளித்து வளர்ந்துவர,
அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த
கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!
எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து
வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால்
லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும்
உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோம்.
இந்தப் பாசுரம் முழுவதும் சுவை மிகுந்தது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கட்டுரை எழுதலாம் என்றாலும் சில வார்த்தைகளை மட்டும் இங்கே பார்க்காலாம்.
பெற்றோருக்குப் பிறந்த குழந்தையைப் பிள்ளை, மகன், குமரன் என்று அழைப்பதுண்டு. ஆனால் மகன் என்பதற்கு ஒரு ஸ்பெஷல் அர்த்தம் உண்டு. பெற்றோர் சொல்லைத் தட்டாமல் கேட்பவனைத் தான் ’மகன்’ என்று அழைப்பார்கள். ராமர் தசரதன் சொல் பேச்சை கேட்டதால் அவர் சக்கரவர்த்தி திருமகன் ஆனார்.
ஆண்டாள் ‘ஆற்றப் படைத்தான் மகனே!’ என்றும் இந்தப் பாசுரத்தில் ’ஒருத்தி மகனாய்’ என்றும் கூறுகிறாள்.
கண்ணன் பிறந்தவுடன் தன் சங்கு சக்கரங்களைக் காட்ட இவனுக்கு என்ன ஆபத்து வருமோ என்று அஞ்சி அதை மறைத்துக்கொள் என்று தேவகி, வசுதேவர் பிராதிக்க தாய் தந்தை பேச்சை உடனே கேட்ட மகன் கண்ணன்
கூர்ந்து கவனித்தால் ஒளிந்து வளர என்று கூறாமல் ஒளித்து வளர என்று கூறுகிறாள் ஆண்டாள். அதாவது இந்தச் சங்கு சக்கரங்கள் ஒளித்து தான் பரமாத்மா என்று காட்டாமல் அதை எல்லாம் ஒளித்து, தானும் ஓர் ஆயர் குலத்தில் பிறந்த குழந்தை போல வளர்ந்தான்.
வள்ளுவர் ’புதல்வரைப் பெறுதல்’ என்ற அதிகாரத்தில் மகன் என்ற வார்த்தையையே உபயோகிக்கிறார்.
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்
மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்கக் கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும் என்றும் இன்னொரு குறளில்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்.
பெரியாழ்வார்
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
அதாவது உன்னைப் பார்க்கும் பெண்கள் உன்னைப் போலவே குழந்தை பெற வேண்டும் என்னும் ஆசையாலே நகராமல் பார்த்தபடியே நிற்பார்கள் என்கிறார். இந்த இரண்டு குறளும் கண்ணனுக்கு அப்படியே பொருந்துவதில் ஆச்சரியம் இல்லை.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
தம் குழந்தைகளின் சிறு கையால் துழாவப்பட்ட உணவு அமிழ்தத்தைக் காட்டிலும் எது மிகுந்த இனிமை பயக்கும் ?
பெரியாழ்வார் பாடிய பிள்ளைத் தமிழ் முழுவதும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
ஒருத்தி என்ற வார்த்தைக்கு நிகரற்றவள் என்று பொருள். இங்கே இரண்டு முறை ‘ஒருத்தி’ என்று ஆண்டாள் கூறுகிறாள். தேவகி, யசோதை இருவரும் நிகரற்றவர்கள் ! பெயரை குறிப்பிட்டு சொன்னால் யாராவது கண்ணன் இருக்கும் இடத்தை கம்சனிடம் கூறிவிட்டால் அதனால் ஒருத்தி என்று மறைத்துக் கூறுகிறாள்.
அன்றைக்குத் தேவி ஓரிடத்தில் பிறந்து ஓரிடத்தில் வளர்கிறான் என்று கூறியபடியே, நம்மாழ்வார் ‘பிறந்தவாறும், வளர்ந்தவாறும்’ என்று கண்ணனை நினைத்து உருகுகியபடியே ஆண்டாளும் இங்கே கூறுகிறாள்.
இப்படி எல்லோரும் கண்ணைக் கண்டு உருக இவன் வளர்கிறானே என்ற நினைப்பே கம்சனுக்கு எரிச்சலை கொடுத்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் (தரிக்க முடியாமல்) அசக்ய அபசாரம் செய்தான். அதைத் தான் ஆண்டாள் தரிக்கிலான் ஆகி என்று கூறிவிட்டு ‘தீங்கு நினைந்தான்’ என்கிறாள் என்ன தீங்கு என்று கூறவில்லை. தன் வாயால் அவற்றை கூறி அபசாரப்பட வேண்டாம் என்று கூறவில்லை!
தொடரடிப்பொடியாழ்வார் தன் திருமாலையில் “பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம்” இங்கே அது ஆகும் என்கிறார் எது என்று கூறவில்லை அது போல ஆண்டாளும் அவற்றை பட்டியல் போடவில்லை.
அடுத்து அருத்தித்து வந்தோம் என்றால் பேராசையால் வந்தோம் என்று பொருள். இங்கே ஆண்டாள் ‘உன்னையே’ பேராசையால் அடைய வந்தோம் என்கிறாள்.
அடுத்த வார்த்தை மிக முக்கியம் ‘திருத்தக்க’ செல்வமும் சேவகமும் யாம் பாடி என்கிறாள். திருத்தக்க செல்வம் என்றால் என்ன ?
சேவகம் என்பது கைங்கரியம். அந்தக் கைங்கரியமே செல்வம். செல்வமே ஸ்ரீ. அந்த ஸ்ரீ கிடைக்காதவரை எவ்வளவு செல்வம் பெற்று கோடீஸ்வரனாக இருந்தாலும் அவன் தரித்ரன் தான். கோயிலில் உண்டைக் கட்டி வாங்கி கைங்கரியம் செய்கிறவனே ஸ்ரீமான்.
திருமகள் போல நாங்கள் எப்போதும் பாத சேவை செய்ய வேண்டும் என்பதைத் தான் ஆண்டாள் திருத்தக்க செல்வம் என்கிறாள்.
நமக்கு ஒரு பிரியமான பொருள் வேண்டும் என்றால் எப்படியாவது யார் காலிலும் விழத் தயாராக இருக்கிறோம். ஏதாவது நோய் வந்தால் ’எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று பல வைத்தியம் செய்துகொள்கிறோம்.
ஆண்டாளுக்கோ பிராட்டி போல எம்பெருமானுக்குப் பாத சேவை என்ற ‘திருத்தக்க’ செல்வம் வேண்டும். அவளுக்கு பெருமாள் மீது தீராத காதல் நோய்.
நாச்சியார் திருமொழியில்
”கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள்”
என்று காமதேவனை கேட்பது ஒருவித ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' தான்.
பெருமாள் கோயிலில் கைங்கரியம் செய்பவர்களை அவர்கள் செய்யும் கைங்கரியத்தின் பெயரைக் கொண்டே அழைப்பார்கள். உதாரணமாக ‘அருளப்பாடு ஸ்ரீபாதம் தாங்குவார்’, ‘சுந்தரபாண்டியம் பிடித்தேன்’ ’விண்ணப்பம் செய்வார்’ என்ற பெயர்கள்.
திருப்பாவையில் ஆண்டாளும் ’கோயில் காப்பானே! வாசல் காப்பானே’ என்று அவர்கள் செய்யும் கைங்கரியப் பெயர்களைக் கொண்டு தான் அழைக்கிறாள். தன்னையும் ஒரு கைங்கரியம் செய்பவளாகவே எல்லோரும் அழைக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.
தெருவில் நடந்து சென்றால் அதோ ‘கேசவ நம்பியை கால் பிடிக்கிற பெண்' போகிறாள் என்று இவளை அழைக்க வேண்டுமாம்.
இந்த ‘திருத்தக்க செல்வம் கிடைக்க ’அருத்தித்து வந்தோம்' என்கிறாள். இந்த செல்வம் கிடைக்க என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் தப்பில்லை !
- சுஜாதா தேசிகன்
10-1-2020
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art
Comments
Post a Comment