Skip to main content

27. பாவை குறள் - கூடி இருந்து

27. பாவை குறள் - கூடி இருந்து

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!  உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.

பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா ! உன்னைப்
பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்
அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை(வங்கி)
தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள்
நாங்கள் அணிவோம். அதன் பின்னே
முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை
எல்லோருமாகக் கூடி உள்ளம் குளிர இருப்போம்.

ஆண்டாள் பாசுரத்தில் பல விஷயங்கள் மறைந்து இருக்கும். மாடுகள் போல மெதுவாக அசைப்போட்டால் நமக்கு அவை புலப்படும். உதாரணமாக சென்ற பாசுரத்தில் ’மாலே’ என்று ஆரம்பித்து ’ஆலின் இலையாய்’ என்று முடித்ததில் ‘ சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷஇஷ்யாமி மாசுசஹ’ என்ற கீதையின் சரம ஸ்லோகம் அடங்கியிருக்கிறது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். 

என் ஒருவனையே உபாயமாகப் பற்றிக்கொள், உன் பாவங்கள் மூட்டை மூட்டையாக இருந்தாலும் நான்  விடுவிக்கிறேன் என்பது அதன் எளிமையான விளக்கம். 

பெருமாள் யானை போல உயர்ந்தவன். இரண்டு கையும் இல்லாத முடவன் அந்த யானை மீது ஏற ஆசைப்பட்டால் ஏற முடியுமா ?  ஆனால் யானையே நம்மைப் பார்த்துப் படிந்து கொடுத்தால் சுலபமாக ஏறிவிடலாம். அது போலப் பக்தியுள்ளவனுக்கு பெருமாள் படிந்துகொடுப்பார் என்கிறார் நம்பிள்ளை. 

நம்மாழ்வார் அதனால் தான் ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்கு அரிய வித்தகன்’ என்கிறார். ’மாம் ஏகம்’ என்ற வார்த்தையை மென்மையாகப் படிக்க வேண்டும், பெருமாள் நான் எளியவன், ’சுலபனான என்னை பற்றிக்கொள் என்று சொல்லிவிட்டு உன் பாவங்கள் மூட்டை மூட்டையாக இருந்தாலும் நான்  விடுவிக்கிறேன் நான் சர்வவேஸ்சுரன் என்பதை  தான் ‘ஆலின் இலையாய்’ என்ற பதத்தில் தன் அகடிதகடனா சாமர்த்தியத்தை வெளிப்படுத்துகிறார். அதனால் அவனைப் பற்றினால் அதற்குப் பிறகு கவலைப் பட வேண்டாம். 

இதைத் தான் வள்ளுவர் 

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும். 

இக் குறள் அப்படியே கீதையின் சரம ஸ்லோகம்!

இன்னொரு குறளில் 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

இக் குறளை மூன்று பகுதிகளாகப் படிக்க வேண்டும். 

பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்று பொருள் - அதனால் தான் பெருமாளை ‘ரிஷிகேசன்’ என்கிறோம்.. தமிழில் இருடீகேசன். 

பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் -.  பொய்த்தல் என்றால் மறைத்தல் என்று பொருள். இங்கே ஒரு நெறியை மறைக்காமல் காட்டியிருக்கிறார். அந்த ரிஷிகேசன் ஓர் ஒழுக்க நெறியை மறைக்காமல் காட்டியிருக்கிறான்.

நீடு வாழ்வார் - அந்த நெறியை பின் பற்றியவர்கள் பிறப்பு இன்றி எக்காலத்தும் வாழ்வார் என்கிறார் வள்ளுவர். 

அந்த நெறி தான் சரம ஸ்லோகம்!

’கூடாரை வெல்லும்’  என்ற பாசுரத்தில் ’கூடியவர்களிடம் தோற்பான்’ என்பது மறைந்து இருக்கிறது. நம்மாழ்வார் கூறும் ’வித்தகனும்’, ’எளியவனும்’ இதில் இருக்கிறது. 

 ’கூராரை’ என்று கூறியவுடன்  நினைவுக்கு வருவது நெய் சொட்டச் சொட்ட அக்கார அடிசில் தான்! இதற்கு முன் ஆண்டாள் ’நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்’ என்று எங்களுக்கு எந்த அலங்காரமும், நெய் பால் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு இந்தப் பாசுரத்தில்  ‘சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே, பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்று அதற்கு நேர் எதிராக எல்லாவற்றையும் அனுபவிப்பதைக் கூறியிருக்கிறாள் என்று யோசிக்க வேண்டும். 

இதைப் புரிந்துகொள்ள கண்ணன் குழல் ஊதும் பெரியாழ்வாரின் இந்த அருமையான பாசுரத்தை அனுபவிக்கலாம். 

புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்
      பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்து அணையான் குழல் ஊத
      அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
      ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்
செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து
      கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே

இந்த உலகில் நான் கண்ட அதிசயம் ஒன்றைக் கேளுங்கள். கன்றுகளுடன் பசுக்களை மேய்க்கும் இடையர்களின் நடுவில் எம்பெருமான் ஊதிய குழலோசையைக் கேட்டு தேவர்கள் உணவை மறந்து ஆயர்பாடிக்கு வந்தார்கள். தத்தம் செவிகளை நாவாகக் கொண்டு கண்ணனின் குழலோசையைச் சுவைத்து கோவிந்தனைப் பிரியாதிருந்தார்கள் என்கிறார். 

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

என்ற வள்ளுவர் வாசகம் இதனுடன் ஒத்துப்போகிறதைப் பார்க்கலாம். 

இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பலவிதமான ஆடை, ஆபரணங்களைப் பற்றிக் கூறியிருக்கிறாள். அதற்கு முன் ‘நன்றாக’ என்ற ஒரு வார்த்தையைக் கவனிக்க வேண்டும். யாராவது நமக்கு ஆசையுடன் கொடுத்தால் நாம் ‘அவர் நன்றாகக் கொடுத்தார் / கவனித்துக்கொண்டார் என்போம். நன்றாக என்பது பெரிய மதிப்புடைய தன்மையைக் குறிக்கும். 


ஏகார சீமாட்டியான ஆண்டாள் பெருமாளுடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையுமே ‘ஏகாரத்துடன்’ கூறுவதை நாம் பார்க்கலாம். ‘பாஞ்ச சன்னியமே’ , ‘சாலப் பெரும்பறையே’ ’பல்லாண்டு இசைப்பாரே’ ’கோல விளக்கே’ ’கொடியே விதானமே’ என்பது போல இந்தப் பாசுரத்தில்  ‘சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,பாடகமே’ என்று எல்லாப் பொருட்களையும் ஏகாரத்துடன் விளிக்கிறாள். கண்ணன் அவர்களுக்கு ’நன்றாக கொடுத்தப் பரிசுகளை’ பெற்றுக்கொண்ட அவர்கள் கண்ணனின் பரமானந்தத்தைக் கூடியிருந்து ‘குளிர்ந்து’ அனுபவிக்க, ‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’

என்று கூறிய ஆண்டாள் உண்பதைப் பற்றிப் பேசவே இல்லை ! 

குழந்தைகள் டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடும் போது ‘என்ன டீவியோ, தட்டுல சாப்பாடு ஆறியே போச்சு… ”  என்கிறோம். குழந்தைகளுக்கு டிவி பார்ப்பது தான் லட்சியம், சாப்பாடு இல்லை. அது போல ஆண்டாளுக்கு உண்பதில் லட்சியம் இல்லை கூடியிருந்து கிருஷ்ணானந்தமே அக்கார அடிசல் !

19-01-2021
- சுஜாதா தேசிகன்
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art




Comments