Skip to main content

24. பாவை குறள் - கழல் போற்றி !

 24. பாவை குறள் - கழல் போற்றி !அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றக் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.

மகாபலி காலத்தில் இவ்வுலகங்களை அளந்த உன் திருவடிகளைப் போற்றுகிறோம்!
தென் இலங்கையைச் சென்று இராவணனை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமையைப் போற்றுகிறோம்!
சகடா சுரனைக் கட்டுக்குலைய உதைத்தாய்! உன் புகழைப் போற்றுகிறோம்
கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை எரி கருவியாகக் கொன்றாய்! உன் கழலைப் போற்றுகிறோம்!
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோகுலத்தைக் காத்தவனே! உன் குணத்தைப் போற்றுகிறோம்!
பகைவர்களை அழிக்கும் உன் கையிலுள்ள வேலைப் போற்றுகிறோம்
இவ்வாறு எப்பொழுதும் உன் வீரத்தைப் பாடி, எங்கள் விருப்பங்கள
நிறைவேற்றிக்கொள்ள இங்கு வந்துள்ளோம், நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.

சென்ற பாசுரத்தில் ஆண்டாளும் அவள் தோழிகளும் சில அடி  நடந்து வந்து சிம்மாசனத்தில் பெருமாளை அமர அழைக்க. பெருமாளும் இவர்களுக்காக  அப்படியே செய்ய,  ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் பெருமாளின் நடையழகை பூரிப்புடன் நமக்காக நடந்து வந்தானே ’நடந்த கால்கள் நொந்தவோ’ என்று அந்த சிவந்த திருவடிக்குப் பல்லாண்டு பாட ஆரம்பிக்கிறாள் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையான ஆண்டாள்! 

இந்த நான்கு அடி நடந்து வந்ததற்கே கால்கள் சிவந்து கன்னி போயிருக்கிறது ‘அன்று’ வாமனாக, ராமராக, கண்ணனாக அவன் நடைக்கும் கொடைக்கும் கருவியான திருவடிகளையும், திருக்கைகளும் என்ன பாடு பட்டிருக்குமோ போற்றுகிறாள். 

ஆண்டாள் கண்ட அந்த நடை அழகை நாம் இன்றும் நம்பெருமாள் நடையழகிலே காணலாம் என்பது நம் பூர்வர்களின் வாக்கு. ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். தேரழுந்தூர் ஸ்ரீமத் ஆண்டவன் அவர்களுக்குத் திருக்குடந்தை ஆராவமுதன் மீது அதிக ஈடுபாடு. நம்பெருமாள் புறப்பாடு போல் அமுதனுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஸ்ரீரங்கம் ஸ்ரீபாதத் தாங்கிகளைத் திருக்குடந்தைக்கு அழைத்து வந்து அமுதனுக்குப் புறப்பாடு ஏற்பாடு செய்தார். புறப்பாடு இனிதே முடிந்தது ”பெருமாள் அழகாக இருந்தார், நீங்களும் நன்றாகப் புறப்பாடு செய்தீர்கள் ஆனால் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் போல நடை அழகு இல்லை” என்றார். அதற்கு ”ஸ்ரீரங்கத்தில் நாங்கள் நடக்கவில்லை, நம்பெருமாள் தன் பாதுகையுடன் நடக்கிறார் நாங்கள் வெறும் ஸ்ரீபாத தாங்கிகள்” என்றார்கள். 

இதற்கு ஆண்டவன் ஸ்வாமிகள் “ஸ்வாமி தேசிகனிடம் 1008 ஸ்லோகம் வாங்கிக்கொண்ட பாதுகை பற்றி அடியேனுக்கு இன்று தான் புரிந்தது” என்றார். ஆண்டாள் அவளுக்கு மிகவும் பிடித்த வாமனாவதாரத்திலிருந்து பல்லாண்டு பாட ஆரம்பிக்கிறாள். 


கம்பர் வாமன அவதாரத்தை இப்படிப் போற்றுகிறார் 

கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.

பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமன மூர்த்தி எதிர்நின்று  பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும் அஞ்சும்படியாக அறிவு ஒழுக்கங்களில்    சிறந்த    மேலோருக்குச்   செய்த   உதவி  சிறந்து

விளங்குவதுபோல வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான் என்கிறார் கம்பர். 

உதவியை அளந்து பார்ப்பதற்கு ஏதாவது அளவு கோல் இருக்கிறதா ? மிகுந்த தாகமாக இருக்கும் தங்கக் காசு கொடுத்தால் என்ன பெருமை ? அங்கே தண்ணீர் தானே பெரிய உதவி ? அதனால் பத்து ரூபாய் கொடுத்தேன், பத்தாயிரம் கொடுத்தேன் என்று தொகையின் பெருமை கொண்டு உதவியை அளக்க முடியாது. உதவியின் அளவு அதைப் பெற்றுக்கொள்பவர் பொறுத்தது என்கிறார் வள்ளுவர். 

சிலர் நமக்குத் தகுந்த சமயத்தில் சிறிய  உதவி செய்யும் போது ‘ விண்ணையும் மண்ணையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது’ என்று போற்றுகிறோம் அல்லவா ? அதைத் தான் வள்ளுவர் இந்தக் குறளில் கூறுகிறார். 

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

உதவி, உதவிப் பொருளைப் பொறுத்ததன்று. உதவி பெற்றவரின் பண்பினைப் பொறுத்தது என்று வள்ளுவர் கூறுவதைத் தான் கம்பர் மேலே கூறியிருக்கிறார். 

நாம் எதுவும் வேண்டாமல் குறளன் எல்லா இடங்களிலும் தன் பாதத்தை வைத்து உதவி செய்தான். வள்ளுவர் 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

கேளாமலே முன்வந்து செய்த உதவிக்கு உலகமும் வானமும் கொடுத்தாலும் ஈடாகாது என்கிறார். 


அடுத்து ஸ்ரீராமாவதாரம் பிறகு கிருஷ்ணாவதாரத்தில் ‘கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி! ’ என்று அவனுடைய கரம் பற்றிக் கூறாமல் கழல்’ போற்றி என்கிறாள். கழல் என்றால் திருவடி அல்லது திருவடியில் அணிந்திருக்கும் ஒரு வித ‘Anklet’ குறிக்கும். ஏன் கழல் என்று ஆண்டாள் கூறினாள் என்று பெரியவாச்சான் பிள்ளை ஆண்டாளின் ஹ்ருதயத்திலிருந்து வியாக்கியானம் செய்திருக்கிறார். பெரியவாச்சான் பிள்ளை தன் உரையில் ‘குஞ்சித்த நின் திருவடி போற்றி’ என்கிறார். குஞ்சிதம் என்றால் தொங்குவது என்று பொருள். ( நடராஜருக்குக் குஞ்சிதபாதம் என்று பெயர். ஒரு காலை ஊன்றி ஒரு காலை தொங்க விட்டிருக்கிறார் அதனால் ). அசுரனாக வந்த கன்றுக் குட்டியை வீசி எறியும் போது (ஜாவலின் துரோ மாதிரி) ஒரு காலை ஊன்று ஒரு காலை தூக்கிய பொழுது அந்த இன்னொரு திருவடி தொங்க அழகான குஞ்சித பாதமாக,  வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையாக கண்ணன் காட்சி கொடுக்க அந்தக் குஞ்சித பாதத்திற்குக் கழல் போற்றி என்று பல்லாண்டு பாடுகிறாள் ஆண்டாள். 

கடைசியாக ’வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’ என்கிறாள்.  சக்கரவர்த்தி கையில் வில் வைத்திருந்தால் அவன் குழந்தை கையில் வில் வைத்துக்கொண்டு விளையாடும் (சிறுவனாக இருந்த போது ராமர் கூனியை அப்படித் தான் அடித்தான்! ). குயவன் வீட்டுக் குழந்தை மண்ணைப் பிசைந்து விளையாடும். அது போல கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் . கண்ணனுக்கு ஏதாவது ஆபத்து என்றால் இந்த வேலை வைத்து அடித்துவிடுவார்.  வேலை வைத்துக் கொண்டிருக்கும் நந்தகோபனுடைய குழந்தையான கண்ணன் விளையாட்டுக்கு வேல் வைத்திருக்கிறான். கண்ணனை காப்பாற்றியதால் அதற்கும் ஒரு போற்றி. 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

எவ்வகையாலும் ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடையறாது நினைப்பவர்க்கு  மனக்கவலையை இல்லை என்கிறார் வள்ளுவர். ஆண்டாள் திருவடியை நினைப்பது மட்டும் அல்ல அதற்குப் பல்லாண்டு பாடுகிறாள்! 

- சுஜாதா தேசிகன்
9-1-2020
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan ArtComments