Skip to main content

21. பாவை குறள் - மகனே !

21. பாவை குறள் - மகனே !


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்!  உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.

கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழியத் தங்கு தடையில்லாமல் பாலை கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் மகனே விழித்துக்கொள்! சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில் அவதாரம் செய்த ஒளி படைத்தவனே! எழுந்திரு. எதிரிகள் உன்னிடம் வலிமை இழந்து உன் வாசலில் கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்!

இந்தக் காலத்தில் கோயிலுக்குப் போக முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். திருப்பாவை முப்பது பாசுரங்களையும் சேவித்தால் ஒரு கோயிலுக்குச் செல்லும் உணர்வு நமக்குக் கிடைக்கிறது. 

கோயிலுக்குச் செல்லும் போது நாம் அடியவர்களை அழைத்துக்கொண்டு அவர்களுடன் ஆசாரியர்கள், ஆழ்வார்களை வணங்கி, தாயாரைச் சேவித்துவிட்டு பெருமாளைச் சேவிக்கக் கிளம்பும் பொழுது தாயார் நம்முடன் கூடவே வந்து பெருமாளிடம் நமக்குச் சிபாரிசு செய்கிறாள். அங்கே தாயார் நமக்கு பெருமாளை எப்படிச் சேவித்து அவனைப் போற்றி பாடி கைங்கரியத்தை வேண்ட வேண்டும் என்று நமக்கு சொல்லிக்கொடுக்கிறாள். 

கடந்த மூன்று பாசுரங்களில் நப்பின்னையை எழுப்பிய ஆண்டாள் இந்தப் பாசுரம் முதல் ஆண்டாளுடன் கூட வந்து பெருமாளை எப்படிச் சேவிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதாக அமைந்துள்ளது இப்பாசுரம். 

சில வருடங்கள் முன் அஹோபிலம் சென்றிருந்தேன். அன்று துவாதசி. விடியற்க்காலை மலை ஏற ஆரம்பித்தேன். மழைக்காலம் மலையில் அருவிகள் கொட்டிக்கொண்டு இருந்தது. நரசிம்மர் சன்னதியில் கொடுத்த துளசியை ஸ்வீகரித்துவிட்டு அருவியில் வெண்மையாகக் கொட்டிய தண்ணீரை அருந்தலாம் என்று கையை குவித்தேன். தண்ணீர் கையில் விழுகிறது ஆனால் குவித்த கையில் தங்கவில்லை. வந்த வேகத்தில் அடித்துச் சிதறியது. நந்தகோபனிடம் இருக்கும் பசுக்கள்  இப்படித் தான் பால் சொரியும்  என்று நினைத்துக்கொண்டேன். 


அந்தப் பசுக்கள் சதா சர்வகாலம் கண்ணனையே நினைத்துக்கொண்டு பால் சுரக்கிறது. பெரிய கலசத்தை வைத்தால் அருவி போல வேகமாகக் கொட்டி, அந்தப் பானையில் பொங்கி மீதளிக்கும். எவ்வளவு பானை வைத்தாலும் அவை நிரம்பும் அதனால் அவை வள்ளல் பெரும் பசுக்கள். 

இவ்வளவு பாலையும் கண்ணன் உண்டான். அதனால் அவன் கொழு கொழு என்று ஊட்டமுடைய குழந்தை’யானை’ பெருக்கண்ணன்! அவனைப் பார்க்கும் பசுக்கள் பெரும் பசுக்களாகிவிட்டது! 

ஸ்ரீராமரின் பட்டத்து யானையான சந்த்ருஞ்ஜயன் போல இந்தப் பசுக்கள் பெரிதாக இருந்ததாம். 

ஸ்வாமி தேசிகன் பாதுகா ஸஹஸ்ரத்தில்  இப்படிக் கூறுகிறார். 

பாதுகையே நீ ராமரின் பட்டத்து யானை மீது அமர்ந்தாய். நீ அமர்ந்தவுடன் அந்த யானைக்கு ஏற்பட்ட மகிழ்வு காரணமாக மெதுவான உஷ்ணத்துடன் கூடிய மதநீர் பெருகியது. அந்த மதநீரில் வந்து அமர்ந்த வண்டுகள் பெரும் ரீங்காரம் செய்தன. இதனைக் காணும்போது யானை உன்னைத் துதித்தது போன்று காணப்பட்டது என்கிறார். 

அது போல கண்ணனைக் கண்ட பசுக்கள் சந்த்ருஞ்ஜயன் யானைப் போலப் பெரிதாகி மதநீருக்குப் பதில் அவை பாலை சுரந்தது. கோகுலம் முழுவதும் பல சந்த்ருஞ்ஜயன் பசுக்கள் பாலைப் போல நிரம்பி வழிந்தது. 

வள்ளுவர் 

சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை

சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஓர் உதவ முடியாத போது விரும்பாச் சாவும் விரும்பத்தகும் என்கிறார். ஆனால் இந்த பசுக்கள் வள்ளல் பெரும் பசுக்கள். பாலை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. 

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர் என்பதை வள்ளுவர் இப்படி கூறுகிறார். 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

எங்கும் பால் நிரம்பி இருப்பதால் கோகுலத்தில் செல்வத்துக்குக் குறைவில்லை. 

பெருமாளுக்கு பல திருநாமங்கள் இருக்க ஆண்டாள் ‘மகனே!’ என்று அழைக்கிறாள். பெருமாளுக்கு மகனே என்று அழைத்தால் தான் பிடிக்குமாம். ஸ்ரீராமரை  ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று அழைத்தால் தான் பிடிக்குமாம். அது போல இங்கே நந்தகோபனுடைய மகனே என்று அழைக்கிறாள் ஆண்டாள். 

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும். 

ஸ்ரீராமாயணத்தில் ஒரு காகம் மூவுலகைச் சுற்றித் திரிந்து வேறு கதியற்று கடைசியில் ஸ்ரீராமன் திருவடிகளிலே எப்படி விழுந்தது என்று ஸ்வாமி தேசிகன் அடைக்கலப்பத்தில் கூறுகிறார். 

பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் உழன்று ஓடி இளைத்து விழும் காகம் போல்
முத்தி தரும் நகரெழில் முக்கியமாம் கச்சி தன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே...!

அது போல ஆண்டாள் ”நந்தகோபன் மகனே!  பல இடங்களில் சுற்றித் திரிந்து பல காலங்களை வீண் அடித்து கடைசியில் இயலாமையால் உன் வாசல் படியில் வந்து நிற்கிறேன் என்று கை கூப்பி நின்றால் அவன் கருணையை எதிர் பொங்கி மீது அளிப்பான்!

- சுஜாதா தேசிகன்
5-1-2021

கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art




Comments