Skip to main content

30. பாவை குறள் - சேயிழையார்

 30. பாவை குறள் - சேயிழையார் 



வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட-ஆற்றை  அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

திருப்பாற்கடலைக் கடைந்த மாதவனான கேசவனை
சந்திரன் போல் முகமுடைய பெண்கள் சென்று யாசித்து
விரும்பியதைப் பெற்ற வரலாற்றை(பாவை நோன்பு),
அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலை
அணிந்த பெரியாழ்வாரின் மகள் ஆண்டாளால் அருளிச் செய்த
திருப்பாவை முப்பது பாடல்களையும் தவறாமல் பாடுபவர்கள்
நான்கு தோள்களையும், செங்கண்களையும் பெற்ற திருமால்
திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்.

நம்பெருமாள் நெஞ்சில் சந்தனம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பார்க்கவில்லை என்றால் இந்தப் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். 


இந்தச் சந்தனத்தைப் பார்க்கும் போது ரைதாஸ் என்ற பக்தர் பெருமாளைக் குறித்துப் பாடியது நினைவுக்கு வரும். 

பெருமாளே நீ சந்தனம். நாங்கள் தண்ணீர். சந்தனம் நறுமணம் மிக்கது. கிடைத்தற்கரியது. தண்ணீரோ மணமில்லாதது. சுலபமாகக் கிடைக்கும். மதிப்பில் சந்தனம் எங்கே தண்ணீர் எங்கே ஆனாலும் கெட்டியான அந்தச் சந்தனத்தைத் தளர்த்தி, குழைத்துப் பயன்படுமாறு செய்யத் தண்ணீர் தேவைப்படுகிறது. 

சர்வலோக, சரண்யன், ஜகத்காரண பூதன், ஒப்பற்றவனான சந்தனம் போன்ற பகவானுக்கு ‘அறிவொன்றுமில்லாத’ தண்ணீர் போன்ற பக்தர்கள் தேவைப்படுகிறார்கள். 

பக்தர்களால் பகவனுக்குப் பெருமை. அந்தப் பக்தர்களுக்கு வசப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் அவன் பெருமைப்படுகிறான். சந்தனமான பெருமாள், பக்தர்கள் என்ற தண்ணீருடன் சேரும் போது அவன் கரைந்து போகிறான். அந்தச் சந்தனக் குழம்பில் சந்தனம் எது, தண்ணீர் எது என்று தெரியாது அது போலப் பகவானும் பக்தனும் இரண்டறக் கலந்து நிற்கிறான். மேலும் ரைதாஸ் நீ முத்து குவியல் நாங்கள் அதைக் கோர்த்து மாலையாக்கும் கயிறு என்கிறார். 


ஆண்டாளின் திருப்பாவை முப்பதும் பாசுரங்களையும் ஒன்றாகக் கோர்த்து  பகவானுக்கும் பக்தர்களுக்கும் இந்த ஒழிக்க ஒழியாத உறவை ஆண்டாள் முப்பது பாசுரங்களில் சங்கத் தமிழ் மாலையாகக் கோர்த்துச் சாத்தியிருக்கிறாள். 

முதல் முத்து ’மார்கழி திங்கள்’ ஆரம்பித்து  ’வங்கக்கடல் கடைந்த’ என்ற கடைசி முத்தில் முடிகிறது.  

முதல் முத்தில் வரும் வார்த்தை ‘நேரிழையீர்!’ கடைசி முத்தில் வரும் வார்த்தை ’சேயிழையீர்!’ பொதுவாக இந்த இரண்டு வார்த்தைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் ஆண்டாள் இதில் ஒன்றை மறைத்து வைத்திருக்கிறாள். . 

ஆயர் சிறுமியர் இயற்கையாகவே அழகானவர்கள். அவர்களின் அழகிய வடிவமே அணிகலன்களை அணிந்தவரைப் போல் இருந்தது அதைத் தான் ஆண்டாள் ’நேரிழையீர்’ என்று வர்ணிக்கிறாள். பிறகு இந்த ஆயர் சிறுமிகள் எல்லோரையும் எழுப்பி  ’யாம்பெறும் சம்மானமாக’ ‘சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே’ என்று வேண்டிக் கொண்டபடியே நப்பின்னை பிராட்டியும் கண்ணனும் இவர்களுக்கு அணிவித்த ஆபரணங்களால் அழகுக்கு அழகூட்டினாற்போலே காட்சி அளிக்கிறார்கள். 

முதல் பாசுரத்தில் புறத்தில் அழகானவர்களாக விளங்கி பிராட்டியுடன் கூடிய அருளால் அகத்திலும் அழகுள்ளவர்களாக விளங்குகிறார்கள். வங்கக் கடல் கடைந்த மாதவன், திருவாகிய ஸ்ரீ மஹாலட்சுமியைப் பெற்றான். அந்தத் திருவின் முகம் போல் இவர்கள் முகங்களும் கருணை மிகுந்து குளிர்ச்சியாக  விளங்குவதைத் தான் ஆண்டாள் ‘திங்கள் திருமுகத்து சேயிழையார்!’ என்கிறாள். 

கண்ணனிடம் செல்ல வேண்டும் என்ற இச்சையில்  ‘மார்கழி திங்கள் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!’ ஆனார்கள். பிறகு நப்பின்னையிடம் ‘இப்போதே எம்மை நீராட்டேலோர்’ என்று நீராடியபின் கிருஷ்ணானுபவம் கிடைக்க  ‘‘திங்கள் திருமுகத்து சேயிழையார்’ ஆனதில் வியப்பென்ன ? 

சேயிழை என்பதற்கு மிக அருமையான ஓர் அர்த்தம் இருக்கிறது. வள்ளுவர் 

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

என்று காமத்துப்பாலில் இந்தக் குறளில் படிக்கப் படிக்க இன்னும் நிறையப் படிக்க வேண்டும் என்பது போல, இந்தப் பெண்ணுடன் காதலும் அது போல என்கிறார். இங்கே 

சேயிழை என்ற சொல்லுக்குப் பலர் அழகிய அணிகலன் அணிந்தவள் எனப் பொருள் கூறுவர். ஆனால் இதற்குச் சிவந்த விழியினை உடையாள் எனப் பழம் பொருள் ஒன்று இருக்கிறது. காமத்தின் செறிவு நிலையில் கண்களில் செவ்வரிகள் எழுவது இயல்பு. இதுவே அவளுக்கு அணியாக அமைந்து,  சிவந்த இழைகள் நிறைந்த கண்கள் எனச் சொல்கிறான். செவ்வரி ஓடிய கண்களைத் தான் சேயிழை என்பர்

திருப்பாணாழ்வார் அரங்கனைக் கண்ட போது அவனுடைய கண்கள்  “கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப் பெரிய வாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே” என்று ஆழ்வாரைக் கண்ட மகிழ்ச்சி பூரிப்பில் செவ்வரி ஓடி காட்சி அளித்தது. 

இங்கே ஆண்டாளின் கண்கள் கண்ணன் மீது உள்ள காதல் மிகுதியால் சேயிழை ஆகியது. 

அதனால் இந்தச் சங்கத் தமிழ்மாலை முப்பதையும் யார் கூறுகிறார்களோ அவர்களை பெருமாள் மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொள்வான் என்று திருப்பாவைக்குப் பலன் கூறுகிறாள் ஆண்டாள். 

திருப்பாவையை நாம் பாடினால் பெருமாள் மகிழ்ந்து, இவனை இரண்டு திருக்கைகளால் அணைத்துக்கொண்டால் போதாது என்று தன் ’ஈரிரண்டு மால்வரைதோள்’ என்று இரண்டை நான்காக்கி,   நான்கு திருக்கைகளால் நம்மை அணைத்து ‘செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்’ என்ற பலனைக் கொடுக்கிறான். 

ஸ்ரீ பராசர பட்டர் இந்த முப்பது பாசுரங்களைச் சேவித்தால் போதும், அது முடியவில்லை என்றால் கடைசி இரண்டு பாசுரங்களைச் சேவித்தால் போதும், அதுவும் முடியவில்லை என்றால், கடைசி பாசுரத்தைச் சேவியுங்கள், அதுவும் முடியவில்லை என்றால் பட்டர் திருப்பாவை சேவிப்பார் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றார். 

”பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் படித்தால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்”

என்பது தான் ஆண்டாள் நமக்கு கூறும் திருக்குறள் !

சூடிக்கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். 

- சுஜாதா தேசிகன்
27-2-2021
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
நம்பெருமாள் படம் : நன்றி D Sudhakaran Sudhas
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art




Comments