Skip to main content

29. பாவை குறள் - குற்றேவல்

29. பாவை குறள் - குற்றேவல்

சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து,  உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து  நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா;
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்  உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று  ஏலோர் எம்பாவாய்.

மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்ற
உன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்!
பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ
எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது
கூடாது.
நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள்
இங்கு வரவில்லை.
ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம்.
உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்;
மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும்.

திருவள்ளுவர் மைலாப்பூர் காரர் என்று பல காலமாகப் படித்துக்கொண்டு இருக்கிறோம். வள்ளுவ நாடு என்று மலை நாட்டில் ஒரு பகுதி இருப்பதால் வள்ளுவர் அந்த நாட்டுக்காரர் என்பர் சிலர். இந்த ஆராய்ச்சியில் அடியேன் இறங்கப் போவதில்லை. ஆனால் வள்ளுவர் ஆண்டாளின் பாண்டிய நாட்டவர் என்பதற்கு சில சான்றுகள் இருக்கிறது. 

‘பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல் ’ என்று விட்டு சித்தர் என்ற பெரியாழ்வார் கூறுவதால் அவர் பாண்டிய நாட்டை சேர்ந்தவர் என்று அறிக முடிகிறது. ‘பட்டர் பிரான் கோதைசொன்ன’ என்பதால் ஆண்டாளும் பாண்டிய நாட்டை சேர்ந்தவள் என்று கூறலாம். 

கோதை ’மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ என்று கூறுவதால் ’தென் மதுரை’ என்று இருந்திருக்க வேண்டும் என்று புரிகிறது. 

’வட்டார வழக்கு’ என்று ஒவ்வொரு ஊருக்கும் பேச்சு வழக்கு இருக்கிறது. ‘திருநெல்வேலி பாஷை, மெட்ராஸ் தமிழ் என்று இன்றும் யாராவது அதில் பி.எச்.டி செய்துகொண்டு இருக்கிறார்கள். 

நம்மாழ்வார் தாயார் மலையாள தேசத்தவர் அதனால் ஆழ்வார் பாசுரங்களில் சில இடங்களில் மலையாளச் சொற்களை உபயோகித்திருப்பதைப் பார்க்கலாம்.  அது போல் ’பெற்றம்’ என்ற சொல் பாண்டிய நாட்டுக்கே உரிய சொல். அதை ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் உபகோகித்தது போல வள்ளுவர் ஒரு குறளில் இப்படிக் கூறுகிறார் 

வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

இந்தக் குறளின் பொருள் 

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் வெளியே வலிமையான தோற்றம் பெற்றிருந்தாலும், புலித்தோல் போர்த்தி மேயும் பசுக்கள் போல என்கிறார். 

திருவள்ளுவர் மாலையில் ஒரு பாடல் இப்படி இருக்கிறது 

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன் பொருள் உபகேசியை மணந்த கண்ணன் வட மதுரைக்கு ஆதாரம். அது போல திருவள்ளுவர் தென்மதுரைக்கு ஆதாரம் என்கிறது. 

சில சமயம் நாம் கல்வெட்டு ஆதாரங்களைத் தேடிச் செல்லாமல், பாசுரங்களை வைத்தே சில பொருள்களைக் கண்டுபிடிக்கலாம். 

இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் ‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது’ என்கிறாள். இதற்கு ’உன் விருப்பப்படி அந்தரங்கக் கைங்கரியம்’ என்று பொருள் . குற்றேவல் என்பதற்கு ஆண்டாளின் அகராதியில் என்ன பொருள் என்று பார்க்க நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கோவிந்தனுக்கு தான் செய்யவிற்கும் குற்றேவல் என்ன என்பதை கூறுகிறாள். 

கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என்
செம்மை உடைய திருமார்வில் சேர்த்தானேனும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே

பருத்து வளர்ந்த என் முலைகளின் குமைச்சல்(emotions) போக, அந்தக் கோவிந்தனுக்கு அந்தரங்கத் தொண்டை இப்பிறவியில் செய்யாமல் அதன் பின் கிடைக்கும் பரமபதத்தில் என்ன தவம் வேண்டிக்கிடக்கிறது.  அவன் செம்மையான திருமார்பில் என்னை அவன் தழுவிக்கொண்டால் நல்லது. அல்லது அவன் என் முகம் பார்த்து ”நீ எனக்கு வேண்டாம்” என்று சொன்னாலும் நல்லது - இது தான் ஆண்டாள் கூறும் குற்றேவல் defintion. 

பூலோகத்தில் எவ்வளவு பிறவி எடுத்தாலும், வைகுந்ததில் எல்லா இடங்களிலும் எனக்கு உன் விருப்பத்துக்கு கைங்கரியம் செய்ய வேண்டும் என்பதை தான் ஆண்டாள் ’எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்கிறாள். 

ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் பெருமாள் விருப்பத்திற்கு எதைச் எங்கு செய்தாலும் அது கைங்கரியம்!

வள்ளுவர் ஒரு குறளில் இப்படிக் கூறுகிறார் 

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

வாலி விழுந்து கிடக்கிறான் தாரை ராமரைப் பார்த்து மார்பில் அடித்துத் திட்டிப் பேச வேண்டியிருக்க அவளோ ராமரைத் துதிக்க ஆரம்பித்தாள். 

ராமா நீ 

1. அளவிடமுடியாத தன்மை உடையவர்.
2. யாராலும் வீழ்த்த முடியாதவன்
3. புலன்களை வென்றவர்
4. நீயே தர்மம்
5. பெருமைமிக்கவன்
6. முக்காலமும் அறிந்தவர்
7. பொறுமைமிக்கவர்
8. செந்தாமரைக் கண்ணழகை உடையவன். 

தாரை கூறும் எட்டுக் குணங்கள் இவை. 

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

இந்தக் குறள் கடவுள் வாழ்த்தில் ஒன்பதாவது குறள். இதற்கு முன் எட்டுக் குறளில் வள்ளுவர் கூறும் பெருமாளின் எட்டுக் குணங்கள் இவை. 

1. ஆதிபகவன் - அவனே எல்லாவற்றிற்கும் முதலானவன்
2. வாலறிவன் - தூய்மையாகிய அறிவுடையவன்
3. மலர்மிசை ஏகினான் - மலரின் கண்ணே
4. வேண்டுதல் வேண்டாமை இலான் - விருப்பு/வெறுப்பு அற்றவன்
5. இருவினையும் சேரா இறைவன் - பாவ புண்ணியம் அற்றவன்.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் - புலன்களை வென்றவன் - இருடிகேசன்
7. தனக்குவமை இல்லாதான் - ஒப்புமை இல்லாதவன்
8. அறவாழி அந்தணன் - அவனே அறக்கடல்

பெருமாளுக்கு உள்ள எட்டுக் குணங்களைக் குலசேகர ஆழ்வார் தனது முகுந்த மாலையில் இப்படிக் கூறுகிறார். 

ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
ப்க்தப்ரியேதி பவலுண்டன கோவிதேதி
நாதேதி நாகசயனேதி ஜகன்நிவாஸே
த்யாலாபினம் ப்ரதிபதம் குரு மே முகுந்த 

1. ஸ்ரீ வல்லபேதி(திருமகள் நாயகனே) 
2. வரதேதி ( வரமளிப்பவனே) 
3. தயாபரேதி (கருணைமிக்கவனே)
4. பக்தபரியோதி(பக்தர்களின் அன்பனே) 
5. பவலுண்டன கோவிதேதி (பிறவித் தொடரை களைந்து காக்கும்)
6. நாதேதி(வல்லவனே) 
7. நாகசயனேதி(பாம்பணையில் துயில்பவனே) 
8. ஜகன்நிவாஸே( எங்கும் நிறைந்தவனே)

த்யாலாபினம்(என்று உன்னைப் பற்றி) ப்ரதிபதம்(அடிக்கடி துதிக்க ) குரு மே( எனக்கு அருள்புரி) முகுந்த (என் முகுந்தா!) 

உன் புகழை போற்றும்படி எனக்கு அருள் புரிய வேண்டும் என்று குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார். 

பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் கடைசியில் பல ஸ்ருதியில் .

பல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ
நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து
ஏத்துவர் பல்லாண்டே 
  

பல்லாண்டு பாடுவதற்குப் பல்லாண்டு பாடுவதே தான் பயன் என்கிறார்

குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் கேட்ட அதே பொருளை தான் ஆண்டாள் ’பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்’ என்கிறாள். 

அதனால் தான் இந்தப் பாசுரம் மிக முக்கியமானதாய் நம் ஆசாரியர்கள் கொண்டாடுகிறார்கள்! 

24-01-2021
- சுஜாதா தேசிகன்
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan ArtComments