22. பாவை குறள் - பங்கமாய்
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்.
அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல நாங்களும் நெருங்கி வந்துள்ளோம். சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ என்னும்படி உன் கண்கள் சிறிது சிறிதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ ? சந்திரனும் சூரியனும் உதித்தாற் போல அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால் எங்கள் பாவங்கள் தொலைந்து விடும்.
’ஏற்ற கலங்கள் ‘ என்ற நேற்றைய பாசுரமும் ‘அங்கண் மா ஞாலத்து’ என்ற இன்றைய பாசுரமும் ஒன்றாகச் சேர்த்து அனுபவிக்க வேண்டும். எம்பெருமானுடைய அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான் இந்த இரண்டு பாசுரத்தின் சாரமும்.
நேற்றைய பாசுரத்தில் ‘வலி தொலைய வேண்டும்’ என்கிறாள். வலி என்பது நம் வலிமையைக் குறிக்கும். அந்த வலிமையை இழக்க வேண்டும்.
வலிமை எதனால் உண்டாகிறது ?
செல்வத்தால் வலிமை உண்டாகிறது. கர்வம் சேர்ந்துகொள்கிறது. அதிக அறிவினால் தலைக் கனம் சேர்ந்துகொள்கிறது. உயர்ந்த குலம் என்ற செருக்கு ஏற்படுகிறது. இந்த வலிமையை எல்லாம் ஒழிய வேண்டும் என்பதைத் தான் ’மாற்றார் உனக்கு வலி தொலைந்து’ என்கிறாள்.
வள்ளுவர்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
செருக்கும் சினமும் சிறுமையும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும் என்கிறார். இன்னொரு குறளில்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
பணிவும் இன்சொல்லுமே அணிகலனாகும், மற்றைய அணிகலங்கள் ஆகாது என்கிறார்.
திருப்பாவை முப்பதும் ஒரு கோயிலைச் சுற்றிப் பார்ப்பது போல என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம். கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் அந்த வலிகள் எல்லாம் தொலையத் தான் நாம் ‘’துவஜஸ்தம்பம்’ முன் சாஷ்டாங்கமாகக் கீழே விழுகிறோம். உடம்பில் மண் படுமா, வேஷ்டி அழுக்காகுமா, பெரிய பதவியில் இருக்கும் நாம் விழலாமா என்று யோசிக்காமல் வலி தொலைந்து அது எம் பெருமான் வாசற்கண்(துவஜஸ்தம்பம்) வந்து சேரவேண்டும் என்கிறாள்.
”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் - வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்கிறார் அமுதனார் இராமானுச நூற்றந்தாதியில்.
குறும்பு என்றால் துஷ்ட தனம். வெறும் குறும்பு இல்லை ’வஞ்சகமான’ குறும்பு என்கிறார். முக்குறும்பு என்பது கல்வி செருக்கு ; செல்வச் செருக்கு ; குலச் செருக்கு. இந்த மூன்று குறும்புகளும் புதை குழிகள். சுலபமாக விழுந்துவிடுவோம். இந்த மூன்றும் பங்கப்பட்டு பெருமாளிடம் செல்ல வேண்டும். எப்படி என்பதைப் புரிந்துகொள்ள நம்மாழ்வாரின் “ஒரு நாயகமாய்” என்ற பத்துப் பாசுரத்தில் நம்மாழ்வார் கூறும் கதையை இங்கே தந்துள்ளேன்.
ஒரு சக்ரவர்த்தி பெரிய தேசத்தை ஆட்சி செய்கிறான். ஒரு நாள் எதிரி நாட்டு அரசன் இவனைத் தோற்கடிக்க. இந்நாள்வரை சக்கரவர்த்தியாக வாழ்ந்த அரசன் உயிருக்குப் பயந்து ஓடுகிறான். பசி வாட்டுகிறது. கையில் ஒன்றும் இல்லை. பகலில் ஓடினால் மாட்டிக்கொள்வோம் என்று ஒரு காட்டில் பதுங்கிக்கொள்கிறான். அங்கே பிரேத ஊர்வலம் ஒன்று செல்ல அதைத் தொடர்ந்து சென்று அங்கே உடைபடும் மண் பானையின் பகுதி ஒன்றைப் பிச்சை எடுக்க உதவும் என்று எடுத்துவைத்துக்கொள்கிறான்.
சில நாள் முன் எப்படி எல்லாம் வாழ்ந்தேன் என்று அரசன் நினைத்துக்கொள்கிறான். அரசனாக இருந்த காலத்தில் தங்கத் தட்டில், தங்கக் கிண்ணங்களில் ராஜதானி சாப்பாடு மாதிரி பல பதார்த்தங்கள் சாப்பிட்டதும். அவனுக்குப் பல்லிளித்துக்கொண்டு அழகான பெண்கள் சுற்றி இன்பத்தையும் அமுதத்தையும் ஊட்டிவிட்டதையும் . இன்றோ அவன் ராஜ்ஜியத்தை இழந்து, மனைவிகளை இழந்து கொளுத்தும் வெயிலில், ஏதோ ஒரு காட்டில் ஒளிந்துகொண்டு இருக்கும் நிலை வந்துவிட்டது.
நல்ல பசி நல்ல இருட்டு. எதிரிகள் வரும் சத்தம் கேட்க இருட்டில் வேகமாக ஓடுகிறான். பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தை அடைகிறான் அங்கே சின்ன குழியில் கருநாய் (கர்ப்பம் தரித்த நாய் ) ஒன்று படுத்து உறங்கிக்கொண்டு இருக்க, இருட்டில் கண் தெரியாமல், நாயை மிதிக்க, அரசன் காலை அது பதம் பார்க்கிறது. அரசனுக்கு மீண்டும் பழைய நினைவு வருகிறது.
சிம்மாசனத்தில் இருக்கும் போது, கப்பம் கட்ட வரும் சிற்றரசர்கள் அவனை வணங்கி அவர்கள் கீரிடத்தில் இருக்கும் முத்து மாலை இவன் காலில் பட்டுப் பட்டு காலில் தழும்பே ஏற்பட்டுவிட்டது. ஆனால் இன்று கருநாய் கவ்விய தழும்பு! நாய் துரத்த, கையில் வைத்திருந்த மண் பானையின் ஓடும் உடைந்துவிடுகிறது. சத்தத்தைக் கேட்ட ஊர் மக்கள் திருடன் என்று நினைத்து அவனுக்குத் தர்ம அடி கொடுக்க ஒருவர் வெளிச்சம் கொண்டு யார் என்று பார்க்க “அட நம்ம ராஜா!” என்று வியந்து அவருக்கா இந்தக் கதி ! என்று நினைக்கிறார்கள்.
எல்லாம் இழந்து நிலையற்று “ஆற்றாது வந்து” ( கதியற்று வந்து ) என்பது இது தான். அறிவு, குலம் செல்வம் இவை எல்லாம் தொலைந்தால் நமக்கு என்ன கிடைக்கும் ?
அறிவு கிடைக்கும் !
நல்ல குலம் கிடைக்கும்
செல்வம் கிடைக்கும் !
அறிவு எப்படிக் கிடைக்கும் ?
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த, நிறைஞானத்து ஒரு மூர்த்தி
குறிய மாண் உரு ஆகி, கொடுங் கோளால் நிலங் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே
நிறை ஞானத்து மூர்த்தியான கண்ணன் உலகில் உள்ள அறிவு படைத்த நமக்குக் கீதையை அருளினான் என்று இதற்குப் பொருள் கூறினால் அது தவறு. ‘அறிவில் குறைவில்லை’ என்று சொல்லும் அறிவில்லாதவர்களுக்குக் கீதையை உரைத்தான் என்று நமக்கு அறிவில்லை என்ற அறிவு கிடைக்கும். வள்ளுவர்
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
`எனக்கு அறிவு இருக்கிறது` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும் என்று கூறிய வள்ளுவர் செருக்கு இல்லாமல் இல்லாமல் இருந்தாலே பெரிய செல்வம் என்கிறார்
நல்ல குலம் எப்படி கிடைக்கும் ?
தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்து அடி தொழுது
ஆயிரம் நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு
பல்லாயிரத்து ஆண்டு என்மினே.
என்று பெரியாழ்வார் “ உயர் குலத்தில் பிறந்தோம் என்ற சொருக்கை உடைய பண்டைய குலத்தைத் தவிர்த்து தொண்டர் குலத்தில் சேர்ந்துபெருமாளுடைய திருவடிகளுக்கு பல நாமங்கள் சொல்லி பல்லாண்டு பாடுவோம்” என்கிறார். வள்ளுவர்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
பணிவுடன் இருந்தால் எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுக்கு மற்றொரு செல்வம் போன்றதாகும்.உயர்ந்த குலம் என்பதற்கு வள்ளுவர் கூறும் definition கீழே உள்ள குறள்
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும்; குலப்பெருமை வேண்டுமானால் யார்க்கும் பணிவு விரும்புக என்பது குறளின் பொருள். பணிவே ஒருவனுக்கு அணிகலன் என்கிறார்.
திருமங்கை மன்னன் ஒரு பெரிய பட்டியலே தந்துள்ளார்.
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்
ஒரு நாராயணன் நாமம் சொன்னால் என்ன என்ன கிடைக்கும் என்று பெரிய ஷாப்பிங் லிஸ்டே தந்துவிட்டார். இவை எல்லாம் கிடைக்க வலி தொலைந்து பங்கப்பட வேண்டும் என்கிறாள் ஆண்டாள்!
- சுஜாதா தேசிகன்
6-1-2021
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art
Comments
Post a Comment