23. பாவை குறள் - சீரிய சிங்கம்
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும் வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது நெருப்பு போலச் சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து உடம்பை நான்கு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்துக் கர்ஜனை செய்து வெளியில் வருவது போல காயம்பூ போன்ற நீல நிறமுடையவனே, நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிங்காசனத்தில் அமர்ந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும் என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.
கோயிலுக்குச் சென்று சேவிப்பது போன்றது திருப்பாவை என்று முன்பு கூறியிருந்தேன். அது போலத் திருப்பாவையைக் கொண்டு பெருமாளுக்கு முழுத் திருவாராதனமும் செய்துவிடலாம்.
திருவாராதனத்தில் பெருமாளை எழுப்ப வேண்டும்(துயிலெழாய்), பின் கதவைத் திறக்க வேண்டும் ( மணிக்கதவம் தாள்திறவாய்) அதற்குப் பிறகு நீராட்டுதல் (நீராட்டேலோர்) பிறகு அலங்கரிக்க பெருமாளை அலங்கார ஆஸ்தானத்திற்கு எழுந்தருளப் பிராத்திக்க வேண்டும்(மாரி மலை என்ற இந்தப் பாசுரம்). அதற்குப் பிறகு பெருமாளுக்குப் பல்லாண்டு பாட வேண்டும் ( அன்று உலகம் அளந்தாய் என்ற அடுத்த பாசுரம் ).
ஆண்டாள் சீரிய சிங்காசனத்தில் சிங்க அரசன் போன்ற பெருமாளை அமர அழைக்கும் அனுபவத்தை நாம் அனுபவிக்கலாம்.வள்ளுவர்
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
படை, குடிமக்கள், பொருள், அமைச்சரவை, நட்பு நாடுகள், பாதுகாவல் என்ற ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என்கிறார்.
ஆண்டாள் கோட்டுக்கால் கட்டில்மேல் சயனத்தில் இருக்கும் பெருமாளை எப்படிச் சிங்கம் போல எழுந்து வர வேண்டும் என்று நேர்முக வர்ணனையே கொடுக்கிறாள் இந்தப் பாசுரத்தில்.
ஆண் சிங்கத்தின் நடை அழகை வள்ளுவர் இப்படிக் கூறுகிறார்
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
அதாவது புகழைக் காக்க விரும்பும் மனைவியைப் பெற்றவருக்கு இகழ்ந்து பேசும் பகைவர் முன் ஆண்சிங்கம் போல் பெருமிதத்துடன் நடக்க முடியும் என்கிறார்.
முன்பு அஹோபிலம் சென்றதை குறித்து எழுதியிருந்தது நினைவிருக்கலாம். நான் போன சமயம் மெல்லிய மழையும் பனி படர்ந்த குளிரும் எங்கும் தண்ணீர் சொட்டிக்கொண்டு இருந்தது. சற்று தூரம் நடந்த போது அங்கே சிறு குகை. உள்ளே நடு நாயகமாக ஜ்வால நரசிம்மர் மடியில் இரண்யனுடன் காட்சி அளிக்கிறார். எட்டுத் திருக்கரங்கள். வழக்கம் போலச் சங்கு சக்கரத்தை ஏந்திக்கொண்டு இரண்டு. இரண்டு திருக்கரம் இரணியனின் வயிற்றைக் கிழிக்க, மேலும் இரண்டு கரங்கள் அவன் தலை, கால்களை அசங்காமல் பிடித்திருக்க, இன்னும் இரண்டு திருக்கரம் அவன் குடலை மாலையாகச் சூட்டிக்கொண்டு இருக்கும் அந்த அழகைப் பயபக்தியுடன் ரசிக்கும் போது. அடியேனுக்கு இந்தப் பாசுரம் தான் நினைவுக்கு வந்தது. அதை கீழே அனுபவிக்கலாம்.
மழை காலத்தில் எங்கும் குளிர் பரவிய சிங்கவேள்குன்றம் என்ற மாமலையில் (மாரி மலை) சிறு குகையில்(முழைஞ்சில்) அமைந்த குடைவரைக் கோயிலில் யசோதை இளம் சிங்கம் மான தேவகியின் சீரிய சிங்கம் பேடையுடன் மன்னிக் கிடந்து அசையாமல் உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கம் உறக்கம் தெளிந்து எழுந்து ( அறிவுற்று ) கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழுத்து(தீ விழித்து) எழுந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பிடரி மயிர் பொங்கக் குலுக்கியது அப்போது அதிலிருந்து எங்கும் சுகந்தமான தாமரை மலரின் வாசனை(வேரி) பொங்கிப் பரவ தன் உடம்பை நாலாபக்கமும் உதறிக்கொண்டு(பேர்ந்து உதறி) வில் போல (மூரி) வளைத்து, சோம்பல்(மூரி) முறித்து நிமிர்ந்து பாஞ்சசன்னியம் போல முழங்கிப் புறப்பட்டது. ஆனால் இந்தச் சிங்கம் நிஜ சிங்கம் இல்லை, யசோதையின் இளம் சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர் போன்றவன் என்று ஆண்டாள் சூட்டிய பெயர் பூவைப் பூவண்ணா !
ஆண்டாள் உன்னைத் தேடி உன் அருள் வேண்டி உன் கோயிலுக்கே வந்துவிட்டோம். அதனால் இங்கே வந்து அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சீரிய சிங்காசனத்தில் வந்து அமர்ந்து எங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று ஆசையுடன் அழைக்கிறாள்.
மன்னி கிடந்து என்பது ஆண் சிங்கம் பேடையுடன் ஒன்றாக இருந்தது என்பதை திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் குறிப்பிடுகிறார்
சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர்
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே
என்கிறார்.
எது மென்மை?
பூவைப் பூ வண்ண்ணா ?
மென் மலர் மங்கையான பிராட்டியா ?
ஆண்டாளின் காதலா ?
வள்ளுவர்
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்
காமம் மலரைவிட மென்மையானது; பக்குவம் அறிந்து அதனைத் துய்ப்பவர் சிலரே என்கிறார். ஆண்டாள் பக்குவம் அறிந்து பருக திருப்பாவையை அருளியிருக்கிறாள்.
திருப்பாவை ஒரு கோயில் என்று முன்பு கூறினேன். கோயில், திருமலை, பெருமாள் கோயில், திருநாராயண புரம் என்று நான்கு கோயில்கள் பிரசித்தம். அது போல ஆண்டாள் திருப்பாவையில் நான்கு கோயில்கள் இருக்கிறது - புள்ளரையன் கோயில், தங்கள் திருக்கோயில், நந்தகோபன் உடைய கோயில், உன் கோயில். அது மட்டும் அல்லாது நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என்ற நான்கு திருக்கோலங்களையும் திருப்பாவையில் நாம் அனுபவிக்கலாம்!
- திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் உலகினில் தோற்றமாய் நின்ற திருக்கோலம்
- நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த திருக்கோலம்.
- மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு இங்ஙனே போந்தருளிய போது நடந்த திருக்கோலம்.
- கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்த திருக்கோலத்தில் எங்களுக்கு ஆராய்ந்து அருள் புரிய வேண்டும் என்கிறாள்.
வள்ளுவர் அருளே துணை என்பதை
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை
நல்லவழியை ஆராய்ந்து அருள் செய்க; எவ்வகையால் பார்த்தாலும் அருளே துணை என்கிறார். நாமும் ஆராய்ந்து அருளும் மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர்
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு
சிந்தித்துத் தெளிந்து மெய்ப்பொருளை உள்ளம் உணர்ந்து கொண்டால், உறுதியாக, மனிதப் பிறப்பின் இயல்பை மீண்டும் ஆராயவேண்டியதில்லை என்கிறார்.
ஆண்டாளின் திருப்பாவையின் மெய்ப்பொருளை உள்ளம் உணர்ந்தால் யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்வான்.
- சுஜாதா தேசிகன்
8-1-2021
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art
Comments
Post a Comment