Skip to main content

19. பாவை குறள் - குத்துவிளக்கு

19. பாவை குறள் - குத்துவிளக்கு 



குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;
மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்,
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்;
தத்துவம் அன்று தகவு — ஏலோர் எம்பாவாய்.

நிலை விளக்குகள் ஒளிவீச, தந்தக் கால்களையுடைய கட்டிலில் மெத்தென்ற பஞ்சு படுக்கை மீது கொத்துதாக மலர்ந்திருக்கும் பூக்களைச் சூட்டிய கூந்தலுடைய நப்பின்னையின் மார்பில் தலையை வைத்துக் கொள்பவனே வாய்திறந்து பேசு! மைக் கண்ணுடைய நப்பின்னையே! நீ உன் கணவனைச் சிறுபொழுதும் படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை. கணமாகிலும், நீ அவன் பிரிவைச் சகிக்க மாட்டாய் ஆ! நீ இப்படி (எதிராக)இருப்பது நியாயமும் ஆகாது குணமும் ஆகாது.

ஆழ்வார் பாசுரங்களில் பல விளக்குகள் இருக்கிறது. திருப்பாவையில் ‘அணிவிளக்கு’, ’தூமணி மாடத்து விளக்கு’, ‘குல விளக்கு’, ‘கோல விளக்கே’ மற்றும் இந்தப் பாசுரத்தில் வேறு எந்த ஆழ்வாரும் கூறாத ’குத்து விளக்கை’ ஆண்டாள் கூறுகிறாள். 

ஐந்து திரிகள் கொண்ட குத்து விளக்கின் ஏற்றம் அதை ஏற்றினால் எத்திசையும் ஒளி வீசும். ஏன் ஆண்டாள் இங்கே இதைக் கூறுகிறாள் என்று பார்க்கலாம். 

வள்ளுவர் 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களால் ஆகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன என்று காமத்துப் பாலில் கூறுகிறார். 

ஸ்ரீ வைஷ்ணவத்தில் இந்த ஐந்து புலன்களையும் பெருமாளிடத்தில் வைத்தால் அது ஞானம். மற்ற ஆழ்வார்கள் ‘ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு’ ‘ஞான வெள்ள சுடர் விளக்காய்’ ’மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை’  ‘நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே’ என்று ஆழ்வார்கள் இதைக் கொண்டாடியுள்ளார்கள். 

‘உந்துமத களிற்றன்’ என்ற சென்ற பாசுரத்தில் வள்ளுவர் கூறிய இந்த ஐந்து புலன்களையும் ஆண்டாள் கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும்(தொட்டும்) அறிந்திருக்கிறாள். எப்படி என்று பார்க்கலாம். 



வந்து திறவாய்’ என்று கூறும் போது அவள் நடை அழகைக் கண்டார்கள்.
கையால் சீரார் வளை ஒலிப்ப’ அதைக் கேட்டார்கள்
உன் மைத்துனன் பேர்பாட’ அதைச் சுவைத்தார்கள்.
கந்தம் கமழும் குழலி’ அதை முகர்ந்தும் பார்த்தார்கள்.
செந்தாமரைக் கையால்’ கையை பிடித்த போது இந்த ஐந்து புலன்களின் பயனை அறிந்து, உள்ளத்தில் ஞான விளக்கு ஏற்றப்பட்டு ‘குத்து விளக்கு எரிய ‘திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன்’ என்று பேயாழ்வார் கண்டதைப் போல இவர்களுக்கு,  ‘அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா!’ என்பது போல ’கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!’ என்ற பெருமாளும், பிராட்டியுடன் கூடிய சேர்த்தி சேவை கிடைத்தது! 

இங்கே ஆண்டாளுக்கே உரித்தான தமிழைக் கொஞ்சம் அனுபவிக்க வேண்டும். 

’கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா!’ என்ற வரியை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். 

நப்பின்னை பிராட்டியினுடைய திருமுலைத் தடத்தை தன் மேலே வைத்துக் கிடந்த என்று பொருள் கொள்ளலாம் அல்லது கொங்கைமேல் தன்னை வைத்துக் கிடந்த என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது யார் யாரைத் தழுவிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத வண்ணம் என்று ஆண்டாள் கூறும் ‘அகலகில்லேன்’ இது. 

பெருமாளும் பிராட்டியும் எப்படி இருந்தார்கள் என்பதை ஒரு குறள் மூலம் பார்க்கலாம். 

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

காற்று கூடப் போக முடையாத பிரிக்கமுடியாமல் தழுவுவது,  இருவருக்குமே மிக பிடித்தமான ஒன்று என்கிறார் வள்ளுவர். அப்படி இருப்பவர்களைத் தான் ஆண்டாள் எழுப்புகிறாள். 

இந்த காமத்துப் பால் குறளை நாம் பெருமாளுடன் கூடிய பிராட்டி என்ற பொருளின் தத்துவத்துடன் படித்தால் இந்தப் பாசுரத்தின் அருமை புரிந்து ‘சிற்றின்பம்’ (erotic) போன்று கொச்சையாகப் பிதற்றாமல் ஆண்டாள் கூறிய உண்மைப் பொருளை அனுபவிக்கலாம். அதனால் தான் இந்தப் பாசுரத்தின் சாரத்தைப் பட்டர் ‘நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்’ என்று தனியனில் அருளினார். 

உண்மைப் பொருள் புரிந்த இந்த நந்தா விளக்கு ஏற்றப்பட்டால் பெருமாளை அனுபவிக்க விடாமல் தடுக்கும் பகைகள் ஒழியும். இதையும் வள்ளுவர் குறள் மூலம் பார்க்கலாம். 

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

நாச்சியார் திருமொழியில் ‘என் தத்துவனை வரக் கூறுவாய் ஆகில் தலையல்லால் கைம்மாறிலேனே’ என்று கண்ணனே தத்துவம் என்கிறாள். இந்தப் பாசுரத்திலும் ஆண்டாள் நப்பின்னையிடம் அந்தத் தத்துவத்தையே கேட்கிறாள். 

ஆண்டாள் நப்பின்னையுடன் கூடிய கண்ணனின் திருவடிகளைப் பற்ற வந்திருக்கிறோம். அதற்கு நப்பின்னையிடமே உதவியைக் கேட்கிறாள். இதுவே துவயம் ! 

இன்னொரு வள்ளுவரின் குறள் 

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல. சான்றோர்க்கு அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். 

ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் குத்து விளக்கு ஏற்றிப் பொய்யாமை என்ற துவயமே சான்றோர்க்கு அகத்தின் இருளைப் போக்கும் விளக்கு என்பதை விளக்கிவிட்டாள்!

- சுஜாதா தேசிகன்
3-1-2021

கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art




Comments