Skip to main content

26. பாவை குறள் - மேலையார்

26. பாவை குறள் - மேலையார் 



மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே,
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே;
ஆலின் இலையாய்! அருள் — ஏலோர் எம்பாவாய்.

திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு
பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில்
உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம்
போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,
பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும்,
கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய
சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே,
இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்

என்கிறாள் ஆண்டாள். 



இங்கே ஆண்டாள் ‘மேலையார் செய்வனகள்’ என்ற வார்த்தையைப் பார்க்கலாம். மேலையார் என்பது பெரியவர்கள், முன்னோர்கள் என்று கொள்ளலாம். 

பெரியாழ்வார் கூறியதைப் போல ‘எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்’ என்று கூறியபடி வழி வழியாக அவர்கள் கூறியதை வேதவாக்காக ஏற்று அதன் படி நடக்கிறோம் என்கிறாள். 

சாஸ்திரம் தெரியவில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் வயதான பாட்டியிடம் எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் அதுவே சாஸ்திரம் என்று மனுவில் கூறி உள்ளதாக முன்பு கேட்டிருக்கிறேன். 

இந்த பெரியவர்கள் யார் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார் 

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியர்; அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர் என்கிறார் பெரியர் என்பவர்கள் செயல்களை உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர்கள் என்று இன்னொரு குறளில் அதற்கு விளக்கம் தருகிறார்.

வள்ளுவர் மேலும் ஒரு குறளில் 

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

பெரியவர்கள் கண்கள் போன்றவர்கள். அரசனும் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார். அடுத்த குறளில் 

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்

தப்பு செய்தால் இடித்து அறிவுரை கூறும் பெரியவர்களின் துணை கொண்டவர்களை யாரும் தப்பான வழியில் போகும்படி கெடுக்க முடியாது என்று கூறிய வள்ளுவர் இன்னொரு குறளில் 

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை

வியாபாரத்தில் முதல் இல்லாமல் லாபம் பார்க்க முடியாது. அது போலப் பெரியவர்களின் துணை இல்லாமல் நல்ல நிலைக்குச் செல்ல முடியாது என்கிறார். 

நாம் பித்ருக்களுக்கு மறவாமல் சடங்குகள் செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர் 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென் புலத்தார் என்பது பித்ருக்கள். இறந்தவர்களை மறவாமல் சில சடங்குகள் செய்து நினைவில் வைத்துக்கொள்வது நலம் என்கிறார். 

இது போலப் பல குறள்கள் இருக்கிறது. 

இன்னொரு அழகான வார்த்தையை அனுபவித்துவிட்டு கட்டுரையை நிறைவு செய்யலாம். ‘கதிர் மதியம் போல்முகத்தான்’ என்பதற்குப் பொருள் பகைவர்களுக்குச் சூரியனைப் போல நெருப்பென்ன நின்ற நெடுமால் போல இருப்பான். பக்தர்களுக்கு சந்திரன் போல நீபூவைப்பூ வண்ணாவாக இருப்பான் என்ற கருத்து ’ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன’ என்ற வரியைக் கூர்ந்து கவனித்தால் அதில் ஒளிந்துள்ளது! 

‘பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியம்’ பகைவர்களுக்கு நடுக்கத்தைக் கொடுத்து எங்களுக்கு அந்தச் ஓசை ’வண்டு இனம் முரலும் சோலை’ யான திருவரங்கத்தில் இருக்கும் வண்டிகளின் ஓசை போலக் கேட்க வேண்டும் என்கிறாள். 

கோவர்த்தன மலை இடையர்களைக் காத்தது. அந்த மலைக்கு ஆதாரமாக கண்ணன் அதைத் தாங்கி நின்றான். அது போல ஆலந்தளிரில் அவன் அந்த இலைக்கும் ஆதாரமாக இருக்கிறான் என்ற ஆதாரத்தைப் புரிந்துகொண்டால் அவன் நமக்கு ஆதாரமாக இருப்பான்!

12-01-2021
- சுஜாதா தேசிகன்
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art





Comments