Skip to main content

பாரதக் கோவில் !

 பாரதக் கோவில் !


நான் பள்ளியில் படிக்கும்போதுதான் எனக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோயில் அறிமுகம். என் தந்தையின் நண்பர் ஒரு பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அவர் அச்சகத்தில் எழுத்துக்களைக் கோத்து வார்த்தையாக்குவதைப் பார்த்திருக்கிறேன். பத்திரிகையில் கிழித்த சிவகாமியின் சபதம் போன்ற கதைகளை பைண்ட் செய்து தருவார். புத்தகம் எப்படி பைண்ட் செய்ய வேண்டும் என்று எனக்குக் கற்றும் கொடுத்தார். பார்க்க மிக ஒல்லியாக ஊசிபோல இருப்பார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்தார். 

அவர் என் இல்லத்துக்கு வரும்போது ‘ராம ஜன்ம பூமி’ பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடும். என் தந்தை அவரிடம் ‘உனக்கு வீடு மனைவி மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். போராட்டம் என்று நீ சென்று உனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களின் நிலைமை என்னாவது?’ என்று அறிவுரை கூறுவார். அவர் தன் சொந்த நிலத்தை யாரோ ஆக்கிரமித்துவிட்டது போலச் சத்தமாகப் பேசுவார். 

ஒருமுறை என் இல்லத்துக்கு வந்து ‘ராமர் கோயில் கட்ட அயோத்திக்குக் கற்கள் அனுப்புகிறோம்’ என்று ரசீதுப் புத்தகத்துடன் வந்து பணம் வாங்கிக்கொண்டு சென்றார். பிறகு அவரை சிலகாலம் காணவில்லை. பிரிண்ட்டிங் பிரஸும் மூடியிருந்தது. விசாரித்ததில் அவர் அயோத்திக்குச் சென்றுள்ளார் என்று கூறினார்கள். 

சில வருடங்கள் கழித்து, ஒரு தடவை வீட்டுக்கு வந்து, காவல்துறை, லாக்கப், பிரிண்டிங் பிரஸ் சீல் என்று ஏதோ பேசிவிட்டுச் சென்றார். அதற்குப் பிறகு எங்கே சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. நாங்களும் அவரையும் ராமரையும் மறந்தே போனோம். ஏதோ ராமர் ஏதோ கோயில் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்றுதான் தோன்றியது. சிறுவயதில் எனக்கு இவையெல்லாம் புரியவில்லை என்றாலும், அவர்தான் அயோத்தி ராமர் கோயில் பற்றி எனக்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர். 

அதற்குப் பிறகு, ராமர் கோயில் தொடர்பான பிரச்சினைகள் நாளிதழ்களில் வரத் தொடங்கின. பாபர் மசூதி (உண்மையில் அது மசூதி அல்ல!) இடிப்புப் படங்கள், துக்ளக் கருப்பு அட்டைப்படம், 

ராமருக்கு வேண்டும் கோயில்
பாபருக்கு வேண்டும் மசூதி
எங்களுக்கு வேண்டும் சுத்தமான கழிப்பறைகள்! 

என்ற புத்திசாலித்தனமான வரிகளைப் பொதுஜன ஊடகங்கங்கள் எடுத்துக்கூற, நாமும் இவற்றைப் படித்துவிட்டுச் சென்றோம். தமிழ்நாட்டில் நிலவிய இந்த அலட்சியப் போக்கால், சேதுசமுத்திரம் இடிக்கும் திட்டம், ராமர் என்ன பொறியிலாளரா என்ற பேச்சுக்கள் எல்லாம் எழக் காரணம். 

ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று பிரபலமானவர்கள், எழுத்தாளர்கள் யாரும் தைரியமாகக் கூறவில்லை, குரல் கொடுக்கவில்லை. மனதுக்குள் இருப்பதை எழுத்தில் போலியாக, பாசாங்காக எழுதினார்கள். இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா அவர்கள் மட்டும்தான் தைரியமாக ‘இந்தியாவில்தானே ராமர் கோவிலைக் கட்ட முடியும்’ என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் கூறினார். அயோத்தி முழுக்க ராமர் கோயில் இருக்கிறது, எதற்கு இன்னொரு கோயில் என்ற கண்டனங்களை இடதுகையால் புறம் தள்ளினார். 

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ஸ்ரீராமர் பற்றித் தெரியும், ஆனால் அயோத்தி பற்றி அதிகம் தெரியாது என்றே கூற வேண்டும். இங்கே இருப்பவர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டிய தாஜ்மஹாலைப் பார்த்திருப்பார்கள், ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஸ்ரீராமர் காலடி பட்ட அயோத்திக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதே நிஜம். சென்றிருந்தால் அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்கள். 

அயோத்தி பற்றியும் ராம ஜென்ம பூமி பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கும், ஏன் இந்தியாவிற்கும், அத்வானி போன்ற தலைவர்கள் முன்னின்று நடத்திய ‘ரத யாத்திரை’தான் வெளிச்சம் போட்டுக் காட்டியது. பாரதிய ஜனதா ராமரை அரசியலாக்கினார்கள் என்று எளிதாகச் சிலர் பழி சுமத்திலாம். ஆனால் ஒரு வரலாற்றை மீட்டெடுக்கும் பொருட்டு அதில் தப்பில்லை. 

ராமர் வடநாட்டுச் சாமி என்று திட்டமிட்டுப் பிரசாரம் செய்கிறார்கள். 1952ம் வருட மூன்றாம் வகுப்பு பாரத நாட்டுச் சரித்திரப் பாடப் புத்தகத்தின் முன்னுரையில் ‘சிறு சிறு கதைகள்மூலம் நமது நாட்டின் சரித்திரம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் சிறுவர்களுக்கு வேண்டிய சரித்திர ஞானத்தை அளிக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட புத்தகத்தின் முதல் பாடம் ‘இராமன்’. ஆனால் நானோ நீங்களோ படித்த காலத்தில் இராமன் எங்கும் இல்லை. எங்கோ யாரோ செய்த அரசியலால் ராமர் மறைந்துவிட்டார். அதை மீட்டெடுக்க மீண்டும் அரசியல் செய்வதில் என்ன தப்பு? 

சங்கத் தமிழ் என்று போற்றப்படும் புறநானூறு (358) பாடல் ஒன்று தவத்தின் பெருமையைக் கூறுகிறது. 

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட் டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.

சூரியனைச் சுற்றி வரும் இந்த உலக வாழ்கையைத் தவத்துடன் ஒப்பிட்டால் அது சிறு கடுகுக்குக் கூடச் சமம் ஆகாது. அதனால் இல்வாழ்க்கை பற்றுகளை விட்டவரைத் திருமகள் கைவிட மாட்டாள். இந்தப் பாடலின் திணை, துறை என்று உள்ளே போகாமல் தவத்தின் பெருமையைப் பாடிய புலவரின் பெயரை மட்டும் தெரிந்துகொள்ளலாம். அவருடைய பெயர் வான்மீகியார்.

இதை எழுதியவர் வால்மீகியா அல்லது வால்மீகி மீது இருந்த பற்றால் அந்தப் பெயரை வைத்துக்கொண்ட ஒருவரா என்று எல்லாம் ஆராய்ச்சிக்குள் போகவேண்டாம். நமக்குப் புலப்படும் வெளிப்படையான உண்மை - புறநானூறு காலத்தில், ஒரு பாடலைப் பாடியவர் பெயர் வான்மீகியார். இந்தப் பெயர் வடமொழியின் திரிபு என்பது நமக்குப் புலப்படுகிறது. வடமொழி தெரிந்தவர்கள் தமிழ்மொழியையும் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். 

ஸ்ரீராமாயணம் எழுதிய வால்மீகி அதன் ஆரம்ப ஸ்லோகத்தில் தன் குருவான நாரத பகவானைக் கூறுமிடத்தில் ‘தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக்விதாம் வரம்’ என்று தவத்தை முதன்மையாகச் சொல்லிச் சிறப்பிக்கிறார். 

குலசேகர ஆழ்வார் பாசுரம் ஒன்று இப்படி வருகிறது.
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே

இதன் பொருள், ‘வித்துவக்கோட்டு பெருமாளே! உன்னையே விரும்பி, செல்வத்தை விரும்பாதவனிடம், செல்வம் தானாகவே வந்து சேருவது போல, என்னை நீ புறக்கணித்தாலும் உன்னையே அடைய வேண்டுவேன்’. இது ‘செல்வத்தை வேண்டாதவனிடம் செல்வம் வந்து சேரும்’ என்ற புறநானூற்றுப் பாடலுடன் ஒத்துப் போவதை நீங்கள் பார்க்கலாம். 

இவர் ராமாயணம் எழுதிய வான்மீகி தமிழ் நன்றாகக் கற்ற காரணத்தால் தான் அவரால் ராமாயணத்தை எளிமையான ஸ்லோகங்களால் செய்ய முடிந்தது என்பது பெரியவர்கள் நிர்வாகம். 

வான்மீகி சென்னைக்கு வந்திருக்கிறார் என்பது சென்னைவாசிகள் எவ்வளவு பேருக்குத் தெரியும்? திரு வால்மீகி ஊர் என்பதுதான் திரு வான் மியூர் என்று இன்று மாறியிருக்கிறது. (ஆதாரம்: ஸ்ரீ உ.வே.கருணாகர ஸ்வாமி உபன்யாசம்). பாதி சென்னைவாசியான எனக்கே இதைக் கேட்டு ஆச்சரியமும் சந்தோஷமும் ஒருங்கே வந்தது!

திருவான்மியூரிலிருந்து வால்மீகி பல்லாவரம் சென்றுள்ளார். அங்கே திருநீர்மலையில் இருக்கும் பெருமாள் கோயிலில் பெருமாள் அவருக்கு ஸ்ரீராமராகக் காட்சி கொடுக்க அவரைச் சேவித்திருக்கிறார். ஸ்ரீராமரை குணவான் என்பார்கள். சீல குணத்துக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீராமர். சிலகுணத்தை நீரின் தன்மையுடன் ஒப்பிடுவார்கள். திருநீர்மலை பெருமாளுக்குப் பெயர் நீர்வண்ணன். இது மட்டுமல்ல, கர்ப்பகிரஹத்தில் மூலவருடன் வால்மீகி முனிவரும் அங்கே இருக்கிறார். 

வால்மீகி ராமாயணத்தில் ஆரண்யக் காண்டத்தில் இராவணனின் தம்பிமார்களான கர, தூஷண அரக்கர்களை வதம் செய்ததை, சிவபெருமான் ஸ்வேதாரண்ய க்ஷேத்திரத்தில் யமனை அடித்தது போல என்று உவமை கூறுகிறார். ஸ்வேதாரண்யம் என்ற இந்த இடம் திருவெண்காடு.

ராமாயணத்தில் காவிரி பற்றிய குறிப்பு இருக்கிறது. அந்தக் காவிரிக் கரையில் இருக்கும் ஸ்ரீரங்கப் பெருமாள்தான் ஸ்ரீராமர் பூஜித்த பெருமாள் என்ற தகவல்கள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமல் மறைத்து மறக்கடிக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். 

ஸ்ரீ ராமாயணத்தில் சத்தியம், தர்மம், பிதுர் வாக்கியப் பரிபாலனம் (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை), மாத்ருபக்தி (தாய் மீதான பக்தி), சகோதரப் பாசம், நண்பர்களிடம் ஸ்நேகம், பதிவ்ரதாதர்மம் (பத்தினி தர்மம்), ஏகபத்தினி விரதம், சரணாகதி ரக்ஷணம் (சரணாகதி தத்துவம்) போன்ற பல குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. 

‘இப்பூவுலகில் மலைகளும், நதிகளும் இருக்கும் வரை ஸ்ரீமத் ராமாயணம் பிரசித்தி பெற்று விளங்கும்’ என்பது ஸ்ரீ வால்மீகியின் திருவாக்கு. அவரைத் தொடர்ந்து நம்மாழ்வார் ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்கிறார். 

‘நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்’ 

என்கிறார் கம்பர். அதாவது, ‘வேண்டிய பொருளைக் கொடுக்கும், தெளிவான அறிவையும் புகழையும், பேரின்பப் பேற்றினையும் நல்கும்’ என்கிறார். 

திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதியில், 

‘படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடிகொண்ட கோயில் இராமானுசன்’ 

என்று ‘ராமானுஜர் ஒரு நடமாடும் கோயில்; அந்தக் கோயிலுக்குள் ஸ்ரீராமாயணம் என்ற பக்தி வெள்ளம் குடிகொண்டு இருக்கிறது’ என்கிறார். இது மட்டுமின்றி, ‘ராமானுஜர் தினமும் தவறாமல் ஸ்ரீ ராமாயணத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டுப் பூரிப்படைந்தார்’ என்று ‘ஸ்ரீ ராமாநுஜாய திவ்ய சரிதை’யில் குறிப்பு இருக்கிறது. 

கூரத்தாழ்வான் பெரிய நம்பிகளின் கண்களைப் பறித்த குலோத்துங்கன் (என்ற கிருமிகண்ட சோழன்) கழுத்தில் புண்ணாகிப் புழுத்து மாண்டபின் ஸ்ரீ ராமானுஜர் மீண்டும் திருவரங்கம் வந்தார். குலோத்துங்கனின் மகன் விக்ரம சோழன் அகளங்கன் தனது தந்தை செயல்களுக்கு வருந்திச் சொன்ன வார்த்தை, ‘ஸ்ரீ ராமாயணமும் திருவாய்மொழியும் உள்ளவரை வைஷ்ணவம் அழியவே அழியாது.’ 

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 18வது வயதின்போது, காஞ்சிபுரத்திலிருந்து ஹரிதாஸ் என்ற ஒருவர் இவரை அணுகி ‘96 கோடி முறை ராமநாமத்தை உச்சரி’ என்று சொன்னதைத் தெய்வவாக்காக எண்ணி, 21 ஆண்டுகளில் அதை முடித்தார். தினந்தோறும் சராசரி 1,25,000 முறை ராமநாமத்தை ஜபித்திருக்க வேண்டும்! இதைச் செய்து முடிக்க இவருக்கு உதவியது ஸ்ரீராமராகத்தான் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் இதைச் செய்திருக்க முடியாது. மனம் உருகி ஒருமுறை கூப்பிட்டாலே ராமர் வருவார். இவ்வளவு முறை கூப்பிட்டால்? பல முறை இவர் முன் ராமர் தோன்றி அருளியிருக்கிறார். ‘ஏல நீ தய ராது’, ‘கனு கொண்டினி’ போன்ற கீர்த்தனைகள் இந்த அனுபவத்தைக் கொண்டு அவர் பாடியவை.

‘ஹேராம்’ என்று உயிரை விட்டதாகச் சொல்லப்படும் காந்தியடிகளின் ‘ராம நாம’ பக்தி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். நமக்குச் சுதந்திரம் கிடைத்ததற்கு ‘மஹாத்மா’ காந்தி என்று சொல்லுகிறோம். அவருக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது? அவர் தொடர்ந்து ஜபித்த ‘ராம’ நாமம்தான்! நமக்குச் சுதந்திரமே ‘ராம’ நாமத்தில்தான் கிடைத்தது என்று சொன்னால் மிகையாகாது.

காந்தியடிகளுக்கு எப்படி ராம நாமத்தின் மீது இவ்வளவு ஈடுபாடு வந்தது?

‘சின்ன வயதில் பேய் பிசாசு பயம் எனக்கு உண்டு. ராம்பா என்ற பெண்மணி (செவிலித்தாய்) எனக்கு ஒரு உபாயம் சொன்னாள். விடாமல் ‘ராம நாமம்’ சொன்னால் பயம் போய்விடும் என்றாள். எனக்கு உபாயத்தைவிட அவளிடம் நம்பிக்கை இருந்தது. தினமும் ராம நாமம் சொல்ல ஆரம்பித்தேன். அந்தத் தவறிழைக்காத ராம நாமத்தின் விதைதான் இன்றும் என்னைக் காக்கிறது’ என்கிறார். 

‘மூதறிஞர்’ என்று போற்றப்பட்ட ராஜாஜி அவர்கள் ‘கங்கையும் காவேரியும் ஓடும் வரையில் சீதா ராம சரிதம் பாரத நாட்டில் ஆண் பெண் குழந்தைகள் அனைவரையும் தாய்போல் பக்கத்திலிருந்து காக்கும்’ என்று தம் ‘சக்ரவர்த்தித் திருமகன்’ என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் வழக்கில் வெற்றி பெற்ற ராம் லல்லா தரப்பு வாதத்தை எடுத்து வைத்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் திரு பராசரன் 1957ல் திருவல்லிக்கேணியில் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் ஸ்ரீமத் ஸ்ரீ ராமாயண உபன்யாசத்தைக் கேட்க ஆரம்பித்தார். அதன் பிறகு பராசரன் அவர்கள் தினமும் ஸ்ரீமத் ராமாயணம் படிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். 

நான் சில வருடங்களுக்கு முன் முதன்முறை அயோத்திக்குச் சென்றபோது அந்த ஊரே கோயில்போல இருந்தது. அங்கே ராமரை எல்லோரும் ‘மரியாதா புருஷோதமன்’ என்று மரியாதையுடன் அழைக்கிறார்கள். நாம் படித்த அயோத்தி வேறு, அங்கே அனுபவிக்கும் அயோத்தியா வேறு என்று புரிந்தது. ஊரில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடுக்கி வைக்கப்பட்ட கற்களைப் பார்த்தபோது, எங்கள் வீட்டுக்கு ரசீதுப் புத்தகத்துடன் வந்து ராமர் கோயில் கட்ட கற்களுக்குப் பணம் வசூலித்துச் சென்ற என் அப்பாவின் நண்பர்தான் நினைவுக்கு வந்தார். 


ராமர் பாலம் கட்டும் படங்களில் குரங்குகள் ஒவ்வொரு கல்லின் மீதும் ‘ராம’ என்று எழுதுவது போல வரைந்திருப்பார்கள். அன்று நான் அயோத்தியில் பார்த்த அந்தக் கற்களில் ராமரின் பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. என் அப்பாவின் நண்பர் மாதிரி பல ராம பக்தர்கள் செய்த முயற்சியால்தான் இன்று ஒரு கோயில் அங்கே சாத்தியமாகி இருக்கிறது. 

என் அயோத்தியா அனுபவங்களை வலம் இதழில் எழுதியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இன்றும் என்னிடம் பேசுபவர்கள் இந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு நினைவு கூர்கிறார்கள். அந்தக் கட்டுரையில் நான் எழுதி இருந்த வரிகளை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். “ஸ்ரீராமரை சேவித்துவிட்டு அவர்கள் கொடுத்த கற்கண்டு பிரசாதத்தை எடுத்துக்கொண்டு நடக்கும் போது மனம் முழுவதும் ஸ்ரீராமரே குடிகொண்டு இருந்தார். சீக்கிரம் இங்கே கோயில் கட்டப்பட்டு அதில் ஸ்ரீராமரைச் சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.” எழுதும்போது இத்தனை சீக்கிரம் இது நடக்கும் என்று நினைக்கவில்லை. எல்லாம் ராமனின் செயலன்றி வேறில்லை.

அதற்குப் பிறகு அயோத்தி ஸ்ரீராமர் கோயில் வழக்கில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பராசரன் அவர்களைப் பற்றி எழுதிய கட்டுரை வலம் இதழில் வெளிவந்தது. அதுவும் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட கட்டுரை.

கடந்த டிசம்பர் மாதம் மூத்த வழக்கறிஞர் பராசரன் அவர்களை நானும் என் பையனும் சந்தித்து ஆசி பெற்றோம். அப்போது அவர் வலம் பத்திரிகையில் நான் எழுதிய ‘பராசரன் என்ற இராமப்பிரியன்’ கட்டுரையைக் குறிப்பிட்டு, ‘எப்படி இவ்வளவு தகவல் திரட்டினீர்கள், என்னைப் பற்றி எல்லாவற்றையும் எழுதிவிட்டீர்கள்’ என்று கூறி ஸ்ரீமத் ராமாயணம் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டுத் தந்தார். 


நம் எல்லோர் இல்லத்திலும் பூஜை அறை இருக்கிறது. நாம் வசிக்கும் தெருவில் ஒரு கோயில் இருக்கிறது. ஊருக்கு என்று ஒரு ஆலயம் இருக்கிறது. நம் தேசத்துக்குத் திருப்பதி, ஸ்ரீரங்கம், மதுரா, அயோத்தியா, புரி, பத்ரி போன்ற முக்கியமான வழிபடும் ஸ்தலங்கள் இருக்கின்றன. உலகிற்கு பாரதமே கோயிலாக இருக்கிறது. அதன் எபிசென்டர் (மையப்பகுதி) அயோத்தியா என்றால் அது மிகையாகாது. 

‘ஸ்ரீராமாயணம் என்ற ஜீவநதி, வால்மீகி என்ற மலையில் தோன்றியது. ஸ்ரீராமன் என்ற பெருங்கடலை நோக்கிப் பாய்கிறது. புண்ணியமான அந்த நதி, இந்த மண்ணுலகைப் புனிதமடையச் செய்யட்டும்’ என்பது ராமாயண தினசரிப் பிரார்த்தனை ஸ்லோகம். 

ஸ்ரீராமாயணம், பாரத நாட்டைப் புனிதப்படுத்தட்டும் என்ற குறுகிய பிரார்த்தனை இல்லை, இந்தப் பூமண்டலத்தையே புனிதமாக்கட்டும் என்கிறது. 

ராமருக்கு இன்னொரு பெயர் சத்தியசீலன். சத்தியம் என்றால் உண்மை என்ற பொருள் மட்டும் இல்லை, இன்னொரு பொருள், என்றும் நிலைத்து இருப்பது என்பது!

ஸ்ரீராமரைப் பற்றி இந்தக் கட்டுரையையும் சேர்த்து மூன்று கட்டுரைகளை எழுத இடம் கொடுத்த வலம் இதழுக்கு என் நன்றி.

- சுஜாதா தேசிகன்
17-09-2020
வலம் செப் மாதம் பிரசுரமான கட்டுரை. நன்றி வலம். 

அயோத்தி ஸ்ரீராமர் பற்றி வலம் இதழில் எழுதிய மற்ற கட்டுரைகள் 

அயோத்தியின் மனத்துக்கு இனியான்

பராசரன் என்ற இராமப்பிரியன்


Comments

Post a Comment