ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை - சில குறிப்புகள்
குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில்
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன்
உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
அரங்கனுக்கு அடியார்களாய்
ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள். இயர் பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும். பெரியவாச்சான் பிள்ளையின் இயர் பெயர் கிருஷ்ணன் (பெரியவாச்சான் பிள்ளை காலத்தில் வாழ்ந்த இன்னொரு மகான் பெயர் சிறியாத்தான்!)
நம்பிள்ளையின் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில்
யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்) உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார். ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். அதனாலேயே, இவருக்கு கிருஷ்ணர் என்னும் திருநாமத்தைச் பெற்றார்.பெரிய பெருமாள், பெரியாழ்வார், பெரியவாச்சான் பிள்ளை, பெரியஜீயர் என்று அழைக்கப்பட்ட நால்வரும் அவரவர் பெருமையால் ‘பெரிய’ என்ற பட்டத்தை அடைந்து புகழப்பட்டிருக்கிறார்கள்.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலை
பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.
பெரியவாச்சான் பிள்ளை இல்லை என்றால் இன்று உள்ளவர்கள் அதன் ஆழ்ந்த அத்தத்தை புரிந்துகொண்டிருக்க முடியாது ; இவர் இல்லை என்றால் இன்று ஸ்ரீவைஷ்ணவம் இப்படி வளர்ந்திருக்காது என்பது நிதர்சனம்.
பெரியவாச்சான் பிள்ளைக்கு "பரம காருணிகர்" மற்றும் "அபார கருணாம்ருத சாகரர்" என்ற இரண்டு உயர்ந்த பெயர்களை வைணவ உலகம் சூட்டியது மகிழ்ந்தது. திருவரங்கநாதன் "அபயப்ரதராஜர்" என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான். இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், "இராமாயணப் பெருக்கர்" என்றும் இவருக்கு ஒரு பெயர் உண்டு.
இவருடைய சிஷ்யரான வாதி கேசரி ஜீயர் இவரால் உயர்வு பெற்ற கதையை பார்க்கலாம்.
பெரியவாச்சான்பிள்ளை ஆசிரமத்தில் வாதி கேசரி ஜீயர் திருமடைப்பள்ளி(தளிகை) கைங்கரியம் செய்து வந்தார். அவ்வளவாக கல்வி ஞானம் பெற்றிருக்கவில்லை. பெரியவாச்சான் பிள்ளையை சேவிக்க வந்திருந்த சில பண்டிதர்கள் அவர் திருமாளிகையில் ஏதோ கிரந்தங்களை பற்றி ஆராய்ந்துக்கொண்டு இருந்தார்கள். வாதி கேசரி ஜீயர் ஆவர்மாக “அது என்ன ?” என்று கேட்க இவருடைய கல்வி அறிவின்மையை சுட்டிக்காட்ட ’முஸலகிஸலயம்’ (உலக்கை கொழுந்து) என்றார்கள். ஜீயர் அந்த கிரந்தத்தின் பெயர் தான் அது என்று நினைத்து பெரியவாச்சான் பிள்ளையிடம் அந்த வித்வான்கள் சொன்னதை சொல்லி ”அந்த கிரந்தம் யார் அருளிச்செய்தது ?” என்று கேட்டார்.
பெரியவாச்சான் பிள்ளை உண்மையை உணர்ந்து “அப்படி ஒரு கிரந்தம் இல்லை - உன் புத்தி உலக்கை கொழுந்து போன்றுள்ளது” என்று பரிஹஸித்திருக்கிறார்கள் என்று வருத்ததுடன் சொன்னார். இதைக்கேட்ட அழகிய மணவாளர் பெரியவாச்சான் பிள்ளையின் திருவடிகளை பிடித்துக்கொண்டு “அடியேனை எப்படியாவது வித்வானாக்கி விடவேணும்” என்று பிராத்தித்தார்.
அன்று முதல் பெரியவாச்சான் பிள்ளை இவருக்கு பாடம் சொல்லி வடமொழியிலும், தமிழ்மொழியிலும் இலக்கண இலக்கியங்களைக் கரைகண்டவராக ஆக்கினார். தன்னை பரிஹசித்த வித்வான்களை வெட்கப்படும் படி, இவர் திருவாய்மொழிக்கு "பன்னீராயிரப்படி" வியாக்யானம் அருளிச்செய்தார். கூடவே‘முஸலகிஸலயம்’ என்றொரு கிரந்தமும் செய்தார்.
இவர் செய்த கிரந்தத்தின் தொடக்கத்தில் - ஒன்றுமறியாத விலங்குபோல் இருந்த அடியேன் எவருடைய கடாஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமைபெற்ற அபயப்ரதர் என்னும் திருநாமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன் என்று கூறுகிறார்.
--0o0--0o0--0o0-
வைணவ உரைவளத்தில் பல விஷயங்கள் அடங்கியுள்ளது, கொஞ்சம் நகைச்சுவையும் இருக்கிறது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். தனது உரையில் “அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே” என்ற பதத்தை உபயோகித்துள்ளார்.
இதில் என்ன நகைச்சுவை என்று யோசிக்கலாம்.
பொதுவாகக் கோயிலில் கோஷ்டி முடிந்த பிறகு தீர்த்த பிரசாதம் கொடுப்பார்கள். அப்போது முதல் தீர்த்தம் இரண்டாம் தீர்த்தம்.. கடைசியில் பெண்களுக்கு என்ற வரிசையில் இருக்கும். விசேஷ காலங்களில் கோயிலில் கூட்டம் அதிகம் என்றால் அர்ச்சகர் சிலருக்கு கொடுத்துவிட்டு ‘சட்’ என்று ’ஆச்சு’ முடிந்துவிட்டது என்று சென்றுவிடுவார். இதனால் பலருக்கு ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கும். ஆனால் தீர்த்தவாரி போது ’கூடியிருந்து குளிர்ந்தேலோர்’ என்பது போல பெருமாளின் தீர்த்த பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும்.
பெருமாளின் அவதார காலத்தில் உதாரணமாக ஸ்ரீராமாவதாரத்தில், சக்கரவர்த்தி திருமகனை சிலர் தான் பார்த்து அனுபவித்தார்கள். உதாரணம் ஸ்ரீஹனுமான், விபீஷணாழ்வார், ஏன் சூர்ப்பணகை கூடப் அதில் சேர்த்துக்கொள்ளலாம் ! ஆனால் நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.
ஆனால் அர்ச்சாவதாரத்தில் இந்தப் பிரச்சனையே இல்லை தெருக்கோடியில் இருக்கும் பாலாஜியையோ, அல்லது பல்லவனோ, வைகையோ பிடித்து பெரிய பெருமாளை நினைத்தால் சேவித்துவிட்டு வந்துவிடலாம்.
அவதாரம் என்பது ‘தீர்த்தம் பிரசாதம் போல’ சிலருக்குக் கிடைக்கும் சிலருக்குக் கிடைக்காமலே போகலாம். அச்சாவதாரம் தீர்த்தவாரி போலே. இதைத் தான் பெரியவாச்சான் பிள்ளை ’அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே’ என்று குறிப்பிடுகிறார்.
வடக்கே இருக்கும் கோயில்களில் வெளியே சின்ன சின்ன ஸ்வீட் டப்பா விற்பார்கள், பக்தர்கள் சேவிக்கும்போது அதை இருந்த இடத்திலிருந்து கண்டருள செய்வார்கள். நீங்களும் அப்படி செய்யலாம். பாவம் தான் முக்கியம், பிரசாதம் முக்கியமில்லை.
அடுத்த முறை உங்களுக்குத் தீர்த்த பிரசாதம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்படாதீர்கள், பெரியவாச்சான் பிள்ளை காலத்திலேயே சிலருக்கு கிடைக்காமல் போயிருக்கிறது. ஒன்றும் செய்ய வேண்டாம் பெரியவாச்சான் பிள்ளையை நினைத்துக்கொள்ளுங்கள் அதுவே பெரிய பிரசாதம் !
பிகு: தீர்த்தம் கிடைத்தாலும் நினைத்துக்கொள்ளுங்கள்
- சுஜாதா தேசிகன்
10-09-2020
ஸ்ரீஜெயந்தி மற்றும் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திரம்.
படம் :
- 2015ல் பெரியவாச்சான் அவதார ஸ்தலத்துக்கு (சேங்னூர்) சென்றபோது அடியேன் எடுத்தது.
- 2016ல் டாக்கூர் துவாரகா பயணத்தின்போது எடுத்தது.
நிறைய தெரிந்து கொண்டேன்; அறிந்த கொண்டேன்!
ReplyDeleteப்ரசாதமும் பெற்றுக் கொண்டேன்!
(பாவனையாகத்தான்!)