7. இராமானுசன் அடிப் பூமன்னவே - சாவி
பராங்குச தாசர் கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு முன் மதுரகவிகள் பற்றி ஒரு சம்பவத்தைக் கூற ஆரம்பித்தார்.
மதுரகவிகள் திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்குள் பெருமாளைப் பார்க்காதவண்ணம் ஓரமாகச் சென்று சடகோபனைச் மட்டும் சேவிப்பார். ஒருமுறை மதுரகவிகளிடம் சடகோபன், ’எப்போதும் என்னையே வணங்கிக்கொண்டு இருக்கிறீர்களே, ஒருமுறை பொலிந்து நின்ற பிரானையும் சேவித்துவிட்டு வாரும்’ என்று கட்டளையிட்டார். மதுரகவிகளும் பொலிந்து நின்ற பிரானை சேவித்து ‘என் ஆசாரியனுடைய கட்டளை அதனால் இங்கே உம்மைச் சேவிக்க வந்தேன். என் விருப்பத்தினால் அல்ல!” என்று கூறினார்.
நாதமுனிகள் உள்ளம் உருகி ‘எப்பேர்பட்ட ஆசாரிய பக்தி!’ என்றார்.
இராமாயணத்திலிருந்து மேலும் சில விஷயங்களைக் கூறினார் பராங்குச தாசர். இராமனின் அழகைப் பார்த்தால் எல்லோரும் மயங்கிவிடுவார்கள். சூர்ப்பனகை மூக்கு அறுபட்டு ரத்தம் சொட்ட இராவணனிடம் சென்று இராமனின் அழகைப் பலவாறு புகழ்ந்துவிட்டு கடைசியில் மூக்கு அறுபட்ட விஷயத்தைக் கூறினாள். இராமனின் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை.
ஆனால் சத்ருக்னன் இராமனின் அழகில் ஈடுபடாதவன். அதாவது தன் உகப்புக்காக இராமனின் அழகில் மயங்கி ஈடுபட மாட்டான். தனக்கு வேண்டியவனான பரதனுக்கு வேண்டியவன் இராமன் என்பதால் அவனழகில் ஈடுபாடும் உடையவன் சத்ருக்னன்.
இராமபிரான் சத்ருக்னன் இருவருமே ஒருவர்க்கொருவர் அன்புடையவர்கள் என்றாலும் அது நேராகவல்ல. தனக்கு உகந்த பரதனுக்கு உகந்தவர் இராமபிரான் என்பதால் இராமபிரான் மீது சத்ருக்னனுக்கு அன்பு உண்டு; அதே போல் தனக்குகந்த பரதனிடத்தில் பக்தியுடையவன் என்பதால் சத்ருக்னன் மீது இராமனுக்கு அன்பு உண்டு. சத்ருக்னன் எப்படி பரதனிடம் ஈடுபட்டாரோ எங்கள் மதுரகவிகள் சடகோபனிடம் ஈடுபட்டார்” என்றார் பராங்குச தாசர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சரித்திரச் சம்பந்தமான சிலவற்றை இந்தக் கதையைப் படித்து வரும் நேயர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
குணமலைப்பாடி என்ற சிற்றூருக்குத் தலைவனான காங்கேயன் தெற்கில் படையெடுத்துச் சென்றான். அந்த சமயம் அவனுக்குப் பிள்ளையாத்தான் என்பவர் அரிசி முதலியவற்றைக் கொடுத்து உதவி செய்தார். காங்கேயன் பதிலுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து “உமக்கு என்ன வேண்டும் ?” என்று பிள்ளையாத்தானைப் பார்த்துக் கேட்க அதற்கு அவர் “ஏற்கனவே தங்களிடத்திலிருந்து நான் உதவி பெற்றிருக்கிறேன்” என்று கூறினார்.
காங்கேயனுக்கு ஆச்சரியம் “அப்படியா ? எனக்குத் தெரியாமல் என்னிடத்திலிருந்து நீர் என்ன உதவி பெற்றீர்?” என்று கேட்க அதற்கு ஆத்தான் “எங்களுடைய ஆசாரியருக்கு தாங்கள் உதவிகள் பல செய்துள்ளீர்கள். எங்கள் ஆசாரியர் கோயிலுக்கு நிலம் கொடுத்து உதவியது காங்கேயன்” என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். எங்கள் ஆசாரியருக்கு தங்கள் செய்துள்ள உதவிகளுக்கு மேல் எனக்கொன்றும் தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை” என்று கூறினாராம்.
இனி மேற்கொண்டு கதையின் ஆரம்பத்திலிருந்து நாதமுனிகள் வீரநாராயணபுரத்திலிருந்து பயணித்ததைக் கொஞ்சம் பின்னோக்கி பார்க்கப் பார்க்கலாம்.
சில வைணவ அடியார்கள் வீரநாராயண புரம் கோயிலில் சடகோபனின் பத்துப் பாசுரங்களைப் பாட அதைக் கேட்ட நாதமுனிகள் அதில் ஈர்க்கப்பட்டு மற்ற ஆயிரம் பாசுரங்களைத் தேடி திருவரங்கத்துக்குச் செல்கிறார். அங்கே ரங்கநாயகி நாச்சியார் நம்பெருமாள் ஆசீர்வாதம் பெற்று, அங்கிருந்து தேடி அலைந்து குடந்தை, திருக்குருகூர், திருக்கோளூர் வந்தடைகிறார். அங்கே வைத்தமாநிதி பெருமாள் சந்நிதியில் சடகோபனை ஆசாரியனாகக் கொண்ட மதுரகவிகளின் வம்சத்துப் பராங்குச தாச பிள்ளையைச் சந்தித்து, சடகோபனின் அவதார வைபவத்தை அறிந்துகொள்கிறார். சடகோபனின் ஆயிரம் பாசுரங்களையும் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று நாதமுனிகள் விண்ணப்பம் செய்தார்.
பராங்குச தாசர் மதுரகவிகளைத் தியானித்துக்கொண்டு ’இன்பத்தில்’ என்ற வார்த்தையைக் கூறி முதல் பாசுரத்தை இனிய ராகத்துடன் பாடினார்.
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே - 1
நாதமுனிகள் பாடலை ஆழ்ந்து அனுபவித்தார். யசோதைப் பிராட்டி, உடம்பில் உறுத்தும்படி பல முடிகளுடன், நீளம் போதாமல் அந்தச் சிறிய தாம்புக் கயிற்றால் கண்ணன் தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட அந்த மாயக் காட்சியை மனக் கண்ணில் கண்டார். ஆனந்தக் கண்ணீர் பெருகி இந்த இன்பத்தின் சுவை என்னது ? அறுசுவை அடிசிலா ? நெய் சுவை தேறலா ? கனியின் சுவையா ? பாலின் சுவையா ? என் ஆரா அமுதமே ! பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் தருகிறது. இந்த அமுது ஊறும் இன்பத்தைத் தரும் தென் குருகூர் நம்பியின் நாமம் மேலும் என் நாவுக்கு இன்பமாக இருக்கிறது ! கண்ணீர் அருவியாகப் பெருகி ஆனந்த ரூபமான அனுபவித்தார்.
பராங்குச தாசர் ‘இறைஞ்சுதலில்’ என்ற வார்த்தையைக் கூறி அடுத்த பாசுரத்தைப் பாடினார்.
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே - 2
குருகூர் நம்பி, சடகோபன் என்ற திருப்பெயர்களைப் பல தடவை துதித்துப் பார்த்த போது அமுது ஊறும் என் நாவுக்கே எனது போல இன்பச் சுவையை உணர்ந்தார். புகல் ஒன்று இல்லாத தனக்குக் குருகூர் சடகோபனைச் சரணம் அடைந்தால், பெருமாளின் அடிக்கீழ் அமர்ந்து புகும் பேற்றைப் பெற்றேனே! என்று எண்ணிப் பூரிப்படைந்தார். மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே, தேவு மற்றறியேன் குருகூர் நம்பியே தஞ்சம் என்று சரணம் அடைந்து உள்ளம் உருகினார்.
பராங்குச தாசர் ‘இசையும் பேற்றில்’(1) என்ற வார்த்தையைக் கூறிவிட்டு அந்தாதியின் அடுத்த பாடலை பாடினார்.
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே. 3
வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற பேறு அதனால் தேவபிரானுடையக் கரிய கோலத் திருவுருவம் காண்கிறேன். இனி ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்து உற்றேன் உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது ? இனி குருகூர் சடகோபனுக்கே தான் அடியேன் என்று உளமார ஏற்றுக்கொண்டு கைகூப்பி நின்றார்.
’இகழாத பல்லுறவில்’ என்ற வார்த்தையை உச்சரித்துவிட்டு பராங்குச தாசர் நான்காம் பாடலைப் பாடினார்.
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர்; ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே. 4
என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து அத்தா! சடகோபன் குணம் நிறைந்த என் தலைவராக ஏற்றுக்கொண்டேன். என்னை விட்டு நீங்காத பலவிதச் சம்பந்தம் பெற்றேன் என்று மகிழ்ந்தார் நெகிழ்ந்தார்.
பராங்குச தாசர் ‘இராகம் மாற்றில்’(2) என்று கூறிவிட்டு, அடுத்த பாசுரத்தை இசையுடன் பாடினார்.
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும், முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே. 5
நாதமுனிகளுக்கு அந்தப் பாடல் இன்ப வெள்ளமாக உள்ளே சென்றபோது அவர் உள்ளத்தில் ஒரு தெளிவு பிறந்தது. ‘சாமர்த்தியம் பெற்றேன் !’ என்று கூறி. கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பங்களான தகாத விஷயங்களில் பற்றுதலை ஒழித்து, திருகுருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே! என்றார்.
’தன் பற்று’ என்று கூறிவிட்டு, பராங்குச தாசர் ஆறாம் பாடலைப் பாடினார்.
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே. 6
நாதமுனிகளின் உள்ளத்தில் சடகோபனே எங்கும் பரவியிருந்தார். குருகூர் சடகோபன் அன்புடன் நாதமுனிகளைப் பற்றியிருக்கப் பூரிப்புடன் ‘இன்று முதல் ஏழேழு பிறவியிலும் என் ஆசாரியனான குருகூர் சடகோபன் புகழ் பாடுவேன்! அதற்கு அருள் செய்தவரும் அவரே. என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப் இன்தமிழில் என் நாமுதல் புகுந்து என் வாய்மூலம் பாட வைத்து எக்காலத்திலும் இகழ்ச்சி இன்றி ஆதரவு செய்வார்!’ என்றார் தீர்மானமாக.
பராங்குச தாஸர் நாதமுகளை வணங்கி ‘வினை விளக்குதல்’ என்ற சொல்லைக் கூறிவிட்டு, ஏழாம் பாடலைப் பாடினார்.
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே. 7
’காரியார் புதல்வரான மாறன் தானாகவே என்னைப் அன்புடன் பற்றியதால் தீவினைகள் தீர வழி செய்தார்! உலக மக்கள் பலருக்கு இந்த விஷயம் சென்று சேர வேண்டும் அல்லவா ? அதனால் திசை எட்டும் அறியும்படி புகழ்ந்து பேசப் போகிறேன்!’ என்றார்.
பராங்குச தாசர் ‘தகவு ஒக்கம்’(3) என்று கூறி அடுத்த பாசுரத்தைப் பாடினார்.
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே. 8
பெருமாளின் கருணை அபிவிருத்தியை கொண்டாடும்படி அடியார்கள் இன்புறக் குருகூர் சடகோபன் வேதத்தின் பொருளை இனிய தமிழில் அருளினார். இந்தப் பூவுலகில் இந்த அருள் ஒன்று மட்டுமே மிகவும் பெரியது. வேதத்தின் சாரமான கண்ணனின் கீதை, அதன் சாரமாக அமைந்த குருகூர் நம்பியின் ஆயிரம் பாடல்கள் கிடைக்க வேண்டும் என்று சடகோபனைத் தியானித்து அருளாழி அம்மானை வேண்டிக்கொண்டார்.
’தத்துவத்தை உணர்த்துதல்’ என்று கூறிய பராங்குச தாசர் அடுத்த பாசுரத்தைப் பாடினார்.
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே. 9
சடகோபனுக்கே அடிமை செய்து, அவர் திருவடிகளின் மீது ஏற்பட்ட பக்தியின் பயனாக வேதத்தின் உண்மைப் பொருள்களை அறிந்துகொண்டு நெஞ்சுள் நிலை நிறுத்தி அவனுடைய உணர்வு கொண்டுணர்ந்தே இருந்த மதுரகவிகள் போல அடியேனுக்கும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
’தன்மையாக்கில்’ என்ற வார்த்தைக்குப் பிறகுப் பத்தாவது பாசுரத்தைப் பாடினார்.
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே. 10
திருத்துவதால் எந்தப் பயன் இல்லாத போதிலும், திருத்தி ஆட்கொண்டு தன்னைப் போல் ஆக்குகிறார் பெருமாள். இதுவே அவருடைய சுபாவம். அந்தச் சுபாவத்தையே நமக்கும் சடகோபன் அருளுகிறார் என்று நாதமுனிகள் மனம் முழுவதும் குருகூர் சடகோபனின் திருவடிகளைத் தியானித்தார். அந்தச் சமயம் பராங்குச தாசர் கடைசி பாசுரம்
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே. 11
என்று பாடி முடிக்க நாதமுனிகள் ஆனந்தக் கண்ணீர் மல்கப் பராங்குச தாசர் பிள்ளையின் திருவடி தொழுது பராங்குச தாசரே மதுரகவிகள் என்ற பெயருக்கு ஏற்றார் போலப் பத்துப் பாசுரங்களும் அதன் உட்பொருளையும் உங்களால் உபதேசம் பெற்றது என் பாக்கியம் என்று மேற்கூறிய பத்து வார்த்தைகளையும் நாதமுனிகள் வரிசையாகக் கூறினார். (4)
இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில்
என்று கூறிவிட்டு மேலும்
அன்பர்க்கே அவதாிக்கு மாயன் நிற்க
அரு மறைகள் தமிழ்செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே..
என்று கூறினார்(5) . நாதமுனிகள் கூறிய இந்தச் செய்யுளின் பொருள் பற்றி அறிந்துகொள்ள,(9) உலக வாழ்கையில் பொருள்களின் மீது நாம் எப்படிப் பற்று வைத்துள்ளோம் என்று அறிந்துகொள்வது அவசியமாகிறது.
இந்த உலகில் ஒருவன் ஏதோ ஒரு பொருளின் மீது பற்று வைத்து நாளடைவில் அப்பற்று பெருகி அளவற்றதாக மாறினால் அப்பற்று அப்பொருளுடன் நின்றுவிடாமல், அதனோடு சம்பந்தம் பெற்ற எல்லாப் பொருள்களிலும் படர்ந்து பெருகிச் செல்லும் என்பதை நாம் அனுபவத்தால் அறியலாம். இதே போல் பெருமாள் மீது உள்ள அளவு கடந்த பற்றின் வெளிப்பாடே நான் அவரின் பாதுகைகளை ஆதரத்துடன் தலையில் வைத்துக்கொள்வதும், அவர் சூடிக் களைந்த மாலைகளை நாம் சூட்டிக்கொள்வதும், அவர் நீராட்டிய தீர்த்தத்தைப் பருகுவதும், அவர் காலடி பட்ட பிருந்தாவனம் போன்ற இடங்களில் அம்மண்ணை எடுத்துப் பூசிக்கொள்வதும் இதற்குக் காரணம். எப்படி பெருமாள் சம்பந்தம் பெற்ற பாதுகைகள், மாலைகள், தீர்த்தம் முதலியவற்றை அன்புடன் ஏற்றுக்கொள்கிறோமோ அதே போலத் தான் பகவானின் சம்பந்தம் பெற்ற ஆசாரியர்களும், அடியார்களும்.
மதுரகவிகள் தாம் வாழ்ந்த காலத்திலேயே கண்ணன் இப்பூமியிலே அன்பர்களுக்கு அருள் புரிய மாயனாக இருந்தான். ஆனால் அவரிடம் ஈடுபடாமல் மதுரகவிகள் குருகூர் நம்பியையே(6) தேடிக்கொண்டு அவரையே கதியாகப் பற்றித் தன் குருபக்தியை வெளிப்படுத்தி, அவர் சம்பந்தப்பட்ட பெருமாளைப் பற்றினார்.
மேற்கொண்டு நாம் இந்தக் கதையில் பயணிக்கச் சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற இரண்டு வார்த்தைகளை நாம் நேயர்கள் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. பரம்பொருளான நாராயணனைச் சாஸ்திரம் பரபிரம்மம் என்று கூறும், சம்பிரதாயம் பெருமாள் என்று கூறும். எல்லா ஜீவன்களும் பெருமாளைப் பற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறும் ,சம்பிரதாயம் ஆசாரியனைப் பற்ற வேண்டும் என்று கூறும். சாஸ்திரம் பகவான் எல்லா ஜீவராசிகளிடமும் பாரபட்சம் காண்பிக்க மாட்டான் என்று கூறும், ஆசாரியனையும், அடியார்களையும்(7) பற்றியவனிடத்தில் பெருமாளுக்கு அபிமானம் அதிகம் என்கிறது நம் வைணவ சம்பிரதாயம்.
நாதமுனிகள் பராகுச தாசரை பார்த்து “பெருமாள் அடியவர்களிடத்தே தனிப்பட்ட அன்பு காட்டக் காத்துக்கொண்டு இருக்க, தென்குருகூர் நம்பியான சடகோபன் இப்பகவானுக்கு அடிமைப்பட்ட பாகவதர்களிடத்தே பக்தி கொண்டார்.
சத்ருக்னன் பரதனையே பற்றி ராம சௌந்தரியத்தை ஜயித்தது போல் மதுரகவியார் தேவுமற்றியேன் என்று சடகோபனைத் தவிர வேறு தெய்வத்தை அறிய மாட்டேன் என்று இருந்தார். ஆசாரியனை அடைதல் என்ற சம்பிரதாய மதுரகவிகள் வம்சத்தில் தோன்றிய உங்களுடைய அடியவனாக அடியேனை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்க வேண்டும்” என்று வேண்டி நின்றார்.
“நாதமுனிகளே! சடகோபனின் பாசுரங்களை மீட்டுத் தரப்போகும் உங்களுக்கே நாங்கள் அடியவர்கள். நிச்சயம் உங்களுக்கு மதுரகவிகள், சடகோபன் அருள் பூரணமாக உண்டு. தாங்கள் தேடி வந்த பாசுரங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடியேனும் எங்கள் வசமும், இந்தப் பூவுலகமும் காத்துக்கொண்டு இருக்கிறது. சென்று வாருங்கள்!” என்று வணங்கி விடைகொடுத்து அனுப்பினார்.
சடகோபனின் அடியார் மதுரவியாரின் வம்சத்து அடியார் சம்பந்தம் பெற்ற பின் பெருமாளின் பரிபூரண அருள் நாதமுனிகளுக்குக் கிடைக்காமல் போகுமா ? அடியார் சம்பந்தத்துடன் சிறுத்தாம்பு என்ற சாவியுடன் புறப்பட்டார் நாதமுனிகள்.
மனதில் மதுரகவியை வணங்கிக்கொண்டு, ஒரு குதிரையில் போகும்போது எப்படி இயற்கைக் காட்சிகள் கடந்து செல்லுமோ அது போன்று, நாதமுனிகளின் நடை இருந்தது. அவரின் நடை ஓட்டத்துக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் இயற்கைக் காட்சிகளை முழுவதும் விவரிக்க இயலாமல் போனதற்கு வாசகர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். அவரின் நடை ஓட்டமும், மன ஓட்டமும் ஊரை நெருங்க நெருங்க எப்படி இருந்தது என்று சுருக்கமாகத் தந்துள்ளோம் (8)
ஆற்றுநீர் பல வாய்க்கால்களாகப் பிரிந்து பாய்ந்து இடமெல்லாம் நெல் வயல்களும் சோலைகளும் நிறைந்து மனதுக்கும் குளுமையை தந்தது. நாதமுனிகளின் மனமும் குருகூர் சடகோபன் என்ற ஆற்று நீராக பாய்ந்தது, கண்ணி நுண் சிறுத்தாம்பும் அதை அருளிய மதுரகவிகளும், அதை உபதேசித்த பராங்குச தாசப் பிள்ளையும் மனதில் பல கிளைகளாகப் பிரிந்து சென்ற இடமெல்லாம் அருளும் சோலைகளாக மாறியது. .
கண்கள் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் நோக்கிய பொழுது, மனம் சித்திரையிற் சித்திரைநாள் சிறக்க வந்தோன் வாழியே என்றது.
கண்கள் சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் நோக்கிய பொழுது, திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே என்றது மனம்.
கண்கள் கொக்கு அலர் தடம் தாழைவேலித் திருக்குருகூரை பார்த்த போது, உத்தர கங்காதீரத்துயர் தவத்தோன் வாழியே என்று மனம் போற்றியது.
வளங்கொள் தண்பனை குழ்ந்து அழகு ஆய திருக்குருக்கூர் கண்ட போது, ஒளிக்கதிரோன் தெற்குதிக்க உகந்து வந்தோன் வாழியே என்று மனம் போற்றியது.
செறுவில் செந்நெல் கரும்பொடு ஒங்கு திருக்குருகூர் கண்ட போது, மனம் பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே என்றது.
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் கண்ட போது, பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே என்று போற்றியது.
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் ஊரில் வந்த போது, மத்திமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே என்று வாழ்த்தி, மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே என்று பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்குள் சென்றார்.
பயணம் தொடரும்...
- சுஜாதா தேசிகன்
05-09-2020
------------------------------------------------------------------------------------------------------
(1) இசைதல் - ஒப்புதல், சம்மதம் என்ற பொருள் இங்கே வருகிறது.
(2) இராகம் - ஆசை ( தகாத விஷயங்களில் ஆசை )
(3) தகவு - கருணை
(4) ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகம் பாசுரம்
இன்பத்தில் - ஆனந்த ரூபமான அனுபவத்தில்
இறைஞ்சுதலில் - சரணடையும் விஷயத்திலும்
இசையும் பேற்றில் - பெருமளையே பலனாக கொள்ளும் ஆசை.
இகழாத பல் உறவில் - விட்டு நீங்காத பலவிதமான சம்பந்தம்.
இராகம் மாற்றில் - தகாத விஷயங்களில் ஆசையை ஒழிக்கும் விஷயத்தில்
தன்பற்றில் - தன் விஷயமான பற்றுதலை உண்டாகுவதிலும்
வினை விலக்கில் - பாபங்களை போக்குவதிலும்
தகவு ஒக்கத்தில் - கருணையின் வளர்ச்சியிலும்
தத்துவத்தை உணர்த்துதலில் - உண்மையான பொருள்களை அறியும்படி செய்கையிலும்
தன்மையாக்கில் - தன் ஸ்வபாவத்தை அருள்வதிலும்
(என்ற இந்த பத்து விஷயங்ங்களிலும் நம்மாழ்வார் பெருமாளை பற்றியிருக்க, மதுரகவியாழ்வார் தம் ஆசாரியனான நம்மாழ்வரையே பற்றினார். எம்பெருமான் ஜீவனுக்கு செய்யும் இப்பத்துவித உபகாரங்களையும், ஆசாரியன் தன் சிஷ்யனுக்கு செய்கிறான் என்பது ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளம்).
(5) ஸ்வாமி தேசிகனின் அதிகாரசங்கிரகன் பாசுரம்
(6) நம்பி என்றால் எல்லாவற்றிலும் நிறைந்தவர் என்று பொருள். முதல் முதலில் ஆசாரியரை நம்பி என்று அழைத்தவர் மதுரகவிகளே. ஆசாரியரகளை நம்பி என்று கூறும் வழக்கம் முதன்முதலில் உண்டாக்கியவர் மதுரகவிகளே.
(7) குருகூர் சடகோபன்
அடியார் அடியார் தம்
அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்
அடியார் அடியோங்களே
என்று அடியார்களுக்கு அடியாராக இருக்கிறேன் என்கிறார். மேலும்
நேர்பட்ட நிறை மூ உலகுக்கும்
நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர்
தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்துள்
இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு
அடிமை செய்யவே.
என்று இவ்மூவுலகங்களுக்கும் நாயகனான எம்பெருமான், அவனுடைய அடிமையான தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டன் சடகோபனின் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். வேதம் என்பது சாஸ்திரம், அதைத் தமிழில் கொடுத்த சடகோபன் சம்பிரதாயமாகச் சொல்லும் விஷயங்கள் இவை.
(8) நம்மாழ்வார் திருகுருகூர் பாசுரங்களில் உள்ள இயற்கை வர்ணனைகளும், மதுரகவி வாழி திருநாமமும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது.
(9) பக்தர்களுக்காகவே அவதாரம் செய்த கோபாலன் இருக்க குற்றமற்றவரான மதுரகவிகள் அர்த்தம் அறிய முடியாத வேதத்தின் பொருள்களை தம்முடைய தமிழ் பாட்டுக்களாலே வெளியிட்ட நம்மழ்வாருடைய திருவடிகளையே அடைந்து உலகத்தார் எல்லோரும் அறியும்படி காட்டின பழைய வழியே ( பழைய வழி = ஆசாரியனை அடைவது என்கிற ) ஞானமுடையோருக்கு (துணிவர்கட்கு = அற்ப விஷயங்களை வெறுக்க கூடிய) நல்ல வழி
சுவை என்னது ? அறுசுவை அடிசிலா ? நெய் சுவை தேறலா ? கனியின் சுவையா ? பாலின் சுவையா ? என் ஆரா அமுதமே !
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteஅத்புதம்.
ReplyDeleteமதுரம் மதுரம்
ReplyDeleteமதுரகவிகள் தாம் வாழ்ந்த காலத்திலேயே கண்ணன் இப்பூமியிலே அன்பர்களுக்கு அருள் புரிய மாயனாக இருந்தான்..... மிக அருமை - ஒரு உயர்ந்த சாரளத்தில் இருந்து ஆனந்த ரூபமான அந்த மாயனின் லீலைகளைப் பார்த்த அனுபவம் - பதிவுக்கு மிக்க நன்றி..
ReplyDeleteExcellent .As usual.
ReplyDeleteஇன்று மீண்டும் படித்தேன். தேவரீரின் பிரமிப்பு ஏற்படுத்தும் பக்தியும், படிப்பும், எழுத்து வன்மையும், எல்லோரும் பயனுறவேண்டும் என்ற சிந்தையும் எங்களை உங்கள் தாசனாக்கி விட்டன. உண்மையை சொல்ல வேண்டுமானால், எனக்கு, எல்லாவற்றையும் மனதில் கொள்ளும் திறன் இல்லை. இருந்தும், படிக்கும்போது பெறும் பேரின்பமே போதும் என்று தோன்றுகிறது.
ReplyDeleteதாசன்.
ஆஹா நாமும் மதுரகவி மகத்துவம்அறிய பெற்று குறுகூர் செல்கின்றோம் அவன் அருளாலே. அருமையாக இருந்தது
ReplyDelete