அஹோபில மடத்தின் முதல் ஜீயர்
ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்தர மஹாதேசிகன்இன்றைக்கு சுமார் 641 ஆண்டுகளுக்கு (2021ல் எழுதியது) முன், அதாவது 1379ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருநாராயணபுரத்தில் கிடாம்பி ஸ்ரீகேசவாச்சார்யாரின் புதல்வராக, ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்துடன் அவதரித்தார் அந்த மஹான்.
ஸ்ரீகேசவாச்சாரியார் உரிய காலத்தில் பஞ்சமஸ்காரங்களைப் பண்ணிவைத்து, வேதம், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், சாஸ்திரங்களை சொல்லிக்கொடுத்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதைப் போல இவருடைய ஞானத்தைக் கண்டு சந்தோஷமடைந்தார்.
அந்தக் காலத்தில் அத்திகிரி அருளாளன் நடாதூர் அம்மாளின் திருப்பேரனான கடிகாசதம் அம்மாளிடம் பாடம் படிக்க ஸ்ரீநிவாசனை அனுப்பினார். காஞ்சிக்குச் சென்ற ஸ்ரீநிவாசன் அம்மாளிடம் தம்மை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி பிராத்தித்தார். இவருடைய குணப்பூர்த்தியை கண்டு அம்மாள் இவரை தன் சிஷ்யராக ஏற்றுக்கொண்டு ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், பகவத்விஷயம், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் முதலியவற்றை உபதேத்து தனக்கு பின் இவரே உபய வேதாந்த பிரவத்தகராக நியமித்தார்.
ஒரு நாள் இவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் சிங்கவேள்குன்றம் என்ற அஹோபில நரசிம்மர் ’அஹோபிலத்துக்கு வந்து எம்மை ஆராதிப்பீர் என்று கூற தனது இருபதாவது வயதில் ( 1398 ) அஹோபிலத்துக்கு நடந்து, மலைமேல் ஏறிச்சென்று அங்குள்ள நரசிம்மர்களைச் சேவிக்க புறபட்டார்.
அப்போது அங்கே ஒரு யதி(துறவி) உமக்காகத் தான் இங்கே காத்திருக்கிறோம் என்று கூறி தன் காஷாயத்தை கொடுத்து, ஸ்ரீபாஷ்யகாரர் சந்நிதியில் இருந்த திரிதண்டத்தையும் கொடுத்து ‘சடகோப ஜீயர்’ என்ற திருநாமத்தை அருளினார்.
அஹோபிலத்தில் உள்ள நவநரசிம்ம மூர்த்திகளையும் சடகோப ஜீயர் ஆராதிக்க மாலோல நரசிம்மன் ஸ்ரீ சடகோப ஜீயருடைய இரண்டு திருக்கைகளிலும் குதித்து எழுந்தருளினார். இதைக் கண்ட கோயில் நிர்வாகிகள் ஆச்சரியப்பட்டு இந்த மாஹா தேசிகனைத் தண்டம் சமர்ப்பித்து அந்தக் கோயில் நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்தார்கள்.
ஒரு சமயம் ‘சடகோப ஜீயர்’ கனவில் ஆழ்வார் எழுந்தருளி ‘தாமிரபரணி கரையில் ஆழ்வார்திருநகரியில் நம்மைச் சேவிக்க வாரும்!’ என்று கூற ஜீயர் மாலோல ஸ்ரீநரசிம்மரை பல்லக்கில் எழுந்தருளப் பண்ணி அவருடன் ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டார்.
ஆழ்வார்திருநகரியில் ஆழ்வாரைக் காணாமல் கலங்கி நின்றார். மதுரகவிகள் அருளிச் செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு பாசுரங்களை அனுசந்தித்து ஆழ்வாரைப் பிராத்தித்தார். அப்போது ஆழ்வார் அவருடைய யோகத்தில் தோன்றி இந்தத் தேசத்தில் உள்ள மற்ற மதத்தினர் நம்மை நம்முடைய கோயிலிலிருந்து எடுத்துச் சமீபத்தில் உள்ள பர்வதத்தின் மேலுள்ள ஒரு மடுவில் வைத்துள்ளார்கள்’ என்று கூற சடகோப ஜீயர் அரசனின் உதவியைக் கொண்டு ஆழ்வாரை மீட்டெடுத்து மீண்டும் பொலிந்த நின்ற பிரான் சந்நிதியில் பிரதிஷ்டை செய்து மங்களாசாசனம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்போது பெருமாள் மிக்க பூரிப்புடன் அர்ச்சகமுகமாகச் சில வார்த்தைகள் அருளினார்.
‘ஜீயரே உம்மிடத்தில் ஆழ்வார் விசேஷ கடாக்ஷம் செய்தருளி உமது கைத்தலத்தில் எழுந்தருளி மிக்க பிரியமாய் நம்மாழ்வார் என்று ஆழ்வாரை அழைத்து அணைத்துக்கொண்டீர். நம்மாழ்வார் ‘வண்’ என்ற அடைமொழியையும், மோதிரத்தையும் உமக்கு பரிசாக அளித்தார். நம்மாழ்வாரே உமக்குப் பரிசு கொடுக்க நான் கொடுக்காமலிருந்தால் நன்றாக இருக்காது' என்று தன்னுடைய பெயரில் உள்ள ‘ஆதி’யை கொடுக்க அது பெயரின் ஆதியில் சேர்ந்து ஸ்ரீஆதிவண் சடகோப ஜீயர்’ என்று ஆனது. வண் என்றால் புகழ் என்று பொருள்.
போன வருடம் அடியேனுக்கு ”ஸமஸ்த மங்களாநி ஸந்து” ஸ்ரீசடகோபஸ்ரீ என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் 46ஆம் பட்டம் ஜீயர் கையெழுத்திட்டு கொடுத்தது. |
இன்றும் ஜீயர்கள் கையெழுத்துப் போடும் போது ’ஸ்ரீசடகோபஸ்ரீ’ என்று தான் கையெழுத்துப் போடுவார்கள். ஜீயர்களின் பட்டாபிஷேகம் அன்று மட்டும் ஸ்ரீ நம்மாழ்வார் கொடுத்த மோதிரத்தைச் சாத்திக்கொள்வார்கள் என்பது மரபு. அதனால் தான் ஸ்ரீஆதிவன் சடகோபன் விரலில் மோதிரத்தைப் பார்க்கலாம்.
ஸ்ரீஆதிவண் சடகோப ஜீயர் வடதேசத்து யாத்திரையின் போது, முகுந்ததேவராயன் என்னும் அரசன் அரசிழந்த நிலையில் ஜீயரிடம் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டினான். ஜீயரும் அவனை ஏற்றுக்கொண்டார். சில நாள்களில் இழந்த அரசைப் பெற்றான். அப்போது ஒரு தங்க பல்லக்கை ஜீயருக்குப் பரிசளித்து அதில் ஜீயரை அமர்த்தி, தான் ஒரு பக்கம் சுமந்து வீதிவலமாக ஜீயரை எழுந்தருளச் செய்தான். பிறகு ஜீயரை பலதடவை தண்டம் சமர்ப்பித்தான். இன்றும் அஹோபில மடத்தில் தங்கப் பல்லக்கு இருந்து வருகிறது. ஸ்ரீமதழகியசிங்கர்கள் ஆஸ்தானத்தை ஏற்றுக்கொண்டு பட்டாபிஷேகம் நடைபெறும் நாளில் அந்தப் பல்லக்கில் எழுந்தருளியே வீதிவலம் வருவது வழக்கம்.
மேல்கோட்டையில் ஜீயர் காலட்சேபம் சாதித்த இடம் |
ஒரு சமயம் மேல்கோட்டையில் ஜீயர் ஸ்ரீபாஷ்யம் சாதித்துக்கொண்டு இருக்க அங்கே ஒரு பாம்புப் படம் எடுத்துக் கேட்டுக்கொண்டு இருந்தது. ஆதிவண் சடகோப ஜீயரும், சிஷ்யர்களும் இதைப் பார்த்துக்கொண்டு இருந்தார். காலட்சேபம் முடியும் வரை பாம்புப் படம் எடுத்துக் கேட்டுக்கொண்டு இருந்தது. ஸ்ரீபாஷ்யத்தின் அரும் பொருளைக் கேட்டு அநுக்ரஹிக்க எழுந்தருளியுள்ளது போலும் என்று யதிராஜ சப்ததி ஸ்லோகம் ஒன்றை அனுசந்தித்தார் ஜீயர். உடனே ஸ்ர்ப்பம் மறைந்தது. இதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
அன்று இரவு ஜீயரின் கனவில் எம்பெருமானார் எழுந்தருளி ‘திருநாராயண புரத்தில் நம் வேதாந்த தேசிகனுக்கு சந்நிதி ஒன்று ஏற்படுத்தும்’ என்று கட்டளையிட, அவர் நியமனப்படி அதை நிறைவேற்றினார்.
100 கால் மண்டபம் காஞ்சிபுரம் |
இது போல திருமலை ஏறுவதற்கு படிகள், காஞ்சிபுரத்தில் 100 கால் மண்டபம், திருவரங்கம் தசாவதார கோயில் கைங்கரியம்... என்று ஸ்வாமி செய்த கைங்கரியங்கள் அடிக்கிக்கொண்டே போகலாம். ( இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்)
திருநராயணபுரத்தில் நித்யவாசம் செய்த வந்தவர் 1459 சித்திரை மாதம் ஆசாரியன் திருவடியை அடைந்தார்.
மேல்கோட்டையில் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மாஹதேசிகன் பிருந்தாவனம் |
ஸ்ரீநிவாச்சார் தன் இருபது வயதில் அஹோபிலத்தில் வயதான யதியாக நரசிம்மரிடம் உபதேசம் பெற்று , ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நிறுத்த நிர்மாணித்தது தான் அஹோபில மடம். அவர் கையில் குதித்து ஏறிக்கொண்ட ஸ்ரீ மாலோலன் தான் நித்தியத் திருவாராதன பெருமாளாக என்றும் ஜீயர்களுடன் பயணம் செய்கிறார். ஜீயரை அதனால் ’அழகிய சிங்கர்’ என்றும் அழைக்கிறோம்.
’ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மஹா தேசிகன்’ என்று அழைக்கப்பெற்ற இந்த முதல் ஜீயரைத் தொடர்ந்து இன்றைக்கு 640 ஆண்டுகளாக எம்பெருமானார் தரிசனத்தை அஹோபில மடத்து ஜீயர்கள் வளர்த்து வருகிறார்கள்.
- சுஜாதா தேசிகன்
23-09-2020
இன்று புரட்டாசி கேட்டை
ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மஹா தேசிகன் திருநட்சத்திரம்
தாசன். அருமையான வரலாறு. ஆஹா, கைங்கர்யங்கள் எத்தனை, எத்தனை!
ReplyDeleteஜீயர் தேவரீருக்கு எழுதி அளித்த ஆசிர்வாதம் என்ன லிபி? தமிழ் , சமஸ்க்ருதம் மாதிரி தெரியவில்லையே, தவறாக நினைக்கவேண்டாம்.
Grantha Lipi (க்ரந்த லிபி : https://tinyurl.com/GrLipi)
Deleteஆசார்யன் திருவடிகளே சரணம்.
ReplyDeleteDhanyosmi.krathortosmi.adinayen bhaghyam sath sampradaya vishayangal sevi/parkkamudigirsthu.adiyenukku oor vinnappam.Nadathur Ammal enbadhu avar pirantha pradesam enghu ulladhu enbadhai therivvikkalma.dasa.
ReplyDeleteதன்யோஸ்மி.
ReplyDeleteAcharyan thiruvadigalay charananam adiban sadagopa Sri veeraraghva sadagopa yatindra mahadesikaya nanha adiyan vasudevan
ReplyDeleteSrimannarayana dhanyosmi
ReplyDelete