Skip to main content

வைணவத்தில் டாக்டர் பட்டம் !

வைணவத்தில் டாக்டர் பட்டம் !


இன்று வைணவத்தை தனியாக படிக்கலாம். டாக்டர் பட்டம் வாங்கலாம். பேசலாம் எழுதலாம். சில நாள் முன் ஒருவர் என்னுடன் பேசும் போது சொன்ன வார்த்தை என்னை யோசிக்க வைத்தது. 

 ”பிராமணர்களை பார்த்தால் எனக்கு ஒரு விதமான பயம். ஜீயர் என் பக்கம் நடந்து சென்றால் எனக்கு உடல் நடுக்கமாக இருக்கிறது!” என்றார். 

இன்னொருவர் ‘நைச்சிய குணம்’  அதாவது நீச்சனாக இருக்கும் தன்மை வருவது தான் மிக கஷ்டம் என்றார். மாற்று கருத்து இல்லை. பணம், குலம், படிப்பு அதிகமாக இருந்தால் இந்த நீச்ச பாவம் வருவது மிக மிகக் கஷ்டம்.  பரமபத விளையாட்டில் பெரிய பாம்பி வாயில் அகப்பட்டு கீழே வருவது போல நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்.  

ஒரு பிச்சைக்காரன் வாச கதைவை தட்டுகிறான் “யாரு அது?” என்று உள்ளேயிருந்து குரல் கொடுக்கிறோம். வெளியே பிச்சைக்காரன்  ‘நான் தான்யா’ என்று பதில் கூறுகிறான். அந்த பிச்சைக்காரன் சொல்லும்’நான்’க்கும் நாம் சொல்லும் ’அடியேனுக்கும்’ வித்தியாசம் இருக்கிறது. நம்முடைய ’அடியேனில்’  ஒரு வித செயற்கை தனம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. 

என்றாவது ஒரு நாள் நம் உள்ளம் மாறி இயற்கையாக ‘அடியேன்’ என்று சொல்லும் நாளே ஸ்ரீவைஷ்ணவன் ஆன நாள். அன்றே நாம் டாக்டர் பட்டம் வாங்கியதற்கு சமம். 

குரங்குகள் மலையை நூக்கக்
குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
சலம் இலா அணிலும் போலேன்

ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட குரங்குகள் அணை போடக் கல்லைத் தூக்கிப் போகின்றன. அதைப் பார்த்த அணில்கள் மலையைத் தூக்க இயலாத அணில் கூட்டம் கடலில் உள்ளே சென்று தங்கள் உடலை ஈரமாக்கிப் பின் அந்த ஈர உடலில் மண்ணைப் புரட்டிக்கொண்டு ஓடிச் சென்று மண்ணை உதறி அணைகட்ட உதவுகின்றன.

நான் அந்த அணில் போல் நான் இல்லையே என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலையில் வருத்தப்படுகிறார்.

சிலரைப் பார்க்கும் போது நமக்கு அந்த எண்ணம் ஏற்படுகிறது. பல கோயில்களுக்கும் ஊர்களுக்கும் செல்லும் போது பெருமாள் நமக்கு பாடம் எடுக்கிறார்.  சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  இதில் ’மாரல் ஆப் த ஸ்டோரி’யில் வைணவம் கலந்து இருக்கிறது. 

2015 - ஆனந்தவல்லி 



ஒரு நாள் மாலை ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தேன். கோயில் வாசலில், வயதான ஒரு பெண்மணி பழைய பெயிண்ட் டப்பாவில் தண்ணீர் வைத்துக்கொண்டு தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் நம்மாழ்வார், உடையவர், பெருமாள் சிலைகளுக்கு கையால் திருமஞ்சனம் செய்துக்கொண்டு இருந்தார்.
பேச்சு கொடுத்தேன்.
“உங்க பேர் என்னம்மா ?”
அவளுடைய பெயரை இதுவரை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். லேசாக சிரித்துவிட்டு
“ஆனந்த வல்லி” என்றாள்.
”தினமும் இந்த மாதிரி தண்ணி தெளிப்பிங்களா ?”
“ஆமாங்க.. தூசியா இருக்கு, ஜனங்க எதையாவது தடவுறாங்க. சிலபேர் விளக்கு வைக்கிறார்கள்..அழுக்காகுது... அதனால் தினமும்”
“இந்த ஊரா ?”
“இல்லை பக்கத்துல சுங்குவார்சத்திரம்.. காலையில எட்டு மணிக்கு வந்துடுவேன். சாயங்காலம் எழு மணிக்கு கிளம்பிடுவேன்”
“தினமுமா அங்கிருந்தா வரீங்க ?”
“ஆமாம்.. நாளைக்கு(இன்று) திருவாதிரை சீக்கிரம் வரமுடியாது...அதனால இங்கேயே பக்கதுல ஒரு மண்டபத்துல படுத்துப்பேன். கையில ஒரு செட் துணி இருக்கு”
கொஞ்சம் நேரம் கழித்து
“இந்த மாதிரி தண்ணி ஊத்தினா மழை வருது...”
”அப்படியா?”
“நிஜம்தாங்க”
”மழைவந்தா ஆந்த தண்ணியைக் கொண்டு கோயில் முழுக்க இருக்கும் தூண்களை சுத்தம் செய்துவிடுவேன். தரை எல்லாம் கழுவிவிடுவேன்”
என்ன ஒரு சிறப்பான கைங்கரியம்

2016 - சுந்தரமூர்த்தி




யாதவபிரகாசர், ராமானுஜர் மீது அசுயை கொண்டு ஸ்ரீராமானுஜரை காசிக்கு அழைத்துச் சென்று அவரைக் கங்கையில் தள்ளிக் கொல்ல திட்டம் தீட்டி அதிலிருந்து தப்பி வந்த போது. பெருமாளும் பிராட்டியுமாக தமக்கு வேடுவராக வந்து உதவி புரிந்ததை எண்ணிப் பிரமித்தார்.
”எங்களின் தாகத்தை தணித்துக் கொள்வதற்கு இந்தக் கிணற்றிலே இறங்கி எங்களுக்குத் தண்ணீர் எடுத்துத் தர வேண்டும்” என்று கேட்டது பேரருளாளன் மற்றும் பெருந் தேவி தாயாரா ! “
அதன் பின் தினமும், சாலைக் கிணற்றிலே பெருமாள் திருவாராதனத்துக்குத் திருமஞ்சனம் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார். அந்தக் கிணறு இன்றும் செவிலிமேடு என்ற இடத்தில் இருக்கிறது 2016ல் அங்கே சென்றிருந்தேன்.
செவிலிமேடு என்ற இடம் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 4 கி.மி தூரத்தில் இருக்கிறது.
ஜி.வி. புயூட்டி பார்லர் என்ற வட தேசத்து ஐஸ்வரியா ராய் சிரித்துக்கொண்டு ’இராமானுசா’ என்று வடமொழி கலக்காத சுத்த தமிழில் வரவேற்கிறார். செவிலிமேடு என்ற கிராமத்தில் சுமார் ஐந்நூறு குடும்பங்கள் இருக்கலாம். அங்கே ராமானுஜரை எல்லோரும் ’எம்பெருமானார்’ என்று தான் அழைக்கிறார்கள். .
நான் போன சமயம் அங்கே இருந்த உடையவர் கோயில் திறந்து இருந்தது. ராமானுஜ நூற்றந்தாதி 
“காரேய் கருணை இராமானுச,இக்கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்
சீரே யுயிர்க்குயி ராய், அடியேற்கின்று தித்திக்குமே”
என்ற பாசுரத்தை மூன்று பெண்கள் சேவித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களை டிஸ்டர்ப் செய்யாமல் கடந்த போது காவி உடையில் ஒருவர் ”வாங்கோ” என்று என்னை அழைத்து தீர்த்தம் கொடுத்து "ஸ்ரீமுதலியாண்டான்" சடாரி சாதித்தார்.
அவரிடம் பேச்சு கொடுக்க அவர் சொன்னதை அப்படியே உங்களுக்கு இங்கே தருகிறேன்.
“சார் என் பெயர் சுந்தரமூர்த்தி. தொழில் வெல்டிங் செய்வது. நேற்று கூட கண்ணில் பொறி பட்டுவிட்டது ( என்று சிவந்த கண்களைக் காண்பிக்கிறார் ). 2001ல வெல்டிங் செய்துவிட்டு நைட் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது தீர்த்தக் கிணறு என்று ஒன்று இருக்கு என்று நண்பர் ஒருவர் சொன்னார். அப்போது தான் ராமானுஜர் என்ற பெயரை முதல் முதலில் கேள்விப்பட்டேன். அடுத்த நாள் சைக்கிள் எடுத்துக்கொண்டு கிணற்றை பார்க்க வந்தேன். பக்கத்தில் ஒரு கோயில் இருக்க அதைத் திறந்து உள்ளே சென்ற போது அதிர்ச்சியாக இருந்தது. உள்ளே சிலர் சீட்டாடிக்கொண்டு இருந்தார்கள். நிறையச் சரக்கு பாட்டில்கள். மனதுக்குக் கஷ்டமாக இருந்தது கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்த கோயிலுக்கு நிறைய பேரைக் கூட்டிக்கொண்டு வந்து காண்பித்தேன். அப்போது எல்லாம் இது போல இல்லை, கோயில் மீது புதர் போல செடிகள் வளர்ந்து.. முனியன் என்று ஒருவர் ( ஏழை தான் ) கோயிலைச் சுத்தம் செய்ய ஐந்நூறு ரூபாய் சில்லறைக் காசுகளை மூட்டையாகக் கொடுத்தார். பின் சிலர் உதவி செய்ய கோயிலைச் சுத்தம் செய்தோம். உள்ளே சென்று ஒரு பை நிறைய நாளிதழ்களில் வந்த ராமானுஜர் பற்றிய செய்திகள், கட்டுரைகள், சாலைக் கிணறு பற்றி வந்த செய்திகளை என்னிடம் ஆர்வமாகக் காண்பித்தார்.
நான் சைவம் தான், ஆனால் என்ன என்று தெரியவில்லை, ராமானுஜர் மீது அப்படி ஒரு பற்று. கோயிலின் மின்சார செலவை ஒரு டீக் கடைக்காரர் ஏற்கிறார். பக்கத்தில் ஒரு மளிகை கடைக்காரர் அரிசி, பருப்பு தருகிறார். நான் தினமும் வந்து கோயிலை திறந்து சுத்தம் செய்து புஷ்பம் போடுகிறேன். இங்கே முன்பு சீட்டு, குடி என்று இருந்தவர்கள் கலாட்டா செய்ய வருவார்கள், அவர்களிடம் சண்டை போடாமல் அவர்களுக்கு அப்ப அப்ப ஏதாவது கொடுத்து ‘கவனித்து’ கொள்கிறேன். 
மலைப்பாக இருந்தது.
“உங்கள் ஊர் எது சார்?” என்று என்னைக் கேட்டார்
“ஸ்ரீரங்கம் என் சொந்த ஊர்” என்றேன்.
”ஸ்ரீரங்கமா !?” என்று ஆச்சரியப்பட்டு என் கையில் ஒரு விசிறியைக் கொடுத்து “ஸ்ரீரங்கத்திலிருந்து வருகிறீர்கள், நம் ராமானுஜருக்கு நீங்க திருவாலவட்ட கைங்கரியம் செய்ய வேண்டும்” என்றார்.
மெய்சிலிரித்துப் போனேன்.
”உள்ளே வாங்க என்று ராமானுஜருக்கு அருகில் அழைத்து, இங்கே இருந்து பாருங்கள் ராமானுஜருக்குத் தெரிந்த அதே கோபுரம் உங்களுக்கும் தெரியும்...பனை மரம் நடுவில் பாருங்கள்”
ராமானுஜர் பார்த்த அந்த புண்யகோடி விமானம் தெரிய 1000 வருடத்துக்கு முன் என்னை அழைத்துச் சென்றார் சுந்திரமூர்த்தி.
வாங்க சாலைக் கிணற்றை காண்பிக்கிறேன் என்று அழைத்துச் சென்றார். பெரிய கேட் போட்டு மூடியிருந்தது. அவர் உதவியுடன் மதில் சுவற்றை ஏறிக் குதித்து கிணற்றையும், சுந்தரமூர்த்தியை என்ற உண்மையான பாகவதரை சேவித்துவிட்டுக் கிளம்பினேன்.

2017 - பாட்டி 




திருநகரிக்கு வந்த அன்று துவாதசி. திருமங்கை மன்னன் அழகனை சேவிக்க சென்றேன். அர்ச்சகர் ஸ்வாமி வர கொஞ்சம் நேரம் ஆகும் என்றார்கள். கோயிலைச் சுற்றி வந்தேன்.
கோயில் உள்ள கிணற்றில் ஒரு வயதான பெண்மணி தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தார்.
தண்ணீரை குடித்துப் பார்க்கலாம் என்று
“பாட்டி குடிக்க கொஞ்சம் தண்ணீர் ” என்றேன்.
என்னைப் பார்த்த பாட்டி பத்து அடி ஒதுங்கி “சாமி எவ்வளவு வேணுமுனாலும் எடுத்துக்கோங்க” என்றாள்.
தண்ணீர் கல்கண்டு. இது மாதிரி தண்ணீர் குடித்ததே இல்லை. விசாரித்ததில் இந்தத் தண்ணீர் தான் மடப்பள்ளியிலும், சன்னதி தெரு முழுக்க தளிகைக்கு உபயோகிப்பார்கள் என்று தெரிந்துக்கொண்டேன்.
“பாட்டி ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன்” என்றவுடன்
பாட்டி தன் இரு கையால் முகத்தை வெட்கத்துடன் மூடிக்கொண்டாள்.
பிறகு சன்னதிக்கு சென்ற போது துளசி கொடுத்தார்கள்.
பாட்டி கொடுத்த தண்ணீரும் பெருமாள் அருளிய துளசியும் ’துவாதசி பாரணை ’ ஆயிற்று.
ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்திலும் "மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்று அமுதனார் தெரிவிக்கிறார். முக்குறும்பு என்பது கல்வி செருக்கு ( அதிகம் படித்தவன் என்ற எண்ணம் ); செல்வ செருக்கு ( அதிக பணம் இருக்கிறது என்ற எண்ணம் ); குலச் செருக்கு ( உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம் ).
இதில் கடைசியில் குலச் செருக்கு அடியேன் உட்பட பலரிடமும் இருக்கிறது. சிறந்த பாகவதர்களை கோயிலில் பார்க்கும் போது அவர் உடம்பில் பூணூல் இருக்கிறதா என்று நம்மை அறியாமல் சிலர் பார்க்கிறோம். இல்லை என்றால் நம்மை விடத் சற்று தாழ்ந்தவன் என்று நம்மை அறியாமல் நினைத்துவிடுகிறோம்.
கோயிலில் அந்தப் பாட்டி என்னுடைய பூணூல், திருமண்ணை பார்த்து மரியாதை தந்தாள். இருவருக்கும் பார்வை ஒன்று தான் பார்க்கும் விதம் தான் வேறுபடுகிறது!

2018 - தமிழ் டீச்சர் !

 கார்த்திகையில் கார்த்திகை நாளுக்கு திருநகரியில் இருந்தேன். பெருமாள் 
 ஆழ்வார் சேவை எல்லாம் நன்றாக கிடைத்தது.  கோயிலுல் ஸ்ரீ எம்பார் ராமானுஜன் ஸ்வாமி என்னை ஒரு பெண்ணிடம் அறிமுகம் செய்து வைத்தார். சிரித்த முகம். 
“என்ன செய்யறீங்க ?”
“தமிழ் ஆசிரியராக இருக்கேன்”
“என்ன கிளாஸுக்கு ?”
“ பத்தவது, 12 வதுக்கு பாடம் எடுக்கிறேன்”
“என்ன படிச்சிருக்கீங்க”
“எம்.பில் தமிழ் என்று கூறிவிட்டு திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் வைணவ நெறி என்ற தலைப்பில் எம்.பில் செய்தேன்”
அதைப் பற்றி கேட்க அவர் பல ஆழ்வார்கள் பற்றியும் திவ்ய பிரபந்தங்கள் பற்றியும் கூறி அசத்தினார்.
“அப்பா அம்மா என்ன செய்யறாங்க?”
“அம்மா இல்லை.. தாத்தா பாட்டி வீட்டில் தான் இருக்கேன்”
“என்ன சம்பளம்… “
“...”
“வெளியூருக்குச் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்… ஆனால் இங்கேயே இருக்கிறேன்.. ஆழ்வார் இங்கே தான் இருக்கிறார் இல்லையா ?”
அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன். நல்ல மழை. நனைந்துகொண்டு நடக்க ஆரம்பித்த போது
“சாமி…” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பி பார்த்தேன்
அவள் தான்
”நனைகிறீர்களே..இந்தாங்க” என்று என் கையில் தன்னுடைய குடையை வலுக்கட்டாயமாக என்னிடம் கொடுத்துவிட்டு நனைந்துகொண்டு ஒரே ஓட்டமாக ஓடினாள்...’திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் வைணவ நெறி’யில் எம்.பில் செய்யும் பெண். 
“சிறிது தூரம் சென்று வீட்டில் ஒதுங்கிய போது அவளிடம் சென்று
“தமிழ் ஆசிரியரா அல்லது பீ.டி மாஸ்டரா இப்படி ஓட்டமா ஓடறீங்க.. .. . உங்க புடவை பூரா நனைந்துவிட்டது பாருங்க”
“நீங்க நனையக் கூடாது சாமி… எங்களுக்கு மழையில நனைந்து பழக்கம்... ” என்றாள் ஸ்ரீவைஷ்ணவ பால பாடம் மிக எளிமையானது “ஒருவர் படும் கஷ்டங்களைப் பார்த்து யார் மனம் கசிந்து அதைக் களைய முற்படுவாரோ அவரே உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் ஆவார்”
”திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் வைணவ நெறி” என்ற தலைப்பில் எழுதத் தகுதியானவர் அவரே என்று நினைத்துக்கொண்டேன்.

2018 - கிரணூர் பெண்

கார்த்திகையில் ரோகிணி “வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக் கெல்லாம் விதையாகும் இதுவென்று” என்று வேதாந்த தேசிகன் புகழும் திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம் என்று உறையூரில் இருந்தேன். 
கொள்ளிடத்தில் நீராடிவிட்டு உறையூருக்குச் சென்ற சமயம் திருப்பாணாழ்வார் வீதி புறப்பாட்டில் இருந்தார். கோயிலுக்குள் வந்த போது திருப்பாணாழ்வாருக்கு பத்து நிமிடம் ஆலவட்ட கைங்கரியம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
ஆழ்வார் சன்னதிக்குள் வரும் சமயம் கூட்டமாக இருந்தது. அப்போது ஒரு பெண்மணி “சாமி இங்கே வாங்க ஆழ்வார் நல்லா தெரிவார்” என்று தான் நின்று கொண்டு இருந்த மேடு மாதிரி இடத்தை எனக்கு விட்டுக்கொடுத்தாள். 
அவள் சொன்னது போலவே ஆழ்வார் ”காட்டவே கண்ட பாதம் கமல நல்லாடை உந்தி” சிரித்துக்கொண்டு காட்சி கொடுத்தார்.
மீண்டும் என்னிடம் வந்து “சாமி உடனே இங்கே வாங்க” என்று என் கையை பிடித்து இழுக்காமல் என்னை இன்னொரு இடத்துக்கு இழுத்துக்கொண்டு சென்றாள்.
மீண்டும் அங்கே ஆழ்வார் ”வாட்டமில் கண்கள் மேனியாக” என்னைப் பார்த்து சிரித்தார்.
கோஷ்டி பிரசாதம் எல்லாம் முடிந்த பின் என்னிடம் வந்து
“சாமி நல்லா சேவிச்சீங்களா ?” என்றாள்
”பிரமதமா சேவித்தேன்.. ஆனா நீங்க இருந்த இடத்தை எனக்குத் தந்துவிட்டீர்களே ?”
“அட பரவாயில்லீங்க … இதுல என்ன இருக்கு .. எனக்கு சந்தோஷம்” என்றாள்.
”எல்லா இடமும் நல்லா தெரிந்திருக்கே.. “
“வருஷா வருஷம் வந்துவிடுவேன்… ” என்று மீண்டும் சிரித்தாள்.
“படம் எடுத்தீங்களே நல்லா வந்திருக்கா சாமி”
காண்பித்தேன்…
”சூப்பரா இருக்கு என் தம்பி நம்பர் தாரேன் அதுக்கு அனுப்ப முடியுமா ? .. என் மொபைலில் படம் எல்லாம் தெரியாது “
”சாமி நான் சமாஸ்ரயணம் எல்லாம் பண்ணிக்கொண்டேன்”
“அட..”
“எனக்கு வைஷ்ணவத்தில் எல்லாம் நிறைய ஈடுபாடு… உங்களை மாதிரி மஞ்ச திருமண் போட்ட ஒரு வீட்டில அந்த அம்மா எல்லாம் எனக்கு ரொம்ப பழக்கம்”
“எங்கே இருக்கீங்க ?”
“கீரணூர் பக்கம் கிராமம்”
“என்ன செய்யறீங்க ?”
”படிச்சுட்டு சும்மாதான் இருக்கேன்..”
“என்ன படிச்சிறீக்கீங்க ?”
“எம்.பில் எக்கனாமிக்ஸ் படிச்சிருக்கேன்… தம்பி எல்லாம் நல்ல நிலமைக்கு வந்த பிறகு தான் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று இருந்தேன்... ஆனா அதுக்குள்ள வயசாயிடுத்து” என்று மீண்டும் சிரித்துக்கொண்டே “ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க.. கோயில் கைங்கரியம் கூட செய்வேன்… ”
“எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்றேன்”
அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும் போது
“என் நட்சத்திரமும் கார்த்திகையில் ரோகிணி தான்” ஆழ்வார் நட்சத்திரம் தான் என்றாள். . சிரிப்பு மாறாமல்.
அடுத்த பால பாடம் “பேராசையும் கபடமும் இல்லாமல் இருக்க வேண்டும்”

2018 - திருவரங்க துப்புறவு பணியாளர் 

அன்று ஏகாதசி திருவரங்கத்தில் இருந்தேன். நம்பெருமாள் ஊஞ்சல் ஆடிக்கொண்டு ஈரவாடை பிரசாதம் கொடுப்பார் என்று அங்கே சென்றேன். 
அரையர்கள் நம்பெருமாள் முன் கையாலும் வாயாலும் இசைக்க ‘நாதமுனிகள்’ நினைவு வந்தது. குலசேகர ஆழ்வாரின்

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

என்று அரையர்கள் இசைக்க. நம்பெருமாளைப் பார்ப்பதா இல்லை இவர்களின் இசையை அனுபவிப்பதா என்று தவிப்பு வந்து சேர்ந்தது. ஆழ்ந்து அனுபவித்தால் எங்கே தூக்கம் வந்துவிடுமோ என்று தோன்றியது. அப்படி இருந்தது அரையர்களின் இசை. 
நம்பெருமாள், அரையர்கள், குலசேகர ஆழ்வார் என்ற கலவையுடன் அனுபவித்துக்கொண்டு இருந்த போது அந்தக் காட்சியை பார்த்தேன்.
இந்த மாதிரி நமக்கு வாய்க்கவில்லையே என்ற ஏக்கமும், துக்கமும் தொண்டையை அடைத்தது.
‘மன்னுபுகழ் கோசலை’ என்று அரையர் ஆரம்பிக்க. அங்கே கோயிலை சுத்தம் செய்யும் பெண்மணி ஒருவர் கையில் இருந்த துடப்பத்தையும், முறத்தையும் கீழே வைத்துவிட்டு கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டு அரையர்களுடன் தானும் ‘மன்னு புகழை’ சேவிக்க ஆரம்பித்தார். அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.
நம்பெருமாள் ஏன் எப்போது சிரித்த முகத்துடன் இருக்கிறார் இந்த மாதிரி அரையர்களும், அடியார்களும் அவனை சூழ்ந்து கொண்டு இருப்பதே காரணம்.
நம்மாழ்வார் கூறிய கோயிலைச் சுத்தம் செய்யும் கைங்கரியம், கூடவே இந்த மாதிரி நம்பெருமாளைப் பார்த்து அரையர்களுடன் ‘தாலேலோ!’ சொல்லும் பாக்கியம் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் ?

2018 - நாகர்கோயில் வியாபாரி 

ஸ்ரீ வேதாந்த தேசிகனின் 750 திருநட்சத்திரத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியிருந்தார். நரசிம்மர் சன்னதியில் மங்களாசாசனம் செய்துகொண்டு இருக்கும் போது பேண்ட ஷர்ட் அணிந்தவர் என்னிடம் வந்து “யார் சாமி இது ?” என்றார். 
”இவர் தான் வேதாந்த தேசிகன் - ஆசாரியன்”
“இவருக்கும் ராமானுஜருக்கும் என்ன வித்தியாசம் ?”
“ராமானுஜருக்குப் அப்பறம் 250 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மாதிரியே அவதரித்தவர்” என்று அவரிடம் நம் ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை பற்றி சிறு நேரம் பேசிய பின் அவர் தன் மொபலைத் திறந்து ஒரு படத்தை காண்பித்தார் அதில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளித்தார்.
”எந்தக் கோயில்?” என்றேன்.
“கோயில் இல்லை, எங்கள் வீட்டில்.. எனக்குப் பெருமாள் மீது ரொம்ப ஆசை.. பெருமாள் பெயர் எல்லாம் தெரியாது… இதை வீட்டுக்கு வாங்கிவந்துவிட்டேன்… எப்படி ஆராதனம் செய்வது என்று எல்லாம் தெரியாது”
“உங்களுக்கு எவ்வளவு பசங்க?”  என்றேன்
நான் நாகர்கோவிலில் பிஸினஸ் செய்கிறேன். என் பையன் LKG படிக்கிறான். அவனை டாக்டர், என்ஜினியர் ஆக்குவதைவிட. அவனுக்கு ஸ்லோகம், பிரபந்தம் எல்லாம் சொல்லித்தர வேண்டும் என்றார். என்ன ஒரு conviction என்று வியப்பாக இருந்தது.
“உங்கள் பையனுக்கு என் ஆசிகள். அவனுக்குத் திருப்பாவை முப்பதும், கண்ணி நுண் சிறுத்தாம்பு இது இரண்டையும் சொல்லித்தந்துவிடுங்கள். இதை மனதில் விதைத்தால் மற்றவை எல்லாம் பெருமாளே பார்த்துக்கொள்வார்” என்று தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்த போது அவர் முகத்தில் ஒரு சந்தோஷத்தைப் பார்த்தேன். அந்த சந்தோஷம் என் கையால் அவர் மீது பட்டதில் ஏற்பட்ட சந்தோஷம். 

2019 - அத்திவரதர் பாட்டி - 1



ஒரு கோடிக்கு மேல் 48 நாளில் தரிசித்திருக்கிறார்கள்.  ஒரு நொடிக்கு மூன்று பேர் !. இதைத் தவிர முகநூல், வாட்ஸாப், பத்திரிக்கை என்று பல கோடி பேர் உலகம் முழுக்க தரிசித்தார்கள்.
திருப்பாணாழ்வார் “கோர மாதவம் செய்தனன்கொல் அறியேன்” என்கிறார். அதாவது நம்மைக் காண வேண்டும் என்று அவன் கோர மா தவம் செய்கிறான். அத்திவரதர் கோர மாதவம் செய்து நம்மை காண வந்தார். 

பலர் பல மணி நேரம் வரிசையில் நின்று அத்தி வரதனைப் பார்க்க வேண்டும் என்று சென்றார்கள். வீல்சேர் வரிசையை முதல் முறையாக பலர் பார்த்தனர்.  கூட்டத்தில் நின்றுகொண்டு இருந்தபோது என் பக்கத்தில் ஒரு வயதான ஏழைப் பாட்டி பேசாமல் நின்றுகொண்டு இருந்தார். பேச்சுக் கொடுத்தேன்.
“பாட்டி நீங்கப் பேசாம சீனியர் சிட்டிசன் வரிசையில் போயிருக்கலாமே?.. இங்கே ஏன் கஷ்டப்படுகிறீர்கள் ?”
”நாற்பது வருடத்துக்கு ஒரு முறை வரார்… வரிசையில் நின்று நிதானமா சேவிக்க வேண்டும்… குறுக்கு வழி எல்லாம் வேண்டாம்.. இப்படியே நின்று சேவித்தால் தான் திருப்தி...” என்றார்.

2019 - அத்திவரதர் பாட்டி - 2



அத்திவரதர் பக்தர்களுக்கு அன்ன தானம் கைங்கரியம் ஸ்ரீராமானுஜர் திருமாளிகையிலிருந்து எதிர்புறம் நடந்துகொண்டு இருந்தது. தளிகை செய்யும் இடத்து வந்த போது ஒரு பாட்டி பெரிய பெரிய பாத்திரங்களை இன்முகத்துடன் சுத்தம் செய்துகொண்டு இருந்தாள்.
“சாப்பிட்டையா பாட்டி?” என்றேன். 
“ஆச்சு” என்று விசாரித்ததில் சந்தோஷம் அடைந்தார்.
“பெயர் என்ன பாட்டி?”
“நப்பின்னை”

உடனே ஸ்ரீ ராமானுஜர் நப்பின்னை என்று நினைத்துச் சேவித்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. ”இந்த பெயரைக் கேட்டால் சேவிக்க வேண்டும்” என்று பாட்டியை பார்த்து கை கூப்பினேன் உடனே பாட்டி நீங்க என்னைச் சேவிப்பதா என்று உடனே காலில் விழு முற்பட்டாள்.  அன்று அந்த இடம் ஞான மண்டபமாக காட்சி அளித்தது.

- சுஜாதா தேசிகன்
5-7-2020
குரு பூர்ணிமா 

Comments

  1. Namaskaram.
    Kangalil kanneer vandhu vittadhu. Ungal thondu perum thondu.
    Nanrigal Pala.

    K. Ganapathi Subramanian

    ReplyDelete
  2. A great vignette covering diverse divinity-filled snippets is aesthetically recollected by Desikan Swamy. Adiyen is spontaneously reminded of "PANDAI KULATHTHAI THAVIRNDU PALLAANDU PALLAAYIRATHTHAANDENMINE" by Battar Piraan. That is the cult of Sri Vaishnavites. BHAGAVAT BHAAGAVOTHTHAMARGAL THIRUVADIGALE SARANAM. Daasan Adiyen Venkat Desikan

    ReplyDelete
  3. எப்படிப் பட்ட நோக்கம், அனுபவம், பக்குவம்! இப்படிப்பட்ட பக்குவம் அடையாத நாம்தான் திருக்கோளூர் பெண் பிள்ளை போல ஊரைவிட்டுப் போக வேண்டும்! ஆனால் எந்த ஊரைவிட்டு எங்கே போவது?

    ReplyDelete
  4. ஆச்சரியமான பதிவு. என் அகந்தையை ஒழித்து அகக் கண்ணைத் திறந்த ஒரு பதிவு.

    ReplyDelete
  5. Excellently written sir. Those divine souls you have written about, they have given a lesson for everyone.

    ReplyDelete
  6. அடியேன். எல்லாம் அவ்வப்போது எழுதியபோது படித்திருக்கிறேன், பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த compilation ஐ விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். என் தம்பி யார்மூலமாகவோ படித்துவிட்டு (நான் அனுப்பியதை மறந்துவிட்டான் போலும்) அனுபவித்து, எங்களுடன் பகிர்ந்துகொண்டான். அதே உணர்ச்சிகள். பெருமாள் தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள், உண்மையான பக்தர்கள், ஊழியம் செய்பவர்கள் எல்லோரையும் உங்கள் கண்கள், மனம், எழுத்து வாயிலாக ரசித்தோம். தாசன்.🙏🙏

    ReplyDelete
  7. என் தம்பியின் உணர்வுகள்:

    எனக்குத் தேவையான வேறு ஒன்றைப் பற்றி இணையத்தை அலசிக் கொண்டிருந்த போது , திரு சுஜாதா தேசிகன் அவர்களின் மேலே கொடுத்துள்ள கட்டுரை காணக் கிடைத்தது.. பல்வேறு இடங்களில் பாகவத உத்தமர்களின் அறிமுகம், அதனால் அவருக்குக் கிடைத்த பரவசம் ஆகியவற்றை இதைவிட சிறப்பாக மற்றவர்களுக்கு கொண்டு செல்லவே முடியாது.

    அவர் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு அடியாரின் திருவடிகளையும் விழுந்து வணங்கி, கண்ணீர் மல்க கைகூப்புகிறேன்.

    இந்தப் பதிவை படித்த பிறகு வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை.. அதிலேயே ஆழ்ந்து கிடக்கிறது மனது.. திரு சுஜாதா தேசிகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..
    அவர் பதிவை எனக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன்.

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    - சௌரிராஜன்.

    ReplyDelete
  8. என் தங்கை (கண்ணம்மா)என் தம்பிக்கு -

    அடியார்கள் இவர்கள்... தனைக்காண வேண்டும் என்றே.... 'காத்திருப்பதில்லை அரங்கன் என்றும்' !

    ஆழமாய் ஊறிய பக்தியில் திளைத்தே..
    அடக்கமாய் - மிக அடக்கமாய்...சற்றே தொலைவினில்...
    அமைதியாய்த்துதித்தே நின்றிருக்கும் பாகவதோத்தமர்கள் இவர்தமை, 'தான் காணத்தான் ஆசை கொண்டு' ...

    அதிரூப சுந்தரனவன்... புருஷோத்தமனவன்... ஆவலாய் வலை வீசி...அலர்தாமரைக்கண்களால் வலைவீசி வந்திடுவான் 🙏🏻

    ReplyDelete
  9. என் தம்பி சுதர்சன் -


    அடியார்கள் இவர்கள்... தனைக்காண வேண்டும் என்றே.... 'காத்திருப்பதில்லை அரங்கன் என்றும்' !

    ஆழமாய் ஊறிய பக்தியில் திளைத்தே..
    அடக்கமாய் - மிக அடக்கமாய்...சற்றே தொலைவினில்...
    அமைதியாய்த்துதித்தே நின்றிருக்கும் பாகவதோத்தமர்கள் இவர்தமை, 'தான் காணத்தான் ஆசை கொண்டு' ...

    அதிரூப சுந்தரனவன்... புருஷோத்தமனவன்... ஆவலாய் வலை வீசி...அலர்தாமரைக்கண்களால் வலைவீசி வந்திடுவான் 🙏🏻

    ReplyDelete

Post a Comment