ஒரு பெண்ணின் கதை
அந்தப் பெண்ணின் பெயர் தேவை இல்லை. அவளுடைய தந்தை நல்ல பையனாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். பிள்ளையாண்டான் பெயர் விமல். அப்பாவின் கொள்ளுத்தாவுக்கு ஏதோ உறவு. இவன் தான் உனக்கு ஏற்றவன் என்றபோது, அப்பாவின் பேச்சைத் தட்டவில்லை “சரிப்பா” என்று ஒற்றை வார்த்தையில் சம்மதித்தாள். பையன் பார்க்க லட்சணமாக ராஜா மாதிரி இருந்தான். வெளிநாட்டுப் பையன் செல்வத்துக்கு எந்தக் குறைவும் இல்லை.
திருமணத்துக்குப் பையன் இரண்டு வாரம் விடுப்பில் வந்திருந்தான். அவளுக்கு அருமையான நெக்லெஸ் & பெண்டண்ட் பரிசாகக் கொடுத்தான். இவனை மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
வெளிநாட்டிலிருந்து வந்த பையனிடம் எந்த வெட்டிப் பந்தாவும் இல்லை, எல்லோரிடமும் சகஜமாகப் பேசி அவர்களுடன் மைசூர் பாக், லட்டு என்று சாப்பிடவிட்டு, கல்யாணம் செய்த கையோடு ”இதோ வருகிறேன்” என்று வெளிநாட்டுக்குச் சென்றான்.
அதற்குப் பிறகு அவனிடமிருந்து மின்னஞ்சல், மொபைல்... எந்தத் தகவலும் இல்லை. அவனுடைய நம்பரைத் தொடர்பு கொண்டால் “நீங்கள் தொடர்பு கொள்ளும் ....தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்!” என்று ஒலித்தது.
அவனின் ஈ-மெயில் அனுப்பினால் அதற்கும் எந்தப் பதிலும் வரவில்லை. சில நாள், பல மாதங்கள் ஆகி, ஒரு வருடம் ஆகியும் அவனிடமிருந்து ஒரு எந்தத் தகவலும் இல்லை. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும் காதும் காதும் வைத்த மாதிரி பேச ஆரம்பித்தார்கள்.
”இன்னுமாடி உனக்கு அவன் வீசா வாங்குகிறான் ?... எத்தனை நாளுக்குத் தான் இப்படியே அவனை நினைத்துக்கொண்டு இருப்பே!”
“எங்காத்துக்கு பழக்கப்பட்ட ஜோசியர் இருக்கிறார், அவரைப் போய்ப் பார்க்கலாம்... அவர் சொன்ன பரிகரத்தை ஸ்ரத்தையா செஞ்சா ஒரு மண்டலத்தில் நிச்சயம் நல்லது நடக்கும்.. நான் போனபோது சனிப் பீரித்தி செய்யச் சொன்னார்.. .”
”’ நமக்கு தெரிஞ்ச பையன் இருக்கிறான் .உம் ஒரு வாத்தை சொன்ன போதும்.. உடனே வந்து கல்யாணம் செஞ்சிக்க ரெடியா இருக்கான்.... நல்லா நகை நட்டு எல்லாம் போட்டு உன்னை ராஜாத்தி மாதிரி வைத்துக்கொள்வான்... பேசாமல் ஒரு டைவர்ஸ் கொடுத்திவிடு... “
“எதிர்த்த வீட்டுப் பையனுக்கு இப்ப தான் வேலை கிடைத்திருக்கும்..என்ன. ஒரு வயசு உன்னோடு கம்மி... கம்மியா இருந்தா என்ன ? ஊர் உலகத்தில இப்ப இது எல்லாம் சகஜம்...” என்று பலர் அறிவுரை செய்தார்கள்.
“சனிக்கிழமை உன் பேருக்கு அர்ச்சனை செய்திடலாம்” கும்பகோண மாமா.
தன் அப்பா தப்பு செய்யமாட்டார் என்று திடமாக நம்பினாள் அந்தப் பெண் அதனால், இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுச் சிரித்துவிட்டு நழுவினாள்.
மனதில் என்ன கஷ்டம் இருந்தாலும், வீட்டில் அம்மாவுக்குக் காய்கறி திருத்துவது, துணி துவைப்பது போன்ற அன்றாட வேலைகளைச் செய்து உதவினாள்.
சில சமயம் கல்யாணத்தின்போது எடுத்த படங்களைப் பார்ப்பாள். மாப்பிள்ளை நின்றுகொண்டும், உட்கார்ந்துகொண்டு இருக்கு .. சந்தோஷமாக இருக்கும். அதே நினைவில் இருப்பாள்.
வருடங்கள் ஓட அவள் அப்பாவும் காலகதி அடைந்து. அவளுடைய அண்ணன், தம்பி மன்னி... சொந்தங்கள் அவர் அவர் வேலையிலும் பல ஊர்களுக்கும், வேற தேசங்களுக்கும் அல்லது சீரியல் போன்ற பொழுதுபோக்கிலும் மும்மரமாக இருந்தார்கள்.
இப்போது அவளுக்கு ஒரே பொழுதுப் போக்கு தெருக்கோடியில் இருக்கும் பூக்கார பாட்டி தான். தினமும் பாட்டியுடன் சேர்ந்து பூ தொடுக்க ஆரம்பித்தாள். பாட்டி சில ஸ்லோகம் சொல்லிக்கொடுப்பாள், கிருஷ்ணர், ராமர் கதைகள் பேசிக்கொண்டு
“குழந்தே கவலைப் படாதே... ஒரு நாள் உன் கணவன் வருவான்.. பார்த்திண்டே இரு” என்று சொல்லும் வார்த்தைகளைத் தான் இவளுக்கு ஆறுதலைக் கொடுத்தது.
ஒரு நாள் மழை. வாசலில் ஏதோ பஜனை சத்தம் கேட்க நாம சங்கீர்த்தனம் செய்பவர்களுக்கு ஒரு பிடி அரிசி போடலாம் என்று வெளியே ஓடியவள் வழுக்கிக் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை… ஆஸ்பத்திரியில் பதினைந்து நாள் கழிக்க வேண்டி வந்தது .
ஒரு நாள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கல்யாண ஆல்பம் பார்த்துக்கொண்டு இருந்தபோது வீட்டுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது. .
நல்ல கோட் சூட் போட்டுக்கொண்டு செண்ட் வாசனையுடன் ஒருவன் இறங்குகிறான்.
டக்கென்று அடையாளமே தெரியவில்லை...வேறு யாரும் இல்லை… கல்யாணம் செய்துகொண்ட விமல் என்ற இவளுடைய கணவன் தான். உடல் முழுக்க சந்தோஷமாக இருந்தது.
“வா வந்து ஏறிக்கொள்!” என்று கார் கதவைத் திறந்தான். கையில் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை... காலில் கட்டு போட்டிருப்பது கூட அவளுக்கு நினைவில்லை துள்ளிக் குதித்து காரில் ஏறிக்கொள்ள கார் வேகமாகப் தெருக்கோடி வரை சென்று மறைந்தது...
- சுஜாதா தேசிகன்
பொதுவாக கதைகளுக்கு உரை கிடையாது, ஆனால் இந்த கதைக்கு உண்டு அது கீழே ...
------------------------------------------------------------------------------
ஒரு ( ஸ்ரீவைஷ்ணவ ) பெண்ணின் கதை
அந்தப் பெண்ணின் பெயர்( ’பிரப்பன்ன ஜன கூடஸ்தரான நம்மாழ்வாரின் கோஷ்டியில் நாமும் ஒருவர் தானே ? அதனால் பெயர் ) தேவை இல்லை.
அவளுடைய தந்தை நல்ல பையனாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். பிள்ளையாண்டான் பெயர் விமல். (விமலன் - பவித்ரனான பரமபுருஷன் [அமலனாதிப்பிரான்] )
அப்பாவின் கொள்ளுத்தாவுக்கு ஏதோ உறவு. (எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி [பெரியாழ்வார்] ; யான் அடைவே அவர் குருக்கள் நிறை வணங்கி - [ ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் ] )
இவன் தான் உனக்கு ஏற்றவன் என்றபோது, அப்பாவின் பேச்சைத் தட்டவில்லை “சரிப்பா” என்று ஒற்றை வார்த்தையில் சம்மதித்தாள். ( என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கி - ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் ; மேலையார் செய்வனகள் - திருப்பாவை )
பையன் பார்க்க லட்சணமாக ராஜா மாதிரி இருந்தான் ( யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான் - [ திருப்பாவை ] )
வெளிநாட்டுப் பையன் செல்வத்துக்கு எந்தக் குறைவும் இல்லை. ( வைகுண்ட நாதன், லக்ஷ்மி சம்பந்தம் )
திருமணத்துக்குப் (பஞ்ச சம்ஸ்காரம், பரண்யாசம் ) பையன் இரண்டு வாரம் விடுப்பில் வந்திருந்தான். ( பக்தர்களுக்காக கீழே இறங்குவது அவன் குணம்; விபீஷணன் இருக்கும் இடத்துக்கு நான் போகாமல் அவனை நாலு அடி நடக்க வைத்துவிட்டெனே - ராமாயணம் )
அவளுக்கு அருமையான நெக்லெஸ் & பெண்டண்ட் பரிசாகக் கொடுத்தான். ( ஜிவாத்மா பெருமாளுக்கு கௌஸ்துபமணி போன்று மிகவும் ப்ரியமானவன் என்று எல்லா சாஸ்திரங்களும் கூறுகின்றன [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் - உபோத்காத அதிகாரம் ஜீவாத்மா பற்றியது] )
இவனை மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ( நாச்சியார் திருமொழி - இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம் வந்திருந் தென்னைம கட்பேசி… )
வெளிநாட்டிலிருந்து வந்த பையனிடம் எந்த வெட்டிப் பந்தாவும் இல்லை, எல்லோரிடமும் சகஜமாகப் பேசி ( பத்துடை அடியவர்க்கு எளியவன் ( நம்மாழ்வார் ) ; எளிதில் அவனை அடையமுடியும் அவன் சுலபன் )
அவர்களுடன் மைசூர் பாக், லட்டு என்று சாப்பிடவிட்டு,(நாம் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு - கானம் சேர்ந்து உண்போம் (திருப்பாவை) )
கல்யாணம் செய்த கையோடு ”இதோ வருகிறேன்” என்று வெளிநாட்டுக்குச் சென்றான். அதற்குப் பிறகு அவனிடமிருந்து மின்னஞ்சல், மொபைல்... எந்தத் தகவலும் இல்லை. அவனுடைய நம்பரைத் தொடர்பு கொண்டால் “நீங்கள் தொடர்பு கொள்ளும் ....தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்!” என்று ஒலித்தது. அவனின் ஈ-மெயில் அனுப்பினால் அதற்கும் எந்தப் பதிலும் வரவில்லை. ( அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே - எல்லாம் அவனுடைய லீலை [ஸ்ரீபாஷ்யம் மங்கள ஸ்லோகம் ])
சில நாள், பல மாதங்கள் ஆகி, ஒரு வருடம் ஆகியும் அவனிடமிருந்து ஒரு எந்தத் தகவலும் இல்லை. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும் காதும் காதும் வைத்த மாதிரி பேச ஆரம்பித்தார்கள். ( மற்றவர்கள் எது சொன்னாலும், திட வைராக்கியம் ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு மிக முக்கியம் )
”இன்னுமாடி உனக்கு அவன் வீசா வாங்குகிறான் ?... எத்தனை நாளுக்குத் தான் இப்படியே அவனை நினைத்துக்கொண்டு இருப்பே!” ( மற்றவர்கள் எது சொன்னாலும் திட பக்தி முக்கியம் )
“எங்காத்துக்கு பழக்கப்பட்ட ஜோசியர் இருக்கிறார், அவரைப் போய்ப் பார்க்கலாம்... அவர் சொன்ன பரிகரத்தை ஸ்ரத்தையா செஞ்சா ஒரு மண்டலத்தில் நிச்சயம் நல்லது நடக்கும்.. நான் போனபோது சனிப் பீரித்தி செய்யச் சொன்னார்.. .”
( பிற தேவதை உபாசிப்பது தவறு, பிரபனனன் தனியாக இது போன்ற பரிகாரங்கள் செய்ய தேவை இல்லை - [ ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் ] )
”’ நமக்கு தெரிஞ்ச பையன் இருக்கிறான் .உம் ஒரு வாத்தை சொன்ன போதும்.. உடனே வந்து கல்யாணம் செஞ்சிக்க ரெடியா இருக்கான்.... நல்லா நகை நட்டு எல்லாம் போட்டு உன்னை ராஜாத்தி மாதிரி வைத்துக்கொள்வான்... பேசாமல் ஒரு டைவர்ஸ் கொடுத்திவிடு... “ ( மனதை மாற்றி மதமாற்றம் வசப்படுத்துm கூட்டம் அவர்களிடமிருந்து நாம் தள்ளி இருக்க வேண்டும்)
“எதிர்த்த வீட்டுப் பையனுக்கு இப்ப தான் வேலை கிடைத்திருக்கும்..என்ன. ஒரு வயசு உன்னோடு கம்மி... கம்மியா இருந்தா என்ன ? ஊர் உலகத்தில இப்ப இது எல்லாம் சகஜம்...” என்று பலர் அறிவுரை செய்தார்கள்.
( ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள். மற்ற தேவதைகள் எல்லாம் அவனால் படைக்கப்பட்டவர்கள்நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் [ திருமழிசை ஆழ்வார் ] )
“சனிக்கிழமை உன் பேருக்கு அர்ச்சனை செய்திடலாம்” கும்பகோண மாமா. ( பிரபன்னனுக்கு காம்யார்த்த பக்தி கூடாது )
தன் அப்பா தப்பு செய்யமாட்டார் என்று திடமாக நம்பினாள் ( ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் - ஸ்ரீவஷண பூஷணம் )
அந்தப் பெண் அதனால், இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுச் சிரித்துவிட்டு நழுவினாள். ( நாம் தினமும் எங்காவது பார்த்து, கேட்பது தான் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் ஸாரநிஷ்கர்ஷாதிகாரம் ; பரதேவதை யார் என்று நிர்ணயம் செய்ய வேண்டும் - மற்ற தேவதைகளை உபாசிப்பது பதிவிரதா தர்மம் கிடையாது. நான்முகன் திருவந்தாதியில் ”மறந்தும் புரம்தொழா மாந்தர்” என்று திருமழிசை ஆழ்வாரும் ”நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே” என்று நம்மாழ்வாரும், “ஏரார் முயல் விட்டுக் காக்கை பின் போவதே” என்று திருமங்கை ஆழ்வாரும், அற்ப புத்தி உடையவர்களால் அடையப்படும் பலன்களும் அற்பமானவையே ஆகும் பகவத் கீதை - 7-23
ஸ்ரீமத் ராமாயணம் - அனுமான் ஸ்ரீராமரிடம் எப்போதும் அதிகமாக உள்ள எனது நட்பு என்பது உன்னிடத்தில் அசைக்க இயலாதபடி உள்ளது. அது போன்ற உன்னிடத்தில் பக்தியும் உறுதியாக உள்ளது. இவற்றை விடுத்து எனது மனம் எங்கும் செல்லாது. )
மனதில் என்ன கஷ்டம் இருந்தாலும், வீட்டில் அம்மாவுக்குக் காய்கறி திருத்துவது, துணி துவைப்பது போன்ற அன்றாட வேலைகளைச் செய்து உதவினாள். ( நித்ய கர்மா தர்மானுஷ்டானம் மிக முக்கியம் )
சில சமயம் கல்யாணத்தின்போது எடுத்த படங்களைப் பார்ப்பாள். மாப்பிள்ளை நின்றுகொண்டும், உட்கார்ந்துகொண்டு இருக்கு .. சந்தோஷமாக இருக்கும். ( அர்சாவதாரங்கள் - மோக்ஷம் அளிக்கவல்லதே ஆகும் [ ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் - திவ்ய தேச யாத்திரை, நின்றான் இருந்தான் கோலங்கள் )
அதே நினைவில் இருப்பாள். ( அந்தர்யாமி ரூபம் உளன் கண்டாய் நன்னெஞ்சே! உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.[பொய்கை ஆழ்வார் ] )
வருடங்கள் ஓட அவள் அப்பாவும் காலகதி அடைந்து. அவளுடைய அண்ணன், தம்பி மன்னி... சொந்தங்கள் அவர் அவர் வேலையிலும் பல ஊர்களுக்கும், வேற தேசங்களுக்கும் அல்லது சீரியல் போன்ற பொழுதுபோக்கிலும் மும்மரமாக இருந்தார்கள். ( சம்சாரம், உலக வாழ்க்கை -உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு ( பூதத்தாழ்வார் )
இப்போது அவளுக்கு ஒரே பொழுதுப் போக்கு தெருக்கோடியில் இருக்கும் பூக்கார பாட்டி தான்( பாகவத சம்பந்தம்).
தினமும் பாட்டியுடன் சேர்ந்து பூ தொடுக்க ஆரம்பித்தாள் (கைங்கரியம் ). பாட்டி சில ஸ்லோகம் சொல்லிக்கொடுப்பாள், கிருஷ்ணர், ராமர் கதைகள் பேசிக்கொண்டு
“குழந்தே கவலைப் படாதே... ஒரு நாள் உன் கணவன் வருவான்.. பார்த்திண்டே இரு” என்று சொல்லும் வார்த்தைகளைத் தான் இவளுக்கு ஆறுதலைக் கொடுத்தது. ( வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன்போது - அவனது திருக்கல்யாண குணங்கள் குறித்து படித்தும் கேட்டும் அவனை வணங்க்யும் பூஜைகள் செய்து எனது காலத்தை நான் கழித்தேன் [ நான்முகன் திருவந்தாதி ] ; பாகவத கைங்கரியம் பகவானுக்கு உகக்கும் கைங்கரியம் என்று நாம் அறிய வேண்டும் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் )
ஒரு நாள் மழை. வாசலில் ஏதோ பஜனை சத்தம் கேட்க நாம சங்கீர்த்தனம் செய்பவர்களுக்கு ஒரு பிடி அரிசி போடலாம் என்று வெளியே ஓடியவள் வழுக்கிக் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை… ஆஸ்பத்திரியில் பதினைந்து நாள் கழிக்க வேண்டி வந்தது . ( கீழே விழுவது - கர்ம பலன்களை கழிப்பது. வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவன் பால் மாளாத காதல், நோயாளன் போல் இருக்க வேண்டும். ”களைவாய் துன்பம் களையாதொழில்வாய் களைகண் மற்றிலேன்” - நீ என் துன்பங்களை நீக்கினாலும் சரி, நீக்காவிட்டாலும் சரி உன்னை அல்லாமல் அவற்றைப் போக்கவல்லவர் யாரும் இல்லை. பாகவதர்கள் காலடி பட்ட மண்ணில் விழுவது தான் நம் பாவங்களை கழிக்க சிறந்த உபாயம் )
ஒரு நாள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கல்யாண ஆல்பம் பார்த்துக்கொண்டு இருந்தபோது வீட்டுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது. . ( “ஒரு நாள் காணவாராய்” திருவாய்மொழி )
நல்ல கோட் சூட் போட்டுக்கொண்டு செண்ட் வாசனையுடன் ஒருவன் இறங்குகிறான். ( செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் - திருப்பாவை )
டக்கென்று அடையாளமே தெரியவில்லை...வேறு யாரும் இல்லை… கல்யாணம் செய்துகொண்ட விமல் என்ற இவளுடைய கணவன் தான். உடல் முழுக்க சந்தோஷமாக இருந்தது. ( மாலே ! மணிவண்ணா ! - திருப்பாவை )
“வா வந்து ஏறிக்கொள்!” என்று கார் கதவைத் திறந்தான். ( உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது - திருப்பாவை )
கையில் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை ( மற்றை நம் காமங்கள் மாற்று - திருப்பாவை )
காலில் கட்டு போட்டிருப்பது கூட அவளுக்கு நினைவில்லை துள்ளிக் குதித்து காரில் ஏறிக்கொள்ள ( வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் - திருப்பாவை )
கார் வேகமாகப் தெருக்கோடி வரை சென்று மறைந்தது...
( எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே - எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கும்படி அளவிறந்த ஞானம் முதலிய குணங்களையுடைய சிறந்த பொருளாகிய ஜீவாத்மாக்களை முடிவில்லாத கல்யாண குணங்களையும் உடையனான நாரயணன் அடியாரை ஒரு நாளும் கைவிடத அவன் திருவடிகளை பற்றி இருக்க வேண்டும். - திருவாய்மொழி வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே - திருவாய் மொழி )
( பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேட்டும்)
- அடியேன்,
சுஜாதா தேசிகன்
( படம் நன்றி: Photos – Gokuldas KS, இணையம், படத்தில் இருக்கும் பெண் பெயர் Vaishnava K Sunil )
Nicely narrated with azhwar paasurams...🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteNicely narrated with azhwar paasurams...🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteமீள் பதிவு என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஆனாலும் படித்து அனுபவிக்க அலுப்புத் தட்டவில்லை. நன்றி!
Dhivyam,
ReplyDeleteAdiyen.
This is second time.
simple as suupper
ReplyDeleteFine
ReplyDeleteAdditionally the reasons behind his late entry after the secrecy also may be explained along these lines of some pasuram.
ReplyDeleteAchyutaya anandhaya govindaya namah
இல்பொருள் நவி்ற்சியாய் ஒரு சிறுகதை. கதையும் தொடர்ந்த உரையும் மிக அருமை
ReplyDeleteஇல்பொருள் நவி்ற்சியாய் ஒரு சிறுகதை. கதையும் தொடர்ந்த உரையும் மிக அருமை
ReplyDeleteஸ்வாமின், இது உங்களால் மட்டுமே சாத்தியம்! ஒரு அழகிய கதை எழுதி, அதன் ஒவ்வொரு வரிக்கும், வார்த்தைக்கும் ஆழ்வார்கள் மற்ற பாசுரங்களுடன் தொடர்பு படுத்திய விளக்கம் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதம்.
ReplyDeleteஒரேயொரு விளக்கம் எனக்கு வேண்டும். கல்யாணம் செய்து ஏன் தனியே விட்டு வருத்தவேண்டும்? இது மண்ணவர் விதியா?
🙏🙏தாசன்.
என்னுடைய சந்தேகத்தை எழுதி விட்டு நிறுத்தி விட்டேன் மன்னிக்கவும். உங்கள் thought process, there is no chance, stunned.
ReplyDelete