Skip to main content

குரங்கு செடியும், ஸ்பைடர் மேனும்

குரங்கு செடியும், ஸ்பைடர் மேனும் 



வீட்டு வாசலில் சிகப்பு நிற கிளோட்டன் செடி ஒன்றை வாங்கி அழகிற்கு வைத்தேன். சில வாரங்களில் நுனிக்குருத்தை குரங்கு ஒன்று வந்து பிய்த்துப் போட்டது. செடியில் குருத்து என்பது மிக முக்கியமானது. சில செடிகளுக்கு நுனிக்குருத்து மிக முக்கியம். தேங்காய், பனை போன்றவற்றில் நுனிக்குருத்தை வெட்டிவிட்டால் செடி வளராது.

முளைக்கருவிலிருந்து (embryo) புறப்படும் இந்த நுனிக்குருத்து செடிக்கு மிக இன்றியமையாதது. ஆங்லத்தில் Terminal Bud என்பார்கள். செடி எப்படி வளர வேண்டும் எங்கே இலைவிட வேண்டும் என்ற எல்லாமே அங்கேதான் இருக்கிறது. 100 வருடம் வாழ்ந்துகொண்டு இருக்கும் மரத்தையும், மண்ணிலிருந்து உலகத்தை எட்டிபார்க்கும் சின்ன செடியையும் பெரிதாக வளரவைப்பது இந்த நுனிக்குருத்துதான்.

செடிகளில் குறிப்பிட்ட அளவில் கணுக்களைக் காணலாம் (axil). செடிகளில் தோன்றும் கணு, செடி வளர்வதற்கு ஏற்றச் சக்தியை அங்கே சேகரித்து வைக்கிறது என்று நினைக்கிறேன். வேர்களிலிருந்து வளரும் கீழ்நோக்கி நீளும் கிளைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முளைக்கும். ஆனால் செடிகளில் மேல்வளரும் கிளைகள் இந்தக் கணுக்களிலிருந்துதான் முளைக்கும். வயலும் வாழ்வும் போன்ற நிகழ்ச்சியை வேறு சேனலுக்கு மாற்றாமல் கேட்டிருந்தால் பூச்சியினால் நுனிக்குருத்து தாக்கப்பட்ட செடிகள் இறந்து போவதையும் அதை எப்படி தடுப்பது என்பதையும் கேட்டிருக்கலாம்.

குரங்கு கடித்த அந்தச் செடிக்கு வருவோம். அந்தச் செடியைத் தினமும் பார்த்துக்கொண்டிருந்தேன். மூன்று வாரம் செடி அப்படியே இருந்தது. நான்கு இலைகளில் இரண்டு இலைகள் காய்ந்துபோய் கீழே விழுந்தது. ஆனால் சில நாள்களுக்குமுன் அந்த ஆச்சரியம் நடந்தது. செடிக்குக் கீழே ஒரு முளைவிட்டுச் சின்ன செடியும், செடிக்குமேல் இருக்கும் கணுவிலிருந்து இரண்டு முளையும் செடி துளிர்த்துவிட்டது என்பதை உணர்த்தியது. எந்தக் கணு என்றுகூட செடி தேர்தெடுக்கிறது; இருப்பதிலேயே பலமான கணு எதுவோ அதிலிரிந்து துளிர் வளரும். மற்றவை ஸ்டாண்ட்-பை (Standby). 

-o0o--o0o--o0o- 

ஸ்பைடர் மேன்



சில வருடங்கள் அலுவலகத்தில் காபி கோப்பையுடன் கண்ணாடி ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்தேன். ஜன்னலின் வெளியே ஒருவர் ஸ்பைடர் மேன் மாதிரி வந்தார். அலுவலக ஜன்னலின் கதவுகளை, வெளியிலிருந்து, அந்தரத்தில் கயிறு கட்டிக்கொண்டு, துடைத்துக்கொண்டிருந்தார். மூன்றாவது மாடியிலிருந்து கீழே பார்த்தாலே வயிற்றில் புளியை கரைத்து, ஏதோ செய்யும். இவர் ஏழாவது மாடியிலிருந்து கயிற்றைக் கட்டிக்கொண்டு இடுப்பில் சின்னப் பக்கெட், ஒரு கையில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மறு கையில் பிரஷைக்கொண்டு கண்ணாடிகளைத் துடைத்துக்கொண்டிருந்தார். 

முதலில் அவரைப் பார்த்துப் படபடத்தாலும், ஜன்னல் இடுக்கு வழியாகப் பேச்சு கொடுத்தேன்.

"உங்க பேர் என்ன?"

"வெங்கடேஷ் சார்"

"எவ்வளவு வருஷமா இதைச் செய்துகிட்டிருக்கீங்க?"

"அது ஆச்சு சார் நாலு வருஷம்"

"எவ்வளவு கிடைக்கும்"

"ஒரு ஸ்கொயர் ஃபீட்டுக்கு ஐம்பது பைசா. இப்ப மார்கெட் டவுன் அதனால யாரும் கூப்பிட மாட்டேங்கிறாங்க"

"இப்ப தொங்கிகிட்டிருக்கற கயிறு ஸ்டிராங்கா?"

"சார் இது 350 கிலோவைத் தாங்கும். நான் அறுவது கிலோதான்"

"மேலேர்ந்து கீழே பார்த்தா பயமா இருக்காதா ?"

"முன்னால இருந்தது இப்ப இல்லை. ஆனா யஷ்வந்த்பூர்ல ஒரு 34 மாடிக் கட்டிடம் இருக்கு அதில மட்டும் கொஞ்சம் பயமா இருக்கும்"

"இந்த வேலை ரிஸ்க் இல்லையா ?"

"வீட்டில அப்பா, அம்மா. தங்கைக்கு நான்தான் கல்யாணம் செய்யணும். அதை எல்லாம் நினைச்சு கீழே பார்த்தா பயம் தெரியறதில்லை"

Comments

Post a Comment