10. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழாழ்ந்தவர்கள்
மதுரகவிகள் சம்மந்தத்தாலும், குருகூர் சடகோபன் விசேஷ முறையில் தோன்றிய அவதாரத்தாலும், திருவாய்மொழி முதலிய ஆழ்வார் அருளிச்செயல்களை ‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே’ என்ற வாக்கியத்துக்கு ஏற்றவாறு திருவாய் மூலம் ’திருவாய்மொழியாக’ பிரசாதித்து குருகூர்சடகோபன் நாதமுனிகளுக்கு ஆசாரியரானார்.
சடகோபன் நாதமுனிகளை அருள்கூர்ந்து “இப்போதே பட்டோலை கொள்வீராக!” என்று குருகூர் சடகோபன் கூற, ஏகசந்த கிரகியாக(1) நாதமுனிகள் தன் நெஞ்சத்தையே பட்டோலையாகக் கொண்டு எழுதச் சித்தமானார்.
குருகூர் நம்பி பெரியாழ்வார் தொடங்கி ஏனைய ஆழ்வார்களின் திவ்ய சரித்திரங்களையும் அவர்கள் அருளிய பிரபந்தங்கள், அதில் பொதிந்துள்ள விசேஷ அர்த்தங்களையும் உபதேசிக்க ஆரம்பித்தார்.(2)
”எப்போதும் தன் சித்தத்தில் விஷ்ணுவை வைத்துள்ள விஷ்ணுசித்தர், ஆனி ஸ்வாதியில் புகழ்பெற்ற வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியோன்! சிறப்பு பொருந்திய பாண்டியராஜனுடைய நெஞ்சுதன்னில் மால் பரத்துவத்தை நன்றாகப் போதித்து, பணையமான பொற்கிழி இவர் முன்னே தாழ வளைந்து நிற்க, பாண்டியன் சந்தேகம் நீங்கப்பெற்று, பட்ஃப்டத்து யானையின் மீது மதுரையை வலம் வர வானில் திருமால்கருடனுடன் தோன்ற, ஆழ்வார் அவனைச் சேவித்து அனுபவித்து ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று பெருமாளையே வாழ்த்தத் தொடங்கி அருளிய நானூற்றெழுபத்து மூன்று பாசுரங்களைப் பெற்றுக்கொள்ளும்” என்று அருளினார்
சடகோபர் மேலும் “நாதமுனிகளே ! விஷ்ணுசித்தர், நந்தவனம் அமைத்து, நாள்தோறும் வில்லிப்புத்தூர் வடபத்திர சாயிக்கு நறுமணம் கமழும் திருத்துழாய் மலர் மாலைகளை அணிவித்து அன்பு தொண்டு(3) செய்து மகிழ்ந்துவந்தார். ஒரு நாள் இவருடைய துளசி வனத்தில் கோதை என்ற பெண் குழந்தையைக் கண்டெடுத்து, கண்ணனை கண்ணமுதாக பக்தி ஊட்டி வளர்த்து அரங்கனுக்கே மண முடித்துக்கொடுத்தார் என்று விஷ்ணுசித்தர் வைபவத்தைக் கூற நாதமுனிகள் மெய்மறந்து கேட்டார்.
நாதமுனிகள் சடகோபரை நோக்கி ”ஒரு குருவிடம் யாதொரு கல்வியும் கற்காமலிருந்து. பரம்பொருளைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கு வேண்டிய வேதங்கள் எல்லாவற்றையும் பகவானுடைய திருவருளால் எடுத்துரைத்து, பொற்கிழியை வென்று, நாராயணனே பரம் பொருள் என்ற பரதத்துவத்தை நிலை நிறுத்தி. அரங்கநாதனுக்கு தன் இன்னுயிர் மகளைத் தாரை வார்த்துக் கொடுத்து பெருமானுக்கே நேரே மாமனாரான அந்தணர் குலத் திலகமான விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வாரை வணங்குகிறேன்” (3) என்று கூறிவிட்டு பெரியாழ்வார் ’தூய தமிழால்’ கண்ணனை எப்படிக் கொஞ்சுவது, குளிப்பாட்டுவது என்று காண்பித்து விட்டுசித்தன் விரித்த தமிழ், பிள்ளைத் தமிழ் அன்றோ!” என்று பூரிப்படைந்தார்.
சடகோபர் “நாதமுனிகளே! பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையான கோதையின் வைபவத்தை கேளும்” என்று கூற ஆரம்பித்தார்.
வேயர்குலத்தினருக்கே உரிய புகழையுடைய வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரம் பெருமைபெற்று விளங்கும்படி, விட்டுசித்தன் தூய திருமகளாய் அவதரித்து, அரங்கனாருக்கு துழாய் மாலை முடிசூடிக் கொடுத்த கோதை, வில்லிபுத்தூரையே ஆயர்பாடியாகவும், அவ்வூர் பெண்களையும் தன்னையும் ஆயர் குலத்து மங்கையராகவும் வில்லிபுத்தூர் கோயிலை நந்தகோபனின் திருமாளிகையாகவும், அப்பெருமானை ஆயர் குலத்து அணிவிளக்கான கண்ணனாகவும் பாவித்து நேயமுடன் மார்கழி மாதத்தில் சங்கத் தமிழ் மாலை முப்பதும், புகழுடைய தையொரு திங்கள்(5) என்று தொடங்கும் நூற்றுநாற்பத்துமூன்று பாசுரங்களையும் அன்புடன் உமக்கு அருளுகிறேன்” என்று கூறி நாதமுனிகளுக்கு அதை அளித்தார்.
நாதமுனிகள் நாத்தழுதழுக்க “பெரியாழ்வாரின் திருமகளான கோதை மாதர் சங்கம் அமைத்து முப்பது பாசுரங்களையும் ’சங்கத் தமிழ் மாலையாகத் தொடுத்து பெரிய பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டாள். தமிழை ஆண்டாள்! அதைக் கொண்டு பெருமாளையே ஆண்டாள்! தான் பெற்ற உயர்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்குக் கொடுத்த ஆண்டாளுக்கு ஒப்பில்லை ! ஒப்பில்லை !” என்றார்
முதலாழ்வார்கள் வைபவங்களைக் கூறுகிறேன் என்று ஆரம்பித்தார் சடகோபன்
பொருள் மிகுந்த, மறைவிளங்க, புவி உய்ய ஐப்பசியில் திருவோணத்து நன்னாளில் கச்சிதனில் ஒரு பொய்கைதனில் மிகுந்த அருள்வடிவாய் அவதரித்த புனிதர் பொய்கையாழ்வார். ஒரு நாள் இருள்தனில் குளிர்ந்த திருக்கோவலூர் இடைகழியில் சென்று பூதத்தாழ்வார், பேயாழ்வார் இருவருடன் நிற்க, மால் இடை நெருக்க இருளைப் போக்குகின்ற சிறந்த விளக்காக ’வையம்தகளி’ என்று தொடங்கும் சிறந்த செல்வமான நூறு பாசுரங்களைக் குறைதீர சொல்லுகிறேன்” என்று அருளினார்.
மேலும் “கடல்மல்லை காவலனான பூதத்தாழ்வார் என்ற ஸ்வாமி இப்பூவுலகின் ஐப்பசியில் அவிட்ட நன்னாளில் இடர் போக்க அவதரித்து ஒரு நாள் குளிர்ந்த திருக்கோவலூர் இடைகழியில் சென்று இணையில்லா மூவருமாய் இசைந்தே நிற்க மிக்க இருளில் ஒருவர் இருவராகி நடுவில் இன்னொருவர் யார் என்று அறியாதவண்ணம் மால் நெருக்க, ஞான சுடர் விளக்கு ஏற்றி அழியாத பிரகாசம் நிறைந்த அன்பே தகளியா என்று தொடங்கும் தீபத்தை எற்றிய நூறு பாசுரங்களையும் சொல்லுகிறேன்” என்று அருள் துலங்க செப்பினார் சடகோபன்.
அதன் பிறகு “மாமயிலையில், ஐப்பசி சதயத்தில் அவதரித்து, குளிர்ந்த திருக்கோவலூரில் தூய இருமுனிவருடன் துலங்க நின்று, இருள் நீங்க மால் தோன்ற இன்பத்தமிழில் நெடுமாலைக் காணத்தொடங்கி ‘திருக்கண்டேன்’ என்ற உரைத்துத் தொடங்கும் தமிழ்மாலை நூறு பாடல்களையும் உன் தலைமுறைக்கு உரைக்கிறேன்” என்று கூறி உபதேசித்தார் சடகோபன்.
நாதமுனிகள் “செந்தமிழ் பாடுவார் குழுவாக நெடுமாலை காணச் சென்று திருமாலை கண்டு தமிழ்மொழியினால் விளக்கு ஏற்றி ஞானத் தமிழ் நல் மாலை பாசுரங்களாக கொடுத்த பெரும் தமிழர்களுக்கு அடியேன் என்ன கைமாறு செய்வேன்!” என்றார்.
சடகோபர் திருமழிசை பிரானைப் பற்றி கூற ஆரம்பித்தார் “தை மகத்தில் மழிசைபிரான் மற்ற பல மதங்களை நன்கு அறிந்து மாயோன் அல்லால் மற்ற தெய்வம் வேறு இல்லை என உரைத்து, தன் சீடனான கணிகண்ணன் கச்சியை விட்டு வெளியேற திருமழிசை ஆழ்வார் கூட செல்ல, பாட்டுக்கு ஏற்ப பெருமாள் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றார். வேதச் செழும் பொருளான நான்முகன் திருவந்தாதி தொண்ணுற்றாறு பாடல்களையும், தத்துவார்த்தங்கள் நிறைந்த பிரகாசிக்கின்ற திருச்சந்தவிருத்தப் பாடல்கள் நூற்றிருபதுபாசுரங்கள் உபதேசிக்கிறேன்” என்று அருளினார்.
நாதமுனிகள் “அவனே பிரபஞ்சமாக விரிந்து இருக்கிறான். அந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இருக்கும் தத்துவமாக அவன் நினைப்பது நடக்கிறது என்று பாசுரங்களில் ’தத்துவ தமிழை’ கொடுத்து, வாழும்வகைக்கு ஏற்ற இப்பாசுரங்கள் அருளிய திருமழிசைபிரானை வணங்குகிறேன்” என்றார் நாதமுனிகள்.
சடகோபர் குலசேகர ஆழ்வார் வைபவத்தை கூற ஆரம்பித்தார்
“பொன்னைப் போல ஒளிபொருந்திய வேலையுடைய குலசேகரர் மாசிப் புனர்பூசத்தில் எழில்மிகு வஞ்சிக்களத்தில் அவதரித்து, இராமாயணக் கதைக் கேட்டு இராமனுக்கு உதவிக்காக படையுடன் புறப்பட்ட இவர், அடியார்களின் மீது உள்ள அன்பினால் அஞ்சாமல் குடப்பாம்பில் கையிட்டு, திடமான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். தன் மகளான சேரகுலவல்லியை நம்பெருமாளுக்கு மணமுடித்தார். அன்புடன் நம்பெருமாளையும், சிவந்த பொன்னிலான நல்லார்கள் வாழும் நளிரரங்கத்தில் வாழும் அடியார்களை அனுபவித்துச் சேவிக்கவும் விரும்பி இந்த பூமியில் இருளரிய என்று தொடங்கும் பாடல்கள்கொண்ட சிறந்த நூற்றைந்து பாசுரங்கள் அடங்கிய திருமொழியை உமக்கு அருளுகிறேன்” என்று நாதமுனிகளுக்கு உபதேசித்தார்.
நாதமுனிகள் பரவசத்துடன் “நுட்பமான உணர்ச்சிகளைப் பெருமாள் திருமொழியில் ‘நற்றமிழில்’ காண்பித்த ’தமிழ்வல்லார்’ குலசேகர ஆழ்வார், தமிழ் நடையை ’நடை விளங்கு’ தமிழாக கையாண்டு அற்புத சரத்தை பருகிக்கொண்டே இருக்கலாம்!” என்றார்.
”உண்மைத் தொண்டனான தொண்டரடிப்பொடி ஆழ்வார் வைபவத்தை கேளுங்கள்” என்று கூற ஆரம்பித்தார் குருகூர்நம்பி.
”ஸ்திரமான மதில்களையுடைய திருமண்டங்குடி என்ற பெருமைப் பெற்ற திவ்யதேசத்தில் மார்கழி கேட்டையில் அவதரித்து மிக்க புகழையுடைய தொண்டரடிப்பொடியாழ்வார், திருவரங்க மணவாளனுக்கு நாளும் அன்பைப் பொழிந்து துழாய் மாலை கட்டி, அதனால் மேன்மேலும் பக்தி வளர்ந்து அவர் செப்பிய தலை சிறந்த நல் திருமாலை நாற்பத்தைந்தும், சிறந்த நல் திருப்பள்ளியெழுச்சி பத்து பாசுரங்களும் உமக்குச் சொல்லுகிறேன். அன்புகூர்ந்து கேளுங்கள்” என்று உபதேசித்தார். .
அடியவர்களின் திருவடி பொடியாய் அடியார்க்கு அடியனாய் வாழ்ந்து ‘தொண்டரடிப்பொடி என்ற தூய திருப்பெயர் பெற்று மலர்களுடன் மணம் வீசும் தமிழ்ச் சொற்களையும் பூக்கள் போல மாலை செய்து அணிவிக்க முடியும் என்று திருமாலையில் காண்பித்தார். துயர் நீங்கித் துலங்க பெருமாளுக்குத் தினமும் திருப்பள்ளி எழுச்சி என்ற எழுப்பொலி தமிழைத் தந்தவரை வணங்குகிறேன்” என்றார் நாதமுனிகள்.
அடுத்து பாண் பெருமாள் வைபவத்தை கூற ஆரம்பித்தார் சடகோபன்.
“உலகோர் அறிவுபெறுவதற்காக புகழ்மிகுந்த கார்த்திகை ரோகிணியில் வளம் மிக்க உறையூர் திவ்யதேசத்தில் அவதரித்து, பூமியை அளந்த தென் அரங்கம் சமீபத்தில் லோகசாரங்கமுனி தோள்மீது வந்து பல மறைபொருளால் திருவரங்கனுடைய திருவடிமுதல் திருமுடிவரை பாடி அருளிய அமலானாதிபிரான் பத்து பாட்டை விளங்கும்படி கூறுகிறேன்” என்று அமலனாதிபிரான் என்று தொடங்கும் பாடல்களை அருளினார்.
”பழமறையின் பொருளை மறைத்தமிழ் மூலம் பத்து பாசுரங்களில் அருளிய .திருப்பாணாழ்வாரே சரண்” என்றார் நாதமுனிகள்.
கலியன் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள் என்று சடகோபர் சொல்ல ஆரம்பித்தார்.
கார்த்திகையில் கார்த்திகை நாள் எழில் குரையலூரில் கலியன் அவதரித்து, . குமுதவல்லி என்ற மங்கையை மணக்க மனம் கொண்டு, அவளது நிபந்தனையை ஏற்று, பஞ்ச சமஸ்காரம் செய்துகொண்டு, நித்தம் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்குப் பிரசாதம் அளித்து, பொருள் அழிவுற்று, கப்பம் கட்ட தவறி, சிறை சென்று, வரதன் அருளால் செல்வம் பெற்று மீண்டும் அடியார்களுக்கு உணவு அளித்து மீண்டு செல்வம் பற்றாக்குறை ஏற்பட்டு வழிப்பறி செய்ய ஆரம்பித்து, மணமகனாய் வந்த மாதவனிடமே கொள்ளையடித்து, கால் மெட்டியைப் பல்லால் கடித்திழுக்க ‘நம் கலியனோ?” என்று திருமால் திருவெட்டெழுத்து திருமந்திரத்தை உவப்புடன் செய்த உபதேசத்தைப் பெற்று, ஆழ்வார் புருஷோத்தமன் புகழைப் பாடும் பாசுரங்களை நமக்கு அளித்தார்.
அர்ச்சையின் பெருமையை விளக்கி அறிவுதரும் பெரிய திருமொழி ஆயிரதெண்பத்துநான்கு பாசுரங்களயும் ஒப்பற்ற திருக்குறுந்தாண்டகமென்னும் பிரபந்தமாகிற இருபது பாசுரங்களையும் திருநெடுந்தாண்டகமாகிய முப்பது பாசுரங்களையும், ஏழுகூற்றிருக்கை ஒன்றும், சிறிய திருமடலாகிய நாற்பது பாசுரங்களையும், சிறப்பு மிகுந்த பெரிய திருமடல் எழுபத்தெட்டு பாசுரங்களையும் உமக்கு செப்புகிறேன்” என்று உபதேசம் செய்தார்.
முழுவதையும் கேட்ட நாதமுனிகள்’ கொற்றேவல் பரகாலன் கலியன் சொன்ன பாசுரங்களில் நலந்தரும் சொல்லான ’நாராயணா’ என்பதை ’கூட்டம் கூட்டமாக’ எல்லோரும் அனுபவிக்கத் தகுந்த தமிழ் திருமங்கை ஆழ்வாரின் சங்கமுகத் தமிழ் அன்றோ!” என்றார்.
அருகில் இருந்த மதுரகவிகள் “நாதமுனிகளே அன்னையாய் அத்தனாய் அடியவர் இன்புற குருகூர் சடகோபனான என் நம்பியைப் பற்றி கூறுகிறேன்” என்று கூற ஆரம்பித்தார்
வைகாசி விசாக திருநாளில் இவ்வுலகில் எழில் குருகையில் அவதரித்த மாறன் சடகோபன் அருளிச் செய்த திருவிருத்தம் நூறு பாட்டும், அடுத்து திருவாசரியம் என்ற ஏழு பாட்டும், எந்நாளும் மறக்கமுடியாதவாறு நல் பொருள் பொருந்திய பெரிய திருவந்தாதி எண்பதேழு பாட்டும், பகவதானுபவம் பெற்று முக்தி கொடுக்க வல்ல ஒப்பற்ற திருவாய்மொழி ஆயிரத்துநூற்றிரண்டு பாசுரங்களும் அருளியவர். இதைத் தேடிக்கொண்டு தான் தாங்கள் இங்கே வந்துள்ளீர்கள்” என்றார் மதுரகவிகள்.
நாதமுனிகள் கண்கள் பனிக்க குருகூர் சடகோபனைப் பார்த்து தேவரீரைத் தரிசிக்கும் போது பாதத்தில் மதுரகவிகளும், உந்தியில் திருமங்கை ஆழ்வாரும், திருமார்பாக தொண்டரடிப்பொடியாழ்வாரும், திருக்கைகளாகக் குலசேகராழ்வாரும், திருப்பாணாழ்வாரும், திருக்கழுத்தாக திருமழிசையாழ்வாரும், திருமுகம் பெரியாழ்வாராகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வார் இருவரும் திருக்கண்களாகவும், திருமுடி பூதத்தாழ்வாராகவும் தமிழாழ்ந்தவர்களின் விஸ்வரூபமாகக் காட்சியளிக்கிறது. உங்கள் திருமுடி நிலையில் நம்பெருமாள் வீற்றிருக்க நீங்கள் எல்லா ஆழ்வார்களையும் உள்ளடக்கிய நம்மாழ்வாராக பரதன் இராமனிடம் பெற்ற பாதுகையாகவே காட்சி அளிக்கிறீர்கள். தேவரீர் கிருபை செய்து அடியேனுக்கு தங்கள் திருவாக்கால் உங்கள் பிரபந்தங்களையும் உபதேசிக்க வேண்டும்” என்று கீழே விழுந்து சேவித்தார்.
சடகோபன் திருவாய் மொழியாக திருவாய்மொழியை உபதேசிக்க தொடங்கினார்.
பயணம் தொடரும்...
- சுஜாதா தேசிகன்
27-09-2020
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருநட்சத்திரம்.
------------------------------------------------------------------------
(1) - ஏகசந்த கிரகி என்றால் ஒருவர் ஒன்றை ஒருமுறை கேட்ட அல்லது படித்த மாத்திரத்திலேயே மனதில் நிலை நிறுத்தும் தன்மை ஆகும்.
(2) ஸ்வாமி தேசிகனின் பிரபந்த சாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
(3) அன்பு தொண்டு - கைங்கரியம்
(4) நாதமுனிகள் பெரியாழ்வாருக்கு அருளிய தனியனின் சாரம்.
(5) நாச்சியார் திருமொழி
தன்யோஸ்மி.
ReplyDeleteநாதமுனிகளுக்கு சடகோபன் அருளிய விதத்தை நீங்கள் உணர்ந்த உயரிய அனுபவத்தை எங்களுக்கும் கடத்தி எங்களை உய்விக்க வந்தீர்கள். உங்களிடமே படித்த சரித்திரம் ஆனாலும், படிக்க அலுக்கா நடை அழகு. தாசன். தன்யோசமி.
ReplyDeleteFantastic and Informative.
ReplyDeleteவி ஐ பி க்களின் மூளையை இன்ஷ்யூர் பண்ணுவார்கள் என்று சொல்லுவது உண்மையோ பொய்யோ ஆனால் அப்படி ஒன்று சாத்தியமானால் நம் தேசிகனின் மூளையைக் கண்டிப்பாய்ப் பண்ணவேண்டும். எல்லாருக்கும் தெரிந்தவை என்றாலும், இன்றைய இளையவர்கள் விரும்பித் தெரிகிறமாதிரி, அறிந்து மேலே தேடித் தெளிகிற மாதிரி இவர்போல் எளிமையாய் இனிமையாய் சம்ப்ரதாயம் பற்றிச் சொல்லுபவர் யார்?
ReplyDelete