Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 11

தினமும் கொஞ்சம் தேசிகன் - 11


ஜெயந்தி என்ற சொல் பிறந்த நாளைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுகிறது. கண்ணன் பிறந்த நாளே ஜெயந்தி. ஸ்ரீஜெயந்தி. ஸ்ரீஜெயந்தி என்றால் என்ன பொருள் ?  அவன் பிறந்த தினத்தைக் கொண்டாடும் பக்தர்களுக்கு ஜெயத்தை உண்டாக்கும் அதனால் ஜெயந்தி. 

எப்படி ஜெயந்தி என்றால் கண்ணனின் பிறந்த நாளைக் குறிக்குமோ அது போலத் தேசிகன் என்ற திருநாமம். அஹோபில 44ஆம் பட்டம் அழகியசிங்கர் ”அடை மொழியின்றி வழங்கப்படும் ’தேசிக’ என்ற சப்தம் நம் ஸ்ரீநிகமாந்த மஹா குருவையே குறிக்கும். இப்படி இந்த ’தேசிக’ சப்தம் ஈரரசு ( இரு பொருள்) படாதபடிச் செய்த பெருமை நம் ஸ்வாமி ஸ்ரீ தேசிகனுக்கே உரியதாகும்” என்கிறார். 

தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள். அதுவே வேதாந்த தேசிகன் என்று இன்று நிலைத்துவிட்டது. உபய வேதாந்தத்துக்கும் அதாரிட்டியான ஆசாரியன் இவரே அதனால் அவரை வேந்தாந்தாசாரியர் என்றும் கூறுவர். 

வேதாந்தாசார்யர் என்ற பதம் எப்படி ஸ்வாமி தேசிகனைக் குறிக்கிறதோ அது போல கீதாசாரியன் என்ற பதம் கண்ணனைக் குறிக்கும். கண்ணனுக்கு யார் கீதாசாரியன் என்ற பட்டத்தைக் கொடுத்தது என்று தெரியாது ஆனால் வேதாந்தாசார்யர் என்ற பட்டத்தைக் கொடுத்தது திருவரங்க செல்வனான நம்பெருமாள். ( வேதாந்தாசாரியர் என்று கூறுகிறோமே தவிர வேதாந்தாசாரியன் என்று கூறுவதில்லை. அது போல கீதாசாரியன் என்று கூறுகிறோமே தவிர கீதாசாரியர் என்று கூறுவதில்லை! ). 

ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ கோபால விம்சதி என்று இருபது ஸ்லோகங்களை அருளியுள்ளார். (விம்சதி என்றால் இருபது). இதில் கண்ணன் என்ற பெயரை உபயோகிக்காமல், ஆனால் கண்ணனைப் பற்றி பாடியுள்ளார். எப்படி ஸ்ரீஜெயந்தி என்றால் கண்ணனைக் குறிக்குமோ அது போல ! 

இன்று ஸ்ரீஜெயந்தி அதனால் வேதாந்தாசாரியர் கீதாசாரியன் பற்றி ஸ்ரீ கோபால விம்சதியில் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம். 

முதல் ஸ்லோகம் இது : 

வந்தே ப்ருந்தாவந சரம்
வல்லவீ ஜந வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம் தாம
வைஜயந்தி விபூஷணம்

சுபலமாகப் புரிய இப்படி படிக்கலாம்.

வந்தே ( வணங்குகிறேன் )  ப்ருந்தாவந சரம் ( பிருந்தாவனத்தில் திரிந்துகொண்டு இருக்கிற )
வல்லவீ ஜந(இடைப் பெண்களின்) வல்லபம் ( அன்புக்கு உரியவனே)
ஜயந்தீ ஸம்பவம்( ஸ்ரீஜெயந்தி அன்று அவதரித்த)  தாம ( கண்ணன் என்ற சோதியை)
வைஜயந்தி விபூஷணம் ( வைஜயந்தி  மாலையை அலங்காரமாக உடையவன்). 

கோபால விம்சதியைத் திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கம் முன்னொரு காலத்தில் ( 1952) அழகிய தமிழில் வெளியிட்டுள்ளார்கள். இதற்குப் பெயர் ’இடைப்பிள்ளை மாலை !’ 

முதல் பாசுரத்தை அதிலிருந்து கொடுக்கிறேன்.

வண்டிருப் பிருந்தானம் வரும் திருக்
கண்டுளக் களிவண் டிளா வாய்ச்சியர்
மண்டி வாழ் மணமாலை மிலைத்தருள்
கொண்டெழுஞ் சுடடென்று வணங்கு வாம்.


இடைப்பிள்ளை மாலை என்பது போலக் குலசேகர ஆழ்வார் ’முகுந்த மாலை’ என்று அருளியுள்ளார். அதிலிருந்து முதல் பாசுரத்தை அனுபவிக்கலாம். 

ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி

ப்க்தப்ரியேதி பவலுண்டன கோவிதேதி
நாதேதி நாகசயனேதி ஜகன்நிவாஸே
த்யாலாபினம் ப்ரதிபதம் குரு மே முகுந்த 

ஸ்ரீ வல்லபேதி(திருமகள் நாயகனே) வரதேதி ( வரமளிப்பவனே) தயாபரேதி (கருணைமிக்கவனே)
பக்தபரியோதி(பக்தர்களின் அன்பனே) பவலுண்டன கோவிதேதி (பிறவித் தொடரை களைந்து காக்கும்)
நாதேதி(வல்லவனே) நாகசயனேதி(பாம்பணையில் துயில்பவனே) ஜகன்நிவாஸே( எங்கும் நிறைந்தவனே)
த்யாலாபினம்(என்று உன்னைப் பற்றி) ப்ரதிபதம்(அடிக்கடி துதிக்க ) குரு மே( எனக்கு அருள்புரி) முகுந்த (என் முகுந்தா!)

இன்று ஸ்ரீ ஜெயந்தி. கொண்டாடுவோம், கொண்டாடினால் நமக்கு ஜெயம் தான்! 

- சுஜாதா தேசிகன்
10-9-2020
ஸ்ரீஜெயந்தி 

Comments

Post a Comment