Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 12

 தினமும் கொஞ்சம் தேசிகன் - 12


இந்த லாக்டவுனுக்கு முன்( அதாவது போன வருடக் கடைசியில்) ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். திருவரங்கத்தில் பழைய பரமபதம் படம் கிடைக்குமா என்று தேடினேன். கிடைக்கவில்லை. 

சிறுவயதில் அப்பா எனக்கு வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் சேவித்துவிட்டு வரும் வழியில் இந்தப் படம் மற்றும் தாயக்கட்டை வாங்கித் தருவார். அப்போது எல்லாம் சிகப்பு, கருப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கும். 

டிவி மொபைல்  தாக்கம் அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் இதை விளையாட முடிந்தது. இப்போது எவ்வளவு பேருக்குப் பொறுமை இருக்கும் என்று தெரியாது. முதலில் தாயம் போட்டு ஆரம்பித்து, பிறகு ஏணிமேல் ஏறி, பாம்பின் வால் வழியாக இறங்கி ஏணியில் ஏறி, கடைசியில் தாயமாகப் போட்டுப் போட்டு சொர்க்கம் செல்ல வேண்டும். சில சமயம் விளையாட்டு முடியாமல், அடுத்த நாளுக்கும் டெஸ்ட் மேட்ச் போலத் தொடரும்.

ரெங்க விலாஸ் கடைகளில் கலர் பரமபதம் லேமினேட் செய்து விற்பனை செய்கிறார்கள். தற்போது வந்திருக்கும் படம் நான் சிறிய வயதில் பார்த்த படம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது, ஏணிகள் இடம் மாறிவிட்டது, பாம்புகள் சிரிக்கின்றன. 



பரமபத விளையாட்டு எல்லோருக்கும் புரியும்படி, நல்ல குணங்களான தருமம், நீதி, நேர்மை, சத்தியம் மற்றும் அநீதி, தீமை இவற்றால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றையும் சுட்டிக் காட்டும். சற்று உற்றுக் கவனித்தால் (எவ்வளவு பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியாது ) இதில், தாவரங்கள், விலங்குகள், மனிதன், எனப் பரிணாம வளர்ச்சி, மனிதன் தேவனாக உயரும் நிலை, பிறகு துன்பமில்லாத சுவர்க்கம். இவற்றை அடையப் பாம்புகள் நமக்குத் தடையாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் பரமபதம் போகிறோம் என்பது தான் விளையாட்டு. கடைசியில் சில தெலுங்கு எழுத்துக்கள் இருக்கும், பரமபதம் போவதற்குள் தெரிந்துகொள்வது உத்தமம். பரமபதத்தில் நுழையும் போது, நித்தியசூரிகள் நுழைவுத் தேர்வு மாதிரி இதைக் கேட்டால் முழுக்க கூடாது. 

சோபானம் என்றால் நிறைய விளக்கங்கள் இருக்கு. சோபானம் என்றால் படிக்கட்டு என்று ஒரு பொருள் இருக்கிறது. 

கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நல்லவற்றைப் புகட்டுவதற்காகப் புர்ரகதா(புர்ரகதா என்பது கதைகளை நாட்டுப்புறப் பாட்டு வடிவில் கூறுவதாகும்) போன்ற இசைக் கதை நிகழ்ச்சிகள் பிரபலமாயின. விளையாட்டு மூலம் சிறுவர்கள் மனத்தில் நல்லவற்றை வித்திடுவதற்குப் பரமபதச் சோபான படம் பயன்படுத்தப்பட்டது. இதனை நாயக்க மன்னர்களும் தொடர்ந்து ஆதரித்தனர். வெள்ளைத் துணியைக் கடுக்காய் ஊறப் போட்ட தண்ணீரில் நனைத்து, அதில் கலம்காரி முறையில் சித்திரம் தீட்டிப் பயன்படுத்தப் பட்டதாம். அதற்குப் பின்னால் காகிதம் உருவான பிறகு துணியில் வரையப்பட்ட படங்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன.

இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்கா விசா வாங்கச் சென்றிருந்தேன். அங்கே வந்தவர்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். எல்லோரும் ஒழுங்கான  உடைகள் உடுத்தி, திருத்தப்பட்ட முடி - ஒழுங்காக வந்திருந்தார்கள். கையிலும் ஒரு கோப்புடன்,  முகத்தில் பல பதற்றத்துடன் காணப்பட்டார்கள் ( எங்கே விசா ரிஜக்ட் ஆகிவிடுமோ ?). உங்கள் டோக்கன் நம்பர் கூப்பிட்ட சமயம் சிலர் கை கூப்பி வேண்டிக்கொண்டார்கள். அமெரிக்காவிற்குள் போவதற்குத் தடையாக நம்மை அறியாமல் ஏதாவது செய்திருப்போமோ என்று பயந்துகொண்டு, கேட்ட வேள்விகளுக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற துடிப்பில் பதில் கூறினார்கள். இவர்களுடைய அடுத்த இலக்கு பச்சை கார்ட் வாங்கி அங்கேயே நிரந்தரமாக வாசம் செய்வது தான். 

சாதாரண அமெரிக்காவுக்குப் போவதற்கே இந்த மாதிரி தயார் செய்துகொண்டால், ஸ்ரீபரமபதம் செல்ல எப்படி எல்லாம் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும் ? 

இதைத் தான் ஸ்வாமி வேதாந்த தேசிகன், ‘பரமபத சோபானம்’ என்று அருளியிருக்கிறார். பரமபதம் என்ற மிக உயர்ந்த இலக்கை அடைவதற்கு ஒன்பது விஷயங்களைப் படிகளாகக் கற்பித்து விளக்குகிறார். அவை 

விவேக பர்வம்
நிர்வேத பாவம்
விரக்தி பர்வம்
பீதி பர்வம்
ப்ரஸாதந பர்வம்
உத்க்ரமண பர்வம்
அர்ச்சிராதி பாவம்
திவ்யதேச ப்ராபதி பாவம்
பிரபத்தி பர்வம்

பயப்பட வேண்டாம், இதை எளிமையாகப் பார்க்கலாம்.

1. விவேக பர்வம்  - தத்துவங்களை ஒழுங்காக புரிந்திகொள்வது. 

சிஷ்யன் தன் ஆசாரியனை அடைவது அவனுக்கு பெருமாளின் அனுகிரஹத்தால் ஏற்படுவது. அதற்கு பிறகு அவன் ஆசாரியன் வணங்கி உபதேசங்களைக் கவனத்துடன் கேட்டு அதனால் சிஷ்யன் விவேகம் ( பகுத்து அறியும் ஆற்றல் ) பெறுகிறான். நெடுமால் திருமால் பெருமாள் என்று உணர்தல். (நாராயணனே நமக்கே!  - ஆண்டாள் ;  யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தி - திருமங்கை ஆழ்வார்)

2. நிர்வேத பாவம் - மனம் தளர்ந்து போவது

ஆசாரியனிடம் உபதேசம் பெற்ற பின் விவேகம் பெற்று,  ‘அடடா’ எப்படி எல்லாம் கேவலமாக  வாழ்ந்துவிட்டோம். என்ன மாதிரி தகாத காரியங்களை எல்லாம் செய்திருக்கிறேன் என்று தன் பழசை எல்லாம் நினைத்து வருந்துவது. ( வாடினேன் வாடி வருந்தினேன் - திருமங்கை ஆழ்வார் ). பிறகு இனி எப்படிப் பொழுது போக்க வேண்டும் என்று தீர்மானித்து மனதில் பகவானைத் தியானித்து அவன் பெருமைகளைப் பேசியும், எழுதியும், பிறரிடம் கேட்டு உணர வேண்டும், முன்பு செய்த பாபங்களை மீண்டும் செய்யாமல் இருப்பது தான் முக்கியமான ஒன்று. 

3. விரக்தி பர்வம் - உலக சுகங்களில் ஆசையைத் துறப்பது.
இப்படி விவேகம் வந்த பின் மீண்டும் பழைய  பாபங்கள்  செய்யாமல் இருக்க வேண்டுமே என்ற பயம் வந்து செல்வம், சுகபோகம் போன்றவற்றில் உள்ள சிறுமையை நினைக்க வேண்டும். பாபம் சரி, புண்ணியம் செய்தால் ?  புண்ணியம் செய்து சொர்க்கம் கிடைத்தாலும் அதுவும் சிறுமை என்று உணர வேண்டும். இந்திரலோகப் பதவியே கிடைத்தாலும் அது விரும்பத்தகாதவை என்று உணர வேண்டும். ( இந்திர லோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே! ).தற்காலிகமாக ஏதாவது தேவதையை உபாசித்து உபாயம் பெறுவது எல்லாம் நமக்கு உலக சுகங்களையே பெற்று தரும் என்பதை புரிந்துகொண்டு,  மோட்சம் தான் ’அல்டிமேட்’ என்று உணர வேண்டும். 

4. பீதி பர்வம் - செய்த பாவங்களின் பயனாக வர இருக்கும் நரக வேதனையை எண்ணி அஞ்சுதல்.
கொள்ளிக் கட்டையில் அகப்பட்ட எறும்பின் கதி என என்பது போல தான் செய்த கர்மங்களால் விளையும் பலன்களை நினைத்துப் பயப்பட வேண்டும். வீட்டில் பாம்புடன் வாழ நேர்ந்தால் எந்த நேரம் என்ன ஆகுமோ என்று  நிமிஷத்துக்கு நிமிஷம் எப்படிப் பயப்படுவோமோ அது போல இந்த உலக வாழ்கை நமக்கு என்று அஞ்சி வாழ வேண்டும். (மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன் - திருமங்கை ஆழ்வார் ) எல்லாப் பாபங்களுக்கும் பிராயச்சித்தம் பக்தி, பிரபத்தி என்ற இரு வழிகள். பக்தி செய்ய ஆரம்பித்தால் நடுவில் தடை வரலாம், கால தாமதம் ஏற்பட்டாலும், விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கலாம். பிரபத்திக்குத் தடை, கால தாமதம் கிடையாது. இந்த நொடியில் செய்துவிடலாம். 

5.  ப்ரஸாதந பர்வம் - மோட்சத்தை அருள்வதற்கு உபாயத்தைச் செய்தல். 

விவேகம் பெற்று, மனம் சலித்து, வைராக்கியம் பெற்று அச்சம் இவற்றைப் புரிந்துகொண்டவனுக்கு, புண்ணியம் பாபம் என்ற இரண்டு விதமான நோய் உண்டு. இதைப் போக்கக் கூடிய மருத்துவன் எம்பெருமானே ( மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! - பெரியாழ்வார்; போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்  - ஆண்டாள்). 

இரண்டு மருந்துகள் இருக்கின்றன;  ஒன்று பக்தி, இன்னொரு பிரபத்தி. பக்தி என்பது கடைசிவரை தினமும் போட்டுக்கொள்ள வேண்டிய மருந்து ( தினமும் பெருமாளைத் தியானித்துக்கொண்டு இருக்க வேண்டும் ). பிரபத்தி என்பது ஒரு முறை போட்டுக்கொள்ளும் தடுப்பு ஊசி போன்றது.  தன்னை காக்கும் பொறுப்பை அவனிடம் முழுமையாகச் சமர்ப்பிப்பது. அதற்குப் பிறகு கவலை இல்லாமல் இருக்கலாம்.(வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் - குலசேகர ஆழ்வார்).  பக்தி, பிரபத்தி இரண்டுக்கும் பலன் ஒன்றே. 

6. உத்க்ரமண பர்வம் - சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறுதல்.  
ஆயுள் முடியும் காலம் வரும் போது, அந்த அடையாளங்களைக் கண்டு மோட்சத்தைப் பெறும் நாள் குறுகுவதை நினைத்து மிக்க மகிழ்ச்சி இவனுக்கு எம்பெருமான் உண்டாக்குகிறான். (தடம் தாமரைகட்கே. கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?' என்று நம்மாழ்வார் தாமரை போன்ற திருவடிகளுக்கு அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ ? என்று எம்பெருமானுடைய திருவடியை அடைய வேண்டும் என்ற துடிப்பில் பாடுகிறார்). 

7. அர்ச்சிராதி பாவம் - அர்சசிராதி மார்க்கத்தால் செல்லுதல்
பிரபத்தியைச் செய்தவனுக்குப் புண்ணியம் என்பது பொன் விலங்கு, பாவம் என்பது இரும்பு விலங்கு. மரண காலத்தில் இந்த விலங்குகள் விடுவிக்கப்படுகிறது. சரீரத்தில் குடிகொண்டுள்ள அந்தரியாமியான பகவான் நம்மை அழைத்துக் கொண்டு செல்கிறான். எல்லோராலும் வரவேற்கப்படுகிறான் ( முனிவர்கள் ‘வழி இது வைகுந்தர்க்கு’ என்று வந்து எதிரே - நம்மாழ்வார்)

8. திவ்யதேச ப்ராபதி பாவம்  - ஸ்ரீவைகுந்தம் திவ்ய தேசத்தைச் சேர்தல்
ஜீவன் வைகுந்தத்தை அடைந்து, அங்கே திருமாமணி மண்டபத்தை அடைந்து, பெரிய திருவடியை வணங்கி நித்தியச் சூரிகளின் கோஷ்டியை அடைந்து அவர்களைப் போலத் தொண்டு செய்ய விழைதல், பூர்வார்சாரியார்களை நன்றியுடன் வணங்கி எம்பெருமானுடைய திவ்ய சிம்ஹாசனத்தை அணுகுதல், அங்கெ தாமரைப் பூவில் பணிபுரியும் திய்வ பணிப் பெண்களை கண்டு தானும் கைங்கரியம் செய்ய விழைதல்.  அங்கே ஆதிசேஷனைச் சேவித்து மகிழ்ந்தல். (உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய். உனக்கேநாம் ஆட்செய்வோம்)

9.  பிரபத்தி பர்வம்- அங்கு சர்வேஸ்வரனைக் கண்ணாரக்கண்டு களித்து அனுபவித்து, கைங்கரியங்களைச் செய்துகொண்டு அந்த அனுபவத்திலேயே மூழ்கி இருப்பது.
ஆதிசேஷன் மீது பிராட்டியுடன் கூடிய எம்பெருமானை சேவித்து, அவனுடைய திருமேனி அழகை அனுபவித்துக் கொண்டு இருப்பது. (வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி ஈரிரண்டு மால்வரைதோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்  எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்)

நம்மாழ்வார் 

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய்
இன்பமில் வெந்நரகாகி இனிய நல் வான் சுவர்க்கமுமாய்
மன் பல் உயிர்களுமாகி பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையவன்

துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் காரணமாக அமைகிற வினைகள் அவனே, உலகங்கள் அனைத்தின் தலைவன் அவனே, இன்பமில்லாத வெம்மையான நரகத்தின் தலைவன் அவனே, இனிய, நல்ல, உயர்ந்த சுவர்க்கத்தின் தலைவன் அவனே, நிலைத்திருக்கும் பல்வேறு உயிர்களும் அவனே, இப்படிப் பல மாயங்களால் எல்லாரையும் மயக்குவித்து மகிழும் எம்பெருமான் பெரும் விளையாட்டுக்காரன், அவனை இறைவனாகப் பெற்றேன், எனக்குத் துன்பம் ஏதுமில்லை. 

பரமபத விளையாட்டில் ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால், பாம்பு பயம் இருக்காது. தாயமாகப் போட்டுப் போட்டுப் பரமபதம் செல்ல வேண்டும். அதுபோல இந்த ஒன்பது படிகளில் முதல் ஐந்து படிகளைத் தாண்டிவிட்டால், பிறகு மோட்சம் செல்வது மிகச் சுலபம். 

பெருமாளின் விளையாட்டில் அதன் சூக்ஷமங்களை தெரிந்து நாம் எப்படி காய்நகர்த்தி விளையாடுவது என்று ஸ்வாமி தேசிகன் சொல்லிக்கொடுக்கிறார் ஆசாரியனாக அதனால் தான் அவர் தேசிகன். 

- சுஜாதா தேசிகன்
20-09-2020


Comments

  1. As usual wonderful swami. Adiyen Hari

    ReplyDelete
  2. இது மாதிரி inch by inch புரியும்படி உங்களால் மட்டுமே எழுத முடியும். ப்ரமாதம்

    ReplyDelete
  3. Desikan உன்னுள் வா சம் செய் வதால் தான் .you r Desikan

    ReplyDelete
  4. நன்றாக உள்ளது. சில எழுத்துப் பிழைகளை த் தவிர்க்கலாம்

    ReplyDelete
  5. எழுதுவதே கடினம் அதிலும் எப்படி இப்படி ஆழ்வார் பாசுரம் இணைத்து எழுத முடிகிறது.

    ReplyDelete
  6. சொல்ல வார்த்தைகள் இல்லை

    ReplyDelete
  7. பெருமாளின் விளையாட்டில் அதன் சூக்ஷ்மங்களை தெரிந்து நாம் எப்படி காய்நகர்த்தி விளையாடுவது என்று ஸ்வாமி தேசிகன் சொல்லிக்கொடுக்கிறார் ஆசாரியனாக .........
    அதனால் தான்
    அவர்... (சுஜாதா) தேசிகன்!!!!!!! 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. "சாதாரண அமெரிக்காவுக்குப் போவதற்கே இந்த மாதிரி தயார் செய்துகொண்டால், ஸ்ரீபரமபதம் செல்ல என்ன எப்படி எல்லாம் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும்? "

    மிகவும் சரியாக சொன்னீர்கள். ஆழ்ந்த விஷயங்களை மிகவும் எளிமையாக எழுத்தில் வடித்துளீர்கள். அருமை.

    ReplyDelete

Post a Comment