புத்திசாலித்தனம் ஒரு சேவையாக..
சமீபகாலமாக நான் கதை, கட்டுரைகள் எழுதுவதற்கு மைக்ரோ சாப்ட் வேர்ட், நோட்பேட் போன்ற செயலிகளை உபயோகிப்பதில்லை. ’கூகிள் டாக்ஸ்’ல் (Google docs) தட்டச்சு செய்கிறேன். கோப்புகளைக் கணினியில் சேமிக்காமல் ஆகாசத்தில் (cloud) எங்கோ சேமிக்கிறேன். இதை மனதில் வைத்துக்கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.
நான் கல்லூரியில் படித்த காலத்தில் கணினித் திரையில் ஆரஞ்சு அல்லது பச்சை கலர் எழுத்துக்கள் மட்டும் தெரியும். பேராசிரியர்கள் உபயோகிக்கும் திரை ஒரு மாதிரி திருச்சி மைகேல் ஐஸ்கிரிம் வண்ணத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கலர் கம்யூட்டர் ஆர்.இ.சி போன்ற கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence ) மீது ஒரு எனக்கு ஒரு மோகம் இருந்தது.
வங்கிகளில் கையெழுத்தை ஸ்கேனர் போன்ற ஒரு கருவிகொண்டு முன்பு நீங்கள் போட்ட கையெழுத்துடன் ஒப்பிட்டு அது நீங்கள் போட்டதா இல்லையா என்று சொல்லிவிடும் என்ற ஒரு கட்டுரை எழுதிக் கைத்தட்டல் வாங்கியிருக்கிறேன். இதை இன்று நினைத்தால் ‘சில்லரைத்தனமான’ விஷயமாக எனக்குப் படுகிறது.
செயற்கை அறிவு படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு லிஸ்ப், ப்ரோலாக் (LISP, ProLog) போன்ற அதற்குத் தேவையான கணினி மொழிகளைக் கற்று ’ஹலோ’ என்று டைப் அடித்தால் கணினி உடனே பதிலுக்கு ‘ஹலோ டா எப்படி இருக்கே!’ என்று கூறும். ’நலம்’ என்று பதில் கூறினால். ‘சந்தோஷம்’ என்று பதில் கூறும்படி செயலிசெய்து கணினியைப் பேச வைத்துவிட்டேன் என்று பூரிப்படைந்திருக்கிறேன்.
இன்று கூகிள் அசிஸ்டண்ட் (Google Assistant), அலக்ஸா (Alexa) போன்றவை உங்களுக்காக ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தன்னை மாற்றிக்கொண்டு பல விஷயங்களைச் செய்கிறது.
நாம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து இன்னும் ஒரு மணி நேரத்தில் மழை, வெளியே சென்றால் குடையுடன் செல்லவும் என்று கூறுகிறது. இன்று இருக்கும் டெக்னாலஜியால் கொடியில் சிகப்பு கலர் பனியன் காயப்போட்டிருக்கீங்க, அதைக் கொடியிலிருந்து எடுக்கவும் என்று அதனால் கூறமுடியும். ’பூமர்’ பனியன் என்று கண்டுபிடிக்கக் கொஞ்ச நாளாகும்.
இந்தச் செயற்கை அறிவு என்பது இன்னும் சில இரண்டு மூன்று வருடங்களில் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிடும். ஜாவா, C++ என்று கம்பெனிகள் தங்கள் ஊழியர்களைத் தயார் செய்துகொண்டு இருந்தார்கள். இன்று AI என்று எல்லோரும் கணினியை எப்படி யோசிக்க வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஓர் உதாரணம் கூறுகிறேன். என் காரில் ஏறியவுடன், என் மொபைல் என் காரின் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுவிடுகிறது. உடனே அந்த மொபைல் மூலம், கார் ஏசி, மியூசிக் சிஸ்டம் போன்றவற்றைக் கண்ட்ரோல் செய்யலாம். மேலும் காரின் ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றலாம், இறக்கலாம். கார் சக்கரங்களில் காற்று அழுத்தம் என்ன என்று பார்க்கலாம். காரை ஓட்டுவதைத்தவிர எல்லாம் செய்யலாம். இந்தச் சாதனம் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இணையத்துடன் தொடர்பில் இருக்கிறது. இதற்குப் பெயர் IoT என்பார்கள். Internet of Things என்பதின் சுருக்கம்.
அலுவலகத்திலிருந்து காரில் வீட்டுக்குப் புறப்படுகிறீர்கள். வாகன நெரிசல் ஏற்படுகிறது. ஒரு பைக், சைக்கிள் கேப்பில் புகுந்து உங்கள் காரை லேசாகத் தட்டிவிட்டுப் போகிறது. “வண்டிய ஓட்டரான் பாரு_____” என்று ஏதோ கெட்ட வார்த்தை சொல்லுகிறீர்கள்.
உங்கள் காரில் உள்ள சிஸ்டம் “என்ன தேசிகன், ரொம்ப கோபமாக இருக்கீங்கபோல.. உங்கள் ரத்த அழுத்தம் சற்றுமுன் அதிகமாகியது…இந்த டிராபிக் சரியாக இன்னும் 10 நிமிஷம் ஆகும், அதுவரை ’ஏசுதாஸின் உன்னிடம் மயங்குகிறேன்’ பாடலைக் கொஞ்ச கேளுங்கள்” என்று கூறி ஒரு பாடலை ஒலிபரப்பும். இது ஏதோ அறிவியல் புனைவுவில் வரும் கற்பனை என்று நினைத்துவிடாதீர்கள். இதை உங்கள் பிள்ளைகள் படிக்கும் ’பைத்தான்’ போன்றவற்றால் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு மாதத்தில் செய்து முடிக்கமுடியும்.
உங்கள் நடைப் பயிற்சிக்குக் கையில் மாட்டிக்கொண்டு ஓடும் ஒரு சாதனமோ உங்கள் ரத்த அழுத்தத்தை உடனே சொல்லிவிடும், அது உங்கள் மொபைலுடன் தொடர்பில் இருக்கிறது. நீங்கள் பேசிய கெட்ட வார்த்தை, அதை உச்சரித்த விதத்தைக் கொண்டு கோபம் என்று கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆகாது. நீங்கள் அடிக்கடி யுடியூப்பில் கேட்கும் பாடல் லிஸ்டிலிருது மெல்லிசைப் பாடலைப் பாடவிட சில வினாடிகள் போதும். இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைத்து… மிகச் சுலபம்.
சில வருடங்களில் உங்கள் கார், “இப்ப உங்களுக்குத் தேவை நிம்மதி. இரண்டு கையையும் ஸ்டீயரிங்கை விட்டு எடுங்கள். கொஞ்ச நேரம் சுதர்சன க்ரியா செய்யுங்கள், நான் வண்டி ஓட்டுவதை பார்த்துகொள்கிறேன்,” என்று சமத்தாகக் கூறும். தானியங்கிக் கார் ஆராய்ச்சியில் பல டாலர்கள் செலவிடுகிறார்கள். இது செயற்கை அறிவில் இன்னொரு பிரிவு.
தானியங்கிக் கார் ஓட்டும் செயலியை ஒருவர் எழுதி ’கிளவுட்’ ஏற்றிவிட்டால், எந்தக் கார் வேண்டும் என்றாலும் காசு கொடுத்து அதை உபயோகித்துக்கொள்ளலாம். இதை ’AI as a service’ என்பார்கள். ஏற்கெனவே கூகிள், மைக்ரோசாப்ட் போன்றவை இந்நேரம் எதையாவது டெஸ்ட் செய்துகொண்டு இருப்பார்கள். கட்டுரையின் ஆரம்பத்தில் கூகிள் டாக்ஸ் பற்றிச் சொல்லியிருந்தேன் அல்லவா? அதை ‘docs as a service’ என்று சொல்லலாம்.
நகரங்களில் வாகன நெரிசல் என்பது ஒரு பெரிய பிரச்சனை. இந்த வாகன நெரிசலை எப்படி எல்லாம் சரி செய்யலாம், சிக்கலான வழிமுறை (algorithm) கொண்டு அதைச் சரிசெய்யும் மென்பொருளை நீங்கள் கண்டுபிடித்தால் அதை ’traffice clearence as a service’ என்று கிளவுட்டில் போட்டுக் காசு பார்க்கலாம். இன்னும் 10 நிமிஷத்தில் இங்கே வாகன நெரிசல் வரும் சாத்தியம் 80% என்று மழை வருவதுபோல டிராபிக் ஜோசியம் சொல்லலாம்.
AIக்கு மிக முக்கியமான விஷயம் தகவல் அறிவுதான் (knowledge base என்பார்கள். இன்று இது இல்லாமலே செய்ய முடியுமா என்று ஒரு கூட்டம் அலைந்துகொண்டு இருக்கிறது).
இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம் பார்க்கலாம். நம் மூளைக்கு அறிவு என்பது எப்படி கிடைக்கிறது? குழந்தையாக இருக்கும்போது விளக்குமீது விரல் வைத்துச் சுட்டதால், அதைத் தொட்டால் சுடும் என்று நம் அறிவு அதைப் பதிவுசெய்து வைக்கிறது. அடுத்த முறை விளக்குப் பக்கம் சென்றால் ‘தொடாதே’ என்று அறிவு நமக்கு அறிவுரை கூறுகிறது. இதை ’ஹியூரிஸ்டிக்’ என்பார்கள். அதாவது நாமே கண்டுபிடித்துக் கற்றுக்கொள்வது.
இந்தச் செயற்கை அறிவின் உபயோகத்தைக் கொஞ்சம் ஆராயலாம். இன்று உலகம் முழுவதும் கோவிட் பரிசோதனைக்குச் ‘சி.டி.’ (CT) ஸ்கேன் செய்யப்படுகிறது. மருத்துவர் அந்த ரிப்போர்ட்டைப் பார்த்து உங்களுக்கு கோவிட் 15% வைரஸ் தாக்குதல் என்று சொல்லி ஏதோ மருந்து கொடுக்கிறார். இன்னொருவருக்கு 50% . வேறு மருந்து கொடுக்கிறார். இப்படி, தினமும் பல ஆயிரம் மக்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள்.
சுமார் இருபது ஆயிரம் மக்கள் பரிசோதனை செய்த சி.டி. ஸ்கேன் படங்களைக் கணினியிடம் கொடுத்துக் கூடவே நீங்கள் கொடுத்த சதவீதக் கணக்கையும், பிரிஸ்கிரிப்ஷனையும் கொடுத்தால் போதும். அடுத்த முறை நீங்கள் ரிப்போர்ட்டைக் கணினியிடம் கொடுத்தால், அது இவருக்கு 13.5% கொரோனா என்று துல்லியமாகச் சொல்லிவிடும். கூடவே மருந்து என்ன என்றும் சொல்லிவிடும்.
“டாக்டர் பிஸியா இருக்கிறார், கொஞ்சம் நேரம் ஆகும் ரிப்போர்ட் பார்க்க,” போன்ற பதில்களைக் குறைக்கலாம். ஐந்து நிமிஷத்தில் 5000 பேரைப் பரிசோதிக்கலாம். இந்தப் பரிசோதனை முடிவுகளை எல்லாம் ஒரே இடத்தில் சேகரித்து வைத்தால், மேற்கு மாம்பலத்தில் இரண்டாவது சந்தில் இருபது பேருக்கு 20% கோரானோ என்ற புள்ளிவிவரம் கொடுக்கலாம். இன்னொரு விஷயம், இது தப்பு செய்யாது! இந்த மாதிரி கணினி அறிவு வளர்த்துக்கொள்ள நிறையத் தகவல்களை வேகமாகப் பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
ஜூம் காலில் ’சார் உங்க வீடியோவைக் கொஞ்சம் ஆப் செய்யுங்கள் வாய்ஸ் கிளியரா இல்லை’ என்ற இன்றைய 4g கிட்டத்தட்ட மறையும் காலம் வந்துவிட்டது. நாளை 5g வந்து இன்னும் சில வருடங்களில் நீங்கள் பேசும் நபர் மனிதனா இல்லை இயந்திரமா என்று தெரியப்போவதில்லை. குழந்தைகளுக்கு ’Teacher as a service’ என்று யாராவது கண்டுபிடித்துவிடலாம்.
AI ராட்சசத்தனமாகச் செயல்பட்டு ராட்சனாகிவிடும். உங்களிடமிருந்து அதிகத் தகவல்களை உறிஞ்சி எடுத்து அதைக்கொண்டு அறிவை வளர்த்து நம்மை ஆட்டிப்படைக்கப் போகிறது. (மனைவியே தேவலாம்?)
முன்பு எழுத்தாளர் சுஜாதாவின் கையெழுத்தைப்போல் ஒரு ஃபாண்ட் உருவாக்க வேண்டும் என்று அதற்கு அவரை எழுத வைத்து அவர் எழுத்தைப் போலவே எழுத்துரு ஒன்றை உருவாக்கினார்கள். அதை பொதுவில் வெளியிடவில்லை. சுஜாதாவிற்கும் அதில் அவ்வளவு விருப்பம் இல்லை என்று எனக்கு தோன்றியது. (அந்த எழுத்துருவைக் கொண்டு எனக்கு ஒரு முன்னுரை மட்டுமே எழுதப்பட்டது.)
இப்போது இருக்கும் தொழில்நுட்பம்கொண்டு உங்களைப் பேசவைத்து, அதை ரிகார்ட் செய்து, உங்களை மாதிரியே கணினியைப் பேசவைக்க முடியும்.
இதனால் ‘நான்’ அடையாளம் பறிபோகிறது. தொண்டை கட்டிக்கொண்டு பேசும்போது “என்ன சார் உங்கள் குரல் உஷா உதுப் மாதிரி இருக்கு” என்று கேட்பதைப் பார்க்கிறோம். என்னை அடையாளப்படுத்துவது என் கையெழுத்தும், என் மொழி, என் குரல்.. இப்போது கணினி உங்களைப்போலவே உங்கள் கையெழுத்தில் கவிதை எழுதி, உங்கள் குரலில் பேச ஆரம்பித்தால்? அதை யாரும் விரும்பமாட்டார்கள். (சுஜாதா எழுத்துரு இதனால்தான் வெளியே வரவில்லையோ என்று யோசித்திருக்கிறேன்.)
மனிதன் இதை எல்லாம் விரும்பவில்லை என்றால் எதற்கு இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று தோன்றும். பேச முடியாதவர்கள் தங்களிடம் இந்தப் பேசும் கருவியைச் சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டால், உங்களைப் போலவே பதில் கூறும். இன்று போட்டோ ஷாப் உபயோகித்து ’ஃபேக் நியூஸ்’ வருவதுபோல, நாளை உங்கள் குரலை வைத்து ஆபாசமாகப் பேசி உங்களைக் கோர்ட்டுக்கு இழுக்க முடியும்.
மருத்துவத்தில் மட்டுமல்லாது, பல நிறுவனங்கள் இந்தச் செயற்கை அறிவை எப்படி உபயோகிக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். ”என்னதான் இருந்தாலும் ஹுமன் டச் வேண்டும்” என்று நினைப்பவர்கள், மனித வள மேலாண்மை (HR) இதை உபயோகிக்கும் நாள் மிகத் தொலைவில் இல்லை. ஆசாமி கம்பெனியில் இருப்பானா? இவனுடைய செயல்திறன் எப்படி இருக்கும் ? இவனை எப்படித் தக்க வைத்துக்கொள்ளலாம் ? போன்றவற்றை இனி AI செய்துவிடும்.
உங்கள் கார் எங்கோ மோதி உங்கள் கைகால் ஏதாவது முறிந்தால் உடனே அதைப் படம் எடுத்து அனுப்பினால் நீங்கள் செல்லும் மருத்துவமனையில் நீங்கள் வருவதற்கு முன் 3டி பிரிண்டிங் முறையில் உங்களுக்கு ஒரு செயற்கை உறுப்பு ரெடியாக இருக்கும். எல்லாம் செயற்கை அறிவு சாதனங்களே செய்துவிட்டால், பிறகு நமது அறிவை வைத்துக்கொண்டு… பயப்பட வேண்டாம். எந்த எந்த வேலைகளை AI செய்யலாம் என்பதற்கு நம் அறிவு இன்னும் தேவைப்படுகிறது!.
- சுஜாதா தேசிகன்
26-09-2020
சொல்வனம் இதழில் பிரசுரமான கட்டுரை
Sir, Mr Rengarajan flavour உடன் artificial intelligence கட்டுரை நன்று.
ReplyDeleteபிகு ஒரு சந்தேகம். வைரஸ் (ஒரு உயிரை) மனிதனால் உருவாக்க முடியுமா?
சகலகலா வல்லவன்
ReplyDeleteஅருமை. எனக்கு கம்ப்யூட்டர் பற்றி அறிவு கிடையாது, அதனால் எல்லாமே ஆ என்று பார்க்க வைக்கிறது!
ReplyDeleteநீங்கள் கம்ப்யூட்டர் சம்பந்தமான அலுவலகம் நடத்துகிறீர்களா?
Interesting article.. from what you have written in first para (I am storing all my works in cloud) , is it possible to have AI write articles / short stories?
ReplyDeleteYes. Let me write about that as well ☺️
Delete