’அடியேன் சாமிக்கு’ மூன்று செட் பார்சல்
கடந்த சில மாதங்களாக பிரபந்தம் புத்தகம் குறித்துப் பல அழைப்புகள் வரும். மார்ச் முதல் வாரம் என்று நினைக்கிறேன் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசியவர் ’அடியேன் சாமி’ என்று ஆரம்பித்தவுடன் அந்த அடியேனில் உண்மையான ‘அடியேன்’ ஒளிந்துகொண்டு இருந்தது. பேச்சு வட்டாரமொழியில் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமபுரத்தை நினைவுபடுத்தியது. குரல் நாற்பது என்றது.
“சாமி பிரபந்தம் புத்தகம் எங்கே கிடைக்கும் அடியேனுக்கு ஒரு பிரதி வேண்டும்” என்று சுத்தமான தமிழில் இருந்தது.
”புத்தகம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் ஆகும்” என்றேன்.
“அப்ப ஒரு மாதம் கழித்து மீண்டும் கூப்பிடட்டுமா ?”
“சரி, ஏப்ரல் முதல் வாரம் கால் செய்யுங்க”
சரியாக ஏப்ரல் முதல் வாரம் அவர் மீண்டும் அழைத்தார்
மீண்டும் அதே “அடியேன் சாமி!” என்று ஆரம்பித்தார்.
“நீங்க ஏப்ரல் முதல் வாரம் அழைக்க சொல்லியிருந்தீங்க…மன்னிக்கனும்” என்று மீண்டும் பிரபந்தம் புத்தகத்தை பற்றிக் கேட்டார்.
”புத்தகம் ரெடியாகிக்கொண்டு இருக்கிறது…உடையவர் திருநட்சத்திரம் 5-மே அன்று வெளியிட முடிவு செய்திருக்கி்றோம்… அப்ப கால் செய்யுங்க விலை விவரங்களைச் சொல்லுகிறேன்” என்றேன்.
உடையவர் திருநட்சத்திரம் அன்று அவரிடமிருந்து மீண்டும் தொலைப்பேசி அழைப்பு. என்ன பேசியிருப்பார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
“புத்தகம் ரிலீஸ் ஆகிவிட்டது என்று அதன் விவரங்களை அவருக்கு அனுப்பினேன்”
சற்று நேரத்தில் மீண்டும் என்னை அழைத்தார் “சாமி, மன்னிக்கனும்… எனக்கு மூன்று புத்தகங்களும் மூன்று செட் வேண்டும். கிரமத்துல வேற யாருக்காவது வேண்டுமா என்று கேட்டு தகவல் சொல்லுகிறேன். எனக்கு இந்த மாசம் சம்பளம் வந்தவுடன் உங்களுக்கு பணம் அனுப்பிவிடுகிறேன். மூன்று செட்டை எடுத்து வைக்க முடியுமா ?” என்றார்.
விடாப்பிடியான இந்த ’persistent’ நபர் பற்றி மேலும் தெரிந்துகொள்ள
”நீங்க என்ன வேலை செய்யறீங்க ?” என்றேன்.
”....கூலி வேலை செய்கிறேன்”
“எவ்வளவு சம்பளம் கிடைக்கும் ?”
“வேலையைப் பொருத்து.. சில மாதம் …. சில மாதம்…. “
“உங்க சம்பளத்துக்கு .. புத்தகத்துக்கு செலவு செய்ய முடியுமா ? ” என்று கேட்டவுடன், அவரிடமிருந்த பணிவான தோனி மறைந்து
“என்ன சாமி இப்படி சொல்லறீங்க. ஆழ்வார்கள் எவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்காங்க … ஆழ்வார்கள் எவ்வளவு கஷ்டப்படு இதைப் பாடியிருக்காங்க. இதுக்கு கூட செலவு செய்யவில்லை என்றால் எப்படி ? இது எல்லாம் பொக்கிஷம் இல்லையா ?” என்று கூறியவர்
“அடியேனுடைய உண்மையான பெயர்… ஸ்ரீரங்கம் அண்ணன் சாமியிடம் தான் பஞ்சசம்ஸ்காரம் செய்துகிட்டேன்.. இப்ப என் பெய.... ” ” என்று தொடர்ந்து சில நிமிடங்கள் பேசினார்.
பல உபன்யாசம் கேட்டிருக்கிறேன். நேற்று இவருடைய இரண்டு நிமிட உபன்யாசம் ஒருவிதமான ஞானத்தைக் கொடுத்தது.
தொடர்ந்து அவரிடம் “ஒரு செட் போதுமே எதுக்கு மூன்று செட் ?”
“சாமி அடியேனுக்கு ஒண்ணு சாமி! . என் மச்சானுக்கு ஒண்ணு, என் வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் நண்பனுக்கு ஒண்ணு வாங்கித் தரலாம் என்று இருக்கிறேன். சம்பளம் வந்தவுடன் பணம் அனுப்பிவிடுகிறேன். மூன்று செட் தனியா எடுத்து வையுங்க”
”முகவரியை மட்டும் கொடுங்க, நான் மூன்று செட் அனுப்பிவைக்கிறேன்”
பணம் வாங்கினால் அபசாரம்.
- சுஜாதா தேசிகன்
6.5.2022
ஸ்ரீ முதலியாண்டான் திருநட்சத்திரம்.
புத்தகம் குறித்த விவரங்கள் இங்கே இருக்கிறது https://sujathadesikan.blogspot.com/2022/05/blog-post_3.html
Comments
Post a Comment