Skip to main content

ஆசாரியரின் ‘அநுக்ரஹ’ ஸ்ரீமுகம்

ஆசாரியரின் ‘அநுக்ரஹ’ ஸ்ரீமுகம்




சென்ற மாதம் அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர்  பெங்களூர் விஜயத்தின் போது அவரைச் சேவித்து ஆசீர்வாதம் பெற்றேன். 

கிளம்பும் முன் மீண்டும் அவரைச் சேவித்து “இன்னும் இரண்டு வாரத்தில் பிரபந்தம் புத்தகம் இரண்டாம் பதிப்பு வருகிறது.  உங்கள் ஆசிரிவாதம் வேண்டும்” என்றேன். 

“நன்றாக வரும். இது போல மேன்மேலும் செய்யுங்கள்” என்று ஆசிவர்வாதம் செய்தார். அப்போது கையில் இருந்த முதல் பதிப்பை அவரிடம் சமர்பித்தேன். 

“இந்தப் புத்தகம் நினைவு இருக்கிறது” என்று இரண்டாம் பதிப்பின் விவரங்களை கேட்டறிந்தார். 

வீட்டுக்கு திரும்ப, காரை ஸ்டார்ட் செய்யும் போது ஓர் எண்ணம் தோன்றியது. 

ஆசாரியன் இருக்கும் அறைக் கதவை தட்டி உள்ளே சென்று அவரிடம் “இரண்டாம் பதிப்புக்கு ஸ்ரீமுகம் அருளவேண்டும்” என்றேன். 

“மெலிதான புன்னகையுடன். ஸ்ரீ காரியம் ஊரில் இல்லை. வந்தவுடன் ஏற்பாடு செய்கிறேன்” என்று அருளினார். 

வாகனத்துக்கு வந்த போது புத்தகம் அச்சுக்கு செல்லும் நாள் நினைவுக்கு வந்தது.  

மீண்டும் கதவை தட்டிக்கொண்டு உள்ளே சென்றேன். 

“புத்தகம் ஒரு வாரத்தில் அச்சுக்கு செல்கிறது....அதனால் இன்னும் 4-5 நாட்களில் ஸ்ரீமுகம் வேண்டும்” என்று எழுத்தேன். 

“அப்படியா ? இன்னும் இரண்டு நாட்களில் மைசூர் பெலகொலா கிளம்புகிறோம். வந்த பிறகு தருகிறேன்!” என்றார் அதே புன்னகையுடன்.

சித்திரை ஸ்வாதி திருநட்சத்திரம் அன்று மாலோலன் திருமஞ்சனத்தை தரிசிக்க அடியேன் பெலகொலா சென்றேன். 

அங்கேயும் ஆசாரியனை விடவில்லை. மீண்டும் ஸ்ரீமுகம் குறித்து கேட்டேன். 

“நினைவிருக்கிறது.. ஸ்ரீகாரியம் வந்தவுடன் தருகிறேன். இல்லை நானே பெங்களுருக்கு வந்தவுடன் எழுதித் தருகிறேன்” என்று சாதித்தார். 

பெங்களூரில் ஒரு அகத்தில் டோலோ உற்சவம். அங்கேயும் அடியேன் ஆஜர். 

“நாளை மடத்துக்கு வருகிறேன். ஸ்ரீமுகம் சாதிக்க வேண்டும்” என்றேன். 

புன்னகையில் சரி ஒளிந்துகொண்டு இருந்தது.

மறுநாள் மடத்துக்கு  சென்ற போது அங்கே மடத்தின் மேலாலர் ஸ்ரீ.உ.வே தேசிகன் ஸ்வாமியை அழைத்து விவரங்களை கூறி ஸ்ரீமுகம் எழுதப் பணித்தார். 

ஸ்ரீமுகத்தைப் படித்துப் பார்த்து அக்ஷதையுடன் 'நல்லா வரும்’ என்று அருளினார். 



சமீபத்தில் அடியேனின் ஆசாரியன் வேண்டுவதற்கு முன்னரே வரம் அளித்து மகிழும் பேரருளாளனை ’செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ’ என்று குள்ளக் குளிரக் கண்ட காட்சியை பார்த்த போது, ஸ்ரீமுகம் கேட்ட போது அந்தக் கனிவான புன்னகை  நினைவுக்கு வந்தது. 

ஸ்ரீமுகம் அவர் திருமுகம் தான்! 

- சுஜாதா தேசிகன்
19.05.2022

Comments