Skip to main content

அநுபந்தம் - அறிமுகம்

அநுபந்தம் - அறிமுகம்




ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் புத்தகத்தைத் தொகுக்கும் சமயம், ஒப்புநோக்கப் பலர் பதிப்பித்த புத்தகங்களை ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. பழைய பதிப்பில் மறைந்திருந்த தகவல்கள் கண்டு வியந்தேன். கணினி இல்லாத அக்காலத்தில், கணினிக்கு நிகரான அறிவைக் கொண்டு அவர்கள் தொகுத்த விஷயங்கள் பிரமிப்பூட்டியது.

துரதிர்ஷ்டவசமாக  பிற்கால வெளியீடுகளில், இந்தப் பொக்கிஷங்களைத்  தொலைத்துவிட்டோம். சில உதாரணங்களைத் தருகிறேன். 

1943ஆம் ஆண்டு ’மயிலை மாதவ தாசன்’ பதிப்பித்த புத்தகத்தில் பல குறிப்புகள் இருக்கிறது. உதாரணமாக ஆழ்வார் பாசுரங்களில்  எங்கு எல்லாம் வண்டுகள், கிளி, குயில் போன்றவற்றை வழிபட்டுள்ளார்கள்; ஆழ்வார்களைக் குறித்த கல்வெட்டுக்கள் போன்றவை ஒளிந்துக்கொண்டு இருந்தன. இது போன்ற விஷயங்களை தேடி எடுத்து தந்துள்ளோம். 

1956, எஸ்.ராஜம் அவர்கள் பதிப்பித்த திவ்யப் பிரபந்தப் புத்தகத்தில் முதலாயிரம் தவிர்த்து, மற்ற ஆயிரங்களுக்கு அருஞ்சொல் அகராதி இருக்கிறது. அகராதி சொற்களை தொகுத்து,  மீண்டும் மீண்டும் வரும் வார்த்தைகளை நீக்கி, முதலாயிரத்தில் வரும் சில அருஞ்சொற்களை அத்துடன் சேர்த்து ஒன்றாக்கி இப் புத்தகத்தில் தந்துள்ளோம். 

அதே புத்தகத்தில் ஆழ்வார்கள் பாசுர வரிகளைக் கொண்டே அவதாரக் கதை குறிப்புக்களையும் தொகுத்துள்ளார்கள். அதையும் சேர்த்துள்ளோம்.  

1997ல் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் அவர் அண்ணாவின் நினைவாக பிரபந்தத்தில் வரும் திருமாலிலின் திருநாமங்களை பாக்கெட் சைஸில் பதிப்பித்து எனக்கு அன்புடன் வழங்கினார். அதில் திருமாலின் 900 திருநாமங்கள் இருந்தன. மேலும் நூறு திருநாமங்களைத் தேடிய போது காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் தொகுத்த திவ்யப் பிரபந்த திருநாமமாலை புத்தகத்தில் திருநாம சுரங்கமே இருந்தது. மொத்தம் 1008 திருநாமங்களைத் தொகுத்து, கூடவே தாயாரின் திருநாமங்கள் 108 கண்டுபிடித்து இதில் கொடுத்துள்ளோம். 

முதல் பதிப்பில் பலரின் பாராட்டைப் பெற்ற  ஆழ்வார்கள் கதைகள், ஆழ்வார், ஆசாரியர்களின் திருநட்சத்திரம், ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு திருவாராதனம் போன்றவற்றுடன், இயல் சாற்று, சாத்துமுறையை (இருகலையாருக்கும்) இதில் சேர்த்திருக்கிறோம். 

108 திவ்ய தேச வரைபடத்துடன் திவ்ய தேசம் குறித்து முக்கிய குறிப்புகளும் இப்பதிப்பில் இடம்பெற்றிருகின்றன. 

நாலாயிரம் முழுவதிலுமுள்ள எல்லா விஷயங்களையும் விடாது கூறுவது மிக்க கடினமான செயல், இப்புத்தகத்தில் சிற்சில விஷயங்களை மட்டும் கோடிட்டுக்காட்டியிருக்கிறோம். அடியார்கள் தங்கள் ஆராய்ச்சி அறிவைக்கொண்டு இதைப் பெருக்கிக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. 

நம் பெரியோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷங்களை, இளைய தலைமுறையினருக்கு அவர்களின் வாழ்க்கையில் என்றாவது பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை ‘ராமானுஜ தேசிக முனிகள் டிரஸ்ட்’ மூலம் திவ்யப் பிரபந்தம் இரண்டாம் பதிப்பில் ‘அநுபந்தமாக’ வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அடியேன்,
சுஜாதா தேசிகன் 


Comments