Skip to main content

செய்ந்நன்றி

செய்ந்நன்றி




திருக்குறளில் செய்ந்நன்றியறிதல் என்று ஓர் அதிகாரமே இருக்கிறது. பொதுவாக நாம் பிறருக்குச் செய்த நன்றி தான் நினைவில் இருக்கும். ஆனால் பிறர் நமக்கு செய்த நன்றி மறந்துவிடுவோம். 

கைமாறு கருதாது செய்த ‘செய்ந்நன்றியை’ போற்ற வேண்டாம், மறக்காமல் இருக்கலாம். மறப்பதற்கு முன் அதை இங்கே எழுதிவிடுவது என்ற முடிவு. . 

ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் இரண்டாம் பதிப்பிற்குப் பலர் உதவியிருக்கிறார்கள். 

புத்தகம் அச்சுக்குச் செல்லும் சமயம், அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கரை சேவித்து, பிரபந்தம் இரண்டாம் பதிப்பு வருகிறது, அதற்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்றேன். “நல்லா வரும்!” அன்று திருவாய் மலர்ந்தார். சட்டென்று அவரிடம் ”ஸ்ரீமுகம் அருள முடியுமா ?” என்று கேட்க 

“ஸ்ரீகாரியம் ஊரில் இல்லை, வந்தவுடன் தருகிறேன்” என்றார். 

“புத்தகம் சில நாளில் அச்சுக்கு போகிறது… “ என்றேன். 

உடனே ஸ்ரீமுகத்துக்கு ஏற்பாடு செய்து அவர் கையால் அக்ஷதையுடன் ஆசீர்வதித்தார்.  

தன் 90 வயதிலும் சிரமம் பாராமல், திரு பி.எஸ்.ஆர் என்ற ‘கடுகு’ ஆசாரியன் திருவடி அடைவதற்கு ஒரு நாள் முன் இந்த பிரபந்தத்தை அடியேனுக்கு அளித்ததை என்ன என்று கூறுவது. திருமதி கமலா ரங்கநாதன் சமீபத்தில் சென்னை விஜயத்தின் போது மனம் நிறைந்து வாழ்த்தினார். புத்தகம் நன்றாக வந்திருப்பதற்கு காரணம் இந்த தம்பதியினரின் ஆசீர்வாதம் மிக முக்கியமான காரணம். 

சந்தேகம் என்று கேட்ட போது எல்லாம் 85 வயதைக் கடந்தும் ஆர்வத்துடன் மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே.அரங்கராஜன் அவர்கள் தகுந்த உதாரணம் கொண்டு விளக்கியோதோடு மட்டும் அல்லாமல், புத்தகத்துக்கு அணிந்துரையும் கொடுத்துள்ளார். 

ஸ்ரீமந் நாதமுனிகள் அவதார ஸ்தலம், காட்டுமன்னார் கோயில் அஷ்டகோத்ரம் கச்சிக் காப்பு முனைவர் எம்.எஸ்.வேங்கடாச்சாரி M.A, MPhil, Ph.D, DA அவர்கள் பாராட்டுரையை தன் கைப்பட எழுதி அனுப்பியிருந்தார். 

பாடபேதம் மட்டும் அல்லாமல், பதிப்பு பேத சந்தேகங்கள் வரும் போது 80 வயதை கடந்த பேராசிரியர் டாக்டர் ம.பெ.சீனிவாசன் அவர்கள் எங்கே ஒற்று வரும் எங்கே வராது என்று பல மணி நேரம் வகுப்பு எடுத்து புத்தகத்துக்கு உதவினார். எப்போது வேண்டும் என்றாலும் என்னை கூப்பிடுங்கள் என்று யார் இந்த காலத்தில் சொல்லுவார்கள் ? 

புத்தகம் வெளியிடுவதற்கு முன் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் என்று கேட்டவுடன் நிறைந்த மனத்துடன் அதை வழங்கிய ஸ்ரீ.உ.வே. நாகை வீரராகவாச்சாரியார் ( பட்டன்னா ஸ்வாமிகளும் ), திருமங்கை மன்னன் அவதார ஸ்தலத்தில் இருக்கும் ஸ்ரீ உ.வே. எம்பார் ராமானுஜன் ஸ்வாமிகளுக்கும் என் நமஸ்காரங்கள். 

புத்தகத்து நல்ல பிரிண்டர் அமைவது இறைவன் கொடுத்த வரம். தமிழ் கூறும் நல்லுகத்தில் ‘பதிப்பகம்’ ‘பிரிண்டர்’  என்ற எழுத்தின் ஓரத்தில் துரதிஷ்டவசமாக கொஞ்சம் கறை படிந்துள்ளது.  திருவல்லிக்கேணியில் ஆர்.என்.ஆர் பிரிண்டர்ஸ் அதற்கு விதிவிலக்கு. கூட பிறந்தவர்கள் போல உதவி செய்து புத்தகத்தை சொன்ன நேரத்துக்கு qualityயுடன்  கொண்டு வந்துவிடுவார்கள். தொழில் தர்மம் அறிந்தவர்கள். அவர்கள் கூறுவதை அப்படியே  ‘face value’ எடுத்துக்கொள்ளலாம்.  அங்கே பணி செய்யும் அனைவரும் இன்முகத்துடன் பேசுவார்கள். 

இரண்டாம் பதிபிற்கு மெருகூட்டுவது ஸ்ரீ பாலாஜி ரவி அவர்களின்  கோட்டோவியங்கள்.  ஆழ்வார்கள் சந்நிதிக்கு முன் சில்பி போல பல நாட்கள் அமந்து வரைந்த எல்லா ஓவியங்களையும் கேட்டவுடன் தந்து உதவினார். 

புத்தகத்தின் அட்டைப் படம் மிக முக்கியம். மூன்று புத்தகத்தின் முகப்பு அட்டைப் படமும் D. Sudakaran அவர்களுடையது. அவருக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். 

அட்டையில் உட்புறம் அமைந்திருக்கும் சேர்த்தி படங்கள், ஆழ்வார், ஆசாரியர்களின் படங்கள் அற்புதமானவை. அவற்றை உவந்து அளித்த  N.Devathirajan, SriRangavilasam, K Kanakaraj, Aravind Photography, Shidhu Vishaal மற்றும் திரு.க்ளிக் ரவி அவர்களுக்கு மிக்க நன்றி. 

பிழைத்திருத்தம் மட்டும் அல்லாமல் கணக்கு வழக்கு என்று பல உதவிகளை செய்துவரும் ஸ்ரீதேவி வரதராஜன் தம்பதியினர் இருப்பதால் நிம்மதியாக தூங்க முடிகிறது. 

இந்தப் பதிப்பில் பல வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி பிழை திருத்தம் செய்ய உதவி செய்த ஸ்ரீமதி ப்ரஸன்னா சுப்ரமணிய ராஜா அவர்களுக்கும், அனுபந்தத்தின் சில பகுதிகளை உள்ளீடு செய்ய உதவி செய்த, ஸ்ரீ பிரசன்னா வெங்கடேசன்,  ஸ்ரீ P R சுரேஷ், ஸ்ரீ  பா.உப்பிலி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், Referenceக்கு புத்தகம் கேட்டவுடன் தேடி அனுப்பிய  ஸ்ரீரங்கம் மாதவன் அவர்களுக்கும், மேலும் பல நண்பர்களுக்கும் நன்றி. 

கடைசி ஆனால் மிக முக்கியமான விஷயம். புத்தகத்துக்கு எந்த சேதாரமும் இல்லாமல், அதை பேக் செய்து எந்த லாபமும் இல்லாமல் அனுப்ப தொடர்ந்து உதவி செய்வது ’New Horizon Media’  நண்பர் பத்ரி சேஷாத்திரி மற்றும் ஹரன் பிரசன்னா. 

மேலும் சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அவர்க்ள் என்னை மன்னிப்பர்களாக. 

படம் : ஸ்ரீரங்கம்  உடையவர் சந்நிதி தானான திருமேனியிடம் புத்தகம் ஆசீர்வாதம் பெற்றது. 

அடியேன்,
சுஜாதா தேசிகன்
6.5.2022

Comments