Skip to main content

உபகாரம்

 உபகாரம்


தினமும் நாம் உபயோகிக்கும் வார்த்தை ‘உபகாரம்’ ; உதவி என்று சொல்லலாம், ஆங்கிலத்தில் ‘help'. நீங்கச் செய்தது பெரிய உபகாரம் என்றால் உடனே ’ஏதோ என்னாலான உபகாரம் செய்தேன் என்று அடக்கத்துடன் பதில் சொல்லுவார்கள்.

கோயிலுக்குச் செல்லும்போது அங்கே அர்ச்சகர் ‘உபகாரம் ஏதாவது இருக்கா ?” என்று கேட்டால் பெருமாளுக்குப் புஷ்பம், பழம் என்று ஏதாவது வாங்கி வந்திருக்கிறீர்களா என்று அர்த்தம். தளிகை என்றால் சமையல் என்பது போல இது ஸ்ரீ வைஷ்ணவ பாஷை.

பெருமாளுக்கு நாம் என்ன உபகாரம் செய்ய முடியும் ? பெருமாளுக்கே உபகாரமா ? என்று எனக்குத் தோன்றும். இன்று இந்தச் சொல்லுக்கு அர்த்தம் இன்று கிடைத்தது.

முன்பு ஒரு காலத்தில், சனிக்கிழமை அம்மா எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது குழந்தைகள் வேண்டாம் என்று ஓடிக் குளிக்க அடம் பிடிக்கும். காரணம் சீயக்காய் என்றாலே பல குழந்தைகளுக்கு அலர்ஜி. அந்தக் குழந்தையே ஒரு சனிக்கிழமை சமத்தாக உட்கார்ந்துகொண்டு ‘அம்மா எண்ணெய்த் தேய்த்துவிடு’ என்று சொன்னால் உடனே அந்தத் தாய் குளிர்ந்து ‘சமத்து... என்ன உபகாரம் நீ இன்றைக்குச் செய்தாய்’ என்று சந்தோசப்படுவாள்.

பெருமாள் எண்ணெய்க் கிண்ணம் என்ற நல்வழியுடன் வரும்போது, நாம் அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடுகிறோம். அவரும் தாய் போலப் பொறுமையாகப் போராடுகிறார், ஒரு நாள் நம் உள்ளம் அவனிடம் செல்லும்போது பெருமாள் அந்தத் தாய் போல ‘என்ன உபகாரம் நீ எனக்குச் செய்தாய்’ என்று சந்தோஷப்படுவாள்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தில் ‘உபகாரம்’ என்ற வார்த்தையை இரண்டு முறை உபயோகித்துள்ளார். 

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால்
போய் உபகாரம் பொலிய கொள்ளாது அவன் புகழே
வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு

துளசி மாலைப் பெருமாளை கூப்பிட்டு அவன் புகழ்பாடி கைங்கரியம் செய்வதைப் பரமபதத்தில் சென்று அல்லவா செய்ய வேண்டும் ? இங்கு இருந்தபடியே அவன் குணங்களை வாயால் பிதற்றுவது போதுமா ? போதாதா ? நீயே சொல்லு என் மனமே ! என்கிறார். 

வாயால் பாடுவதையும், பரமபதத்தில் செய்யும் கைங்கரியம் இரண்டையும் உபகாரம் என்கிறார் ஆழ்வார். 

அவனே உபகரிப்பவன் ( உபகாரி ) என்று தெரிந்துகொண்டால் அதுவே அவனைப் புரிந்துகொள்ளும் உபக்ரமம் ( ஆரம்பம் )

- சுஜாதா தேசிகன்
22-09-2019

படம் நன்றி :  Krishnakumar Gurumurthy

Comments

  1. அருமை ஸ்வாமி.

    ReplyDelete
  2. 🙏🙏 தாசன். தினந்தோறும் உங்களுக்குத் தேடல், எங்களுக்கு உபதேசம். புது அர்த்தங்கள். அடியேன்.

    ReplyDelete
  3. தேதி ஏன் போன வருடம்?

    உங்கள் மூலம் வைஷ்ணவ சம்பிரதாயங்கள் புரிய முடிகிறது.

    ReplyDelete
  4. Thanks for the photo credits...Never thought you would remember me after so many days

    ReplyDelete
  5. Desikan Swamy, your apt quote of 39th Paasuram of Periya Thiruvanthaadi is commendable. UPAKAARAM KANDARULA PANNUDAL is a part of Sri Vaishnavism cult. Daasan Adiyen Venkat Desikan

    ReplyDelete

Post a Comment