Skip to main content

திருக்கோட்டியூர் செல்வ நம்பி

திருக்கோட்டியூர் செல்வ நம்பி


’திருக்கோட்டியூர்’ என்றால் உடனே ஸ்ரீராமானுஜர் பதினெட்டு முறை நடந்து சென்ற விஷயமும்,  திருக்கோட்டியூர் நம்பியும் நம் நினைவுக்கு வருவார்கள்.  திருக்கோட்டியூர் செல்வ நம்பி என்ற ஒருவர் நம் நினைவுக்கு வருவதில்லை. அவரைப் பற்றித் தான் இன்று நாம் பார்க்க போகிறோம். 

பெரியாழ்வாருக்கு கண்ணன் மீது அளவு கடந்த பிரியம். அது போல திருக்கோட்டியூர் மீதும்! பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிவிட்டு, பெரியாழ்வார் என்ற பட்டம் பெற்று, பெரியாழ்வார் திருமொழியை எப்படி ஆரம்பிக்கிறார் என்று பாருங்கள். 

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்து அளறு ஆயிற்றே

கண்ணன் பிறந்த இடம் திருக்கோட்டியூர் என்று கொண்டாடுகிறார். ஏதோ விஷயம் இருக்க வேண்டும், சற்று ஆராயலாம். 

ஒருமுறை பெரியாழ்வார் திருக்கோட்டியூருக்கு அவருடைய தோழர் செல்வ நம்பியைப் பார்க்க வருகிறார். அங்கே சௌமிய நாராயணப் பெருமாளைச் சேவித்தபோது பெருமாள் கண்ணனாகக் காட்சி கொடுத்தார். அது மட்டுமல்லாமல், திருக்கோயில் நந்தகோபன் மாளிகையாகவும், அந்த ஊர் ஆயர்பாடியாகவும், ஊர் மக்கள் ஆய்ச்சியர்களாக அவருக்குத் தெரிந்தார்கள். அந்தப் பக்தி அனுபவத்தை அப்படியே நமக்குத் தந்துள்ளார். யார் இந்தச் செல்வ நம்பி ? 

பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்த கதை எல்லோருக்கும் தெரியும். பாண்டியநாட்டை ஆட்சி செய்த வல்லபதேவன் என்ற அரசனுக்கு 'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்னவழி?' என்று சந்தேகம் வந்தபோது தன் குரு செல்வநம்பியை அழைத்து அதற்கு விடை கேட்டான். செல்வநம்பி விஷ்ணுசித்தர்  அழைத்துப் பரதத்துவத்தை பாண்டியன் சபையில் நிலைநாட்டச் செய்தார். விஷ்ணுசித்தர் முன் 

பொற்கிழி தானாக முன்னே தாழ வளைந்தது. வல்லபதேவன் மகிழ்ந்து 'பட்டபிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரச்செய்தான். இந்தக் காட்சியைப் பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து விஷ்ணுசித்தருக்குக் காட்சி தந்தார். அதைக் கண்டு  உன் அழகிற்கு கண்பட்டுவிடப் போகிறதே என்று நினைத்து எம்பெருமானைப் பல்லாண்டு வாழ்க என்று பாடி பெரியாழ்வார் என்று போற்றப்பட்டார். 

வல்லபதேவன் என்ற அரசனுக்குப் புரோகிதராகவும், அரசவையில் குருவாகவும் அறிவுரை கூறிவந்தார் இந்தச் செல்வ நம்பி. இவர் பரம பாகவதராகவும் இருந்தார். செல்வ நம்பியின் ஊர் திருக்கோட்டியூர்!

பெரியாழ்வாருக்கு இவர்மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கிறது. 

எப்படி என்று பார்க்கலாம். 

தினமும் சேவிக்கும் பல்லாண்டு பாசுரத்தில் வரும் இந்த வரிகள் இவை கூர்ந்து கவனியுங்கள். 

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனை போல திருமாலே நானும் உனக்கு பழவடியேன்

இதில் பெரியாழ்வார் - “குற்றம் குறை எதுவும் இல்லாத திருக்கோட்டியூரில் உள்ளவர்களுக்கு தலைவரும், வைணவப் பற்றில் தலை சிறந்த வருமான செல்வநம்பியை போல அடியேனும் உனக்குப் பழங்காலத் தொட்டு உன் அடியவன்” என்கிறார். பெரியாழ்வாரே செல்வநம்பியைப் போல என்று சொன்னால் இவருடைய பெருமையை என்ன என்று சொல்லுவது ? 

பகவானிடம் அபிமானம் மிக்கவர் செல்வ நம்பி என்று பெரியாழ்வார் கூறுவதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். 

பெரியாழ்வார் திருமொழியில் வரும் ஒரு பாசுரம் இது 

காசின் வாய்க் கரம் விற்கிலும்
கரவாது மாற்று இலி சோறு இட்டுத்
தேசவார்த்தை படைக்கும் வண்
கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்

அதாவது திருக்கோட்டியூர் வாசிகள், ஒரு பொற்காசுக்கு ஒரு பிடி நெல்விற்கும் பஞ்ச காலத்திலும் தம் பொருள்களை மறைத்து வைக்காமல் பிரதி பயனையும் எதிர்பாராமல் விருந்தினர்க்கு உணவு அளித்து உபசரிப்பார்கள் என்கிறார். இதற்கு எடுத்துக்காட்டு செல்வநம்பி தான்! அந்தக் கதையைச் சொல்லுகிறேன். 

ஒரு சமயம் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் திரளாகத் திருவனந்தபுரம் யாத்திரையின்போது வழியில் திருக்கோட்டியூரில் உள்ள ஊர்த் தலைவரான செல்வ நம்பி திருமாளிகைக்குச் சென்றார்கள். அப்போது செல்வ நம்பி வெளியூர் சென்றிருந்தார். அவர் மனைவி “தாம் செய்த பாக்கியம் இவ்வளவு ஸ்ரீவைஷ்ணவர்கள் வீடு தேடி வந்திருக்கிறார்கள்” என்று மகிழ்ந்து தம் திருமாளிகை களஞ்சியத்தில் இருந்த நூறு கோட்டை(ஒரு கோட்டை என்பது இரண்டு மூட்டை அளவு) விதை நெல்லைக் குத்தி அவர்கள் மகிழும்படி உணவு அளித்தார். 

மறுநாள் நல்ல மழை, செல்வ நம்பியும் வீடு திரும்பியிருந்தார். ஊர்காரர்கள் செல்வ நம்பியிடன் வந்து நல்ல மழையாக இருக்கிறது விதைக்க விதை நெல் வேண்டும் என்று வேண்டி நின்றார்கள். செல்வநம்பி களஞ்சியத்தில் நெல்லில்லாததைக் கண்டு மனைவியிடம் 

”நெல்லை என்ன செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அவர் மனைவி “நேற்றே விதைத்துவிட்டேன்” என்றார்

“எங்கே விதைத்தாய் ?” என்று கேட்க அதற்கு அவள் “பரமபதத்திலே விதைத்தேன்” என்றார்.

இதைக் கேட்ட செல்வநம்பி மிகவும் ஆனந்தமடைந்தார்.

அதே பெரியாழ்வார் திருமொழியில் இன்னொரு பாசுரம் இருக்கிறது 

நளிர்ந்த சீலன் நயாசலன் அபிமானதுங்கனை நாள்-தொறும்
தெளிந்த செல்வனை சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ளகிலார்களே

இதில் பெரியாழ்வர் செல்வநம்பி என்பவர் குளிந்த சீல குணம், தவறாத நீதி, இறை அனுபவம் ஆகியவற்றில் மேம்பட்டவராய் நாள்தோறும் தெளிவு ஓங்கக் கைங்கரியம் செய்து வருவார். செங்கண்மால் இவரை அடிமை கொண்டவர். இத்தகைய திருக்கோட்டியூரில், கோவிந்தன் குணம் பாடும் அடியவர்கள் உள்ளார்கள். இந்நாட்டில் விளைந்த தானியங்களை அரக்கர்களால் கொள்ள அடிக்க முடியாது. 

செல்வ நம்பிபற்றி மேலும் சில தகவல்கள். இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் பெருங்கருணை என்ற சிற்றூரில் அவதரித்தவர். இவருடைய தந்தையின் பெயர் சௌமிய நாராயணன். இவர் திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வந்தார். (இரண்டு பாடல்கலிலும் செல்வநம்பியை பெரியாழ்வார் ‘அபிமானதுங்கனை’ என்று கூறுகிறதை பார்க்கலாம்.)

சிறுவயதில் செல்வநம்பி பெருங்கருணை என்ற தன் தாய் பிறந்த ஊரில் அவருடைய மாமாவிடம் வேதம், சாஸ்திரம் எல்லாம் நன்கு கற்று பாண்டிய மன்னன் அரசவையில் ராஜ புரோகிதராக இருந்தார். மன்னன் பெருங்கருணையில் ஒரு வரதராஜ பெருமாள் கோயில் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தான்.  அந்தக் கோயிலில் இருக்கும் செல்வ நம்பி தான் இங்கே படத்தில் இருப்பவர். 

செல்வநம்பி வாழி திருநாமத்தில் ஒரு வரி  'மறையவர்கோன் பட்டர்பிரான் வாழ்த்துமவன் வாழியே ' என்று வருகிறது பெரியாழ்வார் வாழி திருநாமத்தில் வரும் ஒரு வரி ' செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே’ 

இதுபோல ஸ்ரீவைஷ்ணவர்கள் இருந்ததால் தான் இன்றும் தீங்கின்றி நாடு முழுவதும்  மழை பெய்கிறது! 

அவருடைய வாழி திருநாமம் 

அன்னவயல் கோட்டி நகர்க்கதிபத்தியோன் வாழியே
ஆவணிசேர் பூசத்தில் அவதரித்தான் வாழியே
வண்ணமலராள் கோனாய் வந்துதித்தான் வாழியே
மறையவர்கோன் பட்டர்பிரான் வாழ்த்துமவன் வாழியே
பன்னுபல நற்கலைகள் பயிலுமவன் வாழியே
பண்புடனே கோட்டிநம்பி பணியுமவன் வாழியே
தென்னவனுக்காரியனாய்த் தேர்ந்துரைப்போன் வாழியே
செல்வ நம்பி திருவடிகள் சகதலத்தில் வாழியே 

செல்வநம்பி திருவடிகளே சரணம்.
- சுஜாதா தேசிகன்
14-09-2020
இன்று ஆவணி பூசம் - செல்வநம்பி திருவடிகள் திருநட்சத்திரம் 

படம் : பெருங்கருணை அவதாரஸ்தலத்தில் செல்வநம்பி 


Comments

  1. https://drive.google.com/file/d/1KpbZEUN9AIXjH_SoHF9RL-UNJuy6fFPE/view?usp=sharing
    ஸ்ரீசெல்வநம்பி வைபவம் ..
    ஒலிப்பதிவு
    ஸ்ரீ உ வே திருக்கோட்டியூர் பெருங்கருணை விஜயசாரதி ஸ்வாமி .. ..
    அடியேன் ராமானுஜ தாசன்

    ReplyDelete
  2. உள்ளம் தித்தித்தது ஸ்வாமி.

    ReplyDelete
  3. 🙏 இந்த அற்புத விளக்கங்கள், முன் கதைகள் தெரியாமல் பாசுரங்கள் படித்து முழுப் பொருளும் அறியாமல் இருந்து என்ன பயன். உங்கள் சேவை அளப்பரியது. தாசன்.

    ReplyDelete
  4. புதிய பரிமாணத்தில் அற்புதமான விஷயங்கள்
    நன்றி

    ReplyDelete
  5. பாகவதரகளின திருநடசத்தன்று அவரகளைப்பற்றி பாசுரங்களுடன தெரிவிப்பதற்கு நன்றி.🙏🏽🙏🏽

    ReplyDelete
  6. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽“எங்கே விதைத்தாய் ?” என்று கேட்க அதற்கு அவள் “பரமபதத்திலே விதைத்தேன்” 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete
  7. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete
  8. அடியேன் கண்களிலும் ஒரு துளி நீர் வரவழைத்தது

    ReplyDelete

Post a Comment