Skip to main content

திருவுள்ளம் பற்றிய திருக்குருகைப்பிரான் பிள்ளான்

 திருவுள்ளம் பற்றிய திருக்குருகைப்பிரான் பிள்ளான்


ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாம். 

ஒருமுறை கொங்கு நாட்டுக்குப் பிள்ளான் சென்றிருந்தார். அங்கே ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இல்லத்தில் தங்கினார். அங்கே தாமே தளிகை(சமையல்) செய்து உண்ண நினைத்தபோது அவருக்கு அங்கே ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் பெருமாள் திருநாமங்களை பாடிக்கொண்டு இருந்தார்கள். பிள்ளான் இவர்கள் இல்லத்தில் உணவு அருந்துவது தகாத விஷயம் என்று புறப்பட்டார். 

பிள்ளான் ஏன் இப்படிச் செய்தார் ? என்று நமக்குத் தோன்றும். காரணம் இருக்கிறது. 

அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசாரியர்களுடைய திருநாமங்களைச் சொல்லாமல் எம்பெருமான் திருநாமங்களை மட்டுமே கூறியதால்  ஆசாரிய அபிமானம் இல்லாதவர்கள் இல்லத்தில் அமுது செய்வது தகாது என்று அங்கிருந்து புறப்பட்டார். 

சிஷ்யனுக்கு ஆசாரியன் இடத்தில் அபிமானமும், அதே போல ஆசாரியனுக்குச் சிஷ்யனிடத்தில் அபிமானமும் சேர்ந்துகொண்டால் அவர்கள் பேசிக்கொள்ளாமலே பேசிக்கொள்வார்கள். அவர்கள் மனத்தால் பேசிக்கொள்வார்கள். இது ஸ்ரீவைஷ்ணவத்தில் தனித்துவமான ஒன்று. 

இன்று  'ஒரே மாதிரி வேவ் லென்த்' ‘இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப் போகிறது’ போன்ற வார்த்தைகளுக்கு அழகான தமிழ்ச் சொல் ’மனோரதம்’. வைணவ வியாக்கியானங்களில் ‘திருவுள்ளம்’ பற்றியிருந்தார்கள் என்பது இது தான். ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்களிடம் சிஷ்யர்கள் திருவடி சம்பந்தம் பெற்று  திருவுள்ளத்தையும் பற்றி இருந்தார்கள். 

நம்மாழ்வார் மனதில் பெருமாள் குடிகொண்டு  ‘மயற்வற மதிநலம் அருளப்பெற்று’ ’திருவாய்மொழி’ என்ற பகவத் விஷயம் நமக்குக் கிடைத்தது. நாதமுனிகளின் மனத்தில் நம்மாழ்வார் குடிகொண்டதால் நாலாயிரமும் நமக்குக் கிடைத்தது. நாதமுனிகள் தொடங்கி இன்றைய ஆசாரியர்கள் வரை ’திருவுள்ளம்’ பற்றுவது  வழி வழியாக வந்திருக்கிறது. 

இந்த மனோரதத்துக்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். 

ஒரு நாள் உடையவர் திவ்ய பிரபந்தத்தில் பாசுரம் ஒன்றுக்குப் பொருள்பற்றி ஆராய்ந்துகொண்டு இருந்தார். இதைக் கண்ட பிள்ளான் உடையவரிடம் சென்று “தேவரீர் ஆராய்ந்த பொருள் இதுவன்றோ ? என்று ஓர் அர்த்தத்தை உரைத்தார். பிள்ளான் உரைத்த பொருளும், தாம் நினைத்திருந்த பொருளும் ஒன்றாக இருப்பதைக் கண்ட ஸ்ரீராமானுஜர் மிகவும் ஆச்சரியம் அடைந்து, நாதமுனிகளின் ஞான வம்சத்தில் உதித்த பெருமையால் இவர் இப்பொருளை அறிந்தார் என்று எண்ணி ’எனது ஞான புத்திரனே’ என்று அவரை அணைத்துக்கொண்டார் (பிள்ளான் உடையவரின் திருவுள்ளத்தைப் பற்றியிருந்ததால் இது மாதிரி கூற முடிந்தது). உள்ள குளிர்ந்த உடையவர் அப்போது அவருக்கு ‘'திருக்குருகைப்பிரான் பிள்ளான்' என்ற திருநாமத்தை பிரஸாதித்து ஆளவந்தாருடைய கடைசி ஆசையை நிறைவேற்றினார்.

ஸ்ரீஆளவந்தார் திருநாடு அலங்கரித்த சமயம். அவருடைய மூன்று விரல்கள் மடங்கியிருந்தது. நிறைவேற்றப்படாத மூன்று ஆசைகள். உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவை: 

அவை. 

வியாசருடைய பிரம்ம சூத்திரத்துக்குப் பாஷ்யம் விவரிப்பது.
அவருடைய தகப்பனாரான பராசரரின் பெயரையும்
நம்மாழ்வாரின் திருநாமத்தையும் இருவருக்கு சூட்டுவது.

ஸ்ரீராமானுஜர் ஆளவந்தாரின் ஆசையை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்று சொல்ல, மடங்கிய விரல்கள் விரிந்தன. ஆளவந்தாரின் திருவுள்ளத்தை உடையவர் பற்றியிருந்தால் இது நிகழ்ந்தது. 

இதில் முதல் இரண்டு ஆசைகள் - பெயர் சூட்ட வேண்டும் என்பது ! பாஷ்யம் எழுதுவது போலக் கஷ்டமானது கிடையாது. ஆனால் அந்தப் பெயர்களைத் தகுதியுள்ளவருக்குச் சூட்ட வேண்டும்!.

கூரத்தாழ்வானின் பிள்ளையான பட்டருக்கு பராசரர் என்ற பெயரைச் சூட்டி, ஆளவந்தாரின் இரண்டாவது மனோரதத்தைப் பூர்த்தி செய்தார். பட்டர் புகழ் உலகறிந்த விஷயம்.

நம்மாழ்வாரின் பெயரை பிள்ளானுக்கு சூட்டி ‘திருக்குருகைப்பிரான்’ பிள்ளான் என்று அழைக்கப்பட்டார். யார் இந்த பிள்ளான் ? 

பெரிய திருமலை நம்பிக்கு ’பிள்ளை திருமலை நம்பி’, ’ராமானுஜன்’, ’பிள்ளான்’ என்று மூன்று குமாரர்கள். கோவிந்தன் என்ற எம்பாரை ஶ்ரீராமானுஜர் திருமலை நம்பியிடம் கேட்டபோது, பிள்ளானையும் அபிமானப் புத்திரராக வைத்துக்கொள்ளும்படி ஸ்ரீ ராமானுஜரிடம் அளித்தார். 

சரமோபாய நிர்ணயத்தில் ஒரு சம்பவம் கூறப்பட்டுள்ளது. 

ஒரு நாள் உடையவர் திருக்குருகைப்பிரான் பிள்ளானுக்கு 'பொலிக பொலிக' என்ற திருவாய்மொழி பாசுரம் காலட்சேபத்தைச் சாதிக்க, பிள்ளான் மிகவும் மகிழ்ச்சியாய், உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குச் செல்ல, இதைக் கண்ட உடையவர் ”பிள்ளான் என்ன விஷயம்… ஏன் உணர்ச்சி வயப்படுகிறீர் ?” என்று கேட்க அதற்குப் பிள்ளான் ”ஆழ்வார் தேவரீருடைய திரு அவதாரம்பற்றி முன்னமே தெரிந்து கடாட்சம் செய்துள்ளார்.. அதன் அர்த்தத்தைத் தேவரீருடைய திருவாயால் கேட்பது என்பது என்ன ஒரு பாக்கியம்” என்றார்.

அன்று இரவு உடையவர், பிள்ளானை அழைத்துச் சென்று தனது திருவாராதனப் பெருமாளின் முன்பு நிறுத்தித் தன் திருவடியை பிள்ளான் தலையில் வைத்து “எப்போதும் இந்தத் திருவடிகளே கதி என்று இரும், உன்னைச் சரண் அடைந்தவர்களுக்கும் இவ்வழியையே காட்டும்” என்று உபதேசித்தார்.

மறுநாள் பிள்ளானை அழைத்துத் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி வ்யாக்யானம் ஆரம்பிக்கும்படி சொன்னார். பிள்ளானுடைய ஞானம் அளவு கடந்தது திருவாய்மொழி மட்டும் அல்லாது ஸ்ரீபாஷ்யத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். எம்பெருமானார் அபிமான புத்திரன் பிள்ளான் இடத்தில் பேரபிமானம் கொண்டவராக இருந்தார். 

பிள்ளானுடைய தனியன் இது :

த்ராவிடாகம ஸாரக்யம் ராமானுஜ பதாச்ரிதம் |
ஸுதீயம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

இதன் பொருள் : திராவிட வேதத்தின் சாரத்தை அறிந்தவராய் எம்பெருமானாரின் திருவடிகளை ஆச்ரயித்தவராய் பேரறிவாளரான திருக்குருகைப் பிரான் பிள்ளானைத் தினந்தோறும் தலையால் வணங்குகிறேன்.

நாவல்பாக்கம் கிரமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் ஆசாரியர்கள் விக்ரகங்கள் உள்ளன அவற்றில் உடையவர் அமர்ந்துள்ள பீடத்தின் அடியில் பிள்ளான் அமர்ந்துள்ளார். திருக்குருகைப்பிரான் பிள்ளான் எம்பெருமானார் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபதிகளில் இவரும் ஒருவர் ஆவார்.

ஸ்ரீராமானுஜர் - திருக்குருகைப்பிரான் பிள்ளான் - எங்களாழ்வான் - நடாதூரம்மாள் - கிடாம்பி அப்புள்ளார் - ஸ்ரீவேதாந்த தேசிகன் என்ற வரிசையும்,

ஸ்ரீராமானுஜர் - எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்கு திருவீதிப்பிள்ளை, பிள்ளை லோகாசாரியார், திருவாய்மொழிப்பிள்ளை, மணவாள மாமுனிகள் என்ற இரண்டு குருபரம்பரை வரிசை பிரதானம்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் பிள்ளான் விஷயமாகத் தன் உபதேசரத்தினமாலை வரும் ஒரு பாசுரம் இது :

தெள்ளாரும் ஞானத் திருக்குரு கைப்பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் - உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப்பொருளை அன்றுரைத்தது
இன்பமிகும் ஆறாயிரம்.

அதாவது தெளிவு பொருந்திய ஞானத்தையுடைய திருக்குருகைப்பிரான் பிள்ளான், ஸ்ரீஎதிராஜருடைய விசேஷித்ததான கடாக்ஷத்தாலே, தமது திருவுள்ளத்தில் நிறைந்திருக்கும் பக்தியுடனே, நம்மாழ்வார் அருளிச்செய்த திராவிட வேதமான திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அக்காலத்திலேயே அருளிச்செய்தது இனிமை அதிகரிக்கும் ஆறாயிரப்படி வியாக்யானமாகும். 

எம்பெருமானார் திருநாராயணபுரம் செல்லும் வழியில் ஒரு வண்ணான் அவரை வணங்கினான். திருமண்காப்பு தரித்து அந்த வண்ணனைப் பரம ஸ்ரீவைஷ்ணவனாக விளங்கினான்.

எம்பெருமானார் மகிழ்ந்து “யார் அப்பா நீ ?” என்று கேட்க

“அடியேன் ஒரு சாதாரண வண்ணான் பிறர் துணிகளைச் சுத்தம் செய்பவன்” என்று சொல்லிவிட்டு தண்டம் சமர்ப்பித்துவிட்டு தன் பிள்ளைகளும் வந்து ஸ்வாமியைத் தண்டம் ஸமர்ப்பிக்க அனுமதி வேண்டினான்.

உடையவர் உள்ளம் குளிர்ந்து, “சரி” என்று இசைய, உடனே அந்த வண்ணான்

“சடகோபா, குருகூர் நம்பி, காரி மாறா, வகுளாபரணா “ என்று தன் நான்கு சிறு பிள்ளைகளையும் அழைக்க அச்சிறுவர்கள் ஓடி வந்து எம்பெருமானாரை விழுந்துவணங்கியபோது உடையவருக்கு மயக்கமே வந்துவிட்டது.

”சடகோபனின் திருநாமங்களைச் சூட்டி மகிழ்வதற்காகவாவது பிள்ளைகள் பெற்றிருக்கலாம் என்று ஏங்க வைத்துவிட்டாய்” என்றார் உடையவர். 

மதுரகவியாழ்வார் இதனால் தான்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

என்கிறார்.  ‘திருகுருகூர் நம்பியான சடகோபனின்’ திருநாமத்தின் சுவையை அறிந்திருந்தார் ஆளவந்தார். அவருடைய திருவுள்ளம் பற்றிய எம்பெருமானார் பிள்ளானுக்கு அதைச் சூட்டினார். 

என்பெருமானார் திருநாட்டை அலங்கரிப்பதற்கு முன் தமக்குப் பிறகு பிள்ளானை மட்டுமே பாஷ்யத்துடன், பகவத் விஷய சிம்மாசநாதிபதியாகவும் நியமித்தார். பிள்ளான் ஸ்ரீராமானுஜரின்  அபிமான ஞான புத்திரன் அதனால் உடையவரின் சரம கைங்கர்யத்தை அவரே முன்னின்று நடத்தினார். 

பிள்ளானுடைய இறுதிக் காலத்தில் அவருடைய நிலையினை அறிந்துகொள்வதற்காக நஞ்சீயர் சென்றார். அப்போது பிள்ளான் ‘கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்று திருவாய்மொழியின் வரியைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு இருந்தார். நஞ்சீயர் வருத்தப்பட்டு அழத்தொடங்கினார். 

அப்போது பிள்ளான் ‘சீயரே ஏன் வருத்தப்படுகிறீர் ?’ நான் பெறப்போகும் பேறு தாழ்ந்தது இல்லையே ? வருத்தப்படாதீர்கள் என்று சமாதானம் கூறினார். ‘தடம் தாமரைகட்கே. கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?' என்று நம்மாழ்வார் தாமரை போன்ற திருவடிகளுக்கு அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ ? என்று எம்பெருமானுடைய திருவடியை அடைய வேண்டும் என்ற துடிப்பில் பாடிய பாசுரம் அது. 

திருக்குருகைப் பிள்ளான் உடையவரின் திருவடிகளாகப் போற்றப்பட்டார். வடுகநம்பி செய்த யதிராஜ வைபவத்தில் பிள்ளானை ’யதிராஜரான ராமானுஜரின் ஞானபுத்திரான அவருடைய பாதுகை என்று புகழ்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு வியாக்யானம் அருளிச்செய்தார்’ என்கிறார். 

ஸ்ரீராமானுஜருக்குப் பாதுகை முதலியாண்டான் தானே, பிள்ளான் எப்படி ? என்ற சந்தேகம் வரலாம்.

 பெருமாளுக்கு ’திருவடி’ என்று கருடன், அனுமார் இருக்கிறார்கள் கூடவே ஆதிசேஷன், நம்மாழ்வார் இருக்கிறார்கள். ஸ்ரீராமானுஜருக்கும் அதுபோல திருவடி நிலைகள் தான் இவர்கள். 

ஆசாரியர்களின் திருவடி சம்பந்தம் பெற்று,  திருவுள்ளம் பற்றி இருந்தால் எல்லோரும் ஆசாரியனின் திருவடி நிலைகள் தான். நாமும் நம் ஆசாரியர்களின் திருவடியைப் பற்றி இருந்தால் இந்த மாதிரிச் சந்தேகங்கள் வராது! 

- சுஜாதா தேசிகன்
இன்று ஆவணி மிருகசீர்ஷம்
ஸ்ரீ திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருநட்சத்திரம்.
11-09-2020

பிகு: இவருடைய திருநட்சத்திரம் ஐப்பசி பூராடம் என்றும் கூறுவர். இவருடைய திருநட்சத்திரன் தனியன் ஆவணி மிருகசீர்ஷம் என்கிறது. 


Comments

  1. அதி அற்புதம் ஸ்வாமி.

    ReplyDelete
  2. அற்புதம் ஸ்வாமி. அடியேன் தாஸன்.

    ReplyDelete
  3. "நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
    மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!"

    ReplyDelete

Post a Comment