Skip to main content

9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்

9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்


காலைக் கதிரவன் புறப்படும் சமயத்தை  அருணோதயம் என்பார்கள்.பிறகு சூரியோதயமாகி எங்கும் வெளிச்சம் பரவுகிறது. சில சமயம் இருண்ட மேகங்கள் அந்த வெளிச்சத்தை மறைக்க. பலமான காற்று வீசத்தொடங்கியவுடன் அம்மேகங்கள் விலகிச் செல்ல மீண்டும் வெளிச்சம் நமக்குக் கிடைக்கிறது.

ஆழ்வார்கள் காலத்துக்கு முன் அருணோதயமாக இருந்த இப்பூவுலகம், அவர்கள் அவதரித்தபின் சூரியோதயமாக விளங்கியது. சூரியனை மேகங்கள் மறைப்பது போல ஆழ்வார்கள் காலத்துக்கு அவர்கள் அருளிச்செயல்கள் சில காலம் மறைந்து இருந்தது.  நாதமுனிகள் ’கண்ணி நுண் சிறுத்தாம்பு’  என்ற பிரபந்தத்தை ஏகசந்தையாக(1) பன்னீராயிரம் முறை இசைத்தபோது அவை பன்னிரண்டு துவாதச நாமங்களாக உருவெடுத்து, பலமான காற்றாக  உருவெடுத்து  மறைத்த மேகங்களை விலக்கி, திருபள்ளியெழுச்சியாக ஒலித்து, ஞான சூரியனான அரங்கனை எழுப்பிப் பக்தி ஒளியை பரவச்செய்தது. இந்த ஒளி நூறு குளிக்கு நிற்குமா போலே இருந்தது(6)

பெருமாளின் எண்ணற்ற திருநாமங்களை ஆயிரம் திருநாமங்களாகப் பீஷ்மர் விஷ்ணு சகஸ்ர நாமமாக ஜபித்தார். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரண்டு திருநாமங்கள்(7) முக்கியமாகக் கருதப்படுகிறது. 

பன்னிரண்டு திருமண் காப்பு தரித்துக்கொள்ளும்போது கேசவாய, நாராயணாய, மாதவாய, கோவிந்தாய விஷ்ணவே, மதுசூதனாய, திருவிக்கிரமாய, வாமநாய, ஸ்ரீதராய, இருடிகேசாய, பத்மநாபாய, தாமோதாராய என்று தரித்துக்கொள்ளும் இந்தக் காப்புக்குப் பலன் கிடைப்பது போலக் கண்ணிநுண் சிறுதாம்பில் ‘சடகோபன் அருளையே’ என்று மதுரகவிகள் கூறும் அந்த அருள் நாதமுனிகளுக்குக் கிடைக்காமல் போகுமா ? 

பொதுவாக ஆழ்வார் பாடல்கள் பத்துப் பாசுரம் இறுதியில் ஒரு பலஸ்ருதி பாசுரம் என மொத்தம் பதினோரு பாசுரங்களாக அமைந்தவை. பெரியாழ்வார் திருமொழியிலும்(2), நம்மாழ்வார் திருமொழியிலும்(3) பன்னிரண்டு பாசுரங்களுடன் இறுதியில் பலஸ்ருதி(5) பாசுரம்  என மொத்தம் பதிமூன்று பாசுரங்களாக அமைந்திருக்கிறது. 

இவ்விரு திருமொழிகளிலும் பன்னிரு திருநாமப் பாடல்களாக அவை அமைத்திருக்கிறது.  பெரியாழ்வார் இந்தப் பன்னிரண்டு பாட்டுக்களையும் (நாமங்களும்) ஓத வல்லவர்கள் எம்பெருமானுக்கு அடிமை செய்யும் பேறு பெறுவார்கள் என்கிறார். நம்மாழ்வாரோ இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் பண்ணில் இசைப்பவர்களுக்கு பெருமாளின் திருவடியில் சேர்க்கும் என்கிறார். 


பன்னிராயிரம் முறை இசைத்தபோது, ஆஸ்திகனாய், அறவழியில் நடப்பவனாக, நற்குணம் நிறைந்தவனாய், விஷ்ணு பக்தனாய், பரிசுத்தனாய், ஆழ்ந்த திருவுள்ளம் உடையவனாய், மங்களாசாசனத்தில் வல்லவனாய், பேரறிவாளனாய் இருப்பவனே சிஷ்யன் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படும் சிஷ்யலக்ஷணங்கள்  நிறைந்தவரான நாதமுனிகளுக்குத் திருக்குருகூர் நம்பி மிக மகிழ்ந்து யோக தசையில் மதுரகவிகளுடன் காட்சி கொடுத்து அசரீரி  வாக்குபோலே  திருவாய் மலர்ந்து “ஏன் நம்மைக் குறித்து இப்படி உபாசனை செய்து எம்மை அழைத்தீர் ?” என்று கேட்டார். 

'ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்' என்று திவ்வியமான தமிழ்ப் பாடல்களால் வசீகரிக்கப்பட்டு  ஆயிரம் பாசுரங்களும் வேண்டும் என்ற பேராசையால்(11) அதைத் தேடிச் சென்றபோது, அதன் பொருட்டு கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பாடல்களைப் பன்னீராயிரம் முறை உரு சொன்னால் தேவரீர் பிரசன்னமாகி உபதேசிப்பீர் என்று மதுரகவிகளின் வம்சத்தவரான பராங்குசத் தாசரிடம் உபதேசம் பெற்று ‘சடகோபன் அருளை’ பெற வேண்டும் என்று இங்கே ஓடிவந்தேன்.  அடியேனுக்குத் தேவரீருடைய பிரபந்தங்களும் அதன் அர்த்த விசேஷங்களுடன் தந்தருள வேண்டும்” என்று பிராத்தித்தார். 

மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பாசுரத்தில் ஓர் இடத்தில் ‘சடகோபன் அருளையே’ என்கிறார்.இந்தச் சந்தர்ப்பத்தில் ’சடகோபன் அருள்’ பற்றிச் சரித்திரச் சம்பந்தமான சில நிகழ்வுகளை இந்தக் கதையைப் படித்து வரும் நேயர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். 

இருபதாம் நூற்றாண்டின் யோக ஆசான் என்று போற்றப்படும் யோகாச்சார்யா ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா(1888-1998) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை நாம் இங்கே நினைவு கூறுகிறோம். 


ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா இளம் வயதில் வேதத்தைச் சந்தை முறையில் தன் தந்தையிடம் கற்றார்.  தன் தந்தையை பத்து வயதில் இழந்தார். பிறகு பாட்டனார் மைசூரில் இருக்க, பன்னிரண்டு வயதில் அங்கே சென்று பரகால மடத்தில் மாணவராகச் சேர்ந்தார். பதினாறாம் வயதில்(1904) அந்த அதிசயம் நிகழ்ந்தது. கனவில் நாதமுனிகள் தோன்றி தெற்கே உள்ள அழ்வார் திருநகரிக்கு வருமாறு கட்டளையிட்டார். பணத்தைச் சேர்த்துக்கொண்டு ஆழ்வார் திருநகரிக்குப் புறப்பட்டார்.

ஆழ்வார் திருநகரியில் புளியமரத்தடியில் ஒரு பெரியவரை அணுகி “நாதமுனிகளை எங்கு தரிசிக்கலாம்?” என்று கேட்க, அவர் தனது கையால் காட்டிய திசையை நோக்கிச் சென்றார். 

அது தாமிரபரணி நதிக்கரையில் ஒரு மாமரத்தடி. உணவருந்தாமல் மிகவும் களைத்திருந்த இவர் அங்கு மயக்கமாக விழுந்தார். அங்கு இவருக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. மூன்று மாமுனிவர்கள் மத்தியில் அவர் இருந்தார். அவர்களை நமஸ்கரித்து, நாதமுனிகள் இயற்றிய யோக ரஹஸ்யத்தைத் தனக்கு போதிக்கும்படியாகக் கேட்டுக்கொண்டர். நடுவில் இருந்த நாதமுனிகள் தனது இனிமையான குரலில் யோக ரஹஸ்யத்தை செய்யுளாகக் கூற, அதைக் கேட்டுக்கொண்டார். சில மணி நேரம் சென்றபின்,  ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் தன் சுயநினைவு வந்தபோது முனிவர்கள் மறைந்தனர். மாமரத்தடியையும் காணவில்லை. 

மீண்டும் கோயிலுக்குத் திரும்பினார். அங்கு அந்தப் பெரியவர் இவரைப் பார்த்தவுடன் “என்ன, நாதமுனிகளிடமிருந்து யோக ரஹஸ்யம் உபதேசமாயிற்றா? கோயிலுக்குப் போய்ப் பெருமாளைச் சேவி” என்று கூற, கோயிலுக்குச் சென்று திரும்பி வந்ததும் அந்தப் பெரியவரையும் காணவில்லை. அப்போதுதான் அந்தப் பெரியவர் தனது கனவில் தோன்றிய, மூன்று மாமுனிவர்கள் நடுவில் காட்சி தந்த நாதமுனிகள் தோற்றமாய் இருந்தது அவருக்குத் தெரிந்தது. 

இவ்வகையில், காலத்தால் அழிந்திருந்த ‘யோக ரஹஸ்யம்’ என்ற அரிய நூல் இவருக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையில்தான் தன் யோக தத்துவங்களை வகுத்துக்கொண்டார். 

இரண்டாவது சம்பவம்  பல வருடங்களுக்கு முன் நடந்தது.  லிப்கோ ஸ்தாபகத்தார் நாதமுனிகள்போலப் பல ஆயிரம் முறை கண்ணி நுண்சிறுத்தாம்பு அனுசந்திக்க முடிவு செய்து ஒரு குழுவாக அதைச் சேவிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சேவித்துக்கொண்டு இருந்த இடத்துக்கு அருகில் ஒரு திருமண மண்டபத்தில் விழாக்கோலமாக மேளதாளத்துடன் திருமண களைகட்டியிருந்தது.  

திடீர் என்று ஏதோ காரணத்தால் திருமணம் தடைப்பெற்று நின்றது. மணமக்களுக்குக் கோயில் மாலை பிரசாதங்களுடன் அங்கே சில அந்தணர்கள் வந்தார்கள். திருமணம் நின்று போன விஷயத்தைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியாகச் செய்வதன்றி தவித்தார்கள். அருகில் இருந்த ஒருவர் அவர்களிடம் “கவலைப்படாதீர்கள், அருகில் ஒரு இடத்தில் ‘கண்ணி நுண்சிறுத்தாம்பு’ அனுசந்தானம் நடக்கிறது பிரசாதங்களை அங்கே சென்று சேர்த்துவிடுங்கள்” என்றார். கோயிலிருந்து வந்தவர்கள் மாலைப்பிரசாதங்களை எடுத்துக்கொண்டு பாசுரம் சேவித்தவர்களுக்குக் கொடுக்கப் பாசுரம் சேவித்தவர்களுக்கு ஆனந்த பூரிப்பு! வந்த மாலை ஆழ்வார் திருநகரி மாலை ! ஆழ்வாரின் மாலை !

தமிழ் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் திரு உ.வே.சாமிநாதையர் அவர்கள் பத்துப்பாட்டு  ஓலைச்சுவடிகளைத் தேடி ஆழ்வார் திருநகரிக்கு சென்றார். எல்லா இடங்களிலும் தேடியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை. மிகவும் வருத்ததுடன் இரவு திண்ணையில் படித்துக்கொண்டார். அப்போது திருவீதியில் பெருமாளும் நம்மாழ்வாரும் உற்சவத்துக்கு எழுந்தருளியபோது உ.வேசா அவர்கள் எழுதியது இது. 


“அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தை தரிசித்தேன்; அவரைப் பார்த்து “ஸ்வாமி! வேதம் தமிழ் செய்தவரென்று தேவரீரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூல் ஒன்றைத் தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன். தமிழுக்குப் பெருமையருளும் தேவரீருக்கு நான் பட்ட சிரமம் தெரியாததன்றே! நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா என்று சொல்லிப் பிரார்த்தித்தேன். உள்ளம் அயர்ந்து போய், ‘இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை’ என்ற முடிவிற்கு வந்தமையினால் இங்கனம் பிராத்தனை செய்தேன். (10)

பெருமாளும் ஆழ்வாரும் கடந்து செல்ல நிலா ஒளி நன்றாக வீசியது. அப்பொழுது அவர் நண்பர் லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக்கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார். கோயில் பிரசாதம் என்று நினைத்தேன்.

கவிராயர் “இந்த புஸ்தகத்தைப் பாருங்கள் என்று கூறி, மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார்.

உ.வேசா அதனைப் பிடுங்கிப் பார்த்தபோது, நிலாவின் ஒளியில் சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் கண்ணில் பட, அவருக்கு உண்டான சந்தோஷத்தை விவரிக்க வேண்டுமா? அன்றிரவு தூக்கம் இல்லாமல் மறுநாள் காலையில் திருக்கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து நன்றியைக் கூறி, மேலும் தான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலமாக செய்தருள வேண்டும் என்று பிராத்தித்துவிட்டு அவர் பயணத்தைத் தொடர்ந்தார். 

நாம் வாழும் இந்த நூற்றாண்டிலேயே இதுபோலச் சம்பவங்கள் நடந்திருக்கிறது. நாதமுனிகளுக்குச் சடகோபன் அருள் கிடைத்ததில் என்ன ஆச்சரியம் ? 

பரமபதத்தில் பெரிய பிராட்டியார் ஆணையாலே, திருக்குருகூர் நம்பியான சடகோபன் நாதமுனிகளை அருள் கூர்ந்து பார்த்து, பிரியத்துடன் “நாதமுனிகளே!  இந்த ஆயிரம் பாசுரங்கள் மட்டுமல்ல, அடியேனுடைய மற்ற பாசுரங்களும், மற்ற ஆழ்வார்கள் அருளிய ஏனைய பாசுரங்களையும், அஷ்டாங்கயோக ரகசியத்தையும் உமக்குத் தருகிறேன். பெற்றுக்கொள்ளும்” என்று கூறினர்.

விஸ்வரூப தரிசனத்தின்போது கண்ணன் அர்ஜுனனிடம் ‘உன்னுடைய தற்போதைய கண்களால் என்னை நீ காண முடியாது. எனவே, நான் உனக்குத் திவ்யமான ஞானக் கண்களைத் தருகிறேன் எனது யோகத்தின் ஐஸ்வர்யத்தைப் பார்’ என்று அர்ஜுனனுக்கு கண்ணன் காட்டிக்கொடுத்தது போலச் சடகோபரும் நாதமுனிகளுக்குத் தெய்விகமான கண்ணை அளித்து மந்திர ரத்தினமான த்வயத்துடன் கூடிய மூன்று ரகசியங்களின் பொருளையும் உபதேசித்தார். 

இதைப் படித்துக்கொண்டு இருக்கும் வாசகர்களுக்கு ஞானக் கண் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை இங்கே தருகிறோம்(8)

ஒரு ஊரில், ஒருவன்  மரத்தடியில் அமர்ந்து,  யாசகம் செய்து வாழ்ந்து வந்தான். பலகாலம் அவன் பிச்சை எடுத்து வாழ்ந்தபின் ஒரு நாள் அவன் இறந்துவிட்டான். பல காலம் கழித்து அவன் உட்கார்ந்த மரத்தின் கீழே தோண்டும்போது மரத்தின் கீழே பொற்காசுகள் நிறைந்த புதையல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதை அறியாமல், பல ஆண்டுக்காலம் தினந்தோறும் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தான் அந்த யாசகன். 

நம் உள்ளத்தில் அந்தர்யாமியாக இருக்கும் பெருமாளைக் காண முடியாமல் தண்ணீரில் இருக்கும் துரும்பு  அதனைப் பருகத் தடையாக  இருப்பது போல, பண்டை வல்வினைகள் பெருமாளை அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது. மதுரகவிகள் குருகூர்சடகோபன் தன் பார்வையாலே அவற்றைப் பறக்கடித்தருளினார் என்கிறார் கண்ணிநுண் சிறுத்தாம்பில்(9)

அந்த யாசகனிடம் நீ அமர்ந்துள்ள இடத்தின் கீழே புதையல் என்று காட்டிக்கொடுத்திருந்தால், எப்படி அவனுக்குப் பொக்கிஷம் கிடைத்திருக்குமோ அதுபோல ஆசாரியன் நமக்குப் பெருமாளைக் காட்டிக்கொடுக்கிறார். கண்ணன் அர்ஜுனனுகும், சடகோபன் நாதமுனிகளுக்கும் காட்டிக்கொடுத்தது இதுவே. இதுவே சடகோபன் அருள். 

பெருமாள் குருகூர்நம்பியின் நாக்கில் அமர்ந்துகொள்ள, சடகோபன் பல்லாண்டு தொடக்கமாக ஆழ்வார்கள் அவதாரங்களையும் அவர்களின் அன்பு விளைத்த அருந்தமிழ் பாசுரங்களையும் உபதேசிக்க ஆரம்பித்தார். நாதமுனிகள் சடகோபன் அருளால் அதைக் கேட்கத் தொடங்கினார் 

பயணம் தொடரும்... 

- சுஜாதா தேசிகன்
19-09-2020

------------------------------------------------------

(1) ஏகசந்தையாக - ஓரிடத்தில் தொடர்ந்து அமர்ந்து எதற்கும் எழுந்துசெல்லாமல் ஒருசேர பாடல்களைப் பாடி பூர்த்தி செய்வது. 

(2) பெரியாழ்வார் திருமொழி 139-151

(3) நம்மாழ்வார் திருவாய்மொழி 3075 - 3087 

(4) பலஸ்ருதி - பலன்

(5) கீதை 11-8 

திவ்யம் ததாமி தே சக்ஷு:
பஷ்ய மே யோகம் ஐஷ்வரம்

(6) நூறு குளிக்கு நிற்கும் - நெடுங்காலம் நிற்கும். பெண்கள், கண்ணன் தங்களை ஒரு முறை அணைத்துவிட்டால் அது நூறு குளிக்கு நிற்கும் என்றார்கள். 

(7) துவாதச திருநாமங்கள்

(8) ஸ்ரீபாஷ்யத்தில் எம்பெருமானார் கூறும் உதாரணம். 

(9) கண்ணிநுண் சிறுத்தாம்பு - பண்டை வல்வினை பாற்றி யருளினான்

(10) உ.வே.சா எழுதிய ‘நிலவில் மலர்ந்த முல்லை’ கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. 

(11) பேராசை பெரும் நஷ்டம் என்பர். ஆனால் பேராசை ஆழ்வாருக்கு பெரிய லாபம் ஆயிற்று. ஆழ்வாரின் பேராசை எவ்வளவு பெரியது என்று இந்த பாசுரம் கூறுகிறது. அது போல நாதமுனிகளின் பேராசை இருந்தது. 

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவுஇல் பெரும் பாழேயோ,
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீயோ,
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ,
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே.

சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த, முடிவற்ற, பெரிய மூலப்பகுதியாகத் திகழ்கிறவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய, உயர்ந்த, நல்ல, மலர்ச்சோதிவடிவானவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய, சுடர்விடும் ஞான இன்பமானவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய என்னுடைய ஆசை தீரும்படி என்னைச் சூழ்ந்தாயே.


Comments

  1. I can say EXCELLENT WORK KANNA . DESI .

    ReplyDelete
  2. excellent. waiting for next .. Adiyen Hari

    ReplyDelete
  3. 🙏🙏 தாசன். கடைசியில் பேராசையின் அளவை நாதமுனிகள் சொல்வது அற்புதம். இந்த நூற்றாண்டில் யோகாகுரு கிருஷ்ணமாச்சாரியாருக்கும், தமிழ்த் தாத்தா உ.வே. சா. அவர்களுக்கும் குருகூர் நம்பி , நாதமுனிகள், ஆழ்வார் காட்சி அளித்து வேண்டியதை அருளியது அற்புதம், பேரதிசயம். ஒரேமூச்சாக தேடினால் எதையும் அவன் அருளால் சாதிக்கலாம் என்ற உண்மை உரைக்கிறது.

    என்னால் இயலாது இனி கற்றுக்கொள்ள. உங்கள் பதிவுகளைப் படிப்பதால் எனக்கு பெருமாள் கடைக்கண்ணினால் அருளவேண்டும் என்று பேராசைப் படுகிறேன். தேவரீருக்கு நன்றி.

    ReplyDelete
  4. Classic . I was spellbound after reading. Glad we have scholars like you to enlighten the ignorant mass. Long live your efforts

    ReplyDelete

Post a Comment