Skip to main content

8. இராமானுசன் அடிப் பூமன்னவே - ஆறுகளும்,ஈராறு ஆழ்வார்களும்

 8. இராமானுசன் அடிப் பூமன்னவே - ஆறுகளும்,ஈராறு ஆழ்வார்களும்


அதிகாலை திருக்குருகூர் அமைதியாக இருந்தது. அந்த அமைதி நாதமுனிகளைத் தழுவிக்கொண்டது. பல ஆண்டுகாலம் பிரிந்த தோழர்கள் சந்தித்தது போலப் பறவைகள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. தாமிரபரணி மெதுவாக ஓடிக்கொண்டு இருந்தது. மெல்லிய அலைகள் அங்கே இருக்கும் பாறைகளில் பட்டு ‘ஏன் இவ்விதம் ஜடமாக இருக்கிறீர்கள் ?” என்று கேட்பது போல இருந்தது. பளிங்கு போன்ற ஆற்றின் நீரில் மீன்கள் கூட்டம் கூட்டமாக அவைகளுக்குள்ளே ஏதோ பேசிக்கொண்டன. நீருக்கு மேல் சில மீன்கள் நாதமுனிகளைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அந்த மீன்களைப் போல நாதமுனிகளின் மனமும் எப்போது குருகூர் நம்பியைக் காணப் போகிறோம் என்று துள்ளி குதித்தவண்ணம் இருந்தது. 



தாமிரபரணி படித்துறையை நோக்கி நடந்த போது,  மூங்கில்களும், காய்ந்த புல் முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ள குடிசைகள் தெரிந்தன. ஒரு குடிசையின் மேல் சேவல் ஒன்று கூவியதைக் கேட்டு மெதுவாக உறக்கத்திலிருந்து எழுந்துகொண்டார்கள். ஆனால் சிலர் அந்தக் காலை வேளையிலும் சுறுசுறுப்பாகக் கோரைப் புற்களை அடுக்கி வைத்துப் பாய் முடைவதற்கு ஆயத்தமானார்கள். வேறு சிலரோ மண்பாண்ட வேலை ஆரம்பிக்க மண்ணை குவித்து அதில் தாமிரபரணி ஆற்றின் நீரைப் பிசைந்துகொண்டு இருந்தார்கள். சிலர் பனை ஓலையில் செய்த கூடையை தோளில் மாட்டிக்கொண்டு சங்கு எடுக்கவும், முத்துக் குளிக்கவும் பொருநல்சங்கணி துறைக்குச் சென்று கொண்டு இருந்தார்கள். (1)



செந்நெல் அறுத்துப் போர் அடித்த இடங்களில் மயில்கள் உண்டு, உந்து  சக்தி பெற்று ஒரே தாவாகத் தாவிச் சென்று கோயில் மதில்களின் மீது ஏறி அமர்ந்தன. விலங்குகளும், பறவைகளும், தென்றல் தவழும் பூத்துக் குலுங்கும் சோலைகளும், பழத் தோட்டங்களும், தெளிந்த நீர்ச் சுனைகளும் மங்காத செல்வமாகக் காட்சி கொடுத்தது. 

நாதமுனிகள் படித்துறையில் நின்று பரந்து விரிந்த  தாமிரபரணி ஆற்றை நோக்கி வணங்கி அதில் இறங்கி காலை அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார். மணற்கேணியில் நீர் ஊறுமாப்போலே ஆயிரம் பாடல்களில் ஒரு பாட்டும் விடப்படாமல் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகி அந்த ஆர்வமே தாமிரபரணி நதியாக ஓடியது போன்று காட்சியளித்தது.  

உலகில் அழகான இயற்கைக் காட்சிகள் இன்பம் தருகிறது. மலையைப் பார்த்து மலைப்பு ஏற்படுகிறது. கடலை பார்த்துக் களிப்பு உண்டாகிறது. ஆறு, நதி, விலங்கு, மரம் ஆகியவை ஒவ்வொன்றும் ஆதிகாலமாக மனத்திற்கு மகிழ்ச்சியை ஊட்டுகிறது. ஆற்றின் அழகில் மயங்காதவர் யாரும் இப்பூவுலகில் இல்லை. ஆதலால் ஆற்றங்கரை இடங்களையே மக்கள் அதிகம் விரும்பினார்கள். அங்கேயே சேர்ந்து வாழ்ந்தார்கள்; ஊர் அமைத்தார்கள் ; ஊர் நகரமாகியது ; நகரம் நாடாகியது. ‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்றனர். நிலம் தரும் நீர் ஊற்றும், வான் தரும் மழை காற்றும், வளம் தரும் ஆறுகளும், வனம் தரும் மலைகளும் செல்வமாக விளங்கியது. ஆற்றின் கரையையே மக்கள் வாழ்வதற்கு உரிய இடமாக நாடினர். இவ்வாறு மனம் நாடிய இடத்தையே ‘நாடு’ என்றனர். மக்கள் பேசி மகிழும் மொழியின் பெயராலேயே நாடுகள் அமைத்திருந்தன. தமிழ் தெரிந்தவர்கள் நாடிய இந்த இடங்களைத் திராவிட நாடு என்றார்கள். 

தன் குழந்தையை பாலூட்டிச் சீராட்டி வளர்க்கும் தாய் போல ஆறுகளும், நதிகளும் நிலங்களை வளர்த்தன. ஆறுகள் கடல் நோக்கிச் செல்லுவது போல ஆருயிர்கள் அனைத்தும் இறைநோக்கி ஓடுகின்றன. அந்த இறை பக்திக்குக் மூல காரணம் தமிழாகும். தாய்யை போலத் தமிழ் மொழி பக்தியை வளர்த்தது. 

கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற பெரிய ஆறுகள் திராவிட தேசத்தில் இல்லை என்றாலும் இங்கே ஓடும் சிறிய நதிகள்(3) பெருமை உடையது. செழுந்தேன் சொட்டுச் சொட்டாக இருந்தாலும், சுவை அதிகம் அது போலத் தமிழ்நாட்டின் ஆறுகள் சுவையுடையவை. தேனாறு, பாலாறு, நெய்யாறு என்ற ஆற்றின் பெயர்களைக் கொண்டு அறியலாம். 

இந்த ஆறுகள் பரந்து பாய்ந்து நிலவளத்தை மட்டும் வளர்க்கவில்லை, பக்தியையும் வளர்த்தன. இந்த ஆற்றங்கரையோரங்களில் சான்றோர்கள் அவதரிக்க போகிறார்கள் என்று நதிகளின் மூலம் சிறப்பித்து வேதவியாசர் துவாபர யுகத்திலேயே பாகவதத்தில் கூறியுள்ளார் (2)

அந்தச் சமஸ்கிருத ஸ்லோகத்தின் முக்கியத்துவம் கருதி அதை நேயர்களுக்கு இங்கே தருகிறோம். 

கலௌ கலு பவிஷ்யந்தி
நாராயண பராயணா: |
க்வசித் க்வசிந் மஹாபாகா
த்ரமிடேஷுச பூரிச: |

தாம்ரபர்ணி நதியத்ர
க்ருத மாலா பயஸ்விநீ |
காவிரீ ச மஹாபாகா
ப்ராதீசீச மாஹாநதீ ||

இந்த ஸ்லோகத்தின் பொருள், கிருதயுகம் முதலியவற்றில் வாழ்ந்தவர்கள் கலியில் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனென்றால் திராவிட தேசத்தில்  நாராயணனே அடையத்தக்கவன் என்று பறை சாற்றும் சான்றோர்கள் கலியுகத்தில் இங்கும் அங்கும் தோன்றுவார்கள். 

எங்குத் தாமிரபரணி, கிருதமாலா ( வைகை ) பயஸ்வதி ( பாலாறு ), பெருமை மிகுந்த காவிரி, மேற்குக்கடலில் சென்று கலக்கும் பெரியாறு ஆகிய நதிகள் ஓடுகின்றனவோ அங்கு அவர்கள் தோன்றுவார்கள். இந்த ஆறுகளின் தண்ணீரைப் பருகுகின்ற தூய மனம் படைத்தவர்கள் திருமாலிடம் அபார பக்திகொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது. 

ரிஷிகளும், முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியைப் பெற்றிருந்தனர். பகவானே வேதவியாசராகத் தோன்றி கூறிய வாக்கு எப்படி பொய்க்கும் ?  


திராவிட நாட்டில் மிகப் பெரிய ஆறு என்னும் பெருமிதத்துடன் பாய்கிறது காவிரி. குடகு நாட்டில் தோன்றி, கன்னட நாட்டினுள் புகுந்து தமிழ்நாட்டுக்கு வளம் தந்து பெரிய பெருமாளுக்கு மாலையாகி திராவிட தேசத்துக்கு வளம் தந்து பூம்புகார் என்ற இடத்தில் கடலில் புகுகிறது. காவிரி பாயும் இடத்தில் தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் அவதரித்தனர். 

கன்னட நாட்டில் தோன்றும் பயஸ்வதி  என்ற பாலாறு தமிழ்நாட்டுக்கு வந்து சிறக்கச்செய்து, வங்கக் கடலிலே முடிகிறது. இங்கே முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் அவதரித்தனர்.

மேற்கே ஓடும் பெரியாற்றங்கரையில் அவதரித்தவர் குலசேகர ஆழ்வார்

தமிழகத்தில் தோன்றித் தமிழகத்திலேயே முடியும் சிறந்த ஆறுகள் வைகையும் தண்பொருநையும் ஆகும். 

கிருதமாலா  என்ற வைகை ஆறு மேற்கு மலைத் தொடரில் தோன்றி வங்கக் கடலில் வடிகின்றது. இங்கே தான் பெரியாழ்வாரும், ஆண்டாளும் பக்திக்கு புது இலக்கு அமைத்தார்கள். 

தண்பொருநை என்பது தாமிரபரணியின் தமிழ்ப் பெயர். நாதமுனிகளுடன் நாமும் இந்தப் புண்ணிய நதியை சற்று அனுபவிக்கலாம். 

தண்பொருநை ஆறு பொதிகை மலையில் தோன்றி ஆறாக ஓடுகிறது. இந்த பொதிகை மலை இமயமலை போன்ற புகழ்பெற்றது. சேர மன்னன் ஒருவனைப் புலவர் ஒருவர் ‘பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நடுக்கு இன்றி வாழ்க’ என்று வாழ்த்தியுள்ளார்.இன்னொரு  புலவரோ பாண்டிய அரசனுக்கு ’பொதிகைத் தலைவன்’ என்று சிறப்புப் பெயர் கொடுத்து பொற்காசு வாங்கிக்கொண்டு சென்றார். 

உயரமான இந்த அழகிய மலையை திருக்குருகூரிலிருந்து நின்று பார்த்தாலும், மேற்கே திருவனந்தபுரத்திலிருந்து நின்று பார்த்தாலும் தெரியும். இம்மலையில் எப்போதும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். இந்நீர் சிறுசிறு கால்வாய்களாக ஓடி பெருங் கால்வாய்களாக வடிவெடுத்து ஆறாக மாறுகின்றது. கிழக்கு நோக்கி ஓடு ஆறு தான் ‘தண் பொருநை ஆறு’ என்ற தாமிரபரணி. 

பொங்கி வரும் இந்த நீர் பெருக்கு நிலத்தின் கற்கள், பாறைகள் மீது மோதும் போது அதன் அலைகள் போரிடுவது போன்று காட்சி அளிக்கும். ’பொரு’ என்ற சொல் போரிடு என்ற பொருள். அலைமோதிப் போரிடும் இயல்புடன் குளிர்ச்சியான நீரின் தன்மைக்கு ஏற்றவாறு செந்தமிழ் பெரியோர் அதற்கு ‘தண் பொருநை’ என்று பெயர் சூட்டினர் போலும்! 

தண்பொருநையாறு கடலோடு கலக்கும் இடத்தில் ’கொற்கை’ என்ற மாநகர் இருந்தது. இந்த இடம் சிறந்த துறைமுக நகரமாகத் திகழ்ந்தது. பழங்காலத்தில் அந்த நகரைத் தனி மன்னன் ஒருவன் ஆட்சி புரிந்து வந்தான். அந்த மன்னனுக்கு மக்கள் மூவர் இருந்தனர். அவர்களே பாண்டியன், சேரன், சோழன் என்ற மூவேந்தர் ஆவர். அவர்கள் கொற்கையில் வாழ்ந்தனர். இம்மூவரும் பிரியும் காலம் வந்தது. தமிழகத்தில் மலைத் தொடருக்கு மேற்கே சேரன் சென்று ஆண்டான். கிழக்கே சோழன் சென்று வாழ்ந்தான். தென் பகுதி நிலத்தை பாண்டியன் வைத்துக்கொண்டான். நீண்ட நெடுங்காலம் இம்முத்தமிழ் நாட்டை இவ்மூவரும் ஆண்டார்கள்.  ‘தண் பொருநை ஆறு’ பாயும் நிலமே முத்தமிழ் வேந்தர்களின் மூல இடமாகும். 


பொதிகை மலை பார்த்து மலைத்து நின்றவர்கள் அதை மாமலை என்று கொண்டாடினர். பரஞ்சோதி முனிவர் பொதிகை மலையை ஓர் அழகிய பெண்ணாகவும், தண்பொருநை ஆற்றை அவள் பெற்ற மகளாகவும் உருவகம் செய்தார். அகத்திய முனிவர் இந்த மாமலையில் அருந்தவம் புரிந்து தமிழ் வளர்த்தார். தென்றல் பிறந்த மலையில் அகஸ்தியர்  தேன் தமிழும் பிறந்தது. அந்த மலையில் உற்பத்தியாகும் தாமிரபாணியின் கரையில் பொருநைக் கரை தந்த புண்ணியர் இருவர் அவதரித்தார்கள். குருகூர் சடகோபன் என்ற நம்மாழ்வாரும் அவரே தெய்வம் என்ற கொண்டாடிய மதுரகவிகளும். அதன் தண்ணீரிலேயே தமிழும் கலந்து ஆராவமுதமாகத் திருவாய்மொழியாகப் பாய்ந்திருக்கிறது! ‘பாயும் ஆறுகளில் பரணியில் குளிக்க வேண்டும்’ என்பது  மக்கள் வழிவழியே மொழிந்து வந்த மொழி! 


தாமிரபரணி படித்துறையில் நீராடிவிட்டு,  நாதமுனிகள் தன் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வேகமாகக் கோயிலை நோக்கி நடந்தார். “நாதமுனிவரே! ஆசாரியநிஷ்டையைக் கூறும் மிகச்சிறந்ததான கண்ணி நுண் சிறுத்தாம்பு என்னும் பிரபந்தத்தைப் பக்தியுடன் நீர் பன்னீராயிரம் உரு அனுசந்தித்தால் சடகோபர் உமக்கு விரைவிலேயே காட்சியளிப்பார் என்பது உறுதி. காட்சியளிக்கும் போது அந்தப் பிரபந்தங்கள் அனைத்தும் உமக்குக் கிடைத்தவையாகும். இதில் ஐயமில்லை” என்று பராங்குச தாசர் மங்களமான கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஒலித்தது. 

நாதமுனிகளைப் பார்த்த ஊர்க்காரர்கள் எல்லோரும் திகைத்து, இன்று கோயிலில் திருவிழா இன்று எதுவும் இல்லையே ? ஏன் இப்படி ஓடுகிறார் என்று எண்ணினார்கள். சிலர் அவருக்கு முன் சென்ற பட்டரிடம் ‘ஏதும் விசேஷமா ?’ என்று வினவினார்கள். பட்டரும் ஒன்றும் புரியாமல் முழித்தார். நாதமுனிகளால் குருகூர் என்ற பழம் பெயரைத் துறந்து இனி ஆழ்வார் திருநகரியாகத் திகழப்போகிறது என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

தலைவனை அடைய வேண்டும் என்ற ஆசையின் மிகுதியால்  பறவைகளைத் தூதுவிட்ட தலைவி, அத்தூதர்கள் மீண்டும் வந்து செய்தி சொல்லும்வரை பொறுத்திருக்க முடியாமல் தாமே காதலனைத் தேடிக்கொண்டு வேகமாகத் தலைவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்லுவது போல நாதமுனிகளில் நடையிருந்தது. (4) 

கோயிலுக்குள் சென்று பொலிந்து நின்ற பிரானை உருகி உருகி உள்ளம் கரைந்து வணங்கி கடல் சூழ்ந்த இவ்வுலகத்தவர் எவருக்கும் தெரியாத ’ஆயிரத்துள் இப்பத்தும்’ என்று முடியும் அந்த ஆயிரம் தமிழ் பாசுரங்களும் தந்தருள வேண்டும் என்று பிராத்தித்தார். பட்டர் நாதமுனிகளுக்குத் தீர்த்தம் மகிழம் பூ மாலையைப் பிரசாதம் தந்தருளினார். 

நாதமுனிகள் புளியமரத்துக்கு எதிரில் யோக தசையில் அமர்ந்து பக்தியுடன் மனதில் ”குருகூர்நம்பியைத் தவிர வேறொரு விஷயத்தையும் அறியாதவரும், சடகோபன் அருளிய பாடல்களை இசைபாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்,  அவரின் குணங்களில் எப்போதும் மூழ்கி அவரையே தனக்குத் தெய்வமாக கொண்டுள்ள மதுரகவி ஆழ்வார் என் நெஞ்சில் குடிக்கொள்ளட்டும்” (6) என்று பெருமாளை அன்றி வேறு ஒன்றும் அறியாத சடகோபனை அன்றி மற்றுறொன்றை அறியாத மதுரகவி ஒருவரையே இதயத்தில் நிறுத்தி தேவகானத்தில் யாவரும் கேட்கும்படி பாட ஆரம்பித்தார். 

இசையமுதம் பொழிந்து தாமிரபரணி தண்பொருநையாகக் கரைபுரண்ட  வெள்ளம் கோயிலுக்குள் புகுந்து கோயில் திருமேனி குளிர்ந்தது. அதைக் கண்டு 

கண்களுக்குத் தெரியாத தேவர்கள் மயங்கினர். அசுணப் பறவைகள் மயங்கி வெட்கப்பட்டு சத்தம் போடுவதை நிறுத்தியது. கண்ணன் குழல் கேட்ட கன்றுகள் போலக் கோயில் மாடுகளும், உருகின. புளியமரமாக இருந்த ஆதிசேஷன் தன் மகிழ்ச்சியை உணர்த்த இப்படியும் அப்படியுமாக அசைந்தார். பொதிகை மலையில் உள்ள மான், கரடி, யானை, சிங்கம் அனைத்தும் தாமிரபரணியின் தலையில் வீற்றிருக்கும் அகத்திய முனிவர் பாடத் தொடங்கிவிட்டாரா என்று மயங்கியது. இந்த கானம் எல்லோரையும் மயக்கியது. ஊர் மக்களை  வசப்படுத்தியது. காற்று கூட மிக இசையைக் கேட்டுக்கொண்டு மெதுவாக வீசியது. வேதம் ஓதிக்கொண்டு இருந்த அந்தணர்கள் ஓதுதலை நிறுத்தினர். இது நாரத கானமோ என்று சிலர் வியப்பில் ஆழ்ந்தனர். லவகுசர்கள் இராமாயணக் காலத்தில் இசைத்த ராமாயணத்தில் ராமரே மயங்கியது போல, நாதமுனிகள் இசையின் இனிமையால் நம்பியும், பிரானும் மனம் உருகி அந்தக் காட்சி ஓர் ஓவியம் போன்று இருந்தது. 

நாதமுனிகள் நாற்பத்தி ஐந்து நாள்(5) பன்னிராயிரம் முறை இசைத்த தேவகானத்தில் சிறுத்தாம்பில் கண்ணன் கட்டுப்பட்டது போல எல்லோரும் கட்டப்பட்டார்கள். 

பயணம் தொடரும்
- சுஜாதா தேசிகன்

13-09-2020

மயில், இயற்கை காட்சி படங்கள் நன்றி ஸ்ரீ எதிராஜன். 
தாமிரபரணி அறு படம் நன்றி ஹர்ஷினி

---------------------------------------------------------------

(1) முத்து, சங்கு போன்றவை இலங்கை வரை சென்று வியாபாரம் செய்திருக்கிறார்கள்.

(2) ஸ்ரீமத் பகவதம் - 11 ஸ்கந்தம். 

(3) காவிரி ( 768 கிமீ ); பாலாறு ( 368 ); வைகை ( 264); பொருநை ( 120 ); 

(4) திருவாய்மொழி திருநாவாய் ஐதீகம் 

(5) சடகோப திவ்ய சரித்திரம்  ( மேற்கோள் ஸ்ரீமத்நாதமுனிகள் வைபவப் பிரகாசிகை)

(6) ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்த 

அவிதித விஷயாந்தரச் சடாரேர்
உபநிஷதாம் உபகாந மாத்ர போக:
அபிச குணவஸாத் ததேக ஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து
என்ற தனியனின் தமிழக்கம். 

Comments

  1. அற்புதமான கற்பனை வளம், அருமையான நடை. சூப்பர் ஜீ.

    ReplyDelete
  2. அபாரம் அற்புதம் .God bless you dear Desi .v

    ReplyDelete
  3. அருமை.ஆற்றிலும் முத்துக் குளித்தார்களோ தமிழர்?ஒரு தகவலுக்காக கேட்டேன்.தங்களிடம் இப்போதே கலியனின் தாகம் தெரிகிறது.செல்லும் இடங்களின் இயற்கையையும் அனுபவித்து எழுதுகிறீர்கள்.கலியனும் ஆடல்மாகுதிரையின் மீது நிக்கான் கேமெரா இல்லாமலேயே பாக்களில் இயற்கையை வர்ணித்தார்.நீங்கள் நவீன ஆழ்வார் கேமெரா அழகு சிந்துகிறது

    ReplyDelete
  4. மோகன் சிங்கம்September 13, 2020 at 5:22 PM

    தன்பொருணை எழில் நாதமுனிகளின் தாகம் மிக அருமையாக இருந்தது. அரங்கன் அருள் உங்களுக்கு தொடரை அழகாக கொண்டு செல்ல செய்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Description of the nature is beautiful

    ReplyDelete
  6. அருமை..அருமை..அருமை..மிக மிக மிக அருமை..

    ReplyDelete
  7. 🙏🙏 அருமை சுவாமி. படிக்கும்போது நா தித்திக்கிறது. தாசன்.

    ReplyDelete

Post a Comment