Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 10

தினமும் கொஞ்சம் தேசிகன் - 10



தினமும் கொஞ்சம் தேசிகன் பத்தாவது பகுதி. அதனால் பெரியாழ்வார் கூறும் பத்து மலர்களைப் பார்க்கலாம் அவை - செண்பகம், மல்லிகை, தமநகம், பாதிரி, மரு, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை

பெரியாழ்வார் யசோதையாகக் கண்ணனுக்குப் பல மலர்களைச் சூட்டிக்கொள்ள வாராய் வாராய் என்று கூப்பிடுகிறார். 
சில ’வாராய்’ வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன். 

தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய்
பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய்
பொருது வருகின்ற பொன்னே புன்னைப்பூ சூட்ட வாராய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய்
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் இருவாட்சிப்பூ சூட்ட வாராய்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய்

இந்த மலர்கள் எப்படி இருக்கும் என்று இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 


இந்த மலர்களை எல்லாம் லாக்டவுன் முடிந்த பிறகுக் கிராமங்களில் சென்று தேடலாம். மேல்கோட்டை சமஸ்கிருத ஆராய்ச்சி நிலையம் சுற்றி ஆழ்வார் பாசுரங்களில் வரும் மலர்களின் செடிகளை வளர்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஒரு முறை அவற்றைச் சுற்றிப் பார்த்தபோது செடிகள் இருந்தது ஆனால் மலர்கள் பூக்கவில்லை. வேலியின் மீது எதோ ஒரு பாம்பு தன் சட்டையை உலர்த்தியிருக்க, ஓடி வந்துவிட்டேன். 

ஸ்ரீ வைஷ்ணவர்கள் மெரினாவில் காலை ஓடிவிட்டு அறுகம்புல் சாறு சாப்பிடுவார்கள் ஆனால் அதைப் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க மாட்டார்கள். ஸ்வாமி தேசிகன் துளசி தான் வேண்டும் என்று இல்லை, அறுகம்புல் கூடப் போதும் என்கிறார். என்ன தேசிகன் இப்படி கூறினாரா ? அறுகம்புல் வைணவர்கள் சமர்ப்பிக்க மாட்டார்களே ? என்ற கேள்வி எழும். அதைப் பிறகு பார்க்காலம் அதற்கு முன் மீண்டும் பெரியாழ்வார்களின் மலர்களைக் கொஞ்சம் ஆராயலாம். 

மேலே பெரியாழ்வாரின் இந்தப் பூச் சூட்டல் பாசுரங்களில் ஒரு பொதுவான விஷயம் மறைந்து இருக்கிறது. மலர்கள் என்று நினைத்தால் தப்பில்லை. ஆனால் பொதுவான விஷயம் அதுவல்ல. மீண்டும் அந்தப் பாசுரங்களில் சிலவற்றைக் கீழே தருகிறேன். பெரியாழ்வார் பாசுரங்களாக இதைப் படிக்காமல், யசோதையாக இதைப் படித்துப் பாருங்கள். 

தேன் போன்ற கண்ணா கண் குளிர இருக்கும் நீல முகில்வண்ணா நீ செண்பகப் பூவைச் சூட்டிக்கொள்ள வாராய்

கொண்டல் வண்ணனே அழகிய கண்ணை உடையவனே திருவுக்கும் திருவாகிய என் செல்வா இனிய நறுமணம் கொண்ட மல்லிகை பூ சூட்டிக்கொள்ள வாராய்

ஆயனே குடக் கூத்து ஆடுபவனே கூத்தரசனே குருக்கத்திப் பூ சூட்டிக்கொள்ள வாராய்

’வாராய்’ என்று அழைப்பது இன்னொரு பொதுவான விஷயம். ஆனால் அழைப்பது என்று கூறுவது தவறு ’ஆசையுடன்’ அழைப்பது என்பதே சரி. எல்லா பாடல்களிலும் அது மறைந்து இருக்கிறது. 

கீதையின்  ‘சர்வ தர்மான் பரித்யஜ்ய'  என்ற சரணாகதி வாக்கியமான அடுத்து ‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம்’ என்ற வாக்கியம் மிகப் பிரபலம். 

ஒரு இலையோ ஒரு பூவோ, ஒரு பழமோ, தண்ணீரோ மனப்பூர்வமாகக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கிருஷ்ணப் பரமாத்மாவே கீதையில் கூறிவிட்டார் என்று சொல்லுவதைப் பார்க்கிறோம். இந்தப் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்பதற்கு என்ன எடுத்துக்காட்டு என்று பார்க்கலாம். 

- திரௌபதி பாத்திரத்தில் ஒட்டியிருந்த கீரை ( இலை ) கொடுத்தாள். 
- கஜேந்திரன் தாமரை பூ, அனந்தாழ்வான், பெரியாழ்வார், ஆண்டாள், குறும்பறுத்த நம்பி மண் புஷ்பம்  ( பூ ) கொடுத்தார்கள்
- சபரி பழம்  ( பழம் ) கொடுத்தாள். 
- பெரிய திருமலை நம்பி, ஸ்ரீ ராமானுஜர் தீர்த்த ( தண்ணீர் ) கைங்கரியம் செய்தார்கள். 

இதில் எல்லாம் மறைந்து இருப்பதும் ’ஆசையுடன் அன்பு’தான். 

ஸ்வாமி தேசிகன் பாதுகா ஸஹஸ்ரத்தில் ‘புஷ்ப காலடி’ என்ற ஒரு பகுதி வருகிறது அதில் கிருஷ்ணப் பரமாத்மாவின் பாதுகையே நீ நடந்து செல்வதற்காக, உன் விளையாட்டுக்காக இந்த உலகத்தில் பூக்களின் தோட்டங்களை உருவாக்கி, எப்போதும் பக்தர்கள் உனக்கு மலர்களை அள்ளி அள்ளிச் சாற்றியபடியே இருக்கிறார்கள். பாதுகையான உனது திருநாமத்தைக் கொண்ட நம்மாழ்வாரும் மகிழம் பூவின் நறுமணம் உள்ளது அதனை உன்னிடம் பார்க்கிறேன் என்று பாதுகையை துதிக்கிறார்.  

இரண்டு இடங்களில் அருகம் புல்லைப் பற்றிக் கூறுகிறார். 

மிகவும் எளிமையாகக் கிடைக்கக்கூடிய அருகம் புல்லையோ அல்லது துளசி இலையையோ சில எளியவர்கள் உனக்குச் சாற்றுவார்கள். இவை நஞ்சை அகற்றும் வைத்தியனைப் போல அரங்கனின் பாதுகை பிறவி நஞ்சை அகற்றும் என்கிறார். 

இன்னொரு இடத்தில் உனக்கு வழிபாட்டில் பூக்களைப் பயன்படுத்துவதில் என்ன பயன்  ? துளசி தான் வேண்டும் என்று இல்லை, அருகம் புல் கூடப் போதுமானது. உன்மீது பக்தி வைப்பவர்களுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் அளிக்கிறாய். 

இன்னொரு இடத்தில் சிலர் வாடும் பூக்களை விட்டுவிட்டு தங்கள் மனத்தைப் பூவாக்கி வந்து அர்ச்சனை செய்யக்கூடும். அவ்வாறு செய்பவர்களின் பாதங்களைத் தேவர்கள் வணங்குவார்கள் என்கிறார். 

இந்த மனப்பூவிற்குப் பெயர் தான் தூமலர். இதைத் தான் ஆண்டாள் தூயோமாய் (ஆசையுடன்) வந்து நாம் தூமலர்(ஆசையுடன்) தூவித் தொழுது என்கிறாள். அதாவது ஆசையுடன் வந்து ஆசை மலர்களை ஆசையாக சமர்ப்பித்து என்று படிக்க வேண்டும். 

தேசிகனும் ஆண்டாளும் பெரியாழ்வாரும் சமர்ப்பிக்கும் மலர்களுக்குப் பல பெயர்கள் இருக்கலாம், மணம் இருக்கலாம் ஆனால் அவை எல்லாம் ஒரே மலர்கள் அவை தூமலர்கள்! 

- சுஜாதா தேசிகன்
2-09-2020

Comments

  1. பூக்களின் பெயர்களைப்படித்தவுடன் சில எப்படி இருக்கும் என்று நினைத்தேன். உடனே போட்டோ போட்டுவிட்டீர்கள்! நன்றி.

    நீங்கள் சதாகாலமும் பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் நினைவிலேயே இருப்பதால் அவர்கள் உங்கள்மூலம் எங்களுக்கு கொஞ்சம் அவர்கள் நினைவை கொடுக்கிறார்கள். இதற்கும் நாங்கள் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    நீங்கள் இவற்றை தொகுத்து அளித்தாலே வைணவத்திற்கான தொண்டுக்கு டாக்டர் பட்டமும் கிடைத்துவிடும்.

    குருக்கத்தி என்பது ஊமத்தம்பூ மாதிரி இருக்கிறது. இருவாட்சி ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு சாத்தும் மாலையில் சிவப்பாக இருப்பது என்று நினைத்தேன். சக்கரத்தாழ்வார் சந்நிதி பக்கத்தில் தோட்டத்தில் அழகாக வளர்கிறது.

    தாசன்.

    ReplyDelete
  2. அருமை. குருக்கத்தி மலரை நீண்ட நாள் தேடிக் கொண்டு இருந்தேன். கண்டேன்! Thanyosmi. பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய்யும் மாலையே, வான் பட்டாடை உமதே, ஈ சன் ஞா லம் மெண்டுமிழ்ந்த எந்தன் ஏ க மூர்த்திக்க்கே!

    ReplyDelete

Post a Comment