Skip to main content

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை)



நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்
- ஆண்டாள், நாச்சியார் திருமொழி

ஸ்ரீரங்கவாசிகளுக்கே ‘EVS’ சாலையின் விரிவாக்கம் தெரியாது. நமக்கும் அந்தக் கவலை வேண்டாம். இவிஎஸ் சாலையும் வரதாச்சாரி தெருவும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’ என்று அந்தக் காலைவேளையிலும் பிடிவாதமாக அலறிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண தினத்தில் க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இறங்கியது ஜெயபாலனும், கண்ணம்மாவும். தூக்கம் மிச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது.

இறங்கியவுடன் கண்ணம்மாவிற்கு ஸ்ரீரங்கம் கோபுரமும் ஆவின் பால்வண்டிகளும் மூடப்பட்ட ஜன்னல்களும் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பவர்களும் கண்ணில் பட்டார்கள்.

“காபித் தண்ணி கிடைக்குமா?” என்றாள்

“கிடைக்கும் பேசாம வா!”

“உள்ளே அஞ்சு மாசக் குட்டி இருக்கு” என்ற தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக்கொண்டாள். ஜெயபாலன் அதைக் கவனிக்காமல் காது குடைந்துவிட்டு, தன் வேட்டியை மேலுயர்த்தி பட்டாப்பட்டியிலிருந்து செல்போனை எடுத்து அழுத்தினான்.

“காபி கிடைக்குமா கேளுங்க.”

“சட்... சும்மா இரு..” என்றபோது மறுமுனை ‘சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ என்றபோது வாயில் கெட்ட வார்த்தை வந்தது.
“பாட்டிலக் கொடு” என்று வாயைக் கொப்பளித்தபோது செல்பேசி அழைக்க, வாயை அவசரமாகத் துடைத்துக்கொண்டு, செல்பேசியை அழுத்தி “தோழர்” என்றான்.

“இங்கே... பஸ் ஸ்டாண்ட் பக்கம்... ஏ.டி.எம். எதிதாப்பல..”

“......”

“தங்கச்சியும் தான்.. தனியா விட முடியாது...”

“......”

“அங்கேயே நிக்கறோம்..”

“முத்து வரான்” என்று பூட்டியிருந்த அந்தக் கடை வாசலில் உட்கார்ந்துகொண்டு அவளையும் உட்காரச் சொன்னான். முப்பது நிமிடம் கழித்து கருப்பு சட்டை, ஜீன்ஸ் பேண்டுடன் முத்து என்கிற முத்துகுமார் பைக்கில் ஸ்டாண்ட் போட்டபோது கண்ணாடி இடுக்கில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அன்றைய நாளேடு கீழே விழுந்தது. அதைக் கையில் எடுத்துக்கொண்டே “ரொம்ப நேரம் ஆச்சா வந்து?”

“முக்கா மணி ஆச்சு” என்றாள் கண்ணம்மா.

“இப்பதாம்பா... சரி... நம்ம செய்யப் போற இடம் எங்கே?” என்றான் ஜெயபாலன்

“பக்கம் தான்.. தங்கச்சியால நடக்க முடியுமா?”

அவர்கள் அந்த இடத்தைப் பார்க்கச் சென்றபோது அங்கே மூன்று போலீஸ்காரர்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். அங்கே தற்காலிகத் தடுப்பில் ‘சாரதாஸ்’ என்று எழுதியிருந்தது.

‘இந்த ஹோட்டல்தான், பார்த்துக்கோ...’ என்று முத்து கண்களால் காட்ட, ஜெயபாலனும் கண்ணமாவும் அதைப் பார்த்தார்கள்.

அவர்கள் பார்த்த இடத்தில், “ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே - Hotel Sri Krishna Iyyer” என்று, தமிழில் பெரிதாகவும் ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதியிருந்தது.

“பார்ப்பான் என்ன மாதிரி எழுதியிருக்கான் பாரு” என்று முத்துக்குமார் சொல்ல, ஜெயபாலன் “(கெட்டவார்த்தை)... ஐய்யருக்கு இரண்டு ‘y’ வேற போட்டிருக்கான் என்ன திமிரு...!” என்று சிரித்தான்.

போர்டின் மேலே பொடி எழுத்துகளில் என்ன எழுதியிருக்கிறது என்று உற்றுப் பார்த்து, படிக்கத் தொடங்கினாள் கண்ணம்மா.

“ஸ்ரீ... மீன்... குளத்தி... பகவதி அம்மன் துணை” என்று இடதுபக்கத்திலும், வலது பக்கம் “ஸ்ரீ... சமயபுரத்து... மாரியம்மன்... துணை” என்றும், நடுவில் “ஸ்ரீ... லக்ஷ்மி... நரசிம்மன் துணை” என்றும் படித்து முடித்தபோது அவளுக்கு நாக்கு வறண்டு போயிருந்தது.

“இன்னிக்குத் தெறிக்க விட்டுடலாம்... கவலைப்படாதீங்க தோழர்... எதாவது சாப்பிட்டீங்களா?”

“இங்கே காபி கிடைக்குமா?” என்றாள் கண்ணம்மா.
“இங்கேயா?...” என்று குழப்பத்துடன் முத்துக்குமார் “இந்த ஹோட்டல் வேண்டாம்... நமக்குத் தெரிந்த கடை ஒண்ணு இருக்கு.. நீ தங்கச்சியக் கூட்டிகிட்டு கோபுரம் எதித்தாப்புல... போலீஸ் ஸ்டேஷன் பக்கம்... தலைவர் சிலை இருக்கு அங்கே வந்துடு... நான் நடந்து வரேன்” என்று முத்து பைக்கை ஸ்டார்ட் செய்து கொடுத்தான்.

கண்ணம்மா காபியும், நியூஸ் பேப்பர் கிழிசலில் மசால் வடையையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது முத்து வந்து, “போஸ்டர் பாரு” என்று சொல்ல, கோணலாக ஒட்டிய போஸ்டரில் “...சனிக்கிழமை காலை 10 மணிக்குச் சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்” என்று கொட்டை எழுத்தில் அடித்திருந்தார்கள்.

“மொத்தமா முவாயிரம் போஸ்டர்.. நேத்து ராவோடு ராவா நானும்... தில்லைநகர் சங்கர் தெரியுமில்ல... சேர்ந்து ஒட்டினோம்.”
“தலைவர் எத்தினி மணிக்கு வரார்?”

“தலைவர் கனடாலேர்ந்து நேத்தி ராத்திரிதான் வந்தார்... இங்கே பத்து பத்திரை மணிக்கு வந்துடுவார். கருப்பு பெயிண்ட் ரெடி பண்ணிடலாம்... பக்கத்துலேயே ஹார்ட்வேர் கடை இருக்கு... வாங்கிக்கலாம்.. இன்னிக்கு ஐயருக்குக் கருப்பு அபிஷேகம்தான்...”

மசால் வடை காகிதத்தில் அந்த எண்ணெய் வழிந்த நடிகரைப் பார்த்துக் கொண்டிருருந்த கண்ணம்மாவிடம் “தங்கச்சி.. செலவுக்கு வெச்சுக்கோ” என்று முத்துக்குமார் இரண்டு நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு பைக்கில் செல்லும்முன் ஜெயபாலனுடன் ஏதோ பேசிவிட்டு தோளில் தட்டிவிட்டுச் சென்றான்.

எட்டு மணிக்குக் கோபுரத்துக்கு முன் இருக்கும் காபி கடையில் கூட்டமாக இருக்க, அங்கே சில கருப்புச் சட்டைகள் தென்பட்டன. திடீரென்று ஒலிபெருக்கி ‘உஸ்...உஸ்’ என்ற சத்தத்தைத் தொடர்ந்து, கோபுரத்துக்கு முன் சிரித்துக்கொண்டிருந்த காந்தி சிலை பக்கம் விசில் சத்தத்துடன் ஒரு டாட்டா சுமோ வந்தது. நடுவில் ஒருவன் நெற்றியில் கர்சீப் கட்டிக்கொண்டு, சுருட்டு குடித்துகொண்டிருந்த முகம் போட்ட பனியனுடன் மூங்கில் கம்பில் கட்டப்பட்ட கருப்புக் கொடியைப் பிடித்துகொண்டிருக்க, பக்கத்தில் இன்னொருவன் “...பெரியார் வாழ்க...” என்றபோது ஜெயபாலன் “நீ போராட்டத்துக்கெல்லாம் வராதே... வயித்துல புள்ள இருக்கு... இங்கேயே நிழல்ல எங்காவது இரு.. கையில பணம் இருக்கு இல்ல? கருப்பு பெயிண்ட் ஒரு டப்பா, பிரஷ்... அப்பறம் நீ ஏதாவது வாங்கி சாப்பிடு” என்று பதிலுக்குக் காத்திராமல் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.

கண்ணம்மா என்ன செய்வது என்று தெரியாமல் ஜெயபாலனைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒலிபெருக்கி இன்னொரு முறை “பெரியார் வாழ்க... சமத்துவம் ஓங்குக” என்று முழங்கிவிட்டுத் தொடர்ந்தது.

“1957ல் தமிழ்நாடு முழுவதும் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் நடத்தி வெற்றி கண்டார்... ஆனால் தற்போது ஸ்ரீரங்கத்தில் ‘ஸ்ரீகிருஷ்ணய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே’ என்ற ஹோட்டல் இருக்கிறது. நம் கழகத் தோழர்கள் கொதித்துப் போய் ஹோட்டல் உரிமையாளாரை அணுகி பிராமணாள் என்பது வர்ணத்தின் பெயரை அப்பட்டமாகக் குறிக்கும் சொல்... பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தும் சொல்... அதை அழிக்க வேண்டும் என்று அறவழியில் கேட்டார்கள். ஆனால் பார்ப்பான் கேட்கவில்லை. இன்னிக்கும் பிராமணாள் பெயர் அழிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. வர்ண வெறி பிடித்தவர்கள்... தலைவர் இன்னும் சில மணிநேரத்தில் இங்கே வரப் போகிறார். நம் கருப்பு மை இன்று நாம் யார் என்பதைக் காட்டும்...” என்றபோது விசிலும் கைத்தட்டலும் மெலிதாகக் கேட்டது.

கண்ணம்மாவிற்கு எங்காவது அமைதியான இடத்தில் படுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சற்று நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கடையில் ‘இன்று மந்திரி சபை விரிவாக்கம்’ என்பது அவளுக்கு அபத்தமாகப் பட்டது. ஒலிபெருக்கிச் சத்தம் அவளுக்குப் பழகி, சுவாரசியம் இல்லாமல் போனபோது “ஒரு பன்னீர் சோடா கொடுங்க” என்றவரை கண்ணம்மா பார்த்தாள். அவருடன் இன்னொருவர் வந்திருந்தார். அவர் தலையில் குடுமி இருந்தது.

“சாமி உங்களுக்கு?”

“எனக்கு ஏதும் வேண்டாம். சந்நிதி கைங்கரியம் இருக்கு...”

“ஏன் சாமி கோபுரத்துக்கு முன்னாடி சிலை வைக்கும்போது நீங்க எல்லாம் சும்மாவா இருந்தீங்க?”

“போராட்டம் எல்லாம் நடத்தினோம்.. ஆனா ஆட்சி செஞ்சவா சப்போர்ட் இல்லை... என்ன செய்ய?”

“நீங்க அன்னிக்கு விட்டதுதான் இவங்க இன்னிக்கு தைரியமா மைக் பிடிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க...”

“திருமஞ்சனக் காவிரி பக்கம் நம்பிள்ளை சன்னதி இருக்கு... யாருக்குத் தெரியும்? ஆனா இந்தச் சிலை?... எல்லாருக்கும் தெரியும்... என்ன செய்ய...? கலி காலம்.”

“நீங்க ஏதாவது செய்யனும் சாமி... சும்மா பூஜை, பொங்கலுனு இருந்தா போதாது... நீங்க எல்லாம் மைக் பிடித்துப் போராட்டம் செய்யனும்...”
“யாரும் வர மாட்டா... ஐபிஎல் பார்த்துண்டு இருப்பா... ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வாழ்ந்த இடம்... இங்கே இருக்கும் மரம், பூ, கல்லு, மண்ணு, எறும்பு, மாடு எல்லாம் போன ஜன்மத்தில் ஏதோ புண்ணியம் செஞ்சுருக்கு..”

“அப்ப கடவுள் இல்லைனு இங்கே மைக் பிடிச்சு கத்திண்டிருக்கறவா எல்லாம்...?”

“கருப்புச் சட்டை போட்ட அடியார்கள்... பூர்வ ஜென்ம புண்ணியம் இன்னிக்கு இவா ஸ்ரீரங்கத்துல இருக்கா.”

கண்ணம்மா அவர்களிடம் சென்று “சாமி! இங்கே பெயிண்ட் கடை ஏதாவது இருக்கா?” என்றாள்.

“பழைய தேவி தியேட்டர் தெரியுமா?”

“தெரியாதுங்களே... ஊருக்குப் புதுசு”

“இப்படி நேராப் போனா, இடது கைப்பக்கம் பஸ் எல்லாம் திரும்பும்... அங்கே கடை இருக்கு. ஆனா பத்து மணிக்குத்தான் திறப்பாங்க...” பன்னீர் சோடாவிற்கு சில்லறையுடன் ஏப்பத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.
கண்ணம்மாவுக்கு ஒலிபெருக்கி ஏதோ பேசிக்கொண்டேயிருந்தது சலிப்பாக இருந்தது. தானும் பன்னீர் சோடா குடிக்க வேண்டும் போல இருந்தது. போலீஸ் ஜீப் ஒன்று ‘இங்கே யாரும் கூட்டம் போடக் கூடாது... நகருங்க... நகருங்க...’ என்று அவள் தாகத்தையும் அமைதியாகக் கலைத்துவிட்டு எக்ஸ்ட்ராவாக ‘...ஆட்டோ உனக்கு இங்கே என்ன வேலை...?’ என்ற அதட்டலுடன் சென்றது.
‘ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் நம் தலைவர் சற்று நேரத்தில் இங்கே வருவார்...’ என்றது இன்னொரு ஒலிபெருக்கி.
நடந்து சென்றவரிடம் “மணி என்னங்க?” என்று கேட்டுவிட்டு கண்ணம்மா மெதுவாக பெயிண்ட் கடை நோக்கி நடக்கத் தொடங்கினாள். பஸ் திரும்பும் இடத்தில் சிமெண்ட் மூட்டைகள், சுருட்டபட்ட டியூப், சங்கலிகள் வெளியே தொங்க, ‘ஸ்ரீரங்கா ஹார்ட்வேர்’ என்ற கடை காலியாக இருந்தது. நம்பெருமாள் சேர்த்தி சேவைக்குக் படத்துக்கு கீழே ஊதிபத்தி பத்து பர்சண்ட் தன்னை இழந்து புகையால் கைங்கரியம் செய்து கொண்டிருந்தது.

“கருப்பு பெயிண்ட் கொடுங்க” என்ற வாசகத்தை, வெளியே சென்ற போலீஸ் ஜீப்பின் தலையில் சிகப்பு-நீல ஒளியின் பளிச்சும், அதைத் தொடர்ந்த ஒலிபெருக்கியின் ‘கூட்டம் போட அனுமதி இல்லை... யாரும் கூட்டம் போடக் கூடாது... அமைதியாக் கலைஞ்சுடுங்க...!’ அபகரித்தது.

“அந்தச் சிமெண்ட் மூட்டையை எல்லாம் உள்ளே அடுக்குப்பா.. இன்னிக்கிக் கடையைத் திறக்க வேண்டாம்... பிரச்னை வர வாய்ப்பு இருக்கு” என்று தினத்தந்தியை மடித்து வைத்தார் கடைக்காரர். “உனக்கு என்னம்மா வேணும்? சீக்கிரம் சொல்லுமா... கடை இன்னிக்குக் கிடையாது.”

“பெயிண்டு...”

“எதுக்கு அடிக்க?”

கண்ணம்மாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “சுவத்தில அடிக்க...”

“வெளிச் சுவரா? வீட்டுக்குள்ள அடிக்கவா? டிஸ்டம்பரா? ராயலா? எமல்ஷனா? என்ன கலர்? எவ்வளவு வேணும்?” என்று கேள்விகளை அடுக்க கண்ணம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“கருப்பு பெயிண்ட் ஒரு டப்பா... இதோ இங்கே அடிச்சிருக்கீங்களே...”
“இந்த பெயிண்ட் சுவத்துல அடிக்கமாட்டாங்க... ஒரு லிட்டர் கருப்பு எனாமல் கொடுப்பா!”

“பிரஷ் ஏதாவது வேணுமா?”

“ஆமாம் ஒரு பிரஷ்.”

“எவ்வளவு இன்ச்?”

“இந்த அளவு கொடுங்க..” என்று கையால் காண்பித்தாள்.

“அரை இன்ச் பிரஷ்... வேற?” கண்ணம்மா தலையை ஆட்ட, ஒரு துண்டுக் காகிதத்தில் சரசரவென்று எழுதி “இருநூற்றி நாற்பத்தி இரண்டு ரூவா. இருநூற்றி நாற்பது கொடு!”

கண்ணம்மா தன் கையில் சுருட்டியிருந்த பணத்தைப் பிரித்தபோது அதில் இரண்டு நூறு ரூபாய் இருந்தன.

“இதுல சின்ன டப்பா இருக்கா?”

“முதல்லயே சொல்லக் கூடாதா?... அரை லிட்டர் கொடுப்பா.”

“நூற்றி முப்பது கொடு” என்று கண்ணம்மாவிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு சில்லறையைக் கொடுத்தபோது கடை வாசல் காலியாக இருந்தது.

கண்ணம்மா கோபுரத்தை நோக்கி அவசரமாக நடந்தாள். கோபுர வாசலில் மாடு ஒன்று என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்றுக்கு போய்க்கொண்டு இருந்தது. தடுப்புகள் போடப்பட்டு, கடைகள் எல்லாம் படபடவென்று ஷட்டர்கள் மூடப்பட்டு, கொய்யா கூர் கலைக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் போலீஸ் நின்று கொண்டு இருந்தது.

பெயிண்ட் வாங்கி வருவதற்குள் இடமே சினிமா செட் போட்ட மாதிரி மாறிவிட்டதை உணர்ந்தாள். கண்ணம்மாவிற்கு உலகமே தன்னைப் பார்த்துக் கோபித்துக்கொண்டது போலத் தோன்றியது.

“என்னப்பா ஒரு ஆட்டோ, பஸ் கூட இல்லையே”, “சி.எம் வராரா?” என்ற கேள்விகளைக் கடந்து சென்றபோது, கோபுர வாசலில் பலர்கூடி ஊர்வலம் போலக் காட்சி அளித்தது. கூட்டத்தின் நடுவில் ஜெயபாலனைப் பார்த்தபோது மனதில் நிம்மதியும், கூட்டத்தில் ஊர்ந்து சென்ற போலீஸ் ஜீப்பைப் பார்த்த போது பயமும் கவ்விக்கொண்டது.

கண்ணம்மா ஜெயபாலனை நோக்கி நடந்தாள்.

“இங்கே எதுக்கு புள்ள வந்தே?”

“பெயிண்ட் வாங்கியாந்தேன்.”

“இன்னிக்குத் தேவைப்படாது போல... கோர்ட் தடை விதிச்சுட்டாங்களாம்.”
“ஐயோ... இதைத் திருப்பிக் கூட தர முடியாது. கடை எல்லாம் முட்டிட்டாங்க.”
“ஒன்னும் கவலைப்படாதே... இருட்டின பெறகு ஒரு வேலை இருக்கு... முத்து... முத்து...” என்று கூப்பிட, முத்து வந்தபோது ஒருவித வாடை அடித்தது.
“முத்து! இவ கிட்ட சொல்லிடு.”

“தங்கச்சி, உனக்குத் தாயார் சன்னதி தெரியுமா?”

கண்ணம்மா தெரியாது என்பதை போல முகத்தைக் காண்பிக்க, முத்து தொடர்ந்தான். “கடை எல்லாம் மூடிட்டாங்க... அதனால நேரா கோபுரத்துக்குள்ள போயிடு. கருடன் சன்னதி வரும்... அங்கே பிரசாதக் கடை இருக்கு. புளிசாதம், தயிர் சாதம் கிடைக்கும். பதினஞ்சு ரூபாய். சாப்பிட்டுக்க. அங்கேயே எதிர்த்த மாதிரி தண்ணி இருக்கு. இருட்டிய பிறவு ஏழு மணிக்கு தாயார் சன்னதி வாசல்ல வந்திடு. வேலை இருக்கு.”

“என்ன வேலை?”

முத்து நிதானமாகச் சொன்னான். “கோர்ட் கருப்பு பெயிண்டு வெச்சு அழிக்கக் கூடாது என்று தீர்ப்பு சொல்லிட்டாங்க.... தலைவர் கொஞ்ச நேரத்துல வந்து பேசுவார். ஒரு கூட்டம் இருக்கு. நாம ஏழு மணிக்கு... கொஞ்சம் இருட்டின பெறவு... கோயில் சுவத்தில நாமம் எல்லாம் பெரிசா போட்டிருக்காங்கல்ல... கருப்பு பெயிண்ட் வெச்சி.. “

“வெச்சி?”

“வெச்சு செஞ்சிடுவோம். நீ கிளம்பு தங்கச்சி...”

கண்ணம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கிளம்பினாள். கோபுரத்தைத் தாண்டிச் சென்றபோது கோயிலில் கூட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது. குழந்தை ஒன்று எல்.ஈ.டி பம்பரம் வேண்டும் என்று அடம்பிடித்துகொண்டு இருந்தது. “துளசி மாலை வாங்கிப் போங்க அக்கா” என்று ஒரு சின்ன பெண் அவளைச் சுற்றி சுற்றி வந்து கெஞ்சியது.
கருட மண்டபத்துக்கு வந்தபோது வவ்வால் நாற்றம் அடித்தது. சற்று தூரம் சென்று பார்த்தபோது கையில் இருபது ரூபாய் மட்டுமே இருந்தது. ஐம்பது ரூபாயை பெயிண்ட் கடைக்காரர் திருப்பித் தந்தாரா இல்லை வழியில் விழுந்துவிட்டதா என்று நினைவில்லை.

மத்தியானம் ஒரு பொட்டலம் புளிசாதம் வாங்கிச் சாப்பிட்டாள். பாக்கி ஐந்து ரூபாய்க்கு ஒரு வடை தந்தார்கள். இன்னும் பசித்தது. சூரிய புஷ்கரணி பக்கம் படுத்தபோது தூங்கிவிட்டாள். எழுந்தபோது எல்லாம் இருட்டாக எங்கோ ‘டம் டம்’ என்று மேளச் சத்தம் கேட்டது. சோர்வாக இருந்தது.

துடப்பத்தை வைத்துக் கூட்டிக்கொண்டிருந்த பணியாளாரிடம் “மணி என்ன?” என்றபோது “ஏழு ஆகப் போகுது... இனிமேதான் நடை திறப்பாங்க.”

“வெளியே எப்படிப் போகணும்?”

“நீ எந்தப் பக்கம் போகணும்?”

“தாயார் சன்னைதி பக்கம்.”

“இப்படியே நேரா போனா தன்வந்திரி சன்னதி வரும். அங்கே கேட்டா சொல்வாங்க.”

மதில்களைப் பார்த்து நடந்து சென்றபோது பிரமிப்பாக இருந்தது. அதில் சோர்வாக சாய்ந்தபோது சூரியனின் சூடு இன்னும் கற்களில் தெரிந்தது. அவளைக் கடந்து பேட்டரி கார் காலியாகச் சென்றபோது அதைக் கூப்பிடலாமா என்று யோசிப்பதற்குள் அது சென்றுவிட்டது.

மெதுவாக நடந்தாள். தன்வந்திரி சன்னதிப் பக்கம் ஒரு பூனை ஓடியது. “தாயார் சன்னதி...” என்றவுடன் “இதோ இப்படிப் போனா வரும்” என்று ஒருவர் கைகாட்டினார்.

‘தாயார் சந்நிதி’ என்று நியான் எழுத்துகள் ஒளியில் தெரிய, கண்ணம்மாவுக்குத் தளர்ச்சி ஏற்பட்டு அப்படியே கம்பர் மண்டபத்தில் உட்கார்ந்தாள். சரிந்தாள் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்.
தேசிகர் சன்னதியில் காலை ஆட்டிகொண்டிருந்தவர் இதைக் கவனித்து ஓடி வந்தார். “என்ன ஆச்சு?” என்று கேட்டபோது கண்ணம்மாவுக்கு கண்கள் திறக்கத் தெம்பில்லாமல் சொருகியது. அவள் வயிறு சற்று மேடிட்டிருப்பதைக் கவனித்து, உடனே தாயார் சன்னதியில் சீருடையில் இருந்த செக்யூரிட்டியை நோக்கி ஓடினார்.

“ஒரு பொண்ணு மயக்கமா இருக்கா... கம்பர் மண்டபம்... புள்ளதாச்சி போல...” என்று படபடப்பாகச் சொல்ல, தாயார் சன்னதியிலிருந்து வெளியே வந்தவர்களும் கம்பர் மண்டபத்துக்கு செக்யூரிட்டியுடன் விரைந்தார்கள். கண்ணம்மா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தாள்.

ஒருவர் உடனே தன்னிடம் இருந்த பூ, மஞ்சகாப்பு இத்தியாதிகளை “இதை கொஞ்சம் வெச்சிக்கோங்க” என்று கொடுத்துவிட்டு உடனே செயல்பட்டார். “முதல்ல எல்லோரும் கொஞ்சம் தள்ளிப் போங்கோ தள்ளி போங்கோ.. காத்து வரட்டும்” என்று கண்ணம்மாவின் கைகளைப் பிடித்து நாடியை சோதிக்க ஆரம்பித்தார்.

“கூட யாராவது வந்தீங்களா?” கூட்டம் ஓர் அடி தள்ளிச் சென்றது.
“நாடித் துடிப்பு அதிகமா இருக்கு.. தண்ணி வேணும். சக்கரை... ஸ்வீட் ஏதாவது இருக்கா?... ஆம்புலன்ஸ் ஒன்னுக்கு சொல்லிடுங்க...” என்றார்.
உடனே ஒரு பிஸ்லேரி வந்தது.



“கொஞ்சம் இருங்கோ. மேலே நரசிம்மர் சன்னதில பானகம் இருக்கு. எடுத்துண்டு வரேன்” என்று அர்ச்சகர் மேட்டழகிய சிங்கர் சன்னதி படிகளை நோக்கி ஓடினார். வட்டிலில் பானகம் எடுத்துக்கொண்டு வர, அதைக் கண்ணம்மாவின் வாயில் விட்ட பிறகு, கண்ணம்மா விழித்தாள். கூட்டத்துக்கு உயிர் வந்தது.

அவள் கையில் இன்னும் கொஞ்சம் பானகம் ஊற்றப்பட்டது. அதையும் குடித்தாள்.

“ஏம்மா வயித்துல புள்ள இருக்கு... எத்தனை மாசம்?”
“அஞ்சு ஆச்சு.”

“காலையிலிருந்து என்ன சாப்பிட்ட? தண்ணி கிண்ணி குடிச்சியா?” கண்ணம்மாவுக்கு அப்போதுதான் தான் தண்ணீரே குடிக்கவில்லை என்று தெரிந்தது.

“இல்லை” என்றாள்.

“...டிஹைட்ரேஷன்... லோ சுகர்... குழந்தை வயித்துல இருக்கு... அதுக்காகவாவது ஒழுங்கா சாப்பிட வேண்டாமா? நல்லவேளை இந்த ஸ்வாமி பானகம் கொடுத்தார். இல்லன்னா ஆபத்தா முடிஞ்சிருக்கும்...”
அர்ச்சகர் சந்தோஷமாக “தேவரீர் டாக்டரா?” என்றார்.

“ஆமாம்.. திருநெல்வேலியில.”

“ஆழ்வார் எந்தத் தொழிலையும் சொல்லலை. ஆனா மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா என்று ஆழ்வார் டாக்டரை மட்டும்தான் சொல்லுகிறார். நரசிம்மர் மாதிரி வந்து காப்பாத்திருக்கார்... நீ ஒன்னும் கவலைப் படாதே... பானகம் குடிச்சிருக்க... குழந்தை பிரகலாதன் மாதிரி பிறப்பான்... இந்தா இன்னும் கொஞ்சம் சாப்பிடு” என்று அவள் கையில் பானம் முழுவதையும் கவிழ்த்தார்.

“எங்கேமா போகணும்?... ஆம்புலன்ஸ் வேண்டாம்னு சொல்லிடுப்பா.”
“தாயார் சன்னதிக்கு வழி கேட்டு வரச் சொன்னாரு.”

“யாரு?”

“என் வூட்டுக்காரர்..”

“இதோ இதுதான் கேட்டு” என்றதைக் கேட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினாள். கை பிசுக்காக ஒட்டியது. மூக்குப் பக்கம் வைத்துப் பார்த்தபோது சுக்கும், ஏலக்காய் வாசனையும் கலந்து அடித்தது.
தாயார் சன்னதி வாசல் திகில் படத்தில் வரும் மௌனம் போல நிசப்தமாக இருந்தது. தூரத்தில் இருவர் வருவது தெரிந்தது. ஜெயபாலுவும் முத்துவும் வந்தபோது பையைக் கொடுத்தாள்.

மதில் மீது வரையப்பட்ட நாமம் பக்கம் நெருங்கிய ஜெயபாலன், பிரஷ்ஷை எடுத்தபோது “ஏதோ பிசுபிசுப்பா ஒட்டுதே” என்றான்.
கண்ணம்மா மீண்டும் தன் கையை முகர்ந்தாள்.

-சுஜாதா தேசிகன் 
ஓவியம்: சுஜாதா தேசிகன்
நன்றி: வலம் ஆகஸ்ட் 2019 இதழில் பிரசுரம்

Comments

  1. உப்பிலிஸ்ரீனிவாசன்July 19, 2020 at 8:53 PM

    திருமஞ்சனக் காவிரி பக்கம் நம்பிள்ளை சன்னதி இருக்கு... யாருக்குத் தெரியும்? ஆனா இந்தச் சிலை?... எல்லாருக்கும் தெரியும்... என்ன செய்ய...? கலி காலம்.”

    எதார்த்தமான வரிகள் தேசிகன் சார்! Simply superb.

    ReplyDelete

Post a Comment