Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன்! - 2


தினமும் கொஞ்சம் தேசிகன்!  - 2

கடந்த பகுதியில் பரி  என்ற வார்த்தை வந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். ஒன்று ’திருக்குறள் பரிமேலழகர்’;  மற்றொன்று  திருச்சின்ன மாலை பாசுரத்தில் ‘ஆனை, பரி, தேரின்மேல் அழகர் வந்தார்’ என்ற வாக்கியம். 

இந்நேரம் பரி என்ற வார்த்தையின் பொருள் உங்களுக்குப் புரிந்திருக்கும். குதிரை. 

காஞ்சி பேரருளாளன் குதிரை வாகனத்தில் வந்தார் என்கிறார் ஸ்வாமி தேசிகன். இதில் அவர் ‘அழகர்’ என்ற ஒரு வார்த்தையை அழகாக நுழைத்திருக்கிறார் பாருங்கள். 

அழகர் குதிரையின் மீது அமர்ந்து ஆற்றில் இறங்குவது பிரசித்தம். பரி என்றவுடன் 'பரி, தேரின்மேல் அழகர்' என்கிறார் தேசிகன். அதாவது குதிரை மேல் அழகர் ! இப்போது குதிரை என்ற வார்த்தைக்குப் பதில் பரி என்று மாற்றிப் பாருங்கள் உங்களுக்குப் பரி மேல் அழகர் என்ற வார்த்தை கிடைக்கும். 



ஹயக்ரீவர் என்று கூறியவுடன் +2 தேர்வுக்கு வேண்டிக்கொள்வது நினைவு வரும் அடுத்து ஸ்வாமி தேசிகன் நினைவுக்கு வருவார். 

ஸ்வாமி தேசிகனின் தாய் மாமா அப்புள்ளார் சொல்லிக்கொடுத்த கருட மந்திரத்தைத் திருவயிந்திபுரம் மலையில் ஓர் அரச மரத்தடியில் நாதமுனிகள் கண்ணிநுண் சிறுதாம்பு போல உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். கருடன் தேசிகன் முன் தோன்றி ஸ்ரீஹயக்கிரீவ மந்திரத்தை உபதேசித்து, ஸ்ரீ ஹயக்கிரீவ மூர்த்தி ஒன்றையும் கொடுத்தார். 

ஹயக்ரீவர் குதிரை வடிவில் பெருமாளின் மற்றொரு அவதாரம். பொதுவாக நமக்குப் பத்து அவதாரம் தெரியும். அதில் ஹயக்ரீவர் அவதாரம் வரவில்லையே இவர் ஏதோ தேசிகனுக்கு மட்டும் ஸ்பெஷலான அவதாரமோ என்று சிலர் நினைக்கலாம். 


திருமங்கை ஆழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். 

வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே!

இதில் ஆழ்வார் குற்றம் எதுவுமில்லாத நான்கு வேதங்களை இழைத்தவனாய், பிரம்மாவிற்கு அருள் செய்து, முன் காலத்தில் குதிரையாய்த் தோன்றி, ஓசை வாய்ந்த வேதங்கள், சாத்திரங்கள், இவற்றை மீட்டுக் கொடுத்தவனே என் பால் அருள் புரிய வேண்டும் என்கிறார்


இன்னொரு இடத்தில் திருமங்கை ஆழ்வார் 


முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம் பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின்,
செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம் அவைமுரலச் செங்கமல மலரை யேறி,
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே

இதிலும் இருள் சூழ்ந்தபோது எல்லோரும் கலங்கி நின்றார்கள். அப்போது குதிரை வடிவில் வேதங்களின் கருத்துகளை எல்லாம் கற்பித்த நம் பெருமான் இவனே என்கிறார். 

இரண்டு பாசுரத்திலும் ஒன்றைக் கவனித்தால் பரிமுகமாய் வந்த பெருமாள் வேதத்தை ஊட்டி விட்டுச் சென்றிருக்கிறார். 

திருமங்கை ஆழ்வார் ஆடல்மா என்ற குதிரைமீது தான் எல்லா இடங்களுக்கும் சென்றுள்ளார். அந்த குதிரையும் இவருக்கு வேதத்தை ஊட்டிவிட்டிருக்க வேண்டும்!. ஆழ்வாரை  'நாலு கவி பெருமாள்' என்று அழைப்பார். 

இவரைப் போலவே தேசிகனுக்கும் ஸ்ரீஹயக்கிரீவர் தன்னிடம் இருந்த அமுத ரசத்தை தன் கைகளாலேயே ஊட்டி விட்டிருக்கிறார். அதனால் தான் தேசிகனும் “கவிதார்க்கிக சிம்மம்”, “சர்வ தந்திர சுதந்திரர்”, “வேதாந்ததாசரர்” என்று போற்றப்படுகிறார். 

திருமங்கை ஆழ்வார், தேசிகனுக்குப் பரியைப் பற்றித் தெரிந்திருக்கிறது. ராமானுஜருக்கு ? 

ராமானுஜர் ? யதிராஜ வைபவம் என்ற நூலை வடுக நம்பி அருளியுள்ளார். அதில் ஒரு ஸ்லோகம் இது 


"தத்பாஷ்யமாதாய நிதாய மூர்த்தி ஸ்ரீபாஷ்யமே தத்வரபாஷ்யக்ருத் த்வம்/
இதீவ தஸ்மை ப்ரததௌச தேவீ பாஷ்யம்ஹயக்ரீவமபி ஸ்வதேவம் //"


காஷ்மீரத்தில், பிரம்ம சூத்திரத்துக்கு ஸ்ரீ பாஷ்யத்தை தன்தலையால் தாங்கிய சரஸ்வதி இதுவன்றோ ஸ்ரீபாஷ்யம். சிறந்த இப்பாஷ்யத்தை அருளிச் செய்த நீர் இனி ஸ்ரீபாஷ்யகாரர் என்கிற புகழுடன் விளங்குவீர் என்று ஸ்ரீகோசத்தையும்,தான் வணங்கும் பரிமுகப் பெருமாளையும் அவரிடம் சேர்ப்பித்தார் என்கிறார். 

இங்கே சரஸ்வதி வணங்கும் பரிமுகப் பெருமாள் என்பது ஹயக்கிரீவ பெருமாள். இது தற்போது பரகால மடத்தில் இருக்கிறது. 


ஸ்வாமி தேசிகனின் அமிருதாசுவாதினியில் வரும் பாசுரம் இது.


அலர்ந்த அம்புயத்து இருந்து தேன் அருந்தி இன் அகல்
அல்குலார் அசைந்து அடைந்த நடை கொளாதது அனம் எனோ
நலம் தவிர்ந்ததால் என் கொல் நாவின் வீறு இழந்ததால்
நா அணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்தது என்
சலம் தவிர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச்
சரிவு இலேன் எனக் கனைத்து உரைத்த எதிராசர் தம்
வலம் தரும் கை நாயனார் வளைக்கு இசைந்த கீர்த்தியால்
வாரி பாலது ஆம் அது என்றும் மாசு இல் வாழி வாழியே.


ஒரு பொய்கை கரையில் இருவர் பேசிக்கொள்கிற மாதிரி ஸ்வாமி தேசிகன் அருளியுள்ளார். சுருக்கமாகச் சொல்லுகிறேன். கரையில் அன்னப் பறவை சும்மா இருக்க ஏன் சும்மா இருக்கிறது ? என்று ஒருவர் கேட்க மற்றொருவர் இவ்வாறு பதில் சொல்லுகிறார்

ஸ்ரீபாஷ்யகாரருடன் பிற மதத்தினர் அடிக்கடி வாதத்திற்கு வந்தார்கள். குற்றமற்ற தன் வாதங்களைச் செய்து அவர்களை வென்றார். இன்னும் வாதம் புரிய எவர் வந்தாலும் பின்வாங்கமாட்டேன் என்று கர்ஜித்தார். எம்பெருமானுடைய சங்கம்போலத் தூய வெண்மையான புகழ் வளர்ந்தது. அது உலகம் எங்கும் பால் போலப் பரவியது. பாலையும் நீரையும் பிரிக்கும் வேலையே இல்லை என்று அன்னப் பறவை தன் பெருமையைச் சொல்ல முடியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறது. இதை நீங்கள் பல புத்தகங்களில்/ உபன்யாசத்தில் கேட்டிருப்பீர்கள். 

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்வாமி தேசிகன் “கனைத்து உரைத்த எதிராசர்” என்கிறார். ஹயக்ரீவர் எழுப்பும் “ஹலஹல” என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்தும் என்பர். இங்கே ஸ்ரீராமானுஜர் ’கனைத்து உரைத்த’ என்பது அவருடைய வேத கர்ஜனை! 
இங்கே தன் தேசிகன் நிற்கிறார்! 

- சுஜாதா தேசிகன் 
18-07-2020

Comments

  1. 🙏🙏 வார்த்தை இல்லை நன்றி சொல்ல. ஹயக்ரீவ அவதாரம் ஏன் தசாவதாரங்களில் இல்லை என்று யோசிக்கக்கூடத்தெரியவில்லை.

    வேதங்களை கற்பித்தவரா, மீட்டெடுத்தக் கொடுத்தவரா என்று விளங்ஸ்வில்லை.

    ஹயக்ரீவர் எல்லா அவதாரங்களுக்கும் முன்னாலா?

    ReplyDelete
    Replies
    1. இதே சந்தேகம் அடியேனுக்கும் தயவுசெய்து இவற்றை நிவர்த்தி செய்யுங்கள்

      Delete
  2. அடியேன், சாதாரணமாக ஒரே வார்த்தை திரும்பத் திரும்ப வந்தால் "கூறியது கூறல்" என்ற குற்றமுண்டாகும் என்பர் இலக்கணப் பெரியோர். ஆனால் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த திருச்சின்ன மாலையில் வந்தார் என்பது பலமுறை வருகிறபடியால் குற்றமில்லையோ என்று நினைத்தபோது ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் 77 முறை வந்தார் வருகிறது. ஒவ்வொரு முறையும் வருகின்ற காரணம் வேறு என்று சொல்லி அதனால் குற்றமாகாது என்று அருளிச் செய்தார்.

    ReplyDelete
    Replies
    1. திருச்சின்னமாலை நூலுக்கு ஆங்கிலத்தில் முகவுரை எழுதிய ஶ்ரீ வீ.வீ. ஶ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமியே தமிழிலும் ஒரு அற்புதமான முன்னுரை அளித்திருக்கிறார். அந்த முன்னுரையில் ஒரு பகுதி இது

      இப்பாசுரங்களில் ஒவ்வொரு வரியிலும் கடைசியில் எழுதப்பட்டிருக்கிற ''வந்தார்'' என்னும் பதம் முக்கியமாய்க் குறிக்கத் தக்கது. அப்பதத்தில் உள்ள அர்த்த புஷ்டியை நாம் அளவிட்டுக் கூற முடியாது 10 பாசுரங்களிலும் ஒவ்வொரு பாசுரத்தில் 8 வரிகள் இருந்தும் 80 தடவை ''வந்தார்'' என்னும் பதம் உச்சரிக்கப்படினும் அது ஓரிடத்திலாவது அச்ராவ்யமாகவாவது அழகில்லாததாகவாவது நம் உள்ளத்தைக் கவராத தாகவாவது இருக்கவில்லை. ஸ்ரீதேசிகனுடைய காவ்யத்தில் இது ஓர் ஆச்சர்யமான ரீதி. புநருக்தியினால் ஒருவிதமான வெறுப்பும் உண்டா காமல் மேன்மேலும் விருப்பையே அதிகரிக்கும் ரீதியில் அடுத்தடுத்து அதே பதத்தை உபயோகிக்கச் சக்தி வாய்ந்த கவி கவிஸிம்மம் ஒருவரே. இந்த "வந்தார்'' என்னும் பதம் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அதிகமான மனஸ்ஸந்துஷ்டியை உண்டாக்கக் கூடிய பதம். அப்பதத்தில் அந்தர்ப்பூதமாயும் குறிப்பிட்டனவும் த்வனிப்பனவாயுமுள்ள அர்த்தங்கள் பற்பல உள. ஸாதாரணமாக நம்முடைய பேச்சிலும் கூட 'வந்தார்'' என்ற வுடனே வெகு காலமாய் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒருவர் வந்துவிட்டார்' என்று குறிப்பிடுவதாகும். இதை இம்மஹாகவி பகவானிடத் தில் அந்வயித்து அவர் 'வந்தார்' என்று நமக்குத் தெரிவித்தாரானால் அதைவிட நமக்கு ஆச்சர்யத்தையும் அபீஷ்டத்தையும் அளிக்கத்தக்கது வேறு யாது? மேலும் 'வந்தார்' என்ற பதத்திற்கு வருகிறார்' என்று இல்லாமல் இறந்த காலம், காட்டி உபயோகித்திருப்பதால் ''வந்து விட்டார்'' என்ற அர்த்தத்தை ஸுசிப்பித்துத் திரும்பவும் போய் விடமாட்டார் என்கிற த்வந்யர்த்தமும் தெரிவிக்கப் படுகின்றது. அதுவுமன்றி ''வந்தார்'' என்றால் வரக் கூடாதவர், எதிர்பார்க்கப்படாதவர் வந்துவிட்டார் என்ற ஹ்ருதயங்க மமான அர்த்தமும் கூறப் பெறுகின்றது. அதுவுமன்றி "வந்தார்'' என்றால் தம்மால் வராமல் இருக்க முடியாமையால் ஆகர்ஷிக்கப்பட்டு வந்து விட்டார் என்கிற விசேஷார்த்தமும் தோன்று கின்றது. மேலும் தன் வீட்டிற்கோ, தேசத்திற்கோ திரும்பிச்செல்பவனை "வந்தான் என்கிறோ மாதலின் இங்கு "வந்தார்' என்றால் தம் அகத்திற்கு வந்தார் என்ற அர்த்த மும் தெளியக் கிடக்கின்றது. மேலும் "வந்தார்'' என்ற பதம் "வந்தவர்"
      என்றும் குறிக்குமாதலின் வந்தவர்" இன்னார் என்றும், அவருடைய ப்ரத்வமும், வருவதால் ஏற்பட்ட ஸௌலப்யமும் ஏககாலத்தில் குறிப்பிடப் படுகின்றன. அதற்கு மேலும் ''வந்தார்'' என்றால் வெகு காலம் பிரிந்ததால் விரகதாபத்துடன் " வருவாரோ' எப்பொழுது "வருவாரோ'' என்று தத்தளித்துக் கொண்டிருக்கிற ஸ்த்ரீப்ராயமான ஜீவாத்மாவுக்கு மனத்திற்கு ஆச்வாஸமாகக் கண்டேன் ஸீதையை என்றபடி இதோ வந்து விட்டார் என்பதையும் ஸுசிப்பிக்கும். அதுவுமன்றி தேடித்தேடியலைந்து எங்கும் காணக் கிடைக்காமல் இருந்த வ்யக்திதாமாகவே இதோ ப்ரத்யக்ஷ மாய் வந்து விட்டார் என்பதையும் குறிக்கும். அதற்கு மேலும் ஒருவிதமாய் நோக்குமிடத்துப் போனவரே திரும்பி வரக்கூடுமாதலின் வெகுகாலம் முன்னமே போய்விட்டு ஒருவிதச் செய்தியும் தெரியாமலே இருந்த ஒரு வியக்தி நாம் எதிர் பார்க்காமலே 'இதோ வந்தார்'' என்றும் காட்டும்.

      Delete
  3. மிக அழகான எளிமையான தெளிவான நடை. அருமை

    ReplyDelete
  4. மிக அருமை .....நன்றி

    ReplyDelete
  5. தாசன் அடியேன்

    ReplyDelete
  6. ஆஹா. எத்தனையெத்தனை திகட்டாத தகவல்கள், வந்தார் என்ற பதத்திற்கு!!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. மனங்கொள்ளா ஆச்சரியம் 🙏🙏. அத்தனை பாசுரங்களும், ஸ்ரீ தேசிகரின் ப்ரபாவமும், ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாளின் அமோகமான தகவல்களும், தரிசனமும், மிகவும் திவ்யம். பாக்யம் 🙏🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment