Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன்! - 1

தினமும் கொஞ்சம் தேசிகன்! - 1

தினமும் கொஞ்சம் தேசிகன் என்ற தலைப்பைப் பார்த்து ஏமாற வேண்டாம். தினமும் வரப் போவதில்லை. அவ்வப்போது நம் தேசிகன் சம்பந்தமாகப் படிக்கும்/கேட்கும் விஷயங்களை எளிமையாகச் சொல்ல முற்படுவதே இதன் நோக்கம்.


திருச்சின்ன மாலை !

கோயில்களில் பெருமாள் புறப்பாட்டுக்கு என்று சில வாத்தியங்கள் இருக்கிறது. ‘திருச்சின்னம்’ அப்படியொரு வாத்தியம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இரண்டு பித்தளை குழல்களைச் சேர்த்து ஊதுவார்கள். பெருமாள் புறப்பாட்டின்போது அல்லது அகோபில மடத்தில் இதைக் கேட்கலாம்.

எல்லா கோயில்களிம் இரண்டு திருச்சின்னம் ஆனால் காஞ்சியில் ஒன்று தான்!

ஒரு நாள் வரதனின் புறப்பாட்டின் போது திருச்சின்னத்தின் ஒலியுடன் வெளியே வர, ஸ்ரீ தேசிகனுக்கு வரதனின் அழகில் மயங்கி சில பாடல்களை அருளினார். அதைச் செவியுற்ற வரதன், எனக்கு ஒரு திருச்சின்னம் போதும், இன்னொன்று தேசிகன் அருளியது இருக்கிறதே என்று சொன்னார். இதனால் அவர் அருளிய பாடல்களுக்கு ‘திருச்சின்ன மாலை’ என்று பெயர்.

இங்கே மாலை என்ற சொல்லைக் கொஞ்சம் ஆராயலாம்.

நம் பூர்வாசாரியர்கள். மறந்தும் மற்ற மதங்கள், கோட்பாடுகளிலிருந்து மேற்கோளகை கையாளமாட்டார்கள் ஸ்ரீ வைஷ்ணவக் கருத்துக்குச் சம்மதமான நூல்களையே அவர்கள் எடுத்துக் கையாளுவார்கள்.

நம்பிள்ளை உரைத்திறன் ( பேராசிரியர் ஸ்ரீ உ.வே இரா. அரங்கராஜன் ) புத்தகத்திலிருந்து ஒரு பகுதி :

திருவாய்மொழிப் பேருரையான ஈட்டில் திருக்குறளே பேரளவாக இடம்பெறுகிறது. ஐந்து இடங்களில் முழுக்குறளையும் காட்டுகிறார். 6 இடங்களில் திருக்குறள் தொடர்களை மேற்கோளாக எடுக்கிறார்; ஓரிடத்தில் குறட்சொல்லை ஏற்கிறார். ஈரிடங்களில் குறளை உரைநடைப்படுத்தியாளுகிறார் என்கிறார்.

நம்பிள்ளை திருவிருத்தத்தில் ‘இறையருள் வாய்க்கப் பெற்றதும் ’பிறப்பற்றுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகை’ என்று நிலை ஏற்பட்டது என்பதை விளக்குகிறார். இது திருக்குறள் 345 உடன் அப்படியே ஒத்துப் போகிறது.

திருவள்ளுவர் 542ல் இப்படி சொல்லுகிறார்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். இதே கருத்தைக் குலசேகர ஆழ்வார் இப்படிச் சொல்லுகிறார்

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே

மீன்கள் நீர்வளம் சூழ்ந்த இடத்தைப் பார்ப்பதுபோலே, திருவித்துவக்கோட்டு பெருமானே என்மீது நீ அருள் செய்தாலும், செய்யாவிட்டாலும், உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறு ஒருவரைச் சரணம் புகமாட்டேன். மோசமான அரசனாக இருந்தாலும் அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழ்கிற குடி மக்கள்போல நான் உன்னையே சரணடைந்து இருப்பேன்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய பாசுரங்களுக்கு ‘திருமாலை’ என்று பெயர். வடமொழியில் அமைந்த விஷ்ணு தர்மம் என்ற நூலில் சாரம் திருமாலை என்று கூறுவர். அதனால் தான் 'திருமாலையறியாதவன் பெருமாளையறியாதவன்’ என்பார்கள். நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்த இந்த ஆழ்வார் பூமாலை மட்டும் இல்லை சொல்மாலையையும் அவனுக்குச் சூட்டினார். பெரியாழ்வாரின் ‘மாதவத்தோன்’ என்று தொடங்கும் திருமொழியை ’திருவரங்கத் தமிழ்மாலை’ என்பார்கள். கோதை தன் திருப்பாவையை ‘சங்கத் தமிழ்மாலை’ என்று கூறுகிறாள்.. திருக்கோனேரி தாஸ்யை என்பவள், திருவாய்மொழிக்கு இயற்றிய நூலுக்கு ‘திருவாய்மொழி வாசகமாலை’ என்று பெயர் சூட்டினாள். இதே போல பின்பழகிய பெருமாள் ஜீயர் வார்த்தா மாலை என்று அளித்துள்ளார்.

ஸ்ரீவேதாந்த தேசிகன் ஆழ்வர் பாசுரங்களை ‘செய்யதமிழ் மாலைகள் நாம்தெளியவோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே’ என்கிறார். திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக அமைந்த நூலின் பெயர் ‘நுண்பொருள் வாசகமாலை’ பல வைணவ நூல்கள் மாலை என்ற பெயர் கொண்டவையே.

நம் தேசிகனுடைய திருச்சின்ன மாலை சென்ற வருடம் அத்திவரதர் வந்தபோது பிரபலமானது.

அத்திகிரி அருளாளப்பெருமாள் வந்தார்
ஆனை, பரி, தேரின்மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம்தரு தெய்வப்பெருமாள் வந்தார்
முத்திமழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்
மூலம்என ஓலம்இடவல்லார் வந்தார்
உத்தரவேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர்தொழும் கழல்உடையார் வந்தார்தாமே.

எல்லா பெருமாளும் முக்தி தருவார்கள். ஆனால் காஞ்சி பெருமாளுக்கு சிறப்பாகப் பேரருளாளன் என்று பெயர். மற்ற பெருமாளைக் காட்டிலும் பேரருளாளனுக்கு என்ன வித்தியாசம் ? மற்ற பெருமாள் முக்தி தருவார்கள்.’அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார் - இவர் ‘முத்திமழை பொழியு முகில் வண்ணர்’. அதாவது முக்தியை மழையாக பொழிகிறவர். இந்தச் சொல் பிரயோகத்தில் தான் தேசிகன் நிற்கிறார்.

திருச்சின்ன மாலையில் மொத்தம் 10 பாடல்கள் மேலே நீங்கள் படித்தது அதில் ஒரு பாடல். மற்றவை நீங்கள் சுலபமாக இணையத்தில் தேடி அடியேனைப் போலச் சுமாரான தமிழ் தெரிந்தாலே போதும். புரிந்துவிடும். தேடிச் செல்லுங்கள்.

- சுஜாதா தேசிகன்
15-07-2020

Comments

  1. மிகவும் அருமை. வாழ்த்துக்கள். தாஸன்

    ReplyDelete
  2. புது பொலிவுடன் தளம் அழகாய் இருக்கிறது ...

    முக நூலை விட இங்கு வாசிப்பது தான் எளிதும் ...சேமிப்பும் ..

    இனிய கருத்துக்களை அறிந்துக் கொண்டேன் ...நன்றி

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. "ஆனை, பரி, தேரின்மேல் அழகர் வந்தார்" - அளவெடுத்து வெட்டிய வார்த்தைகள் போல ஒலிநயத்தோடு இருக்கிறது (Rhymes).

    ReplyDelete
  5. தாசன் அடியேன்

    ReplyDelete

Post a Comment