2. இராமானுசன் அடி பூமன்னவே - விதை நெல் !
சில சமயம் ஒரு சாதாரண நிகழ்வு, பெரிய சம்பவங்களை விளைவிக்கிறது. நிகழும்போது அதன் விளைவுகளை நாம் அறிய முடியாது.
’வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’ என்பதற்கு ஏற்ப ஆழ்வார்கள் எல்லோரும் வைகுந்தத்தை அடைந்தார். அதற்குப் பின் சுமார் 3500 ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்வு வீரநாராயண பெருமாள் முன் நிகழ உள்ளது, அதை நிகழ்த்துபவரும் அவரே என்று சொல்லவும் வேண்டுமோ ?
ஆழ்வார்களின் பக்தி நெறியில் ‘தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே’ என்று அவர்களைப் பின்பற்றிப் பக்தி நெரியில் வாழ்ந்தவர்கள் பாடி ஆடி வைகுந்தம் அடைந்தார்கள்.
கால போக்கில் ஒரு மரத்தின் கிளை ஒவ்வொன்றாகப் பட்டுவிடுவது போல ஆழ்வார் பாசுரங்கள் மறைய தொடங்கின. ஒரு காலத்தில் வேதத்தைப் பறி கொடுத்தது போல ஆழ்வார்களின் பிரபந்தங்கள் பறிபோயின.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம்
என்று கண்ணன் கீதையில் எப்பொழுதெல்லாம் தர்மம் தேய்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த உலகத்து மக்களுக்காக அதை மீட்டுக்கொடுக்க அவதாரமாக வருகிறேன் என்கிறான். இந்த வாக்கியம் சத்தியம்.
அத்தகைய சத்தியத்தை தான் கோயிலுக்குள் நிகழ்த்தப் போகிறான். வாருங்கள் நாமும் யாத்திரிகளுடன் கோயிலுக்குள் செல்லாலாம்.
வீரநாராயண பெருமாள் கோபுரம் சிறியதாக இருந்தாலும் யாத்திரிகர்கள் அதன் அழகை ரசித்து ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று அதை வணங்கினார்கள்.
இயற்கை சீற்றத்தால் ஊரில் பஞ்சம் ஏற்பட்டால், மீண்டும் விவசாயம் செழிக்க விதை நெல் கோபுரக் கலசங்களில் பாதுகாக்கப்பட்டது. இது நம் மூதாதையர்களின் முன்னேற்பாடு.
ஆழ்வார் பாசுரங்கள் மறைந்து பக்தி பஞ்சத்தைப் போக்க வீரநாராயண புரத்துக்குப் பத்து விதை நெல்லுடன் வைணவ யாத்திரிகர்கள் நாதமுனிகளைப் பின் தொடர்ந்தார்கள். கோயிலைச் சுற்றி இருக்கும் நந்தவனத்தில் கவரப்பட்டு
“அடடே என்ன அழகான மலர்கள்! இந்த வெண்ணிற மலர்கள் நந்தியாவட்டை தானே ? திருவரங்கத்திலும் இதே போல் ஒரு தோட்டத்தைக் கண்ணுக் கினியன கண்டோம், அதற்கு நிகராக நீங்களும் மிக அழகாக அமைத்துள்ள்ரீர்கள்” என்றார் ஒரு யாத்திரிகர்.
நாதமுனிகள் ”ஆம் இந்தப் பூக்கள் நந்தியா வட்டை. இக்கோயிலின் ஸ்தல விருட்சம்.இந்தத் தோட்டத்தை உள்ளே இருக்கும் வீரநாராயண பெருமாள் என் மூலமாக அமைத்துக்கொண்டான். இதோ இருக்கிறதே அந்த மண்வெட்டி அதுபோல நானும் ஒரு கருவி! எல்லாம் அவன் நடத்துகிறான். இன்று உங்களைக் காண வேண்டும் என்று அவன் உள்ளத்தில் நினைத்துவிட்டான். உங்களை இங்கே வரவழைத்துள்ளான்!” என்றார்.
எல்லோரும் சந்நிதிக்கு முன் வந்து நின்றார்கள். ஈஸ்வர முனிகள் புஷ்பக் கூடையைத் தலையில் சுமந்து உள்ளே சென்று மூலஸ்தானத்துக் கதவை மெதுவாகச் சாத்தினார். மாலை, சந்தனம் முதலியன சாத்தி விஸ்வரூபத்துக்கான சாத்துப்படி அலங்காரங்களைச் உள்ளே செய்ய ஆரம்பித்தார்.
கதவுக்கு வெளியே யாத்திரிகர்களும், நாதமுனிகளும் காத்துக்கொண்டு இருந்தபோது, ஓரு யாத்திரிகர் நாதமுனிகளைப் பார்த்து உங்களுக்கு இந்த அழகிய வீரநாராயண புரம் தான் தான் பூர்வீகமா ?” என்று விசாரித்தார்.
நாதமுனிகள் “ஆம் ! நாங்கள் சொட்டை குலத்தவர்கள். எங்கள் பூர்வீகம் இந்த வீரநாராயண புரம் தான். சில ஆண்டுகளுக்கு முன் குடும்ப சகிதமாக ராமரும், கண்ணனும் அவதாரங்கள் எடுத்து வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வணங்க வேண்டும் என்று பெருகிய ஆர்வத்தால் வட தேசங்களுக்கு யாத்திரையாகக் கிளம்பினோம்.
மழையிலிருந்து காப்பதற்குக் குடை எடுத்து எழில் கொஞ்சும் கோவர்த்தனப் பர்வதத்தையும், அழகிய கோபியர் கண்ணோடு குலாவிய பிருந்தாவனம் என்று அவன் திருவடிப்பட்ட இடங்களையெல்லாம் கொஞ்சமாவது கண்ணால் கண்டு அந்த மண்ணை தலையில் சூடி கை குவித்து வணங்கியபிறகு தேனொழுகும் பூக்களைச் சூழ்ந்த அயோத்தி மாநகர், வடமதுரை, திருவாய்ப்பாடி, வதரியாச்ரமம் ( பத்ரி ), என்று வடக்கில் உள்ள ஸ்தலங்களை வேதங்கள் ஓதி வணங்கினோம். பிறகு மேற்கு, கிழக்கு திக்கில் உள்ள திவ்ய தேசங்களைத் தரிசித்துவிட்டு யமுனை கரையில் ஸ்ரீகோவர்த்தனபுரம் என்கிற அழகிய கிராமத்தில் சிறிது காலம் தங்கி வீடுதோறும் பிக்ஷையெடுத்து உண்டு வாழ்ந்து, அங்கே எங்களால் முடிந்த சிறு கைங்கரியங்களைச் செய்துகொண்டு இருந்த சமயம், இதோ உள்ளே இருக்கும் வீரநாராயண பெருமாள் ஒரு நாள் என் சொப்பனத்தில் வந்து “நம்முடைய வீரநாராயணபுரத்துக்கு மீண்டும் வரமாட்டீரா ?” என்று கேட்க, அவர் கட்டளையை ஏற்று காசி வழியாகச் சிங்கவேள்குன்றம் பெருமாளை வணங்கி வரும் வழியில் மேலும் பற்பல திவ்ய தேசங்களைக் கண்டு வணங்கி, அழகிய திருமலை திருவேங்கடவனைத் தரிசித்துவிட்டு, காஞ்சியில் பேரருளாளனானை தொழுது, திருவயிந்திபுரத்து தேவநாதனை அனுபவித்துவிட்டு வீரநாராயணன் கோபித்துக்கொள்வதற்குள் வேகமாக இங்கே சில திங்களுக்கு முன் தான் திரும்பி வந்தோம். அதனால் இந்த நன்னாளில் ’அதிதி தேவோ பவ’ என்று உங்களை உபசரிக்கும் வாய்ப்பை நாங்கள் பெற்றோம்” என்று சொல்லி முடிக்க மணியோசையுடன், தீப ஆரத்தியுடன் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
நாதமுனிகள் வடக்கு, கிழக்கு. மேற்கு தெற்கு என்று நான்கு திக்கிலும் தரிசித்த பெருமாள்களைப் பற்றிக் கூறியதைக் கதவு இடுக்கு வழியாக வீரநாராயணப் பெருமாள் கேட்டிருப்பாரோ என்னவோ ’கோரமா தவத்தைக் கலைத்து அன்று அவருடைய முகத்தில் பரவசம் குடிகொண்டது.
ஈஸ்வர முனிகள் கணீர் என்ற உச்சரிப்பில் “மூலவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீவீரநாராயண பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கீழே உற்சவர் ருக்மணி சத்தியபாமா சகிதம் மாடுமெய்க்கும் திருக்கோலத்தில் ஸ்ரீராஜகோபாலன் பசுமாடு கன்றுடன்... “
உள்ளே கர்பகிரஹத்தில் புகைமண்டலத்தில், வாசனை மாலைகள் நெஞ்சத்தில் தாயார் மீது பட்டு மலர்ந்தது. குளிர்ந்த திருத்துழாய் மாலைகள் மேலும் குளிர்ச்சியைக் கொடுத்தது. நெய் விளக்குகள் வீரநாராயணனை மேலும் பிரகாசிக்கச் செய்தது. புதுச் சந்தனம் தேவர்கள் கொண்டு வந்தது போல நறுமணம் வீசி அந்த இடமே நித்தியசூரிகள் சூழ்ந்திருக்கும் வைகுண்டம் போலக் காட்சி அளித்தது.
திருமங்கை ஆழ்வார்
பொன் ஆனாய்! பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழ் ஆனாய்! இகழ்வாய தொண்டனேன் நான்*
என் ஆனாய்? என் ஆனாய்? என்னல் அல்லால்
என் அறிவன் ஏழையேன்?* உலகம் ஏத்தும்
தென் ஆனாய்! வட ஆனாய்! குட பால் ஆனாய்!
குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய்!* பின் ஆனார் வணங்கும் சோதி!
திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே!’
என்ற பாசுரத்தில் பெருமாளை தென்பகுதியில் திருமாலிருஞ்சோலை, வட திருவேங்கடத்திலும் நின்ற யானை போன்றவனே என்றும், மேற்கில் திருவரங்கத்தில் பள்ளி கொண்ட யானை போன்றவனே ; கிழக்கே திருகண்ணபுரத்தில் மதயானை போன்று நித்திய சூரிகள் காட்சி தருபவனே என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று துதிப்பது தவிர வேறு அறியேன் என்று ஆழ்வார் அனுபவித்த திருகண்ணபுரத்தில் மதயானை அன்று வீரநாராயண மதயானையாகத் காட்சி கொடுத்தான்(1)
“காட்டவே கண்ட பாதகமலம் நல்லாடை உந்தியை’ ஒருவர் ரசிக்க, இன்னொருவர் ‘தேட்டரும் உதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்’யில் மோகித்தார். மற்றொருவரோ‘ வாட்டமில் கண்கள் மேனி முனியே….நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே..” என்று அனுபவித்து போது அவரை அறியாமல் தானாக அவருக்குத் தெரிந்த “ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே” என்ற பாசுரத்தை இனிமையான குரல் பாட ஆரம்பித்தார்.
பாடிய பாசுரங்கள் கோயில் கல் தூண்களில் மீது பட்டபோது ’அவை கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்ற சொலவடைக்கு ஏற்றார் போலக் கரைந்தது. பாடல்கள் தூணில் பட்டு எதிரொளியாக நாதமுனிகளின் காதுகளுக்கு எட்டியபோது ‘ஆர பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே.. ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்’ என்று நாதமுனிகளே தித்திப்பாய் திகைத்துப் பரவசத்தில் ரோம கால்கள் குத்திட்டு நின்றன. ’தேவதேவபிரான் என்றே நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு ஒசிந்து கரையுமே’ என்ற சொல்லுக்கு ஏற்றார் போல் தேவதேவபிரான் என்று கூறி உதடு நெளியக் கண்களில் நீர் நிரம்ப நெகிழ்ந்து உருகினார் நாதமுனிகள்.
முதலாழ்வார்களில் பொய்கை ஆழ்வார் ’வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்கு’ ஏற்றினார் அடுத்துப் பாடிய பூதத்தாழ்வார் ’அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி ஞானச் சுடர் விளக்கு’ ஏற்றினார். பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றின இரண்டு விளக்குகளாலும் இருள் நீங்க ’திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று பாடினார் பேயாழ்வார்.
அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் சேவித்த ஆராவமுதே என்ற பாசுரங்களை அருகிலிருந்து கேட்ட நாதமுனிகளின் அனுபவத்தை எழுத்தைக்கொண்டோ வாய்கொண்டோ வருணிக்க முடியாதபடி இருக்கும் என் இயலாமையை வாசகர்கள் மன்னிக்க வேண்டும்.
’ஆராவமுதே’ என்று பாடிய அந்தப் பாடல் நாதமுனிகளின் உள்ளத்தில் ஒரு ஞான விளக்காக எரியத் தொடங்கி ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று பேயாழ்வார் அனுபவித்ததை நாதமுனிகள் அனுபவித்தார் என்றால் அது மிகையாகாது. இந்த ’ஆராவமுத’ விளக்கு ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் மறைந்து போன அந்த இருண்ட காலத்துக்கே விளக்காக அமைந்து, ’குரு’ என்ற சொல் இருட்டை நீக்குபவர் என்ற பொருளுக்கு ஏற்றார் போல் ஸ்ரீவைஷ்ணவ அச்சாரியக் குருபரம்பரையில் நம்மாழ்வாருக்குப் அடுத்து இவரே ஆசாரியர் ஆகப் போகிறார் என்று அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை.
“அச்சோ ஒருவர் அழகியவா” என்று திருமங்கை மன்னன் பரவசத்துக்கு ஈடாக “நீங்கள் பாடியது என்ன பாசுரம் ? யோகத்தாலே பிரயத்தனம் செய்து கண்ணை அனுபவிப்பதைக் காட்டிலும் இந்தப் பத்துப் பாசுரங்களால் கண்ணனை அனுபவிப்பது இனிதாயிருக்கிறதே !” என்று மகிழ்ந்து நாதமுனிகளின் கண்களிலிருந்து வழிந்த நீர் பாசுரங்களான விதை நெல் மீது விழுந்தபோது திராவிட வேதம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.
நாதமுனிகள் அவர்கள் பாதங்களில் அப்படியே விழுந்து தண்டம் சமர்ப்பித்தார். வைணவ யாத்திரிகர்கள் புரியாமல் விழித்தார்கள்.
அவர்களுக்குத் தீர்த்த பிரசாதங்களையும், வீரநாராயணனின் ‘உடுத்து களைந்த’ மாலைகளை அணிவித்து, மீண்டும் ஒரு முறை அவர்களுக்குத் தீப ஆரத்தி காண்பித்து, குழந்தை தாயிடம் இனிப்புப் பண்டத்தை “இன்னும் கொஞ்சம் கொடு” என்று கேட்பது போல “தேனிடை கரும்பின் சாற்றைப் போன்ற அந்தப் பாசுரங்களை மீண்டும் ஒரு முறை சாதிக்க வேண்டும்” என்று வேண்டினர்
அந்தப் ஸ்ரீவைஷ்ணவர்கள் சந்தோஷமாக மீண்டும் பாசுரங்களைச் சேவிக்க ஆரம்பித்தார்கள்.
ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே! (1)
‘ஆரா அமுதே’ என்ன லாவண்யமான தமிழ்ப் பெயர். ’கறந்த பாலுள் நெய்யே போல்’ இந்தப் பாசுரங்களில் உள்ளேயே இசையும் கலந்து வருகிறதே!. ’ஆரா வமுதே' உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதம் பெருமாள் என்ற ஆழ்ந்த பொருளை இந்தப் பாசுரம் சுலபமாக வெளிப்படுத்துகிறது ! ஆரா அமுதனுடைய சுகானுபவத்தில் ஈடுபட்டு என் உடலே அன்பாகிவிட்டது. அந்த அன்பு நீராகி உருகுகிறது! ஞானானந்தம் மயம் தேவமாக ஞானமும் ஆனந்தமும் கலந்த வடிவமாக இந்தப் பாசுரத்துக்கு ஈடு உண்டோ ? இந்த அமுதம் சாரீரத்துக்குச் சாகாவரம் கொடுக்கும் அமுதம் இல்லை, நம் ஆத்மாவுக்கே இது சாகாவரம் கொடுக்கும் திகட்டாத அமுதமாக இருக்கிறதே
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும் திருக்குடந்தை
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே(2)
நாதமுனிகள் கண்களை மூடிக்கொண்டு ‘எல்லையில்லா பெரியவன், தூய்மையானவன் என்னை ஆண்டு கொண்டவனே! அடியார்களைக் காக்க எத்தகைய அவதாரங்களை எடுப்பாய். உன் அழகைக் கண்டு நான் என்ன செய்வேன்! வட தேசத்தில் தரிசித்த ராமகிருஷ்ணாதி அவதார பெருமாள் அவர் கண்முனே வந்து சென்றார்கள். நீர்வள நிலவளம் நிறைந்த குடந்தையில் இருக்கும் அமுதன் நாதமுனிகளின் நெஞ்சத்தில் உள் புகுந்தான். பாடுபவர்களைக் காட்டிலும் நாதமுனிகள் உருகியபோது மூன்றாம் பாசுரத்தை அவர்கள் ஆரம்பித்தார்கள்.
என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள்
செல் நாள் எந் நாள்? அந் நாள் உன தாள் பிடித்தே செலக்காணே(3)
பாசுரம் பாடப்பட்ட போது, நாதமுனிகளின் உள்ளத்தில் ‘உன் திருவடிகளைப் பெற அடியேன் என் செய்வேன் ? உன்னை அன்றி என்னை யார் காப்பவர் ? உன்னை விட்டு வேறு உபாயத்தை வேண்டேன். ‘அரு’ என்று அத்மாவுக்கு என்ன அழகான வார்த்தை. அந்த ஆத்மா தங்கி வாழும் காலத்திலும் தொடரும் நாள்களிலும் உன் திருவடியை பற்றுவதற்கும் நீயே அருள் செய்ய வேண்டும்’ என்று மணற்கேணியில் நீர் ஊறுமாப் போலே மனதில் பத்தி ஊறி அனுபவிக்க நான்காம் பாசுரம் காதுகளில் பாய்ந்தது.
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பு ஆய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே(4)
அவரவர் தமக்கு ஏற்ப அளந்து கண்டாலும் உன் குணங்களை அறுதியிட முடியாதவனே! ‘உலப்பு இலானே’ உலகங்களுக்கு எல்லாம் ஒப்பற்ற தலைவனே! உன்னைக் காண விருப்பப்பட்டு வானத்தைப்பார்த்து ‘அலப்பு ஆய்’ மனக் கலக்கமாய் ! அழுவதும் தொழுவதுமாக என்ன செய்வது என்று தெரியாமல் நின்றேன்’ என்று வீரநாராயணன் முன் அழுவதும் தொழிவதுமாக இருந்தார் நாதமுனிகள்.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும்வகையே சூழ்கண்டாய்(5)
உன்னை அடைய நான் அழுவேன். தொழுவேன், ஆடிப் பார்ப்பேன். பாடிப் புலம்புவேன். என் பாவங்களைப் போக்க நீ வரும் பக்கம் நோக்கி வெட்கித் தலை தலைகவிழ்ந்திருப்பேன்;உன் திருவடியைப் பற்றும் வழியை நீயே காட்ட வேண்டும்’ என்று பொருளை உணர்ந்த நாதமுனி தன் அனுபவங்களை எல்லாம் இந்தப் பாடல்கள் விவரிக்கப் பெற்றிருப்பதுபோலத் தோன்றியது.
பாகவதர்கள் ஆறாம் பாடலை ஆரம்பித்தார்கள்.
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக்குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்?
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரிஏறே(6)
’யாழின் இசை’ என்ற வார்த்தை வந்தபோது இசையை முழுமையாக அறிந்த நாதமுனிகள் ‘அடடா! என்று அந்தப் பாடலில் மோகித்துப் போனார் என்று கூறவும் வேண்டுமா ? யாழின் கானம் போன்ற பரம் போக்யனானவனே! நீயே நித்திய சூரிகளின் தலைவன் இந்த அறிவின் பயன் உன்னை அறிந்துகொள்வதே! உனது திருவடிகளை அடையும் முறையைக் கண்டிருந்தும், புலன்களுக்கு உணவிட்டு உன்னை எத்தனை காலம் பிரிந்திருப்பேன் ? என் வினைகளைப் போக்கி ஏற்றுக்கொள்’ என்று ரசத்தோடு இன்னிசை கடல் பொங்கிய அந்தப் பாடலை அனுபவித்தார்.
ஏழாம் பாடலான
அரிஏறே என் அம் பொன் சுடரே செங்கண் கரு முகிலே
எரி ஏய் பவளக் குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே(7)
என்று பாடியபோது, பெருமாளை என்ன மாதிரி எல்லாம் வர்ணிகிறது இந்த பாடல் என்று மெய்சிலிர்த்தார். சிங்கம் போன்றவனே! அழகிய பொன் ஒளியே! சிவந்த காளமேகம் போன்றவனே ! நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே! நான்கு தோள்களுடைய திருமாலே ! உன்னை அன்றி நான் பிழைக்க முடியாது. உன் திருவடியைத் தந்து என் பிறவியைக் களைய வேண்டும்’ என்று பாடலில் பொதிந்துள்ள சரணாகதி தத்துவத்தை உணர்ந்த போது எட்டாவது பாடலில் மூழ்கினார்.
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்
வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போது
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே(8)
என் துன்பங்களை நீ களையாவிட்டாலும் உன்னையே அடைக்கலமாகப் பற்றினேன். என் உடல் தளர்ந்து உயிர் குலைந்து பிரியும்பொழுது சலியாமல் உன் திருவடிகளைப் பிடித்துப் போக நீ தான் அருள் செய்ய வேண்டும்’ என்ன மாதிரியான திடமான சரணாகதி என்று அவர் கண்களில் நீர் வீராணம் ஆற்றின் புது வெள்ளம் போல அடித்துக்கொண்டு வந்தது. ஒன்பதாம் பாசுரத்தில் .
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மானே
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே(9)
பல நாள்கள் உன்னைப் புறக்கணித்த என்னை உன் திருவடிகளில் தாங்கும்படி செய்தருளினாய். நீயே ஆதிமூர்த்தி ! இந்தத் திருக்குடந்தை ஒளி வீசும் இரத்தினங்கள், பழமையான கலை வளத்தையும், பொருள் வளத்தையும் அனுப்பவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?(10)
புறக் கண்களால் காண முடியாதபடி மனக் கண்ணில் மட்டும் தோன்றுபவனே! ஆரா அமுதாய் என் மனதில் நீ தித்திப்பவனே! என் தீராத வினைகள் தீர என்னை ஆட்கொண்டாய்! இனி எனக்குக் கவலை இல்லை. நாம் யோகத்தில் கண்ணனை அனுபவிப்பதை இந்தப் பாடலிலும் அனுபவிக்க முடிகிறதே என்று இந்த ஆத்ம அனுபவத்தை தன்னுள் வியந்தார் நாதமுனிகள்.
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே(11)
என்று பாட்டைப் பாடி அவர்கள் முடித்துவிட. புல்லாங்குழல் ஓசையைக் காட்டிலும் இனிமையான பாசுரங்களை ஏன் முடித்துவிட்டீர்கள்? மேலும் மேலும் இந்தத் திகட்டாத இன்பத்தைப் பருக ஆசையாக உள்ளது தொடர்ந்து பாடுங்கள் என்று அவர்கள் முன் கைகளைக் குவித்து வணங்கினார்.
பாகவதார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழுத்தார்கள்.
நாதமுனிகள் கடைசியாகப் பாடிய பாட்டில் ’ஆயிரத்துள் இப்பத்தும்’ என்று பொறிக்கப்பட்டுள்ளதே! அழகிய தமிழில் வேதத்துக்கு இணையான இந்தப் பாடல்கள் ஒன்றும் விடப்படாமல் உங்களுக்குத் தெரியுமானால் சொல்லுவீர்களா?” என்று நாதமுனிகள் அந்தப் பாகவதர்களின் முகத்தை வாஞ்சையுடன் நோக்கினார்.
“ஸ்வாமி! ஷமிக்க வேண்டும். எங்களுக்கு ஆயிரம் பாட்டுக்களுக்குள்ளே இப்பத்துப் பாடல்கள் தான் தெரியும். கடல் சூழ்ந்த இந்த உலகத்தவர் எவருக்கும் மற்றவை தெரிய வாய்ப்பு இல்லை!” என்றார்.
நாதமுனிகள் அவர்கள் பாடிய தண் தமிழ் பத்துப் பாசுரங்களில் உள்ள அழகிலும், ஆழமான கருத்திலும் ஈட்டுப்பட்டு தன் மனதை நிலை நிறுத்திக் கொண்டு கண்ணன் திருவடிகளைக் காட்டிய கிருஷ்ணக் காம அமுதத்தை அருளிய குருகூர்ச் சடகோபன் யார் ? புல்லாங்குழல் இசையைக் காட்டிலும் உயர்ந்த இந்த ஆயிரம் பாசுரம் யாருக்குத் தெரியும் ? என்று அந்தப் பாசுரங்களின் பொதிந்துள்ள திருக்குறிப்புக்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார்.
‘ஆரா அமுதை’ தேடிச் செல்ல உடனே முடிவு செய்து எதிரே நிற்கும் வீரநாராயணனை வணங்கிய போது, அவர் கண்கள் சென்று வா என்றது!
பயணம் தொடரும்..
- சுஜாதா தேசிகன்
31-07-2020
______________________________________________
(1) பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகம்
தடித்த, சாய்ந்த எழுத்துக்கள் - ஆழ்வார் பாசுரங்கள், பிரமாணங்கள்.
படங்கள் எடிட் செய்யப்பட்டவை
வேறு உலகம் ெசென்று வந்தேன். அற்புதம். 🙏🙏🙏🙏
ReplyDeleteBeautiful. Really grateful. Dhanyosmi. Waiting for the next "payanam" . Please release it quickly.dasan
ReplyDeleteபடிப்பதே எங்கள் பாக்கியம். 🙏🙏
ReplyDeleteஆனந்தமாக நாதமுனிகளை நாமும் பின்தொடர்வோம்
ReplyDeleteஅளப்பரிய பக்தி ரசத்தினைப் பருகுவோம்
நன்றி நன்றி
அருமை. எத்தனை பாசுரங்கள். உங்களுடன் ஒரு இனிமையான பயணம்.
ReplyDelete🙏🙏🙏🙏
ReplyDeleteMy pranams to you sir
ReplyDeleteArumai miga arumai!
ReplyDeleteதந்யோஸ்மி, மிக அர்புதம்
ReplyDeleteநாதமுனிகளை கயில் எடுத்துள்ளீர்.சடகோபர் அந்தாதி மதுரகவி நம்மாழ்வார் அரையர் பாடல்னு திரட்டிப்பால் வெங்கலப்பானை நிறைய உள்ளது.எங்களுக்கு திகட்டாதது உம் திரண்ட இத்தொடர்.அனுபவிக்க காத்திருக்கின்றோம்
ReplyDelete