Skip to main content

1. இராமானுசன் அடி பூமன்னவே - வீரநாராயண புரம்

1. இராமானுசன் அடி பூமன்னவே - வீரநாராயணபுரம் 


அகண்டக் காவிரி வடதிருக்காவிரி, தென் திருக்காவேரி என்று இரண்டாகப் பிரிந்து அரங்கனுக்கு மாலையாக அவனுடைய பாதங்களை வருடுகிறாள். 
வடதிருக்காவிரி என்கிற கொள்ளிடம் ஆற்றிலிருந்து பல கிளைகளாக,  மேடு பள்ளங்களைத் தாண்டி வீரநாராயண ஏரியில் பாய்கிறாள். ஏரியைப் பார்ப்பவர்கள் ’இது கடலோ  ?’ என்று வியக்காமல் இருக்க மாட்டார்கள். 
 
பூமாதேவி அவதரித்த மாதமான ஆடி மாதம் சூரியன் தன் பயணத் திசையை மாற்றித் தெற்கு நோக்கி வருகிறான். அரங்கன் ’தென்திசை இலங்கை நோக்கி’ விபீஷணனை மட்டுமல்லாமல் கோதை அவதரித்த வில்லிபுத்தூரையும் பார்த்துக்கொண்டு இருக்கிறான். 
 
ஆடி மாதத்தில் காவிரியில் புது வெள்ளம் ஆடிக் காற்றில் அடித்துக்கொண்டு வரும். ஏரியில் நீர் ததும்பி படித்துறையில் மேல் வேகமாக அடிக்கும். ஏரி சுற்றி இருக்கும் மரங்களில் பறவைகள் ஆரவாரம் அந்த அந்த இடம் முழுக்க பரவியிருக்கும். 



அன்று காலைக் கதிரவன் மேலே வந்த அந்தச் சமயத்தில் கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் பறவைகள் ஒலி வழக்கத்துக்கு மாறாக அதிகம் கேட்டது. மூன்று பேர் ஏரியை நோக்கி வந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் தோளில் கம்பும், அதில் மூட்டையும் கட்டப்பட்டு யாத்திரிகர்கள் என்று அடையாளம் காட்டியது. உடுத்தியிருந்த வெண்மை நிற ஆடை அந்தணர்கள் என்றும் கூறியது.

அவர்கள் வரும் வழியில் செந்நெல் பயிர்கள் காற்றில் ஆடிக்கொண்டு இருக்க, பெண்கள் அந்தக் காலை வேளையிலேயே வயல்களில் சுறுசுறுப்பாகக் களை பறித்துக்கொண்டு இருந்தார்கள். இளம் பெண்கள் சிலர் வயலில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்கொண்டே பறவைகளை விரட்டிக்கொண்டு இருந்தார்கள். 

ஏரிக்கரைக்கு வந்தவர்கள் அங்கே இருந்த ஒரு சிறு மண்டபத்தில் தங்கள் மூட்டையைக் கீழே வைத்தார்கள் நடந்த களைப்பில் உட்கார்ந்தார்கள். கதிரவன் ஒளி ஏரியில் படர, உட்கார்ந்தவர்கள் பிரமித்துச் சட்டென்று நின்றார்கள். 
 
சூரியன் வெளியே வந்த ஒளியைத் தண்ணீர் மீது பாய்ச்சும் அதே சமயம் சூரியனைப் போன்ற தேஜஸுடன் ஏரிக்கரையில் நித்திய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒருவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார். அவருடன் வயதில் சிறியவராக இன்னொருவரும் உடன் வந்தார். 

வந்தவர்கள் இவருக்கும் சிகையுடன், பூணூல், நெற்றியில் பிரகாசமான திருமண்ணுடன்,  கழுத்தில் துளசி மாலை அணிந்து வைணவ  ஸ்ரேஷ்டர்களாகக் காட்சி கொடுத்தார்கள்.

மண்டபத்தில் இருந்த மூவரும் அவர்களைக் கைகூப்பி வணங்கி
“ஐயா! வந்தனங்கள்!” என்றார்கள். 
“வந்தனங்கள்! உங்களை இதற்கு முன் இந்த ஊரில் பார்த்ததில்லை. உங்கள் முகத்தில் நீண்ட பிரயாணத்தின் களைப்பு தெரிகிறதே! தங்களின் திருநாமங்களை அறிந்துகொள்ளலாமா ?” என்றார். 

அவர்கள் கைகூப்பி “ஆம்! ஸ்வாமி! நீண்ட பிரயாணம் தான்.இவர் இயல்பிள்ளை, இவர் தொண்டனுர் நம்பி, என் பெயர் வங்கிபுரத்து ஆச்சி.(1) நாங்கள் மேலை நாட்டிலிருந்து யாத்திரையாகப் புறப்பட்டுக் காவிரியின் போக்குடன் பயணம் செய்து திருக்குடந்தை பெருமாளைத் தரிசித்துவிட்டு  அகண்டக் காவிரி பிரிந்து அணைத்துக்கொண்டிருக்கும் திருவரங்கனைத்   தரிசித்துவிட்டு  தில்லைத் திருச்சித்திரகூடப் பெருமாளைத் தரிசிக்கும் வழியில் இந்தக் கோயில் கோபுரம் தெரிந்தது. சரி, இந்தப் பெருமாளையும் சேவித்துவிட்டுச் செல்லலாம் என்று இங்கே வந்தோம். இந்த ஏரியைப் பார்த்துப் பிரமித்து நின்றோம்! இப்போது உங்கள் ஞானம் பெற்ற முகப் பொலிவைப் பார்த்துப் பிரமித்துப் போகிறோம்! உங்கள் திருநாமம் என்ன ? உங்களைப் போலவே பொலிவுடன் உடன் இருப்பாவர் உங்கள் குமாரரா ? இந்த அழகிய கிராமத்தின் பெயர் என்ன ?” என்று கேள்விகளை அடுக்கினார்.. 

”இந்த ஊர்  ’வீர நாராயணச் சதுர்வேதி மங்கலம்’. சோழ அரசன் வேதங்கள் ஓதும் எங்களைப் போன்றவர்களுக்கு மனம் உவந்து அளித்த இடம். நீங்கள் தரிசித்துவிட்டு வரும் திருவரங்க பெருமாள் பெயரான ரங்கநாதன் என்பது தான் என் பெயரும்.ஆனால் ஊரில் எல்லோரும் என்னை ’நாதமுனிகள்’ என்று அழைப்பார்கள். அருகில் இருப்பது என் குமாரன் ஈஸ்வர முனி. அதோ தெரியும் வீர நாராயண பெருமாள் கோயிலில் இருவரும் கைங்கரியம் செய்கிறோம். நீங்கள் நீராடிவிட்டு உங்கள் அனுஷ்டானங்களை முடித்துவிட்டு பெருமாளைச் சேவிக்க வர வேண்டும். அதோ தெரிகிறது பாருங்கள் கோபுரம் அதற்குக் கிழக்குப் பக்கத்தில் இருக்கிறது எங்கள் இல்லம். இன்று நீங்கள் எங்கள் இல்லத்தில் அதிதியாக உணவு அருந்தப் பிராத்திக்கிறேன்” என்றார். 

“நாதமுனிகளே ! எங்களுக்குப் பரிபூரணச் சம்மதம்! சந்தோஷம்.எங்கள் பாக்கியம் நிச்சயம் வருகிறோம்” என்று அவரை வணங்கிவிட்டு யாத்திரிகர்கள் நீராடச் சென்றார்கள் 

நாதமுனிகளும், அவர் குமாரர் ஈஸ்வர முனிகளும் வேகமாகக் கோயிலை நோக்கி நடந்தார்கள். 

சோழ தேசத்தில் வீர நாராயண பெருமாள் கோயில் பராந்தக சோழன் காலத்துக்கு முன்பே இருந்திருக்கிறது. 


 
கோவிலுக்கு அருகில் கடல் போன்ற ஏரியை வீரநாராயண ஏரி என்று பெயர். பராந்தகன் ஆட்சிக் காலத்தில் காவிரியின் நீர் யாருக்கும் பயன்படாமல் வீணே கடலில் பாய்கிறதே என்று வீரநாராயண பெருமாள் கோயிலுக்குப் பக்கம் இருந்த சிறு குளத்தைப் பெரிய ஏரியாக்கினான் சோழன். அதன் கரையிலேயே ’வீரநாராயண சதுர்வேதி மங்கலம்’ என்று அந்தணர்கள் வேதம் ஓதி அனுபவிக்கச் சிற்றூர் ஒன்றை அமைத்துக் கொடுத்தான். நாளடைவில் அது வீரநாராயணபுரம் என்று அழைக்கப்பட்டது. அதன் பக்கம் இருந்த ஏரியும் வீரநாராயண ஏரி என்று வழங்கப்பட்டது. 

பராந்தகன் வீரசோழன், மதுரை கொண்ட கோப்பரகேசரி என்ற பல விருதுப் பெயர்கள் இருந்தாலும்,  வீராநாராயணன் என்ற பெருமாள் பெயரைச் சேர்த்து ‘பராந்தக வீரநாராயணன்’ என்று சிறப்பு விருதுப் பெயராக வைத்துக்கொண்டதில் அவனுக்கு எப்போதும் உவகை தான். 

காவிரியிலிருந்து வீரநாராயண ஏரிக்குள் பாயும் தண்ணீர் அலைபோலக் கரைகளில் அடிக்கும். இந்தக் காட்சியைக் காண்பவர்களுக்கு நம்மாழ்வார் பாசுரம் ஒன்று நினைவுக்கு வரலாம். 

தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய்
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே 

ஒரு நாரை, மீன் கிடைக்குமா என்று காவிரிக் கரை பக்கம் மேய்கிறது. அப்படி மேய்ந்து வரும்போது அங்கே ஒரு நண்டு கரை பக்கமாக ஒதுங்குகிறது, காவிரித் தாய்  “ஐயோ இந்த நண்டு இந்த நாரையிடம் மாட்டிக்கொள்ளப் போகிறதே” என்று தன் அலையால் தள்ளிக் காப்பாற்றுகிறாள். 
'திருவரங்க பெரு நகருள் தென் நீர் பொன்னி திரை கையால் அடி வருடப் பள்ளிகொண்டிருக்கும்’ திருவரங்கன் திருப்பாதத்தை தன் கையால் வருடிய காவிரிக்கு அருளும் தன்மை இல்லாமல் போய்விடுமா ?  சாதாரண நண்டுக்கே அருளும் காவிரி, நாதமுனிகளுக்கு அருளாமல் இருப்பாளா ?

நாதமுனிகள் அடிக்கடி ’குளப்படியிலே தண்ணீர் தேங்கினால் குருவி குடித்துப் போகும். வீராணத்து ஏரியில் தங்கினால் நாடு பிழைத்துப் போகும்’ என்பார். குளப்படி என்றால் மாட்டின் குளம்பு பதிந்த இடம். அந்தச் சிறு குழியில் தேங்கிய தண்ணீர் சில குருவிகளுக்கு மட்டுமே குடி நீராகும். ஆனால் வீராணம் ஏரியிலே இருக்கும் தண்ணீரோ  நாட்டுக்கே நீராகும் என்பதாகும். இந்தச் சொல்லுக்கு உண்மையான அர்த்தம் இந்த யாத்திரிகர்களின் உருவில், ஒரு பெரும் புதையல் இருக்கும் இடத்தைக் காண்பிக்க வந்திருக்கிறார்கள் என்று அவருக்கு அப்போது தெரியவில்லை. 
 
நாதமுனிகளும், அவர் குமாரர் ஈஸ்வர முனிகளும் கோயிலை அடைந்தார்கள். கோயிலுக்குள் இருக்கும் நந்தவனத்தில் நாதமுனிகள் பூக்களைப் பறித்துக் கொடுக்க அதை ஈஸ்வர முனிகள் அழகான மாலைகளாகக் கட்ட ஆரம்பித்தார். இரண்டரை நாழிகைக்குப் பிறகு திருமண் தரித்துக்கொண்டு யாத்திரிகர்கள் கோயிலுக்குள் நுழைய மாலைகளும் தயாராக இருந்தது. 

“வாருங்கள்! வாருங்கள் !” என்று அவர்களை நாதமுனிகள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ஈஸ்வர முனிகள் ’துளபம் தொண்டு ஆய தொல் சீர்’ராகக் கட்டப்பட்ட மாலைகளும், கமழும் துளசி கூடையுடன் பின் தொடர்ந்தார்.

பயணம் தொடரும்.. 
- சுஜாதா தேசிகன்
24-07-2020

பிகு: 
(1) வடிவழகிய நம்பிதாசர் இயற்றிய ஸ்ரீராமனுஜ வைபவம் என்ற நூலில் இந்தப் பெயர்கள் குறிப்பிட்டுள்ளது. ராமானுஜர் காலத்திலும் குருபரம்பரையில், ஐதீகங்களிலும் வரும் இதே பெயர்களை இதனுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். 



Comments

  1. Great beginning swami. Waiting for next ...🙏 adiyen Hari

    ReplyDelete
  2. ஆரம்பமே கன ஜோர்! அப்படியே வீர நாராயண புரத்திற்க்கும், நாதமுனிகள் சன்னிதானத்தில் வீர நாராயண பெருமாள் கோவிலுக்கு அழைத்து கொண்டு சென்று விட்டீர்கள்! அடுத்து பெருமாளை செவித்து, அருளிச் செயல் கிடைக்கும் வரை அனுபவிப்போம்! Thanyosmi

    ReplyDelete
  3. உப்பிலி ஸ்ரீனிவாசன்.July 24, 2020 at 4:04 PM

    ஆரம்பமே கனஜோர்! கடல் போன்ற வீரநாராயணபுரம் ஏரியும், நடனமாடும காவிரியுமாக நாதமுனிகள் காலத்துக்கு பயணிக்க துவங்கிவிட்டோம்.

    ReplyDelete

  4. Good start Mr Desikan. I felt like reading Ponniyen Selvan first chapter,Adhiperukku. Your narration took me to Veeranarayanapuram. Will travel with you further......in this wonderful journey .🙏🙏♥️❤️

    ReplyDelete
  5. நல்லதொரு நாளிலே நல்லதொரு துவக்கம். துவங்கிய செயல் வெற்றி பெற ஆண்டவன் துணை புரியட்டும்

    ReplyDelete
  6. அற்புதமான ஆரம்பம். காலைப் பொழுது மற்றும் ஶ்ரீமத் நாதமுனிகளைப் பற்றிய வர்ணனையும் அபாரம். அடுத்த பதிவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  7. ஆரம்பமே அற்புதம். அடுத்த பகுதிக்கு மிகுந்த ஆவல். 🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. அற்புதமான ஆரம்பம். காலைப் பொழுதில் அந்த கதிரவனின் உதயத்தையும் அதில் அந்த தண்ணிரில் பிரதிபலிக்கும் அழகையும், ஶ்ரீமத் நாதமுனிகள் மற்றும் அவருடைய குமாரரைப் பற்றிய வர்ணனையும் அபாரம். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  9. அற்புதமான ஆரம்பம். காலைப் பொழுது மற்றும் ஶ்ரீமத் நாதமுனிகளைப் பற்றிய வர்ணனையும் அபாரம். அடுத்த பதிவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  10. ஆரம்பமே அற்புதம். அடுத்த பகுதிக்கு மிகுந்த ஆவல். 🙏🙏🙏🙏

    ReplyDelete
  11. தொடர்ந்து வரவேண்டும் என ஸ்ரீமந்நாராயணனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. Beautiful. Starting is very interesting. Very eager to next issue. Adiyen dasan

    ReplyDelete
  13. Wonderful Sujatha Desikan Swamy !

    ReplyDelete
  14. அ௫மையான ஆரம்பம்👌🏼👌🏼

    ReplyDelete
  15. Very nice start! Looking forward to read more.

    ReplyDelete
  16. Wow. Arpudham Swamin. Waiting eagerly for the next post.
    We learn so much from your posts. Please keep continuing to post.
    Perumal's blessings always

    ReplyDelete
  17. மிக மகிழ்ச்சி ....தொடர்கிறேன்

    ReplyDelete
  18. அருமை அடியேன் உள்வாள 20 வாட்சப் குழுக்களில் இந்த லிங்கை பகிர்கிறேன்

    ReplyDelete
  19. Great....Very happy to read it...thank you

    ReplyDelete
  20. ஸ்ரீராமானுஜர் கிருபையில் ஆரம்பமே ஜோர்!

    ReplyDelete
  21. தேசிகன் பக்கம் வந்தால் துளப வாசனை தூக்கும்.அடிக்கடி வந்த இடம்.விரும்பிதினம் நுழைகிறேன்.ஆள் சந்தடி இல்லாமல் அமைதியாக ஆழ்ந்து படிக்க இன்பமாக உள்ளது.

    ReplyDelete

Post a Comment