ஸ்வாமி தேசிகன் பிரபந்த சாரத்தில் ஆண்டாள் என்ற பெயரையோ அல்லது கோதை என்ற பெயரையோ சொல்லாமல் ஆனால் படிக்கும்போது ஒவ்வொரு வரியும் ஆண்டளை என்று நமக்கு உணர்த்தும் ( மற்ற ஆழ்வார்களையும் இப்படியே பாடுகிறார் தேசிகன்).
ஸ்வாமி தேசிகன் எழில் கொஞ்சம் தமிழில் அருளிய பாசுரம். இந்த லாக்டவுன் காலத்தில் எந்தத் தமிழாசிரியரையும் தேடிச் செல்ல வேண்டாம். பாசுரம் கீழே இருக்கிறது நீங்களே படித்துப் பார்க்கலாம்.
வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம்
மேன்மேலும் மிக விளங்க விட்டு சித்தன்
தூய திருமகளாய் வந்து அரங்கனுக்கு
துழாய் மாலை முடிசூடிக்கொடுத்த மாதே
நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறு ஐந்தும்
நீ உரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆய புகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும்
அன்புடனே அடியேனுக்கருள்செய் நீயே!
இதில் 'வேயர் புகழ் வில்லிபுத்தூர்’ என்ற முதல் மூன்று வார்த்தையை எடுத்துக்கொள்ளலாம்.
இதில் ’வேயர் புகழ் வில்லிபித்தூர்’ என்று ஆரம்பிக்கும் வாதையைப் பாருங்கள். இது நாச்சியார் திருமொழியில் ’வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல்' என்று உபயோகித்த வார்த்தை.
ஆண்டாள் ’வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்' என்று பெரியாழ்வார் கூறியதை அப்படியே கையாண்டிருக்கிறாள்.
மூங்கில் அடிபாகத்திலிருந்து மூங்கில் கன்று வளர்வது போல, பெரியாழ்வார், ஆண்டாள், தேசிகன் ஒரே மூங்கில் குலம் என்று வைத்துகொள்ளலாம்.
’வேயர்’ என்றால் மூங்கில் என்று ஓர் அர்த்தம் இருக்கிறது. பெரியாழ்வார் ’வேயர் குலம்’ என்ற ’மூங்கில் குடி’. இது திருவரங்கத்து அமுதனாரின் குடியாக இருக்கலாம் அதனால் தான் இராமானுச நூற்றந்தாதியின் தனியனில்
’முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்’ என்று வருகிறது.
துளசி என்று கூறியவுடன் நமக்கு எப்படி ஆண்டாளின் நினைவு வருமோ அது போல, புல்லாங்குழல் என்றால் உடனே கண்ணனின் நினைவு வரும். தொண்டரடிப்பொடி ஆழ்வார் ‘மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும்’ என்பதில் ‘வேய் குழல்’ இது தான்.
'துழாய்’ , ‘குழல்’ என்பது என்பது உள்ள ‘ழ’ என்பது தமிழுக்கே உள்ள தனித்துவமானது. கீழே உள்ள நாச்சியார் திருமொழியைப் பாருங்கள். இதில் ஒரு தனித்துவம் மறைந்து இருக்கிறது.
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமல பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே
கண்டுபிடித்துவிட்டீர்களா ? இந்த நான்கு வரி பாசுரத்தில் மொத்தம் பத்து ‘ழ’ இருக்கிறது!
’கழல் வளை’ என்று இன்னொரு வார்த்தையும் வைத்தும் ஆண்டாள் இங்கே விளையாடுகிறாள்.
கழல்வளை என்பது கையில் சூட்டிக்கொள்ளும் ஒருவகை வளை. ஆனால் அரங்கன் அந்தக் கழல் வளையை கழன்று போகும் வளையாகச் செய்துவிட்டான் அதனால் அது கழல் வளையே ஆகிவிட்டது அதனால் அதைக் கழல்வளை என்கிறாள்.
ஆண்டாளும், ஸ்வாமி தேசிகனும் நம் சம்பிரதாயத்தில் 'ழ’ போன்று தனித்துவமானவர்கள்.
- சுஜாதா தேசிகன்
27-07-2020
( படம் நன்றி வினோத் ரங்கநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வேதாந்த தேசிகன் )
Thank you sir🙏
ReplyDeleteமிக அருமை ..
ReplyDelete🙏🙏🙏🙏
ReplyDeleteபிரமாத விளக்கம்.
ReplyDelete