சிலர் உரையாற்றும்போது உரையின் நடுவே உதாரணம் சொல்லுகிறேன் என்று தன் சொந்தக் கதையை ஆரம்பித்துப் பிறகு, நாம் இணையத்தில் தேடுவது போலப் பல இணைப்பைக் கிளிக் செய்துகொண்டு சென்று கடைசியில் என்ன தேடினோம் என்று மறந்துவிடுவது மாதிரி உரை நிகழ்த்துபவர் ‘எதுல விட்டேன்?’ என்று மீண்டும் ஆரம்பிப்பார். (நம்முடைய மைண்ட் வாயிஸ் ”கடைசியில் என்னதான் சொல்லவர ?”)
ஆனால் ஆசாரியர்கள் பேசும்போது இந்த மாதிரி எல்லாம் இருக்கவே இருக்காது. பல விஷயங்களை விரிவாகச் சொன்னாலும் கடைசியில் 'நறுக்கு என்று’ அதன் சுருக்கத்தைச் சொல்லிவிடுவார்கள்.
ஸ்வாமி தேசிகனின் ‘Magnum opus' (மகத்தான பணி) என்று போற்றப்படும் ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் கடைசியில் இப்படி ஒரு 'நறுக்கு’ நமக்குக் கிடைக்கிறது.
ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் ’ஆச்சார்ய க்ருத்ய அதிகாரத்தில்’ நமக்கு இரண்டு தமிழ் பாசுரத்தைத் தமிழில் அருளியிருக்கிறார். ( இது சம்பிரதாய முறையில் இங்கே நமக்கு ஆசாரியர்கள் உபதேசிக்கிறார்கள்)
முதல் பாசுரம் :
பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால்
மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள் செக நான்மறை யந்தாதி நடை விளங்க
வீட்டுக்கு இடை கழிக்கே வெளி காட்டும் அம்மெய் விளக்கே
முதலாழ்வார்களின் வைபவத்தை அதன் மேன்மையையும் இப்படி ரத்தான சுருக்கமாகச் சொல்ல ஸ்வாமி தேசிகனாலேயே முடியும். இதன் பொருள் -
முதலாழ்வார்கள் மூவர் எழுதும் பாடல்களே பாடல். முன்பு ஒரு காலத்தில் அதிகமாக நெருங்கியதால் திருக்கோவலூரில் ஒரு வீட்டின் இடைகழியிலேயே வேதாந்த மார்க்கம் பிரகாசிக்க, இந்த உலகத்தில் அஜ்ஞாநம் என்ற இருள் விலக மெய் விளக்கை ஏற்றினார்கள். இந்த மெய் விளக்கே ‘மெய்’ வீட்டுக்கு ( மோட்சம் ) செல்லும் வழியைக் காண்பிக்கிறது.
இரண்டாம் பாசுரம் :
மருளற்ற தேசிகர் வான் உகப்பால் இந்த வையம் எல்லாம்
இருள் அற்று இறைவன் இணை யடிப் பூண்டு உய எண்ணுதலால்
தெருள் உற்ற செந்தொழில் செல்வம் பெருகிச் சிறந்தவர் பால்
அருள் அற்ற சிந்தையினால் அழியா விளக்கினரே
இதன் பொருள் -
அஞ்ஞானமில்லாத ஆசாரியர்கள் ( தேசிகர் ) பரமபதம் செல்ல விரும்பியதால், இந்த உலகம் முழுவதும் அஞ்ஞானம் நீங்கி எம்பெருமானுடைய இரண்டு திருவடிகளையும் உபாயமாகப் பற்றி உஜ்ஜிவிக்க வேண்டுமென்று நினைத்ததாலும் கிருபை நிறைந்த மனத்தோடு செம் தொழில்( கைங்கரியம்) செல்வம் பெருகி உயர்ந்து நின்ற சிஷ்யர்கள் பக்கம் அழியாத ( சம்பிரதாயமாகிய ) தீபத்தை ஏற்றி வைத்தார் ( உபதேசித்தார் )
ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரத்தில் சமஸ்கிருதம் தான் அதிகம். ஆனால் இந்த இரண்டு அற்புதப் பாசுரங்களையும் தமிழில் கொடுத்துள்ளார். ஏன் என்றால் ஞான தமிழ் புரிந்த நான் என்று சொல்லும் ஆழ்வார்களுக்குத் தமிழில் தானே எழுத வேண்டும் !
குரு என்ற சொல்லுக்கு அர்த்தம் - கு - இருளினை குறிக்கும். ரு - என்பது நீக்குவது என்பதனைக் குறிக்கும். குரு என்பவர் இருளினை நீக்குபவர். கோயில் என்றால் திருவரங்கம் போல, குரு என்றால் தேசிகர்.
இப்போது இந்த வரியைப் படித்துப் பாருங்கள் சுலபமாகப் புரியும் ‘மருளற்ற தேசிகர் வான் உகப்பால் இந்த வையம் எல்லாம் இருள் அற்று இறைவன் இணையடி’
நமக்குத் ஞான தீபத்தை ஏற்றி வைத்தார் தேசிகன். தேசிகனுக்கு ஞான விளக்கு ஏற்றக் கற்றுக்கொடுக்க வேண்டாம் ஏன் என்றால் அவர் அவதாரம் செய்த இடமே திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில். கூடவே திருமலை பெருமாள் சம்பந்தமும் அவருக்கு உண்டு அதனால் அந்த விளக்கு மலைமேல் எல்லோருக்கும் இன்றும் பிரகாசமாக இருக்கிறது! அதனால் தான் வேதாந்த தேசிகனின் படங்களைப் பார்த்தால் பிரகாசமாக இருக்கும்!.
- சுஜாதா தேசிகன்
22-07-2020
Is this not in Adhikaara sangraham?
ReplyDeleteஆமாம். சம்பிரதாய முறையில் அந்த அதிகாரம் சொல்லும் போது சில மேற்கோள் காட்டப்படுவதுண்டு. பதிவில் சொல்லுகிறேன். நன்றி
Deleteமிக சிறப்பு ....தொடர்கிறேன்
ReplyDeleteஅழகு
ReplyDelete