Skip to main content

சிறுகதை... சில எண்ணங்கள்...





நல்ல சிறுகதையைப் படித்தவர்கள் அதன் முடிவை நிச்சயம் நினைவில் வைத்திருப்பார்கள். சிறுகதைகள் படிக்கும் வாசகர்கள் பலர் கடைசியில் அந்த எதிர்பாராத திருப்பம், அதில் கிடைக்கும் கிக்கிற்காகவே படிக்கிறார்கள்.  

ஜெப்ரி ஆர்ச்சர், சாகி போன்றவர்கள் இதில் மிக பிரபலம் "A Twist in the Tale" என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது எல்லா பிளாட்பாரம் கடைகளிலும் கிடைக்கிறது. இன்னும் படிக்கவில்லை என்றால் படித்துவிடுங்கள். ஜெப்ரி ஆர்ச்சர் பெங்களூரில் தந்த பேட்டியிலும் சிறுகதை முடிவைப் பற்றிப் பேசியுள்ளார். 

பல கதைகளின் முடிவுகளைப் பற்றி அவரிடம் பேசியிருக்கிறேன். ஒரு முறை மலைக்கோட்டை ரயிலில் என் கூடப் படித்த நண்பன் டீ விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்து அதை வைத்து எழுதிய கதை வின்னி. சுஜாதாவிடம் பல அடித்தல் திருத்தல் வாங்கிய கதை இது. முடிவை வைத்துக்கொண்டு எழுதுவது என்பது சுவாரசியமான விஷயம் என்று கற்றுக்கொண்டேன்.

'பிச்சை' என்ற கதை விகடனில் தேர்வான போது விகடன் அலுவலகத்திலிருந்து ஒருவர் "Selected" என்ற குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் உள்ள விசித்திரத்தை வியந்து எழுதிய கதை தான் ஆவி கதை. கதை ஆவி பற்றியதாக இருந்தாலும் ஆவி - ( ஆனந்த விகடன்) நினைவாக எழுதிய கதை அது. 

சிறு கதையை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு "கண்ணீர் வரச் சொல்லலாம், சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்புவர,படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஒரு உணர்ச்சியைத் தந்தால் போதும்." என்று சுஜாதா சிறுகதை எப்படி எழுதுவது என்ற குறிப்பில் எழுதியிருக்கிறார். 

சுஜாதா எழுதிய அரிசி என்ற கதையைப் பலர் படித்திருப்பீர்கள். ஒரு முறை என்னிடம் இந்தக் கதையை ஒரே வரியில் கெடுத்துவிடலாம் எப்படி என்று சொல்லிப் பார்க்கலாம்?" என்றார். "எப்படி?" என்று திரும்பக் கேட்டேன் அதற்கு "என்னே இந்தச் சமூகத்தின் கொடுமை" என்று கடையில் ஒரு வரி போதும் என்றார். சில காலம் கழித்து இந்தக் கதையைப் பற்றிய குறிப்பு எழுதும் போது இப்படி எழுதினார். 

"This is one of my much discussed stories.Written more than a decade ago When I was in Bangalore, this was translated into many Indian languages . The incident happened in front of me almost in full. But a true incident like this is not sufficient theme for a short story Traffic accidents occur every day in every town.Old men on bicycles die every day .That is not enough .Only when I saw the two little boys picking up the scattrerd grains of rice it suddenly transformed into a truly effective theme for a short story. The implied message in this is not only left unsaid.Just imagine how the effect of the shock ending could be destroyed if I had added one more sentence like என்னே இந்த சமூகத்தின் கொடுமை!"

சிறுகதையின் முடிவை எழுதி வைத்துக்கொண்டு எப்படிக் கதை எழுதலாம் என்ற சவால் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. கூகிள் உதவி செய்யாது நீங்களாகவே வாசகனாகவும், எழுத்தாளனாகவும் மாறி மாறிக் கதை எழுத வேண்டியிருக்கும். பல மாதமாக ஒரு முடிவை வைத்துக்கொண்டு எப்படி கதையாக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது சட் என்று கதை தோன்றும். அந்தக் கணம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்

சிறுகதை எழுத ஆரம்பிக்கும் முன் அதன் முடிவு கிடைத்தால் மட்டுமே எழுதுவேன். சில சமயம் முடிவு உடனே கிடைக்கும் சில சமயம் ஒரு வாரம், இல்லை சில வருடங்கள் கூட ஆகலாம். ஓட்டப்பந்தயத்துக்கு முன் கொஞ்சம் வார்ம் அப் செய்வது போல நான் செய்பவை. 

1. சுஜாதா, தேவன், அசோகமித்திரன், ஜெப்ரி ஆர்ச்சர்,  50 greatest short stories போன்ற புத்தகங்களில் ராண்டமாக பத்துக் கதைகளைப் படித்துவிடுவேன். 

2. கதையை மற்றவர்களுடன் பேசமாட்டேன்.  (இது ஒரு கதையா ? )

3. தலைப்பு கிடைத்தால் ஓ.கே இல்லை புது படம் மாதிரி பிராஜக்ட் 13 என்று ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்து ஆரம்பித்துவிடுவேன். 

4. பிட் மாதிரி ஜோபியில் ஒரு சின்னப் பேப்பர் வைத்துக்கொள்வேன். கதை குறிப்பு, sequence எல்லாம் தோன்றும்போது எழுதிவிடுவேன். 

5. உங்கள் கதையை நடைப்பயிற்சி போது அல்லது டாய்லெட்டில் சொல்லிப்பாருங்கள். வாக்கிங் வேகமாகவோ அல்லது டாய்ல்ட் போவது நின்றுவிட்டாலோ நல்ல கதை. 

6. சிறுகதை சின்னதாக இருக்க வேண்டும், பெரிசாக எழுதினால் இலக்கியத்திலும், சின்னதாக எழுதினால் ஹைக்கூவில் சேர்த்துவிடுவார்கள்.

6.5 ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகிக்காதீர்கள். வாசகர் எரிச்சலாகிவிடுவார்கள். சமஸ்கிருதத்தில் ஏதோ சொல்லுவார்கள் ( மறந்துவிட்டது) ஒரு இடத்தில் அமரர் என்றால் மற்றொரு இடத்தில் தேவன் என்று உபயோகிக்கவும். 

7. ’ஸ்ரீ’ அல்லது ’உ’ போட்டு எழுதலாம். அதற்குக் கீழே ABC என்றும் எழுதிக்கொள்ளுங்கள் - Accuracy, Brevity, Conciseness.

8. உங்களிடம் உள்ள ஒரு சிறிய தந்தம் அதைச் செதுக்குவது போன்றது சிறுகதை. 

இன்று காலை ஆஸ்கர் வைல்ட் எழுதிய “The Model Millionaire" கதையைப் படித்தேன். முடிவில் எப்போதும் டிவிஸ்ட் இருக்க வேண்டும் என்பதில்லை என்பதற்கு நல்ல உதாரணம். சாதாரண முடிவு தான். ஆனால் எழுத்தாற்றல் பளிச்சிடும் ! நிச்சயம் படிக்க வேண்டிய கதை ( லிங்க் இருக்கிறது )

- சுஜாதா தேசிகன்


Comments

  1. Thank you and a great and useful tips.

    ReplyDelete
  2. Nice tips. Have always wanted to write. Some 40 odd years back used to write for Indian Express Thursday pull out section. Don't remember the name of the section now.
    Maybe someday I may. Useful tips

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள் ...

    ReplyDelete
  4. The Model Millionaire was one of the lessons in my 10th std English. It came as an essay question in the public exam as well

    Felt nostalgic

    பல நாட்களுக்கு பின் மீண்டும் தேசிகன் blogs. Please write more often

    ReplyDelete

Post a Comment