Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 4



ஆண்டாளின் திருப்பாவை நாச்சியார் திருமொழி உபன்யாசங்களில் இந்த ஸ்லோகத்தை தனியன்களுடன் சேவிப்பார்கள். 

ஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே 

இது எங்கே வருகிறது என்று நீண்ட நாட்களாக எனக்குத் தெரியாது. வடமொழியில் புரியாமல் இருந்தாலும் கேட்கும்போது பிடித்துவிடும். 

இது ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கோதாஸ்துதில் முதலில் வரும் ஸ்லோகம். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று பார்க்கலாம்.  சுலபம் தான் 

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்ப வல்லீம் 
பெரியாழ்வாருடைய குலமாகிய நந்தவனத்திற்கு கற்பக கொடி போன்றவளாய்
ஸ்ரீ ரங்கராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம் 
திருவரங்கப் பெருமாளாகிய ஹிரி சந்தன மரத்தோடு சேர்ந்து இருப்பதால் காண அழகியவளாய் 
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
நேராக பொறுமையும் பூமி தேவியுமே வடிவுகொண்ட வளாய் கருணையால் மற்றொரு பெரிய பிராட்டி போன்றவளாயுள்ள 
கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே 
ஆண்டாளை வேறு புகலற்றவனாய் சரணமாக அடைகிறேன். 

மேலே தடித்த எழுத்துக்களை மட்டும் படித்தால் புரிந்துவிடும். ஆனால் 
இதைப் படிக்கும்போது சாதாரண ஸ்லோகம் போல இருக்கும்.  

ஆனால் தேசிகனுடைய ஸ்லோகம் அப்படி இருக்காது அல்லவா ? இப்போது ஹிரி சந்தன மரத்தைச் சுற்றி ஆராயலாம். 

தேவலோகத்தில் இந்திரனுடைய பூங்காவிற்கு நந்தவனம் என்று பெயர். அந்த நந்தவனத்தில் இருக்கும் கற்பக மரம் எல்லாவற்றையும் தரும்.  இந்த மரத்தைச் சுற்றி எப்போதும் ஒரு மென்மையான கொடி படர்ந்து இருக்கும்.  

ஸ்வாமி தேசிகன் சொல்லுவது இது : 

பெரியாழ்வார் குலம் ஒரு நந்தவனம். அந்த நந்தவனத்தில் திருவரங்கப் பெருமாள் அடியார்களுக்கு எல்லாப் பலனையும் அளிக்கும் ’ஹரி சந்தக மரம்’ போன்றவன். அவன்மீது ஆண்டாள் என்ற மென்மையான கொடி அணைத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. கோதை என்ற ஆண்டாள் பொறுமை மிக்க பூமிதேவியின் மறுவடிவு. இவளுடைய கருணை பெரிய பிராட்டியே மற்றொரு வடிவெடுத்து வந்தாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எனக்கு வேறு புகலற்று அடியேன் கோதைப் பிராட்டியைச் சரணடைகின்றேன். 

கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே 
என்ற வரிக்கு பொருள் - எனக்கு வேறு புகலற்று அடியேன் கோதைப் பிராட்டியைச் சரணடைகின்றேன். இது நம்மாழ்வார் ‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறை மார்பா'  பாசுரத்தில் கடைசி வரி ’புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்பதன் மறுவடிவம். 

’அலர்மேல்மங்கை பாசுரம்’ பிராட்டியை முன்னிட்டு நம்மாழ்வார் சரணாகதி செய்த துவயம். மேலே உள்ள ஸ்லோகம் ஆண்டாளை முன்னிட்டு நம் தேசிகனுடைய துவயம் ! 

இந்தக் கொடியை(ஆண்டாளை) வளர்க்கும் பாக்கியம் பெற்றார் பெரியாழ்வார். இந்தக் கொடி கொடுத்த மாலையை எம்பெருமானுக்கு அணிவித்து அவனை மகிழ்ச்சி அடையச் செய்தார். அதனாலே அவர் பெரியாழ்வார் என்று பெருமையைப் பெற்றார். திருவரங்கன் தெற்கு நோக்கி விபீஷணனைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் உண்மையான காரணம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற நந்தவனத்தையும் ஆண்டாள் பிறந்த இடத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பதற்காகவே தெற்கு நோக்கி பள்ளி கொண்டுள்ளான். இதை நான் சொல்லவில்லை, ஸ்வாமி தேசிகன் சொல்லுகிறார். 

- சுஜாதா தேசிகன்
24-07-2020
திருவாடிப்பூரம் 
படம் : ஸ்ரீரங்கம் உத்திரவீதி ஸ்ரீ கோதை பிராட்டியுடன், ஸ்வாமி தேசிகன்

Comments

Post a Comment